முக்கண்ணன் முதற்கொண்டு சபரி ஐயன் வரை எல்லோரையும் தொட்டுத் துலக்கிய பெருங்காப்பியம் கொற்றவை!
நாகத்தீவு துவங்கி நாகப்பட்டினம் வரையான நாகவம்சம் குறித்து சில பத்திகளில் முடித்துவிட்டதை இன்னும் கொஞ்சம் சொல்லக்கூடாதா? குறைந்தபட்சம் ஒரு சிறுகதையேனும் எழுத வேண்டும் ஜெயமோகன்.
“மேயா…. த மான்……. ” வள்ளியின் திருமணத்தோடு முடிந்துவிடுகிற நாடகத்தின் பிறகு, அவ்வளவு பெரிய அரண்மனையில் குறமகளின் கையறு நிலை, கண்ணீரேயான அவளின் எஞ்சிய வாழ்நாள் நெஞ்சைக் கசிகிறது
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளே சொல்லியிறாத பாரம்பரிய உண்டிகளை ரெசிப்பியுடன் சொன்னது நாவூரச் செய்தது!
புத்தகம் வாங்கி 5 ஆண்டுகள் ஆகிறது. வாங்கிய முதல் நாள் முதல் பக்கம் கூட முழுதாக வாசிக்க வில்லை. தூக்கம் வந்து விட்டது. பின்னொரு நாளில் 4 பக்கம், அடுத்தொரு நாளில் 7 பக்கம். முடியல.
2 ஆண்டுகளுக்குப் பின் 34 பக்கம் வாசித்ததை பெருமையாகச் சொல்லிக்கொண்டேன். இப்படி 5 ஆண்டுகள் ஆனது. (சரி கொற்றவையை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் இன்னும் நமக்கு வரவில்லை)
அப்படியும் கடைசியில் பரீட்சைக்கு முதல் நாள் அவசரமாகப் படிப்பது போல விட்டு விட்டு வாசித்து முடித்தேன். அந்தச் சுவை மனதில் ஒட்டிக் கொண்டது. விட்டதைப் பிடிக்க வேண்டும் என்று மீண்டும் முதலில் இருந்து துவங்கி இருக்கிறேன்.
5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அந்த முதல் பக்க முதல் பத்தி வாசித்தேன். மறைத்திருந்த மேகம் விலகி பளிச்செனத் தெரியும் நிலவைக் காணும் உணர்வு வந்துள்ளது.
இதைத் தக்க வைத்துக் கொள்ள உதவுங்களேன். கொற்றவையை முழுதாய் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு என் போன்ற வாசகர்கள் என்ன விதமான பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்?
பிரியதர்சினி
திண்டுக்கல்
அன்புள்ள பிரியதர்சினி
கொற்றவையை புரிந்துகொள்ள தேவையான அறிவார்ந்த பயிற்சி என்பது அதில் குறிப்பிடப்படும் தமிழ்- சம்ஸ்கிருத தொன்மங்களைப் பற்றி கொஞ்சம் வெளியே படித்தறிவது மட்டுமே.
சிலசமயம் சில குறிப்புகள் நம் பார்வைக்கு விடுபட்டுவிடலாம். சில பகுதிகள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். அப்போது எவரிடமேனும் விவாதிக்கலாம் – வாசிப்பும் நுண்ணுணர்வும் உடையவரிடம்
[கொற்றவை என்றல்ல எந்த இலக்கியம் பற்றியும் அரசியல் பேசிக்கொண்டிருப்பவர்களிடம் பேசலாகாது. அவர்கள் ஒருவகை மனநோயாளிகள். அரசியலை மட்டுமே அவர்களால் பார்க்கமுடியும்]
கொற்றவை தமிழ்ப்பண்பாட்டின் மொத்தச்சித்திரத்தை அளிக்கமுயலும் நூல். ஆகவே அது தொன்மங்களினூடாகச் செல்கிறது. ஐந்து நிலங்கள் வழியாகச் செல்கிறது. தமிழ்ப்பண்பாட்டை அறியுந்தோறும் அது கூர்கொள்ளும்
ஜெ