தன்மீட்சி வாசிப்பனுபவம் – உஷா தீபன்

“வாழ்க்கையின் போக்கில் அனைவரும் அறியும் ஒன்று உண்டு. நம்மைச் சூழ்ந்துள்ள உலகியல் வாழ்க்கை மிகச் சிக்கலான ஒரு வலை போல. பல்லாயிரம் ஆசைகளும் வேகங்களும் முட்டி மோதும் ஒரு வெளி. தற்செயல்களிலான ஒரு மாபெரும் பின்னல். அதில் ஒருவர் செயல்பட முடியுமே தவிர விளைவுகளை எதிர்பார்க்க முடியாது. எதிர்பாராமைகள்தான் பெரும்பாலும் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எது உனக்குரிய செயலோ அது. எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது. அதைச் செய்யும்போதே மனநிறைவும் வாழ்வின் முழுமையும் கிடைக்கும். அதுவே தன்னறம்“

எதைச் செய்ய நாம் பிறந்திருக்கிறோம் என்று இந்த உலகத்தில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்? அதைக் கண்டுணர்ந்து, தெளிவு பெற்று அதைச் செய்வதே, செய்து கொண்டே நகர்ந்து, நகர்ந்து மன நிறைவு காண்பதே எனக்கான இந்த வாழ்வின் பயணம் என்று உணர்ந்திருக்கிறோமா? அதை வலியுறுத்துகிறது இப்புத்தகம். நம்மை நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. புத்துணர்வோடு எழுச்சி கொள்ள வைக்கிறது.

இப்படியான கேள்விக்கான பதில்களை, பல இளைஞர்களின் நுட்பமான கேள்விகளை தன் சிந்தனைக்கான முதலாகக் கொண்டு தெளிவான, எளிமையான விளக்கங்களாக முன் வைத்து வெற்றிகரமான ஒரு தொகுப்பாக வடிவமைத்திருக்கிறார் திரு ஜெயமோகன் அவர்கள்.

இந்தக் கேள்வி பதில்களில் உள்ள எளிமையையும், தெளிவையும், வாழ்க்கை அனுபவங்களைத் துல்லியமாகக் கண்டடைதலில் உள்ள சூட்சுமங்களையும் ஆழமாக உணர்ந்து குக்கூ காட்டுப்பள்ளியைச் சேர்ந்த தன்னறம் நூல்வெளி இப்புத்தகத்தை ஆர்வத்தோடும் நன்னோக்கிலும் கொண்டு வந்திருக்கிறது.

உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தில், உலகத்தில் நீங்கள் செய்யக்கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடைந்தால் போதும், நம்மிடமிருக்கும் சோர்வை நாம் வென்று விடலாம். அது என்ன என்பதைத் துல்லியமாக உணர முயலுங்கள். அதுவே தன்னறம், அதைச் செய்யும்போதே நீங்கள் விடுதலை பெறுவீர்கள் என்று விளக்க முற்படுகிறார் ஜெ. அப்படித் துல்லியமாகக் கண்டடையாமல்தானே நேரமும் காலமும் வீணாகி பலருக்கும் முதுமை கண்டு விடுகிறது? வாழ்க்கைச் சூழல் எப்படியெல்லாம் புரட்டிப் போட்டுவிட்டது என்று வேதனை கொள்ளச் செய்கிறது? இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் இந்நூலில் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன.

நேரடியாகவே வாசகர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களின் விளைவுகளாக உருப்பெற்றிருக்கும் இப்புத்தகத்திலான கட்டுரைகள். மீட்சியின் கதைகளாகவும், மீளவிழைவோருக்கு உதவக் கூடியதாகவும் விளங்குகிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு கண்டடைதலும் ஒரு மீட்சிதான் என்றும் அடுத்ததை நோக்கிச் செல்லும் அற்புதமான நகர்தல் என்றும் இந்த மீட்சியின் தொடரே இந்த வாழ்க்கை என்றும் மானுடக் கதையாகவே இவை மாறக் கூடிய வல்லமை பெற்றவை என்றும் மிகுந்த தன்னம்பிக்கையூட்டும் அறிவுப் புலத்திலான பயணமாக இத்தொகுப்பிலுள்ள உரையாடல்கள் நமக்கு எழுச்சியூட்டுகின்றன.

பூமிதான இயக்கமும், நிலங்களைக் கேட்டுப் பெறுவதற்கான வினோபாபாவே தலைமையிலான நடை பயணமும் தரும் அனுபவங்கள், ஒரு நிலச்சுவான்தார் தன் நிலங்களைத் தர மறுத்தல், அவரிடமிருந்து இணக்கமான பதில்வரும்வரை உபவாசம் இருத்தல், கூடியிருக்கும் அத்தனை மக்களின் பட்டினி பொறுக்க முடியாமல் அந்த நிலச்சுவான்தார் மனம் மாறுதல், தானே முன்வந்து வினோபாவிடம் நிலங்களை ஒப்படைத்தல் ஆகிய வரலாற்றுச் சம்பவங்கள் – எத்தனை எத்தனை மனிதர்களின் சுயக்கொடை நாம் இப்பொழுது வாழும் வாழ்வு…முன் மனிதர்களின் தன்னிகரற்ற தியாகித்தலை சிந்திக்கும் போதெல்லாம் “பாதையை உருவாக்கும் ஓயாத கால்கள்” என்ற வரிகள் மீள மீள நினைவுக்கு வந்து கொண்டேயிருப்பது பக்கங்களை நகர்த்திச் செல்ல மறுக்கின்றன. எப்படிப்பட்ட தியாகிகளெல்லாம் வாழ்ந்த பூமி இது என்று நம்மின் தன்னறத்தைத் தூண்டுவனவாக மிளிர்கின்றன.

சாப்பிட்ட உணவு food poison ஆகி மகன் அஜிதன் உடல்நலமின்றிக் கிடந்ததும், இரவு பகல் கண்ணயராமல் அவனருகிலேயே இருந்து கவனித்ததும், மகாபாரதக் கதைகள் சொன்னதும், கீதையைச் சொல் என்று அவன் கேட்டதும், ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுவனுக்கு கீதையை எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது என்று முயற்சித்து அவனுக்கேற்றாற்போல் சொல்லி முடித்ததும், தன்னறம்பற்றிக் கேட்க ”எது உனக்குரிய செயலோ அது. எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது.அதைச் செய்யும்போதே மனநிறைவும், வாழ்வின் முழுமையும் கிடைக்கும். அதுவே கீதையின் மையச் செய்தி” என்று விளக்கமளித்ததும், அதை எப்படிக் கண்டு பிடிப்பது? என்று அவன் பதில் கேள்வி கேட்க, டாக்டர் நோயைக் கண்டுபிடித்த விதத்தைச் சொல்லி, எந்தத் துறையில் உனக்கு உள்ளுணர்வு திறக்கிறதோ அதுவே உன் தன்னறம் என்று சொல்லி முடித்ததும் படிக்கையில் நாமும் அந்த நல்லுணர்வுகளைப் பெறுகிறோம்.

கனவுகள் காண்பது என்பது எல்லோருக்கும் பொது. அவரவர் உரிமை. ஆனால் எத்தனை பேர் அந்தக் கனவுகளை செயல் ரூபத்தில் நிறைவேற்ற முயல்கிறோம் என்பது கேள்வி. லட்சியக் கனவுகளை நோக்கிய லட்சியப் பயணம் என்றாவது ஒரு நாள் வெற்றிக்கனியைப் பறிக்க உதவாமலா போகும்?  நான் என் கனவுகளில் மகத்தான வாழ்க்கையை வாழ முடியுமென அறிந்தேன். எழுதுவதும், வாசிப்பதும் அந்தக் கனவகளை நிகழ்த்திக்கொள்வதற்கே…பயணம் செல்வதும், உரையாடுவதும் அக்கனவில் வாழ்வதற்கே. வாழ்நாளின் ஒவ்வொரு துளியையும் வீணாக்காமல் இனிய விஷயங்களால் நிறைத்துக் கொள்கிறேன் என்றும், அப்போது தெரிந்தது இந்த வாழ்க்கை போதாது…நான் வாசிக்க வேண்டிய நூல்கள், எழுத வேண்டிய நாவல்கள் செல்ல வேண்டிய ஊர்கள் ஏராளமாய் விரிந்து கிடக்கின்றன…இருபத்தைந்து வருடங்கள் இமைப் பொழுதாக ஓடி விட்டன என்று ஆதங்கப்பட்டதாக விளக்குகிறார்.

ஒருவர் தனக்கு உண்மையிலேயே எது முக்கியம் என உணர்கிறாரோ அதைச் செய்ய முடியும் என்றே தான் நினைப்பதாகவும், பல சமயம் எளிய உலகியல் ஆசைகளால் அவர் தன்னை திசை திருப்பிக் கொள்கிறார் அல்லது சிதைத்துக் கொள்கிறார், தன் அகத்துக்கு முக்கியமானதை அழித்துக் கொள்கிறார் என்றே கொள்ள வேண்டும் என்கிறார். தன் அறிவாற்றல் மீதுள்ள பெருமிதமே ஒருவனைச் சிதைத்து விடுகிறது என்றும், அந்த மிதப்பிலேயே எதுவும் செய்யாமல் இருக்கும் இயல்பு கைகூடி விடுகிறது என்றும் நான் இயல்பிலேயே கலைஞன் என்கிற எண்ணமே ஒன்றுமே செய்யாவிட்டாலும் கூட நிலைத்து விடுகிறது என்றும் கொள்ளும் அபாயம் நேரிடுகிறது என்று தொகுத்துரைக்கிறார்.

அறிவுத் திறனும் நுண்ணுணர்வும் வெறும் சாத்தியக் கூறுகள் மட்டுமே. அவை செயல் வடிவம் பெறும்போதுதான் மதிப்புறுகிறது. சாத்தியங்கள் நடைமுறையைச் சந்திக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பை நமக்குப் புலப்படுத்துகிறது. செயல் மூலம் கிடைக்கும் படிப்பினைகளைக் கொண்டுதான் ஒவ்வொரு ஆளுமையும் தன்னைக் கண்டடைகிறது என்று நுணுக்கமான சிந்தனைகளை எளிய முறைகளில் விளக்க முற்படும் அவரது வரிகள் நம்மை ஈர்த்து நிறுத்தி சிந்திக்க வைத்து விடுகின்றன.

ஜெ.யின் தன்னம்பிக்கையின் அடையாளமாய் இன்னொரு உதாரணம். உங்களால் உரையாடலை எழுத முடியலை..பெரிய இரும்புக் கதவுதான் அதற்குத் தடை…என்று சுந்தர ராமசாமி சொல்ல…சார்..தமிழிலேயே நான்தான் நல்ல உரையாடலை எழுதப் போறேன்…என் முன்னால் வரக்கூடிய இரும்பக் கதவுகளை நான் தட்டிப் பார்க்க மாட்டேன்…முட்டி உடைப்பேன்…கதவுகள் உடையலேன்னா அந்த இடத்திலேயே செத்திருவேன்…என்று சவால் விடுகிறார். வெற்றி கண்டிருக்கிறாரா இல்லையா என்பதை நாம் அறிவோம்தானே?

தன்னுடைய சொந்த அனுபவமாக ஒரு மனிதன் ஒரு நாளைக்குப் பதினைந்து மணி நேரம் உழைக்க முடியும். தான் அப்படி உழைப்பவன் என்பதையும், நம் அன்றாட வாழ்க்கைக்கு மேலாக ஏழெட்டு மணி நேரத்தை சாதாரணமாக நமக்குப் பிடித்தமானதற்கு ஒதுக்க முடியும் என்று கூறிவிட்டு, நான் கேளிக்கைகளில் ஈடுபடும் ஒரு இளைஞனிடம் பத்து நிமிடங்களுக்குமேல் செலவிடக் கூடாது என்கிற தீர்மானம் உள்ளவன் என்று உறுதிப்படுத்துகிறார்.

நித்ய சைதன்ய யதியிடம் ஒரு பெண் செல்கிறாள். தனக்குக் கண் தெரியாததைச் சொல்லி வருந்துகிறாள். நாட்டிலே பல லட்சம் பேர் மூளையே இல்லாமல் சந்தோஷமாய் இருக்கிறார்கள், நீ போய் கண் இல்லாததற்காக வருந்துகிறாயே…என்று பதிலிறுக்கிறார். அந்தப் பெண்ணின் வாழ்க்கையை அந்த வரிகள் மாற்றி விடுகின்றன. அந்தப் பெண் இன்று ஆஸ்திரேலியாவில் கணித ஆராய்ச்சியாளராக இருக்கிறாராம். இந்தத் தகவல்களையெல்லாம் படிக்கையில் நம் மனதும் ஊக்கம் பெறுகிறது என்பதை நாம் உணர வேண்டாமா?

சராசரிகளாய் இருப்பதில் எப்போதுமே சம்மதமில்லாதவர்களாய்  நாம் நம்மை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு போதும் என்பது படைப்பூக்கத்துக்கு எதிரான மனநிலை.கரையோரம் நின்று கால் நனைப்பதுபோல்…அது அவனை அச்சுறுத்துகிறது,நிரந்தரமாக விலக்குகிறது என்று பொருள். அந்த மனநிலை ஒரு படைப்பாளிக்குக் கூடவே கூடாது…தன்னை ஒரு படைப்பாளியாக உணரும் ஒவ்வொருவனுக்கும் எதிராக சராசரியின் அழுத்தம் இருந்து கொண்டேயிருக்கிறது… ஞானக் கூத்தனின் வரிகளில் சொல்வதென்றால் “சூளைச் செங்கல் குவியலிலே…தனிக்கல் ஒன்று சரிகிறது…“. என்று விளக்குகிறார்.இவர்களுக்கு எதிராக ஆழமான தன்னம்பிக்கையை அளிப்பதே நித்யாவின் குரல் என்று தன் குருவை விதந்தோதுகிறார்.

மனம் ஒரு போதும் தன்னிச்சையாக நம் பணிகளை எண்ணி்க் கொள்ளாது. கவலைகளை விரிவாக்கிக் கொள்வது அதன் வேலை, இயல்பு. நம் முதன்மைப் பணியை முனைந்து எண்ணத் தொடங்கினால் அதுவே எண்ணமாக ஓடுவதையும் நம்மால் உணர முடியும்.

எது உனக்குரிய செயலோ, எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது அதைச் செய்யும்போதே உன்னை வழி நடத்தும் மன நிறைவைத் தரும், வாழ்வின் முழுமை கிடைக்கும். இந்தத் தன்னறத்தை உணருவதே நமது மெய்ப்பாடு என்று முடிக்கிறார் ஜெயமோகன்..

மிகுந்த பயனுள்ள சிந்தனையைத் தூண்டும்  இந்நூல் ஒவ்வொரு வாசகனிடமும், படைப்பாளியிடமும், செயலூக்கம் கொண்டவர்களிடமும் இருக்க வேண்டிய பொக்கிஷம்.

———————

முந்தைய கட்டுரைகுந்தியின் முகம்
அடுத்த கட்டுரைபதிவுகள் இணையப்பக்கத் தொகுதி