உங்களுடைய “அறம்” சிறுகதை தொகுப்பை Amazon Kindle மூலம் படித்து வருகிறேன் .. ஒர் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் இப்புத்தகத்தை பரிந்துரைத்தார் என நினைவு வந்து வாங்கி படித்தேன்..
எனக்கு 18 வயது.. தமிழில் நான் படித்த முதல் சிறுகதை தொகுப்பு..
வாசித்த அனைத்து கதைகளும் நெகிழ்வாக, நிறைவாக இருந்தது! அதிலும் இவை அனைத்தும் உண்மை சம்பவங்கள் என்பது
இன்னும் வியப்பு! குறிப்பாக வணங்கான், யானை டாக்டர், சோற்று கணக்கு! யானை டாக்டர் எனக்கு 11ஆம் வகுப்பு துணைப்பாடத்தில் வந்த போதே பெரிய ஈர்ப்பு. இந்த தொகுப்பில் கத்திரிக்கப்படாத யானை டாக்டர் இன்னும் வியப்பளித்தது..
ஆனால் எனக்கு சற்றும் பிடிக்காத (அ) புரியாத கதை அந்த ” மயில் கழுத்து”.. மற்ற சிறுகதைகளில் இருந்த எளிய தொணி இதில் இல்லை.. ஏதோ ஒர் எழுத்தாளரின் நேர்காணல் போல் இருந்தது. என் போன்ற சாதாரண ஆட்களுக்கு இந்த எழுத்தாளர்கள் சொல்ல வருவது விளங்குவதேயில்லை.. குறிப்பாக அவர்களது நேர்காணலில் அவர்கள் பதில்களை புரிந்து கொள்ளவே ஒர் யுகம் தேவைப்படும் போல! அதனாலயே எனக்கு தமிழ் நாவல்களை படிக்க தயக்கம்..
எல்லோருக்கும் புரியும் வகையில் இவர்களுக்கு ஒரு விடயத்தை சொல்ல தெரியாதா? அல்லது புரியாத வகையில் சொல்வது தான் எழுத்தாளனின் தனிச்சிறப்பா? இதை ஏன் உங்களிடம் வினவுகிறேன் என்றால் புரியும் வகையில் ஏதாவது பதில் வைத்திருப்பீர்கள் என்பதற்காக.. ஆவலுடன் உங்கள பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
நிஷோக் பிரபாகர்
அன்புள்ள நிஷோக்
நான் எழுதவந்த காலம் முதலே இந்த கேள்விக்கு பதிலளித்து வருகிறேன். எந்த ஆரம்ப வாசகனுக்கும் இந்தப்பிரச்சினை உண்டு. அவனுக்கு தன் அறிவைப்பற்றி ஒரு பெருமிதம் இருக்கிறது. ஏனென்றால் உண்மையில் அவன் நம் சூழலில் மிக அரிய ஒருவன். ஆகவே அவனால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றை பார்த்ததும் எரிச்சலடைகிறான்
அந்த எரிச்சலை விலக்க நாம் பயின்றாகவேண்டும். இவ்வுலகில் நாம் அறியாத, நம்மால் எளிதில் புரிந்துகொள்லமுடியாத விஷயங்களே மிகுதி. கலைகள், அறிவியல், தத்துவங்கள், இலக்கியங்கள். அவற்றை புரிந்துகொள்ள நாம் முயற்சி எடுக்கவேண்டும். நாம் அவற்றை நோக்கிச் செல்லவேண்டும்.
தொடர்ந்து முயலாமல் உண்மையாகவே முக்கியத்துவம் உடைய எதையும் புரிந்துகொள்ளமுடியாது. சில விஷயங்கள் புரிவதுபோல தோன்றும் . முயலும்போது மேலும் பிடிபடும்.
இந்த தலைப்பில் நான் நிறைய எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்
ஜெ