அரசியலும் எழுத்தாளனும்
அன்பின் ஜெ..
நாஞ்சில் நாடன் சிலைகள் மீது வைத்த விமரிசனத்துக்கு எதிரான இந்து தமிழ் கட்டுரையைப் படித்தேன்.. அந்தக் கட்டுரையின் மீதான உங்கள் விமரிசனத்தையும் படித்தேன்.
”எல்லாவற்றிலும் இருக்கும் ஒவ்வாமையே எழுத்தாளனுக்கு அரசியலிலும் இருக்கிறது. மதம், பண்பாடு, அரசு, அரசியல் எதையும் ‘முழுமையாக’ ஏற்றுக்கொண்டு ஒழுகுவது எந்த எழுத்தாளனுடைய இயல்பும் அல்ல. இதற்கு உலக இலக்கியத்திலேயே விதிவிலக்கு கிடையாது. நாஞ்சில்நாடன் தன் ஊர், தன் சாதி, அரசு, சைவமதம் பற்றியெல்லாம் என்ன எழுதியிருக்கிறார்? ஒவ்வாமையும் எள்ளலும் மட்டுமே. ஏன் அவர் வழிபடும் கம்பனைப்பற்றிக்கூட ஒவ்வாமையின் மொழி அவ்வப்போது எழுவதுண்டு” – எனக்கு இந்த வழியில் சில சிக்கல்கள் இருப்பதாகத் தோன்றுகிறது
சென்ற முறை நமது ஜூம் இலக்கியக் கூட்டத்தில் ஒரு கேள்வியை எழுப்பினேன். ஏன் நாஞ்சில் அவர்களின் அணுகுமுறையில், எதிர்மறைத்தன்மை மேலோங்கியுள்ளது என. ஆனால், அதை அவர், நான் அரசுகளை, தலைவர்களை ஏன் நேர்மறையாகப் பேசுவதில்லை என்பதாக எடுத்துக் கொண்டார்.. கொரோனா காலத்தில் நடக்கும் அநியாயங்களைப் பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும் என்று பதிலிறுத்தார். அந்தக் கூட்டத்தின், நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக, நான் அங்கே விவாதிக்கவில்லை.
நாஞ்சில் சொன்னது போல, கொரோனாவை முன்வைத்துப் பல எதிர்மறை விஷயங்கள் நடக்கின்றன. அதே சமயத்தில், இந்தப் பெரும்தொற்றுக் காலத்தில் கேரள, தமிழக அரசு மருத்துவமனைகளில் பொது மருத்துவர்களின், செவிலியர்களின் தொடர் பணி என்பதில் பெரும் நேர்மறை அம்சம் உள்ளது. நமக்குத் தெரிந்த மருத்துவர் ராமானுஜம் கோவிந்தனும், அவர் மனைவியும் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்.. அவர்களுக்கு சிறு வயது மகள் இருக்கிறாள். வயதான தந்தையும் என நினைக்கிறேன்.. கொரோனாப் பணியில், வீட்டில் பெற்றோர் இருவரும் இருக்க இயலாது. தொடர்ந்து கடந்த 8 மாதங்களில் இது போலத்தான் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி புரிந்து வருகிறார்கள்.. மருத்துவத் துறை முழுக்க தனியார் மயமாக்கப் பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என நம் கண் முன்னே உணர்ந்தோம். இதை முன்னிறுத்துவதும் எழுத்தாளனின் கடமையில்லையா? கண் முன்னே தெரியும் குறைகளை மட்டுமே பேசினால் எப்படி?
எனது மரியாதைக்குரிய மருத்துவர் அமலோற்பவ நாதன் அவர்கள் ஒரு முறை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உருவான வரலாற்றைச் சொன்னார்.. உறுப்பு மாற்று என்பது ஒரு இழி வணிகமாக உருவெடுத்து, பெரும் பிரச்சினையான போது, தமிழக முதல்வர், 2007 ஆம் ஆண்டு, மருத்துவர்களை அழைத்து, ஒரு வலுவான சட்டத்தை உருவாக்கச் சொன்னார். முக்கியமாக, பணத்துக்காக ஏழைகள் உடல் உறுப்புகளை விற்பதை எப்படித் தடுப்பது என்பது அதன் முக்கிய நோக்கம். அதை உருவாக்குகையில், இந்தத் துறையில் தொடர்புள்ள நிறுவனங்கள், நோயாளிகள், பொது மக்கள் என அனைவரையும் கலந்து ஒரு சட்ட வரைவு உருவாக்கப்பட்டது.. ஒரு consultative approach..
அது ஒரு வெற்றிகரமான சட்டமாக உருவானதற்கு அந்த அணுகுமுறை முக்கியக் காரணம் எனச் சொன்னார். மிக முக்கியமாக இரண்டு கூறுகள் – 1. உறுப்பு தானம் மக்கள் முன் வந்து இலவசமாகக் கொடுப்பதாக இருக்க வேண்டும் 2. மரணித்த நபரின் உறுப்புகள் சமூகத்துக்குச் சொந்தம். அவை, ஏழை, உயர் வர்க்கம் என்னும் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.. இந்த இரண்டு அம்சங்களுமே பொதுமக்களுடனான ஆலோசனையில் வெளிவந்தவை என்றார். இந்த இரண்டு அம்சங்களும் தான், இந்தச் சட்டத்தை மக்கள் மத்தியில் ஒரு நம்பகமான சட்டமாக்க்கி, இன்று இந்தச் சிகிச்சை முறையில் தமிழகத்தை ஒரு முன் மாதிரி மாநிலமாக ஆக்கியுள்ளது
ஆனால், இதில் சில விலகல்கள் இருக்கலாம்.. அவற்றைப் பூதாகாரமாகப் பல புலனாய்வு இதழ்கள் எழுதியிருக்கலாம். ஆனால், குணம் நாடிக் குற்றமும் நாடும் நோக்கும், கொஞ்சம் சிரமும் எடுத்துக் கொண்டால், இதன் சாதனைகள் என்ன, பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும். அதன் உண்மை நிலையை முன் வைக்க முடியும்..
அதை விடுத்து, ஒன்றிரண்டு குற்றங்களை முன் வைத்து, இந்த சட்டமே மோசம் என்னும் ஒரு பார்வையையும் முன் வைக்கலாம். ஆனால், அது நமது சமூக அரசுக் கட்டமைப்புகளின் மீதான அடிப்படை நம்பிக்கையையே குலைக்கத்தான் துணை போகும்.
இன்னொரு உதாரணம் – தமிழக மருத்துவச் சேவைக் கழகம் உருவான கதை. 1994 ஆம் ஆண்டு, அன்றைய பொதுநலத்துறை அமைச்சர், அன்று வரை மாவட்ட அளவில் இருந்து வந்த மருந்து மற்றும் உபகரணங்கள் கொள்முதல் முறையை மாற்றி, அதை மாநில அளவில் கொண்டு சென்றார். இது பற்றிய 4 பக்க அரசுக் குறிப்பை, அமைச்சரே தன் கைப்பட எழுதியிருப்பதாக, நாராயணன் என்னும் தமிழகத்தின் மிக மூத்த ஐஏஎஸ் அதிகாரி தான் எழுதிய திராவிடியன் இயர்ஸ் என்னும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்..
அந்த நிறுவனம் மிகச் செயல் திறன் மிக்க வகையில் செயல்படும் நிறுவனமாக, பூர்ணலிங்கம் என்னும் ஐஏஎஸ் அதிகாரியின் மேலாண்மையில் உருவாகிறது. பொது மருத்துவக் கொள்முதலில் மூன்றாமுலக நாடுகளுக்கான உதாரணமாக இந்த நிறுவனம் விளங்கி வருகிறது.. ஆனால், ஏதோ ஒரு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு எதிர்மறை அனுபவத்தை வைத்து, நண்பர் ஒருவர் அந்தத் துறை ஊழல் மிக்கது என்னும் வகையில் முகநூலில் எழுதியிருந்தார்.
தன் அனுபவம் ( anecdote) ஒரு மிக முக்கியமான தேவை.. அது ஒரு விஷயத்தை நாமே நேரில் உணர உதவுகிறது.. ஆனால், அதற்கு எல்லைகள் உண்டு. அதுவும், நாம் அந்த விஷயத்தில் நிபுணராக இல்லை என்றால், அது முழுமையான ஒரு சித்திரத்தை நமக்கு அளிக்காது. ஒரு இலையில் கானகத்தைப் புனைவெழுத்தாளரால் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், பப்ளிக் பாலிசி அவ்வாறல்ல.. பல்வேறு தரவுகளையும், தேவைகளையும் உள்ளடக்கி, மொத்த சமூகத்துக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட வேண்டிய ஒன்று. அது ஒரு common minimum denomitaor ஐத்தான் பேசும்.
வணிக இலக்கியத்தைத் தாண்டி, சீரிய இலக்கியத்தை நோக்கி வர, வாசகருக்கு உழைப்பு தேவைப்படுகிறது. அதைச் செய்ய வேண்டியது ஒரு சமூகத்தின் அறம். அதே போல எழுத்தாளர்களும் மற்ற துறைகளைப் பற்றிய விமரிசனங்களை முன்வைக்கையில், இன்னும் சீரிய அளவில் தரவுகளை எடுத்துக் கொன்டு, ஒரு விஷயத்தின் இரண்டு பக்கங்களையும் – நேர்மறை, எதிர்ம்றை இரண்டையும் முன்வைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். அப்படியான அணுகுமுறையில், இயல்பாகவே ஒரு மேலான பார்வையில், ஒரு எழுத்தாளர் தம் வாசகர்களுக்கு உண்மையான புரிதலை முன்வைக்க முடியும்.
ஏனெனில், எழுத்தாளர்களின் வாசகர்கள், எழுத்தாளர்கள் சொல்வதைப் பெரும்பாலும் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு துறையில் ஊழல் என்பது பேச்சளவில் இருக்கையில், ஒரு எழுத்தாளர் அதையே எழுதுகையில், அது உறுதி செய்யப்பட்டு விடுகிறது. அந்த வகையில், எழுத்தாளருக்குப் பெரும் பொறுப்பும் இருக்கிறது.
அன்புடன்
பாலா
அன்புள்ள பாலா
உங்களை பற்றிய என் மதிப்பீடு இது. நீங்கள் ஒரு மிகச்சிறந்த மாணவர். நூல்களை நம்பி, படித்து, தேர்வுகளை எழுதி வெல்பவர். உயரிடங்களுக்குச் சென்று அமர்பவர். அந்த நம்பிக்கை உங்கள் ஆற்றல். இன்றும் உங்கள் உயர்நிலை நிர்வாகம் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நிகழ்வது.
துரதிருஷ்டவசமாக நூல்களிலிருந்து பெற்ற ‘தரவுகளை’ கொண்டு எழுதுவது எழுத்தாளர்களின் வழக்கம் அல்ல. அவர்களுக்கு நேரடி அனுபவம், அதிலிருந்து உருவாகும் உள்ளுணர்வுதான் முக்கியமானது. அதை எழுதத்தான் அவர்கள் இலக்கியம் படைக்கிறார்கள்
ஓர் எழுத்தாளன் சாமானியர்களில் ஒருவனாக தன்னை உணர்வுரீதியாக அமைத்துக்கொண்டு எழுதுகிறான். அவனில் வெளிப்படுவது அக்குரல். அக்குரலுக்கு அறச்சார்பான ஒரு முக்கியத்துவம் உண்டு. அது புள்ளிவிபரங்கள் சார்ந்தது அல்ல
நான் பலமுறை பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன். நான் நேரில் அறிந்த, தெளிவுற உணர்ந்த தகவல்களைச் சொல்லும்போதுகூட அவர்கள் அரசு சார்பான செய்திகளை தரவுகளாக வைத்து ஆணித்தரமாக மறுப்பதை கண்டிருக்கிறேன். நீங்கள் ஓர் ஐ.ஏ.எஸ் ஆக இருக்கவேண்டியவர்.
இந்த தளத்திலேயே நான் நேரில் கண்டவற்றை சொன்னபோது நீங்கள் தரவுகளுடன் மறுத்தீர்கள். மறுதரவுகளை வெவ்வேறு செய்திகள், ஆவணங்கள் வழியாக பலர் முன்வைத்தபோதுகூட உங்கள் குரலில் இருந்தது நீங்களறிந்த தரவுகள் மீதான உறுதி மட்டுமே [உதாரணம் பால் பற்றிய கட்டுரைகள் போலிப்பால் – கடிதம் ]
உங்களை மட்டுமல்ல, இந்த மாதிரி தரவுகளுடன் பேசும் எவரிடமும் எந்த கருத்தையும் எவ்வகையிலும் நிரூபிக்கவே முடியாதென்பதே என் எண்ணம். நானும் இருந்த ஓரு பேச்சரங்கில் ஒருவர் தமிழகத்தில் அரசியல்வாதிகள் அதிகாரிகள் அனேகமாக ஊழலே செய்வதில்லை என்று பேசினார். அவர் ஓர் அரசதிகாரி.
நாஞ்சில்நாடன் அவருடைய ஊரிலேயே சென்ற நாற்பதாண்டுகளில் அவர் கண்ணெதிரில் மாபெரும் கோடீஸ்வரர்களாக மாறிய சில அரசியல்வாதிகளை பற்றிச் சொன்னார். அரசியலன்றி எந்த தொழிலும் இல்லாதவர்கள். ஆனால் அந்த அதிகாரி தமிழகத்தில் ஊழல் குறைவு என்றும் ஊழல் செய்ய வாய்ப்பே இல்லை என்றும் நாலைந்து அதிகாரிகள் எழுதிய நூல்களை திரும்பத்திரும்ப ஆதாரம் காட்டிக்கொண்டிருந்தார்.
நான் புன்னகையுடன் பேசாமலிருந்தேன். நாஞ்சில் சலித்துப்போய் “சூத்தும் ஒரு கண்ணுதான்னு ஒருத்தன் சொன்னா அதுக்கும் அவனுக்கு ஒரு நியாயம் இருக்கும்” என்றார்.
தரவுகளை வேண்டிய கோணத்தில் வேண்டியவகையில் தொகுத்துக்கொள்ளலாம். சொல்பவரின் தரப்பென்ன என்பது மட்டுமே அதில் வெளிப்படுகிறது. உலகிலெங்கும் தரவுகளுடன் விவாதிக்கும் எழுத்தாளர்கள் எவரும் இல்லை. எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் அல்ல. அவர்கள் எழுதுவது நிகரனுபவத்தை மட்டுமே
இலக்கியம் சான்றுகளை அளிப்பதில்லை. “இலக்கிய உண்மை என்பது நிரூபிக்கத்தேவையில்லாத உண்மை” என்பது மிகப்பழைய வாக்கியம். Anti empirical truth என்றே பின்நவீனத்துவக் கருதுகோள் ஒன்று உண்டு.
இலக்கியம் என்னும் செயல்பாடே அடிப்படையில் ‘நிரூபிக்கப்படுவதே உண்மை’ என்னும் பொதுவான நம்பிக்கைக்கு எதிரான ஒன்றுதான். ஒரு பொதுத்தர்க்கச் சூழலில் நிரூபிக்கப்படுவதே உண்மை. ஆனால் இலக்கியத்தில் அப்படி அல்ல. அது எப்போதுமே நிரூபணத்துக்கு எதிரானது, நிரூபிக்கும் முறைமைகளை கடைப்பிடிக்காதது, தனக்கென வேறுவழிகளைக் கொண்டது.
அப்படியென்றால் இலக்கியப்படைப்பு ஒன்றை உண்மை என எப்படி நிறுவுகிறது?
இங்கே நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டிய ஒன்று உண்டு. நிரூபண உண்மைகள் சொல்லப்படும் களத்தில் அவற்றை ஏற்பவர்கள் யார்? அவர்கள் தரப்படுத்தப்பட்ட, வரையறைசெய்யப்பட்ட ஒரு திரள். அவர்களுக்கு எந்த அடையாளமும் இல்லை. ஏனென்றால் நிரூபண உண்மைக்கு ஏற்பாளர்கள் எவ்வகையிலும் முக்கியமில்லை. ஏற்பாளர்கள் இல்லாமலேயே ஒன்று நிலைநிற்க முடியுமென்றால் அதுதான் நிரூபண உண்மை
இலக்கிய உண்மை அப்படிப்பட்டது அல்ல. அது வாசக ஏற்பால் மட்டுமே நிலைகொள்ளக்கூடியது. வாசக ஏற்பு இல்லையேல் அது மறைந்துவிடும். அதை உண்மை என வாசகன் ஏற்பதனூடாகவே அது உண்மை என்று ஆகிறது. அதாவது இலக்கிய உண்மை நிலைகொள்வது ஆசிரியனிலோ பிரதியிலோ அல்ல, வாசகனிடம்.
எழுத்தாளன் வாசகனை ‘ஏமாற்றிவிடுகிறான்’ என அடிக்கடி சோட்டா அறிவுஜீவிகள் சொல்வதுண்டு. எழுத்தாளன் மொழியை வைத்து, கதைபுனையும் திறனை வைத்து, வாசகனுக்குள் ‘தவறான’ கருத்தை திணிக்கிறான், கடத்திச்செல்கிறான் என்பார்கள். அரசியல் சார்ந்த நிலைபாடு கொண்டவர்கள் அடிக்கடி இதைச் சொல்கிறார்கள்.
இலக்கியவாசகனை அறியாக்குழந்தை என்றோ, முட்டாள் என்றோ இப்படிச் சொல்பவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். இது தாங்கள் ஏதோ அரசியல் மெய்ஞானம் அடைந்து முக்தி அடைந்தவர்கள் என்று கற்பனை செய்துகொள்வதுதான். அந்த வகையான ஒரு நம்பிக்கை இல்லாவிட்டால் இங்கே எவராவது ஏதாவது அரசியலமைப்பை தலைமேல் தூக்கிவைத்துப் பேசமுடியுமா என்ன?
எந்த ஒரு உச்சகட்ட அரசியல் அறிவுஜீவியைவிட, சமூக ஆய்வாளனை விட, இலக்கியவாசகன் கூர்மையானவன், மேலும் அறிவார்ந்தவன் என்பதை மிகச்சாதாரணமாகப் பேசினாலே புரிந்துகொள்ள முடியும். தர்க்கத்தால் இவர்கள் இலக்கியவாசகனை அணுகினால் மிகமிக எளிதாக அவன் அவர்களை கடந்துசெல்வான் என்பதை இவர்களே அறிவார்கள்.
ஓர் எழுத்தாளன் படைப்பில் முன்வைப்பதை வாசகன் ஏற்றுக்கொள்வது எப்படி? இலக்கியவாசகனுக்கு இலக்கியம் அளிப்பது ஒரு நிகர்வாழ்க்கையை. வாசகன் அந்த வாழ்க்கையை ‘தெரிந்துகொள்வதில்லை’ அதற்குள் சென்று தானும் வாழ்கிறான்.அவன் அடைவது அவனுக்கு ‘சொல்லப்பட்ட’ உண்மையை அல்ல .அவனே வாழ்ந்து ’அடைந்த’ அனுபவத்தை.
ஆகவேதான் நீங்கள் ஓர் இலக்கியவாசகனுடன் ஏதேனும் ஒன்றைப்பற்றிப் பேசினால் அவன் தன் அனுபவத்தை, தன் சிந்தனையை சொல்வானே ஒழிய இன்ன எழுத்தாளர் இப்படிச் சொல்கிறார் , அவரை நம்பி அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லுவதில்லை
அந்த ஏற்பு அகத்தூண்டல் [Evocation] என்ற சொல்லால் நவீன இலக்கிய உரையாடல்களில் குறிப்பிடப்படுகிறது. அது எழுத்தாளன் சொல்வதை வாசகன் ‘நம்பு’வதனால் உருவாவது அல்ல. எழுத்தாளனின் அனுபவச்சித்தரிப்பும் வாசகனின் சொந்த அனுபவமும் தொட்டுக்கொள்வதனால் உருவாவது அது.
வாசகன் எழுத்தாளனை தன் அறிவால் சந்திக்கவில்லை. எழுத்தாளன் எழுதுவதை தரவுகளின் அடிப்படையில் பரிசீலிப்பதில்லை, தர்க்கபூர்வமாக மதிப்பிடுவதில்லை. தன் அனுபவங்களின் அடிப்படையில், அதிலிருந்து பெற்ற நுண்ணுணர்வின் அடிப்படையில்தான் அறிகிறான்
ஒரு படைப்பை வாசித்த அனுபவமுள்ளவர், வாசிக்கையில் ஒரு கதைத்தருணத்தை, ஒரு கருத்தை, ஒரு கதைமாந்தரை சரியாக சொல்லியிருப்பதாக உணர்ந்தது எவ்வண்ணம் என்று பார்த்தால் நான் சொல்வது புரியும். வாசிக்கும்போதே, அக்கணமே ஏற்பு நிகழ்ந்துவிடுகிறது. அது பரிசீலித்து எடுக்கும் ஏற்பு அல்ல.
வாசிப்பின்போது என்ன நிகழ்கிறது? எழுத்தாளன் அனுபவங்களாக ஆக்கத்தக்க மொழிப்பதிவுகளை உருவாக்கிக்கொண்டே செல்கிறான். வாசகன் தன் சொந்த அனுபவங்களைக்கொண்டு அந்த மொழிப்பதிவுகளை தன் அனுபவங்களாக ஆக்கிக்கொள்கிறான். அந்த தன் அனுபவங்களில்தான் அவன் அனைத்தையும் அடைகிறான். அது எழுத்தாளனின் அனுபவம் அல்ல, வாசகனின் அனுபவம்
ஏற்புக்கொள்கை என்ற பெயரில் விமர்சனத்தில் விரிவாகப் பேசப்பட்டது இது. புனைகதை என்பது வாசகனின் சொந்த அனுபவங்கள் என்னும் விதைகளை எழுத்தாளன் நீரூற்றி வளர்ப்பதுதான்.
ஆகவேதான், எவர் எப்படி சான்றளித்தாலும் தன் அகம் ஏற்காத ஒன்றை இலக்கியவாசகன் ஏற்பதில்லை. கருத்துத் தளத்தில் ஓர் அறிஞன் சொல்வதை வாசகன் ஏற்பதற்கு அந்த அறிஞனின் கல்வித்தகுதி, அந்தக் கருத்து வெளிவந்த தளம், அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்ட பிற அறிஞர்கள் அனைவரும் உதவுகிறார்கள். இலக்கியத்தில் அப்படி எந்த புறமதிப்பும் படைப்பின்மேல் ஏற்றப்பட முடியாது. வாசகன் அதை அந்தரங்கமாக வாசிக்கிறான். அந்தரங்கமாக அடையாளம் காண்கிறான், ஏற்கவோ மறுக்கவோ செய்கிறான்.
வாசகனின் அகம் என நான் இங்கே சொல்வது தன் வாழ்வனுபவங்களாலும் நுண்ணுணர்வுகளாலும் அவனே உருவாக்கி கொண்டிருக்கும் ஆழத்தைத்தான். அதைத்தான் நனவிலி என்கிறோம். அதைத்தான் புனைவென்பது நனவிலிக்குள் ஓர் ஊடுருவல் [A raid into the unconscious] என்று இலக்கியவிமர்சனம் சொல்கிறது
ஒரு தலைமுறைக்காலத்தில் பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்படுகின்றன. பலநூறு ஆசிரியர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மிகமிகச் சிலரே வாசகர்களிடம் அந்த ஏற்பை அடைகிறார்கள். இலக்கியப்படைப்பாளிகளிலும், இலக்கியங்களிலும் ஏற்கப்படுபவை மிகமிகக் கொஞ்சம்தான். பெரும்பாலானவை வாசகர்களால் நிராகரிக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இந்த அந்தரங்கத்தன்மைதான். அதை புறவயமாக ஆராய்பவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
கருத்துக்கள் அப்படி அல்ல, அவை தர்க்கபூர்வமாக முன்வைக்கப்பட்டால் ஒருசில வாசகர்களையாவது சென்றடைந்துவிடமுடியும். எல்லா கருத்தும் எப்படியோ இருந்துகொண்டிருக்கும்.
இவ்வாறு வாசகனுக்குள் தொடர்ச்சியான ஏற்பை உருவாக்கி, அவனுடைய அனுபவமண்டலத்தை உருவாக்குவதில் பங்களிப்பாற்றும் படைப்பாளிகளுக்கு காலப்போக்கில் ஓர் ஆளுமை உருவாகிறது. அவர்கள் படைப்புக்கு வெளியே சொல்வனவற்றையும் அந்தப் படைப்புலகின் உணர்வுகளைக்கொண்டு வாசகன் அணுகுகிறான்.
அவ்வண்ணம் ஆளுமைகள் என ஆகும் படைப்பாளிகள் ஒரு பண்பாட்டுக்கு தலைமுறைக்கு ஓரிருவரே. அவர்களின் சொற்கள் அவர்களின் வாசகர்களுக்கே முக்கியமானவை. அவர்கள் தாங்கள் வாசித்த அவர்களின் புனைவுலகின் நீட்சியாக அக்கருத்துக்களை கண்டு ஏற்பார்கள் அல்லது மறுப்பார்கள். அங்கும் தங்கள் சொந்த அனுபவத்தளத்தையே அளவீடுகளாகக் கொள்வார்கள்
அந்தப் புனைவிலக்கியவாதியின் உலகுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கு அவர்கள்மேல் எந்த மதிப்பும் இருப்பதில்லை. அவர்கள் தாங்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதை அப்படைப்பாளியும் சொல்கிறானா என்று மட்டும்தான் பார்ப்பார்கள். இல்லையென்றால் முதலில் எழும் கேள்வியே “நீ யார்ரா இதை சொல்ல?”என்பதுதான். அதை எப்போதுமே சமூகவலைத்தளச் சூழலில் பார்க்கலாம்.
உண்மையிலேயே அந்தக் கும்பலுக்கு எழுத்தாளன் திகைப்பை அளிக்கிறான். ஒரு வட்டச்செயலாளராகக்கூட இல்லாதவன் எப்படி அரசியல் கருத்துச் சொல்லலாம் என்ற திகைப்பு அது. பெரும்பாலானவர்கள் எழுத்தாளனை தன்னைவிட தாழ்ந்தவர்களாக நினைத்து வசைபாடுவார்கள். கொஞ்சம் பண்பட்டவர்கள் என்றால் அறிவுரை சொல்வார்கள்.
கி.ராஜநாராயணனோ, நாஞ்சில்நாடனோ ஒரு பண்பாட்டுக்கு பெருஞ்செல்வங்கள். உலகின் எந்தப் பண்பாட்டுக்கும் அவர்களைப்போன்றவர்கள் அருங்கொடைகள் அவர்கள் அன்றாடம் டிவியில் வந்து புள்ளிவிபர அடிப்படையில் வாதிடுபவர்களில் ஒருவர் அல்ல.
அவர்கள் தங்கள் புனைவுகளால் அந்த இடத்தை அடைந்தவர்கள். அப்புனைவுலகை தன் அனுபவமண்டலத்தால் தான் புனைந்துகொண்ட வாசகர்களிடம் பேசுபவர்கள். மையஓட்ட நம்பிக்கைகளுக்கு, பொதுவான தர்க்கங்களுக்கு அப்பாலுள்ள ஓர் உலகம் அது. அங்கே நின்று அவர்கள் பேசுவது பண்பாட்டின் மற்றொரு குரல்.
அக்குரலை பண்பாட்டை அறிந்தவர்கள் மதிக்கவேண்டும். மதிக்காவிட்டால் புறக்கணிக்கலாம், அதைத்தான் தமிழ்ச்சமூகம் எப்போதும் செய்துவருகிறது.ஆனால் அவர்களும் நீங்கள் பேசுவதையே பேசவேண்டும் என எதிர்பார்க்கவேண்டாம். அவர்களை உங்கள் புள்ளிவிபரப்பேச்சாளர்களில் ஒருவராக ஆக்கி, உங்கள் அரசியல் சழக்குகளில் வைத்து மதிப்பிடவேண்டாம். அவர்களிடம் போய் உங்கள் பாணியிலான தர்க்கங்களை கோரவேண்டாம்
உங்கள் தர்க்கப்பார்வையில் உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இருக்குமென்றால், அதுவன்றி வேறெல்லாம் உங்களுக்கு பிழை என தெரியும் என்றால், அது உங்கள் தரப்பு. எழுத்தாளர்களிடம் உங்கள் ஆய்வுமுறைகளை எதிர்பார்க்காதீர்கள். அரசியல்சரிநிலைகளை கட்டாயப்படுத்தாதீர்கள். உலகின் நாகரீக சமூகங்களில் சமூகத்தின் அற, ஒழுக்க விழுமியங்களைக்கூட எழுத்தாளர்களுக்கு நிபந்தனையாக்குவதில்லை. அவர்கள் சொல்வதை ஓர் அதர்க்கநிலை உண்மை, அது பண்பாட்டின் ஒரு தரப்பு என்றே எடுத்துக்கொள்வார்கள். அதை மிகமிக முக்கியமான ஒரு குரலென எண்ணுகின்றன நாகரீக சமூகங்கள்.
உங்களை நான் அறிவேன். உங்களுக்கு இந்தக் கருத்துக்கும் இலக்கியத்துக்கு வெளியே நம்பகமான ஆதாரம் தேவைப்படும். நீதிமன்ற ஆதாரமே இருக்கிறது. எழுத்தாளர்களை எழுத்தாளர்களாக அணுகுவது எப்படி என்று உயர்நீதிமன்றமே தமிழ்ச்சமூகத்திற்குச் சொல்லியிருக்கிறது. சொல்லப்போனால் கைகூப்பி மன்றாடியிருக்கிறது. கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு
ஜெ