அதர்வம்-கடிதம்

அதர்வம் கதை உங்கள் மகாபாரதக்கதைகளில் உள்ள தத்துவ தரிசனமும் அழகியலும் கலந்த படைப்பு. கதையின் எடுப்பும் போக்கும் உருவாக்கி வந்த எதிர்பார்ப்பு சட்டென்று திசைதிரும்பி அதிரச்செய்தது. குரோதத்தின் மனித உருவாகவும் அழிவுதேவதையாகவும் ஒரு குழந்தை என்னும்போது நம் மனதில் எழக்கூடிய சித்திரமே வேறு. ஆனால் கதையில் அதி திறந்துகொண்டதும் என்ன இது என்ற திகைப்பும், ஆமாம் அப்படித்தானே என்ற எண்ணமும், தொடர்ந்து பலவகையான மனக்கொந்தளிப்புகள்ம் ஏற்பட்டன. அழிவுதேவதைதான். ஆனால் பேரழகு கொண்டவள். அதுகூட பரவாயில்லை. அழிவின் அழகு என்று சொல்லிவிடலாம். ஆனால் சிறுமை தீண்டாதவள். விவேகம் மிக்கவள். சக்கரவர்த்தினி என்று சொல்லி ஆனால் என்று சொல்லும்போது கதை உருவாக்கும் அதிர்ச்சி கொஞ்சமல்ல. ஆனால் மொத்த மகாபாரதக்கதையே அந்த ஒரு புள்ளியிலே ஞாபகம் வரக்கூடியவர்களுக்குத்தான் கதைபிடிகிடைக்கும். தீய இயல்புதான் பெரியா அழிவை உருவாக்க வேண்டும் என்றில்லை. நல்ல இயல்பும் உருவாக்கலாமே. நல்ல கூர்மையான வாள் கெட்டவன் கையில் இருப்பதுபோல. ஒரு பெரும் பத்தினி விதியின் கையிலே வாளாக ஆகிறாள் இல்லையா? பாதாள சக்திகள் உலகை மரணக்களமாக ஆக்குவதற்காக ஒரு பேரழகியை, ஒரு பெரும் பத்தினியை உருவாக்கின என்பதில் உள்ள முரண்பாடு சாமானியமான தரிசனம் அல்ல ஜெ. உண்மையில் மகாபாரதத்திலே உள்ளடங்கிக் கிடக்கும் ஒரு சரடுதான். ஆனால் யோசிக்க யோசிக்க பிரமிப்புதான் ஏற்படுகிறது. அவளுடைய கற்பும் நிமிர்வும் கொஞ்சம் கம்மியாக இருந்திருந்தால் மகாபாரத போரே நடந்திருக்காது இல்லையா? சரித்திரம் எவ்வளவு அபத்தமாகச் செயல்படுகிறது என்று சொல்லும்போதுதான் தத்துவத்துக்கு ஏதேனும் பயன்வருகிறது என்று நீட்சே சொன்னார். அந்த வரியையே நினைத்துக்கொண்டிருந்தேன். சாதாரணமாக சொல்லப்பட்டு எங்கெல்லாமோ கொண்டுபோன கதை

சிவம்

ஜெ

அறம் வரிசைக்கதைகளை மிகவும் மனநெகிழ்ச்சியுடன் வாசித்தவன் நான். அவற்றை வாசிக்கும்போது கதை என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட்து. ஆனால் இன்று அதர்வம் கதையை வாசிக்கும்போது இப்படித்தான் கதைகள் இருக்கவேண்டும் என்று தோன்றிவிட்ட்து. இவற்றில் உள்ள அற்புதமான வரிகளை நான் வேறு கதைகளிலே பார்க்கமுடியாது இல்லையா? எவ்வளவு கவித்துவமான வரிகள்.

குரோதம் உப்புபோல மன்னரே, அது தானிருக்கும் பாண்டத்தையே முதலில் அழிக்கும்

எண்ணங்களே இல்லாமல் மனம் சித்திரத்தில் வரையப்பட்ட பறவைக்கூட்டம் போல வானில் நின்றது

துரோணரின் கர்வம் நிறைந்த புன்னகையை கண்டான். அமிலநதியில் நீந்தினான். அமில அருவிக்கீழே நின்றான்

சிறுபுற்றுக்குள் இருந்து சிறகு முளைத்து வானிலெழுந்து வெயில் பட்டு ஒளிதுளிகளாக சுழலும் எறும்புகள் போல யாஜரின் வாயிலிருந்து வேதம் வந்துகொண்டே இருந்தது.

வானையே உண்ணும் பெரும்பசி கொண்ட மாபெரும் நாக்கு போல , சர்ப்ப நாக்குகளாலான கூட்டு நடனம் போல , வான் நோக்கி பெய்யும் செம்பளிங்கு நீர் அருவி போல , சன்னத வெறிகொண்ட வெறியாட்டி பலிரத்தத்தில் முக்கி உக்கிரமாக சுழற்றும் செக்கச் சிவந்த தலைமயிர் போல ..

கதையின் கடைசியிலே அந்த வரி, யாகத்தீ யாகசாலையை மூடி இருட்டான வானுக்கு எழுவதை கறுப்புபசுவில் முட்டி முட்டி பால்குடிக்க துள்ளக்கூடிய சிவப்புக் கன்றுக்குட்டி என்று சொல்லியிருக்கும் இடம் எனக்கு அற்புதமான மன எழுச்சியை உருவாக்கியது. நல்ல கலை கவித்துவம் ஆகவே இருக்கும் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். இந்தக்கதை அப்படிப்பட்ட கதை சார்

சரவணன்

முந்தைய கட்டுரைஓரினச்சேர்க்கை-கடிதங்கள்
அடுத்த கட்டுரைநூறுநாற்காலிகள் -கடிதங்கள்