தேர்வு செய்யப்பட்ட சிலர் – மேலும்

தேர்வு செய்யப்பட்ட சிலர்

Dear JM ,

//மனிதர்கள் எல்லாரும் சமம் அல்ல. இயற்கையில் சமம் என்ற கருத்துக்கே இடமில்லை//
இது ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதே.இதில் பல மாற்றுக்கருத்துக்களும் அரசியல் சரி போக்குகள் இருந்தாலும் ,இந்தக் கருத்தை நோக்கியே பல துறை சார்ந்த கருத்துக்களும் திரும்புயுள்ளன .

//அதன் மேன்மைக்காக ஒரு துளியேனும் பங்களிப்பு கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள் அரை சதவீதத்துக்கும் கீழேதான். அவர்கள் தான் நாம் காணும் இந்த ஒட்டுமொத்த மானுட பண்பாட்டையே உருவாக்கியவர்கள்//

//மானுட இனத்தின் தொடர்ச்சியை நீட்டிப்பதை தவிர அவர்களுக்கு இயற்கை எந்த பொறுப்பையும் அளிக்கவில்லை.//

இது “அறிவுத்திறனும் நுண்ணுணர்வும்” கொண்டவர்களை தனிப்படுத்தி அவர்கள் பங்களிப்பு மட்டுமே மேன்மையானது என்பது சரியா தெரியவில்லை.

மானுட பண்பாட்டிற்கு அந்த மற்ற 99.5 % மக்களின் குறிப்பிட்டதக்க  பங்களிப்பு என்பது ஏதுமில்லை என்பதை உள்வாங்கிக்கொள்வது கடினமாக இருக்கிறது .

இது உண்மையா என்பது ஒரு பக்கமிருக்க , இப்படி ஒரு கொள்வது சரியா என்றம் ஒரு கேள்வி எழுகிறது .”white mans burden ” கருத்தாக்கம் போல இதுவும் ஒரு வகையான அறிவுசார் மேட்டிமை வாதத்திற்கு (elitism )  இட்டுச் செல்லாதா ?

இயற்கையில் இயல்பாக அமைந்த பல குறைபாடுகளை , தடைகளை நாம் கடந்து வரவில்லையா (உ.ம் ‍ இயற்கை நம்மை பறக்க படைக்கவில்லை ஆனால் நாம் பறப்பதில்லையா ?).

அது போல இயற்கையில் அமைந்த ஏற்ற தாழ்வுகளை நாம் குறைக்க, நீக்க நினைப்பது தவறா ?

பல முன்னேறிய சமூகங்களில் நாம் முன் வைக்கும் சமத்துவம் ( egalitarianism ? ) என்பது ஒரு வகையான பாவலாவா ?

நெடு நாளாக இருக்கும் குழப்பமிது

-கார்திக்

************

கார்த்திக்

என்னுடைய குறிப்பை கண்டதுமே உடனடியாக மனதில் தோன்றியதை எழுதிவிட்டீர்கள். உண்மையில் இத்தகைய ஒரு கருத்துத் தரப்புக்கு நமக்கு சம்பிரதாயமாக சொல்லபப்ட்டு வந்த விஷயங்கள் தான் எம்பி வந்து பதிலாக நிற்கும். அதை உடனே திருப்பிச் சொல்லிவிடுவதை விட அந்த விஷயங்களை கொஞ்சம் பரிசீலனைசெய்து பார்ப்பதே உகந்தது

நீங்கள் அதை வாசித்தபின் கேட்ட கேள்விகளுக்கு பதிலாகத்தான் அந்தகுறிப்பே உள்ளது. அந்த வினாக்களை அது பள்ளிக்கூட விவேகம் என்று சொல்லி முன்னதாகவே புறந்தள்ளிவிட்டுத்தான் பேசவே ஆரம்பிக்கிறது. அது சமமின்மை என்று சொல்வது சமூகத்தால், சூழலால் உருவாக்கப்படும் சமமின்மை அல்ல. அது பிறவியிலேயே மனிதர்கள் நரப்பமைப்பால் ,. உயிர்பண்புகளால் கொண்டிருக்கும் சமமின்மை பற்றியது. அதை பயிற்சி மூலமெல்லாம் சரியாக்க முடியாது

எளிமையாகச் சிந்தனைசெய்து பாருங்கள். பயிற்சிகொடுத்து உலகில் உள்ள எல்லாரையும் கவிஞர்களாகவோ பாடகர்களாகவோ சிந்தனையாளர்களாகவோ ஆக்கிவிட முடியுமா? சிந்திக்கவே வேண்டாம், அடிப்படையான விஷயம் இது. ஆனால் நீங்கள் அதை ஒரு கேள்வியாக பதிவுசெய்கிறீர்கள். அதாவது சட்டென்று மனதிலே தோன்றியது, சொல்கிறீர்கள்.  அடுத்த கேள்வியை கேட்டிருந்தால் நீங்களே கண்டுகொண்டிருப்பீர்கள்.

நித்யாவின் கருத்து நம்மை சீண்டக்கூடியது. அதையே நானும் சொல்கிறேன்.என்னை அது சீண்டியது என்கிறேன். ஆனால் அதன் உண்மை ஒருவகை அப்பட்டம் கொண்டது. மனிதர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் மனித நாகரீகம் என்பதை ஒரு செயல்படும் அமைப்பாக நிலைநாட்டும் பெருந்திரள் மட்டுமே.

அதை மேலும் யோசிக்கப்போனால் நரம்பியலில் இருந்து பக்கம் பக்கமாக ஆதாரங்களைக் காட்டமுடியும். அந்த விவாதம் நோக்கி இந்த திரி சென்றால் நல்லது. அந்தக்குறிப்புக்கு பின்பக்கமாக கொண்டுசெல்வதையே நான் பிழை வாசிப்பு என்றேன்.

*************

அன்புள்ள ஜெயமோகன்,

இந்த சாதாரணர்களின் விந்துக் கொடிகளிலிருந்துதானே ஏதோ ஒரு தலைமுறையில் அசாதாரணர்கள் உருவாகிறார்கள். மர ஏற்றுமதி செய்வதற்காகவே பெறப்பட்டவரின் வம்சாவளியில் சில தலைமுறைகளுக்கு பின்னர் ஒரு பாரதியோ ஜெயமோகனோ சுந்தர ராமசாமியோ தோன்றக்கூடும் என்பதே இந்த சாதாரணர்களின் இருப்புக்கான நியாயம் ஆகிறதல்லவா.
இந்த விசயத்தை எனக்கு முதலில் தெளிவாக்கியவர்கள் நீங்கள்தான். உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை. முதன் முதலாக உங்களை சந்தித்த போது விஷ்ணுபுரத்துக்கும் ஹெஸ்ஸின் சித்தார்த்தாவுக்குமான வேறுபாட்டை விளக்கும் போது சொன்னீர்கள். ஒருவன் ஒரே பிறவியில் முக்தி பெறுவது போன்ற தட்டையான நேர்கோடாக அந்த நாவல் இருக்கிறது ஆனால் உண்மையில் அப்படி நிகழ்வதில்லை அதை விஷ்ணுபுரம் காட்டுகிறது என்றீர்கள்.
பிறகு மீண்டும் விஷ்ணுபுரம் படிக்கும் போது பல தலைமுறைகள் பல முயற்சிகள் பல தோல்விகள் சறுக்கல்கள் தேங்கல்கள் அதிகார விளையாட்டுக்கள், வெற்றிகள் அனைத்தினுடையவும் குறுக்குவெட்டுச் சித்திரமாக விஷ்ணுபுரம் அமைகிறது. இதுவே நீங்கள் சொல்லும் வெகு குறைவான உயர்ந்தோருக்கும் பெரும்பான்மையான சாதாரணர்களுக்கும் பெரும் காலவெளியில் ஏதோ ஒரு சமத்துவத்தை உணரச் செய்வதை தவிர்க்க இயலவில்லை.
எத்தனையோ மர ஏற்றுமதி வியாபாரிகள் தங்களுக்கு அழித்துக்கொண்ட நுண்ணுணர்வு அனுபவங்கள் எல்லாம் சேர்ந்து சூல் கொண்டு அவர்கள் தலைமுறையில் ஒரு பெரும் கவிஞனை அல்லது மேதையை அல்லது நித்யா போன்ற ஞானியை உருவாக்கிடுமோ என தோன்றுகிறது. இத்தருணத்தில் மற்றொன்றும் நினைவு வருகிறது, கருவறைக் கடவுளையும் துவாரபாலகரையும் குறித்து நீங்கள் எழுதியது.
பணிவன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

***************

ஆம், அது உண்மையான ஒரு பார்வை. அதைத்தான் தொடர்ச்சியை நிலைநிறுத்தல், கட்டமைப்பாக ஆகிநிற்றல்  என்று சொல்கிறேன். நித்யா போன்ற ஒருவரின் அம்மாவுக்கு வரலாற்றில் உள்ள இடம் அதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைஅம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்
அடுத்த கட்டுரைமதம் இரு கடிதங்கள்