கனலி இம்மாத இதழ் ஜப்பானியச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. ஜப்பானிய இலக்கியத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு, ஆசியாவில் ஐரோப்பாவுடன் நேரடியான இலக்கிய- பண்பாட்டு உறவை முதலில் தொடங்கிய தேசம் ஜப்பான்தான். நாம் காணும் ஜப்பானிய இலக்கியமும் நவீன ஓவியமும் சினிமாவும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே ஐரோப்பிய அறிவொளிக்கால கலைமறுமலர்ச்சியின் வெற்றிகளை தன்னகப்படுத்திக்கொண்டு வளர்ந்தவை. ஆகவே ஜப்பானிய கலையும் இலக்கியமும் தவிர்க்கமுடியாதபடி ஆசியத்தன்மையுடனும் புத்துலகின் வீச்சுடனும் உள்ளன
தமிழில் நவீன இலக்கியம் அறிமுகமாகும்போதே ஜப்பானிய இலக்கியமும் அறிமுகமாகிவிட்டது. பாரதி பாஷோ உள்ளிட்ட ஜென் கவிஞர்களின் படைப்புக்களை ஆங்கிலம் வழி மொழியாக்கம் செய்திருக்கிறார். பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை The Tale of Genji நாவலை செஞ்சி கதை என்றபேரில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.தொடர்ச்சியாக ஜப்பானிய புனைகதை- கவிதை உலகம் இங்கே வந்துகொண்டே இருக்கிறது. ஜென் கவிதைகளை ஆனந்த், எம்.யுவன் போன்றவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். அப்துல் ரகுமான் போன்றவர்கள் ஹைக்கூ சென்ரியூ பாணி கவிதைகளை ஓர் இயக்கமாக முன்னெடுத்தனர்
தமிழ்ப் புனைகதைகளில் அகுதாகவா, யூகியோ மிஷிமா,யசுநாரி கவபத்தா போன்றவர்களின் செல்வாக்கு எப்போதும் உண்டு. எம்.எஸ், கணேஷ்ராம் போன்றவர்கள் அவர்களின் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.
கனலியின் இந்தச்சிறப்பிதழ் மிகுந்த முயற்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய இலக்கியத்தின் எல்லா பக்கங்களையும் காட்டும் ஒரு தொகுப்பாக அமைந்துள்ளது. ஜப்பானிய கதைகள் கவிதைகளின் மொழியாக்கங்கள், பேட்டிகளுடன் ஒரு முழுமையான வாசிப்பனுபவம். கனலி ஆசிரியர் குழு பாராட்டுக்குரியது.