அன்றைய முகம்

உறைகாலம்

இனிய ஜெயம்

நேற்று இரவு கண்ட அழகிய பாடல்களில் ஒன்று இது. தேவராஜன் மாஸ்டர் இசை என்று குறிப்பு சொல்கிறது.  வழக்கம் போல முதலில் பாடல் மட்டுமே கேட்டேன். இரண்டாம் முறை பார்க்கையில்தான் அறிந்தேன், பாடலில் பாடகராக நடிப்பவர், பாடலை பாடிய தாஸேட்டன் . அட என்று இருந்தது.

பாடகரே நடிகர் என்பது  தமிழில் புதுமை ஒன்றுமில்லை, பாகவதர் துவங்கி எம் எஸ் சுப்புலட்சுமி, தண்டபாணி தேசிகர் என்று தொடர்ந்த அந்த மரபு, சிவாஜியின் வருகைக்குப் பிறகு, புராண கதைகள் பின்வாங்கி சமுக கதைகள் நடிப்பு  வசனம் என மெல்ல சூழல் மாறி , tm சௌந்ர் ராஜன் வழியே பட்டிணத்தார் அருணகிரி நாதர் என மீண்டும் துளிர்க்க முயன்று, வண்ணப்படங்கள், ஹிந்தி, ஆங்கிலப் படங்களின் எழுச்சி வழியே முற்றிலும் அருகியது.

சத்யராஜ் கதாநாயகன் ஆன போது, கூடவே பல இதே போன்ற முயற்சிகள் புதிய வருகைகள், குறிப்பாக ‘குணச்சித்திர’ நடிகர்கள் எனும் வகைமை எல்லாம் உருவானது. அந்த வகைமையில் மலேஷியா வாசுதேவன், spb, மனோ,  துவங்கி பின்னர் கருணாஸ், , spb சரண், விஜய் யேசுதாஸ் போல பாடகர் எல்லாம் மீண்டும் நாயகனாக நடிக்கும் நிலை வரை ஒரு தொடர் ஓட்டம் இது.  ஹரிதாஸ் படத்தில்பாகவதர் இடம் எதுவோ, நாயகனாக நடித்தாலும் இன்றைய பாடகர்களின் இடம் அது அல்ல. (இடையில் மைக் மோகன். எல்லா படத்திலும் ‘பிரபல’ பாடகராகவே வருவார். ஆனால் அவருக்கான உரையாடல் குரல் கூட பின்னணிக் குரல்தான்.)

மலையாளத்தில் தமிழில் நிகழ்ந்தது போல, புராண கதையில் இருந்து சமுக கதைக்கு திரை சூழல் நகரும் வரிசை இல்லை என நினைக்கிறேன். மேலும் அங்கே கதகளி என்ற பலமான நடிப்பு மரபு உண்டு. அதை ஏற்றோ விலக்கியோதான் மலையாள திரை தனது மரபை கண்டடைந்திருக்கும். அந்த ஓட்டத்தில், அங்கே பாடகர்கள் நடிகர்களாக மாறும் சூழல், அது எவ்வாறு  என்ன என அறியேன்.

இருப்பினும் இப்பாடலில் தாஸேட்டனை கண்டது ஒரு இன்ப திடுக்கிடல்தான். அவர் மலையாளத்தில் இசையமைத்த பாடல்கள் வரிசை இணையத்தில் கிடைக்கிறது. அவர் நடித்தும் இருக்கிறார் என்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.

மிக சரியாக இயக்குனர் தாஸேட்டனை பயன்படுத்தி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஷாட் துவக்கத்தை மிக இயல்பாகவே கடக்கிறார் தாஸேட்டன். கிண்ணத்தில் தேன் வடித்து பாடலில் வரும் கமல் போல இருக்கிறார்.  நீலாகாசம் நோக்கி கை விரிக்கும்போதுதான் (உடல் பாவம்) பறவை  தரைக்கு வந்து விடுகிறது, உதாரணமாக சுரா வை வாசித்து ஒரு வாசகன் அடையும் பிம்பத்தை, ரியோ டி ஜெனிரோ இயேசு போல கைவிரித்து நிற்கும் சுரா வின் பிம்பம் தரைக்கு கொண்டு வருமே அது போல.

பின்னூட்டங்கள் மற்றொரு ஆச்சர்ய தகவலை சொல்கிறது, பாடலில் வரும் ஓவியர் இயக்குனர் பரதன். அந்த படத்தின் கலை இயக்குனரும் அவர்தானாம்.  கூடவோ  குறையவோ செய்யாத ஸ்கேல் பிடித்தது போல, தாஸேட்டனின் முக பாவங்கள் சிறப்பு. இவை கூடிய மிக அழகான பாடல்.  ஹிந்தியில் நிலவரம் எப்படியோ, பார்க்க குறும்பான ரங்காராவ் தம்பி  போல தோற்றம் அளிக்கும், முகமது ரஃபி சாகேப் அங்கே நிச்சயம் நடிகராக ஏதேனும் படத்தில் தோன்றி இருக்க வாய்ப்பு உண்டு. நேர் தலைகீழாக, நடிகராக துவங்கி பாடகராகவும் முக்கிய இடம் அடைந்தவர்கள் கமல் போல மிக மிக குறைவான எண்ணிக்கையே என்று நினைக்கிறேன்.

கடலூர் சீனு

அன்புள்ள சீனு

2011ல் இந்தப்பாடலைப் பற்றி எழுதியிருக்கிறேன். உறைகாலம் அப்பாடலில் யேசுதாஸ், பரதன் தவிர இன்னொருவர் இருக்கிறார். தமிழின் மிகப்பெரிய நட்சத்திரம். அன்று மலையாளத்தில் சிறிய நடிகர். இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவனால் பின்னர் மலையாளக் கதைநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். அன்று இயக்குநர் வின்செண்டின் உதவி இயக்குநர்.

ஜெ

முந்தைய கட்டுரைஎரிநீர்
அடுத்த கட்டுரைகனலி ஜப்பானிய சிறப்பிதழ்