தீவிரவாதமும் இலட்சியவாதமும்-எதிர்வினை

தீவிரவாதமும் இலட்சியவாதமும்

கடந்த மாதம் கீற்றில் நானும், தோழர் பரமானந்தமும் (Parama Comrade) ம.க.இ.க குறித்து வெளியிட்ட கட்டுரையை (https://bit.ly/pala-split) பகிர்ந்து, அதனையொட்டி “தீவிரவாதமும், இலட்சியவாதமும்” (https://bit.ly/3eRcJRQ) எனும் கட்டுரையை, தனது தளத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டுள்ளார்

சில விளக்கங்களையும், கருத்துக்களையும் தெரிவிப்பது அவசியமெனக் கருதுகிறேன். ம.க.இ.க-வில் நான் பணியாற்றிய காலங்களைக் குறித்து அவரிடம் பகிர்ந்து கொண்ட பொழுது, நான் அக்காலங்களில் ஏற்பட்ட மனஉளைச்சல்களை வெளிப்படுத்தியதும், உடைந்து அழுததும் உண்மை.

எனினும், அவர், “வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில் நின்றதை.”, “தற்கொலை எண்ணத்தை”-ப் பற்றியெல்லாம் நான் பேசியதாக குறிப்பிடுவது மிகையானது.

புனைவு எழுத்தாளர்கள் மாத்திரமில்லை, அபுனைவு எழுத்தாளர்களும் கூட மிகைப்பட எழுதுவதை, இயல்புதான் என ஏற்கும் மனநிலைக்குதான் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்றாலும், அது உண்மையல்ல எனத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அன்றைய சூழலில் நான் மனக்கொந்தளிப்புடனும், மனச்சோர்வுடனும் இருந்த நிலையில் நிகழ்ந்த சம்பவமிது. ஆனால், ம.க.இ.க-விலிருந்து வெளியேறியதால், “வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில் நின்றதாக” நான் ஒருபோதும் கருதியதில்லை.

ஏனெனில் பொருளாதாரரீதியாகவும், வாழ்நிலை ரீதியாகவும் அது உண்மையல்ல. ஆனால், அத்தகைய நிலைக்கு ஆளான எத்தனையோ தோழர்களை நானறிவேன். அமைப்பை விட்டு விலகியதும், ஊருக்கு திரும்பிச் செல்ல பேருந்து செலவுக்குக் கூட பணம் கொடுக்கப்படாமல், தவிக்க விடப்பட்ட முழுநேர ஊழியர்களின் கதைகள் ஏராளம்.

அதே போன்று, ம.க.இ.க-விலிருந்து வெளியேறியதால் “தற்கொலை எண்ணம்” எல்லாம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அத்தகைய மதக்குழு மனநிலையின் சிறு கூறேனும் என்னிடம் இருந்திருக்குமாயின், இத்தனை ஆண்டுகளாக நான் செயல்பட்டிருக்கவும் முடியாது, இன்று, ஜெயமோகன் சுட்டும் கட்டுரையை எழுதியிருக்கவும் இயலாது.

மாறாக, அத்தகைய மதக்குழு மனநிலைக்கு எதிராக துவக்கம் முதலே இருந்ததன் விளைவாகவே நான் அமைப்பை விட்டு வெளியேற நேர்ந்தது. அதனை உள்வாங்கி ஏற்று விரக்தியுற்றதால் அல்ல. எனவே, அப்படியொரு சித்திரம், ஜெயமோகன் கட்டுரையின் மூலம் உருவாவது உண்மையில்லை.

இன்னொரு விசயம், எனது உளக் கொந்தளிப்புகளுக்கும், உளச் சோர்வுகளுக்கும் ம.க.இ.க-வே முழுமுதற்காரணம் என எங்கும் நான் சொன்னதுமில்லை, எழுதியதுமில்லை.

எந்த அமைப்பிலும் செயல்படாத எத்தனையோ நபர்கள் எத்தகைய உளச்சோர்வுகளுக்கு ஆளாகி வருகிறார்கள் என்பதை தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில், அத்தகைய பொருத்தமற்ற, மிகையான குற்றச்சாட்டுகள் மீது எனக்கு நம்பிக்கையில்லை.

மற்றபடி, ஜெயமோகன் ம.க.இ.க-வின் பிளவு குறித்து முன்வைத்த “அறிவாணவம்” எனும் கருத்தில் எனது ஏற்பின்மையை, அதன் முரண்பாட்டை, ஏற்கெனவே முந்தைய பதிவுகளில் முன்வைத்திருக்கிறேன். இக்கட்டுரையில் அவர் முன்வைக்கும் இலட்சியவாதம் முரணுடையதாகவும், இன்னொரு தீவிரநிலையாகவும்தான் காட்சியளிக்கிறது.

உதாரணமாக, “மெய்யான இலட்சியவாதம் எதிர்நிலைகொண்டதாக இருக்காது.” எனத் தொடங்கி, “இலட்சியவாதம் தீமையை எதிர்ப்பதே. அப்போதுகூட அது அறச்சார்பையும் நன்னம்பிக்கையையும் கொண்டதாகவே இருக்கும். காழ்ப்பின், கசப்பின் மொழியில்பேசும் எவரும் இலட்சியவாதிகள் அல்ல, காழ்ப்பாளர் மட்டுமே…”

அவர் தன் ஆளுமையின் ஏதோ குறைபாட்டை அப்படி நிகர்செய்துகொள்ள முயல்கிறார்” என முன்வைக்கிறார். காழ்ப்பிற்கும், எதிர்ப்பிற்குமான வேறுபாடே இலட்சியவாதத்தின் அளவுகோல் அல்ல.

இன்னும் குறிப்பாக சொன்னால், அரசியல் இலட்சியவாதம் அடிப்படையில் கொள்கை, விழுமியங்கள், தத்துவம் சார்ந்த உலகக் கண்ணோட்டத்துடன் தொடர்புடையது. அதன் அடிப்படையில் உருவாகும் இலட்சியவாதம் அதன் தன்மையிலேயே சரியானதாக, நேர்மறையானதாக, முன்னேறியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், அனைத்து வகை அரசியல் இலட்சியவாதமும் எதிர்தரப்பை (தீமை) பலவீனமாக்கி தனது தரப்பின் மேலாதிக்கத்தை நிறுவுவதை இலட்சியமாகக் கொள்ளாவிடில் அது இலட்சியவாதமாக இருக்க முடியாது. இதற்கான உதாரணங்களை காந்தியின் வாழ்க்கையை விட வேறெங்கும் தேட முடியாது.

எனவே, அப்படி ஒரு இலட்சியவாதம் இருப்பின், அது கற்பனாவாதமாகவே இருக்கும். இது, ஜெயமோகன் மனதார விமர்சிக்கும் ம.க.இ.க.-விற்கும் பொருந்தும், கிள்ளிப் போடும் வகையில் விமர்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் பொருந்தும்.

இறுதியாக, ஜெயமோகன் கவனப்படுத்தும் “தீவிரவாதத்திற்கும்”, முன்வைக்கும் “இலட்சியவாதத்திற்கும்” இடையே நின்று, மக்கள் நலன் சார்ந்த தார்மீக அறம் கூடிய யதார்த்தவாதமே (pragmatism) சமூக முன்னேற்றத்திற்கும், ஜனநாயத்திற்கும் வழிகோலும்.

சரவண ராஜா

[முகநூலில் இருந்து]

முந்தைய கட்டுரைவெள்ளையானை- கடிதம்
அடுத்த கட்டுரைஅரசியலும் எழுத்தாளனும்