முற்போக்கு மிரட்டல்- கடிதங்கள்

ஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை

அன்புள்ள ஜெ,

எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களானாலும் பொதுவாக கம்யூனிஸ்டுகள் மேல் ஒரு மரியாதை இருக்கும். அவர்கள் ஒரு அரசியல் திட்டமும் லட்சியமும் உடையவர்கள் என்றும் தர்க்கபூர்வமாகவும் நியாயமாகவும் பேசுபவர்கள் என்றும் நம்புவார்கள். நானும் அப்படித்தான் நம்பினேன். என் நம்பிக்கை பொய்த்தது ஒருமுறை ஆதவன் தீட்சண்யாவின் மேடைப்பேச்சை கேட்டபோதுதான். திமுக பேச்சாளர்களின் உடல்மொழியும் அந்தப்பேச்சுமுறையும். அன்றைக்கு எனக்கு ஒரு ஆழமான ஒவ்வாமை ஏற்பட்டது

அதன்பிறகு இப்போது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்றெல்லாம் வேறுபெயர்களைச் சூட்டிக்கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இணைக்கொள்கையாளர்கள் தமிழ் எழுத்தாளர்களை அவதூறுசெய்தும், வழக்குகள் போட்டு துன்புறுத்தியும், மிரட்டியும் வருவதை அறிந்தபோது எப்பேற்பட்ட வீழ்ச்சி என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு காலகட்டத்தில் கருத்துச் சுதந்திரத்துக்காக போராடிய பெருமை உடைய அமைப்பு.

காலப்போக்கில் எல்லாமே சீரழிந்து சுருங்குகிறது. கந்தர்வன் போன்ற எழுத்தாளர்கள் எல்லாம் இருந்த அமைப்பு இன்றைக்கு நினைத்தே பார்க்கமுடியாத கீழ்மைகளுக்கெல்லாம் சென்றுவிட்டது. வருந்துவது தவிர ஒன்றுமே செய்வதற்கில்லை

ஜி.பாலசுப்ரமணியம்

***

அன்புள்ள ஜெ,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அனுப்பிய வக்கீல்நோட்டீஸ் பற்றிய செய்தியை வாசித்தேன். இதே சங்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் அவர்கள் எந்த எழுத்தாளர்கள் மேலும் வழக்குதொடுப்பதோ மிரட்டுவதோ இல்லை என்று சொன்னார். அப்படி நீங்கள் சொல்லியிருப்பது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அவமதிப்பது என்று சொன்னார். அவர் சொன்ன சொல்லை ஏற்று நீங்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பெயரை கட்டுரையில் இருந்து நீக்குவதாகச் சொன்னீர்கள். இதோ அவர்கள் வழக்கறிஞர் வழியாக மிரட்டுகிறார்கள். அப்படியென்றால் ச.தமிழ்ச்செல்வன் சொன்னதற்கெல்லாம் என்ன அர்த்தம்? அவரையும் அவர் சொல்லையும் மதிக்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன் என்று நீங்கள் சொன்னதற்கு என்ன அர்த்தம்?

எழுத்தாளர்களை மிரட்டும் ஒரு மாஃபியா இந்த அமைப்பு என்று நீங்கள் சொன்னதற்கு முதன்மையான சான்று அந்த வக்கீல் நோட்டீஸ்தான். இதை இவர்கள் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வேறு எழுத்தாளர்களுக்கு மீடியா இல்லை. அவர்கள் பயந்துபோய் சரணடைந்துவிடுவார்கள். இந்த அமைப்பு ஓர் ஊழல் அமைப்பு என்றுதான் நான் நினைக்கிறேன். அதைப்பற்றிய கேள்விகள் எழக்கூடாது என்றுதான் இவர்கள் முன்னரே அத்தனைபேரையும் மிரட்டி வைக்கிறார்கள். இவர்களின் ஊழல்கள் என்ன என்பதை வெளிப்படையாக விசாரிக்கவேண்டும். இவர்கள் ஏன் எழுத்தாளர்களை மிரட்டுகிறார்கள் என்பது கண்டடையப்படவேண்டும்.

எஸ்.கிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெ

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அனுப்பியிருக்கும் வக்கீல் நோட்டீஸ் பற்றிய செய்தியை படித்தேன். ஆதவன் தீச்சண்யன் என்ற எழுத்தாளர் பற்றி கேள்விப்பட்டதில்லை. சொல்வதைப் பார்த்தால் இது அவருடைய ஒரு விளம்பர உத்தி என்று நினைக்கிறேன். கொஞ்சநாள் ஜெயமோகனுக்கும் எனக்கும் சண்டை என்று சொல்லிக்கொண்டு அலைவார். கடைசிவரை அதுதான் அவருக்கு இலக்கிய அடையாளமாகவும் இருக்கும்.

இதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆதரிக்கிறது என்றால் அது மிகக்கேவலமான செயல். எழுத்தாளர்களை அவர்களின் விமர்சனங்களுக்காக வழக்குபோட்டு மிரட்டுவதெல்லாம் எந்த தகுதியான அமைப்பும் செய்யாதது. இந்த கேவலத்தை தமிழ் எழுத்தாளர்கள் கண்டிக்க மாட்டார்கள். ஏனென்றால் உங்களுக்கே இப்படி மிரட்டல் என்றால் மற்ற எழுத்தாளர்கள் பயந்துபோய் வாயைமூடிக்கொள்வார்கள். ஆனால் வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

எம்.ராஜேந்திரன்

முந்தைய கட்டுரைகதையென்னும் வலை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதீவிரவாதமும் இலட்சியவாதமும்