வெண்முரசு,கமல் ஹாசன்
வெண்முரசு,கமல் ஹாசன்-கடிதங்கள்
வெண்முரசு- கமல்ஹாசன் சொல்வது சரியா?
வெண்முரசு,மகாபாரதம்,கமல்- விவாதங்கள்
கமல், மகாபாரதம்,மரபு
கமல், மகாபாரதம் பற்றி மேலும்
வெண்முரசும் மகாபாரதமும் கமல் ஹாசனும்
சில நேரங்களில், நாம் வண்ணக்கண்ணாடிகளை கொண்டு பார்பதனால், உலகத் தரம் வாய்ந்த நிகழ்வுகளை, உள்ளுர் செய்தியாககூட பார்க்க தவறுகிறோம்.
எழுத்தாளர் ஜெயமோகன்…. தமிழக ஆன்மீகவாதிகளுக்கு இவரது இலக்கிய முற்போக்கு பிடிப்பதில்லை, முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு இவரது பண்பாட்டு ஆன்மீகம் பிடிப்பதில்லை. ஆகையினால் தமிழகத்தின் இந்துத்துவ, பெரியாரிய, இடதுசாரி என அனைத்து தரப்பினராலும் எழுத்தாளர் ஜெயமோகன் புறக்கணிக்கபடுவது அரசியல் இயல்பே.
ஆனால் ஜெயமோகனால் ஆகச்சிறந்த படைப்பு மற்றும் உலகத்தரத்தின் சாதனை தமிழ் மொழிக்குள் நடைபெறும் போது, அவரை உச்சிமுகர்ந்து இத் தமிழ் சமுகம் கொண்டாடியே வேண்டும்.
அப்படி என்ன சாதனை? 25,000 பக்கங்களை கொண்ட ஒரு நாவல் ( வெண்முரசு) – 26 புத்தகங்களாக ஜெயமோகனால் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள வார்த்தைகளுக்கு ஒரு அகராதி செய்யும்பட்சத்தில், ஒரு இலட்சம் வார்த்தைகளை உள்ளடக்கிய அகராதி தமிழுக்கு கிடைக்கும்.
கடந்த ஏழு ஆண்டுகளாக, தினந்தோறும் எழுதி எழுதி இந்த சாதனையை கடந்த ஜூன் 2020 வெற்றிகரமாக முடித்துள்ளார். அவருக்கு நமது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.
இந்த நாவல் மாகபாரதத்தின் மிக நீண்ட, விரிவான, பல புதிய பரிமானத்துடன் வெளிவந்துள்ளது. இந்த நாவல் வலைதலத்தில் படிக்க கிடைக்கிறது.
இது மகாபாரதக் கதை என்பதாலேயே, இதை நாம் ஒதுக்கிவிட வேண்டியது இல்லை. காப்பியத்தில் உள்ள அழகை இரசிக்க சிறிது நேரம் அரசியல் சித்தாந்த முரண்களை தள்ளிவைப்பதில் தவறில்லை. தனது அறிவியல் ஆய்வகத்தில் மனித பரிணாம வளர்ச்சியையும், தேவாலயத்தில் ஆதிகாம உலகத் தோற்றத்தையும் முரண்பாடு இல்லாமல், எங்கு எது? என்ற புரிதலோடு பயணித்த சால்ஸ் டார்வினின் மனப் பக்குவத்திற்கு தமிழ் புனைவிலக்கிய வாசகர்கள் வந்து சேரவேண்டிய தருணத்தை எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிஉள்ளார்.
அடுத்தத் தலைமுறை தமிழ் குழந்தைகள் குறைந்தபட்சம் ஜெயமோகனின் வெண்முரசை அவர் எழுதிய தமிழ் மூலத்தில் படிக்கவிரும்பி தமிழ் கற்பார்கள் என்ற ஆசையுடன், தமிழின் வளர்ச்சிக்கு உதவிய அவரது எழுத்துக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்…..
இளங்கோவன்
ஒருவேளை எனக்கு தீவிர தமிழ் இலக்கியமோ ஜெயமோகனையோ இதுவரை தெரியாமல் இருந்திருக்குமேயானால், இன்று கமல்ஹாசன் சொன்னதைக் கேட்டு வியந்து வெண்முரசு வாசிக்க தொடங்கியிருப்பேன்.
உலகெங்கும் தன் கலாச்சாரத்தின் வரலாற்றின் தரவுகளும் கற்பனைகளும் கிடக்கும் இடமாக தொன்மத்தை கவனிக்கின்றனர் எழுத்தாளர்கள். அதன் அடிப்படையில் மீளுருவாக்க நாவல்கள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. அதன் வழியே சமூகத்தின் கூட்டறிவு தன் மொழியையும் நுண்ணுணர்வையும் கூர்மையாக்கி கொள்ள சாத்தியம் பிறக்கிறது. ஆனால் அது எப்போதும் வெகுஜன செயல்பாடாக இருப்பதில்லை.
2018 இல் வெளியான Circe நாவலும் அத்தகைய ஒன்றுதான். அந்நாவல் ஒடிசியஸை ஒரு சிறிய பாத்திரமாக சுருக்கி நிஜ ஒடிசியில் சிறிய பாத்திரமாக இருந்த செர்சியை மைய கதாபாத்திரமாக ஆக்கி தேவையான இடைவெளிகளை கற்பனையால் நிரப்பிக் கொண்டே செல்கிறது. மேற்கில் இந்நாவல் வாசிக்கப்படுவது நம் சூழலில் அதிகமாக வாசிக்கப்படும் இலக்கிய படைப்பை விட பல மடங்கு என்ற போதும் அதுவும் வெகுஜனத்தை தொட்டுவிடும் அளவு இல்லை, அதுகுறித்து வருந்துவது இலக்கியவாதிகளின் வேலையும் இல்லை.
அந்த ஒரு நாவலை விட அளவிலும் மொழிவன்மையிலும் பன்மடங்கு பிரம்மாண்டமாகத்தான் இங்கு வெண்முரசு உருவாகி இருக்கிறது. ஆனால், செர்சி அனுபவிக்கும் வாசகர் பட்டாளத்தையோ பிரபல்யத்தையோ வெண்முரசு இன்னும் சில பத்தாண்டுகள் வரையும் தொடப்போவதில்லை என்றே கருதுகிறேன். ஆனால், இது எழுத்தாளரின் தோல்வியாக நிச்சயம் கருத முடியாது, எந்த தனி நபரையும் குற்றம் சாட்டவும் முடியாது, அது அந்தந்த சமூகத்தின் குறைபாடே.
இந்த பிண்ணணியில் தான் கமல்ஹாசன் போன்ற பெரும் நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்கள் வெண்முரசை அறிமுகம் செய்வதும் பாராட்டுவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இயலாமைக்கு எதிராக ஒரு குரல். வெண்முரசை முழுவதும் வாசித்துவிட்டுத்தான் அதைப் பாராட்ட வேண்டும் என்பது தேவையற்றது. அதில் ஓரிரு நாவல்களைப் படித்திருந்தாலே போதும். கூடவே கமல்ஹாசனுடைய முதன்மை துறை சினிமா, அதில் அவர் பார்த்திருக்கும், பார்த்துக் கொண்டிருக்கும் படங்கள் மற்றும் தொடர்கள் பற்றி பலரும் இன்றும் அறிந்திலர். Braking Bad, Sneky Pete, Peaky Blinders, Vikings, Better Call Saul, Mindhunter என அத்தனைத் தொடர்களையும் அவர் பார்த்துள்ளார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதைக் கடந்துதான் இன்னும் பல முக்கிய நாவல்களையும் படைப்புகளையும் வாசித்துள்ளார், வாசித்து வருகிறார்.
வெண்முரசை முழுமையாகப் படிக்க வேண்டியது இலக்கியவாதிகள்தான். அதுவும் கட்டாயம் கிடையாது. அப்படி முழுவதும் வாசித்த பிரபல இலக்கிய வாதிகள் யாரும் இங்கு உளரோ, யான் அறியேன். சில நண்பர்கள் முழுவதும் வாசித்திருக்கின்றனர். சொல்லபோனால் பொடிசுகள் முதல் பல முதிய இலக்கிய வாதிகள் வரை அதை (வாசிக்காமலேயே) வசைமாரி பொழிந்துள்ளனர். இந்த நிலை இப்படி இருக்க கமல்ஹாசன் முழுவதும் படிக்கவில்லை என்பதால் அவர் அதை மேடையில் சொல்ல அருகதை அற்றவர் என்று முந்திக் கொண்டு கருத்திடுவது தற்குறித்தனம். ஒரு நாவலை வசை பேச எதையும் வாசிக்கத் தேவையில்லை, ஆனால் பாராட்ட அதை ஆழ்ந்து கற்றிருக்க வேண்டும் என்பது ஒரு விசித்திர விதி.
கொற்றவை நாவலுக்கு ஒரு நல்ல அவதானிப்பைச் சொன்னவர்களுள் ஒருவர் கமல்ஹாசனும் என்று தனிப்பேச்சில் ஜெயமோகன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். கூடவே மேடையிலும் கொற்றவை நாவலை வியந்து போற்றி இருக்கிறார் கமல். அதற்கும் மறுப்பும் எதிர்ப்பும் தெரிவிக்கும் இலக்கியவாதிகள் இருக்கக்கூடும். அவர்களுக்கு வாழ்த்து.
கமல்ஹாசன் வெண்முரசைச் சுட்டிக் காண்பித்து (அதுவும் முழுவதும் வாசிக்காமலேயே) தன்மீது அறிவுஜீவி பிம்பத்தைக் கட்டி எழுப்பிக் கொள்கிறார் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இப்படி ஒரு அதீத கண்டுபிடிப்பை வேலை மெனக்கெட்டு செய்து தன் மீது தற்குறி பிம்பத்தினைப் பலரும் கட்டமைத்துக் கொள்கிறார்களே, அவர்களே பரிதாபத்திற்கு உரியவர்கள்.
மேற்குறிப்பிட்ட Circe-யும் வாசித்துவிட்டுத்தான் பேசி இருக்கிறேன் என்பதை உளமார உறுதி கூறுகிறேன். போலவே, இதுவரை வெண்முரசில் பதினேழு நாவல்களை முழுமையாகவும் மற்றவற்றில் ஆங்காங்கும் வாசித்திருக்கிறேன். நான் வெண்முரசை பாராட்டலாமா தெரியவில்லை. (நான் பாராட்டி பத்து பைசா பயனில்லை, அது வேறு விசயம்). முழுமையாக வாசித்துவிட்டுத்தான் பாராட்ட வேண்டும் போலிருக்கிறது. ஆலய கோபுரங்களை அண்ணாந்து வியந்து போற்றுவதற்கு முன் அத்தனை நுண்சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் ஆய்ந்து அறிந்துவிட்டு வர வேண்டும் என்பார்களோ.
கமலக்கண்ணன் கோபிநாதன்