மனு- கடிதங்கள்-4

மனு இன்று

அன்புள்ள ஜெ

இரண்டு விஷயங்கள் கண்முன் உள்ளன. ஒன்று, இன்றும் தலித்துக்கள் கொடுமைசெய்யப்படுகிறார்கள். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவற்றுக்கு ஆதாரமான கருத்தியலாக இருப்பது மனுநீதி. அது இன்றும் பேசப்படுகிறது.யூடியூபில் போய் மனுநீதி என்று தேடினாலேதெரியும் எத்தனை பிராமண ‘அறிஞர்கள்’ வந்து அதை விதந்து ஓதுகிறார்கள், விளக்கம் அளிக்கிறார்கள் என்று. காஞ்சி சங்கராச்சாரியார் முதல் இன்றைய ஓங்காரானந்தா வரை அதைத்தான் வலியுறுத்திப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பேசுபவர்கள் அனைவருமே தெளிவாகவே வர்ணபேதத்தை, சாதிமேட்டிமையை முன்வைக்கிறார்கள். சொல்லப்போனால் மனு சொல்லும் வர்ண அடுக்குமுறையை இவர்கள் சாதிய அடுக்குமுறையாகவே விளக்குகிறார்கள். பெண்ணை ஒடுக்கவேண்டும் என்கிறார்கள். பெண்கல்வி மறுமணம் எல்லாவற்றையும் நிராகரிக்கிறார்கள். இதெல்லாம் கண்கூடானவை.

திருமாவளவன் தன் சமூகம் எதன்பொருட்டு ஒடுக்கப்படுகிறதோ அதை எதிர்க்கிறார். அதை மறுக்கிறார். அதை ஒட்டுமொத்த இந்துமதத்தை எதிர்க்கிறார் என்று திரிப்பது எத்தனை அபத்தம், எவ்வளவு ஆணவம். மனுநீதியை இன்று நாங்கள் ஏற்கவில்லை என்றுகூட சொல்ல இவர்களுக்கு நாவெழவில்லை. நேற்று மனுநீதியின் வழியாக முன்வைக்கப்பட்ட சாதிய ஒடுக்குமுறைகள் காலாவதியானவை என்று கூட சொல்ல முடியவில்லை. மாறாக இன்றைக்கும் மனுநீதியை பேசிக்கொண்டிருப்பவர்களை முன்வைக்கிறார்கள்

அப்படியென்றால் சொல்லவருவது என்ன? இந்துமதம் அப்படித்தான் வர்ணத்தையும் சாதியையும்தான் முன்வைக்கும், பொறுத்துக்கொண்டு இருந்தால் இரு என்றுதானே? இந்துமதம் என்றால் அது ஒடுக்குமுறைகொண்டது, மனுசொன்ன பழைய நெறிகளை கடைப்பிடிப்பது என்றுதானே? உண்மையில் பெரியார் முதல் திருமா வரை இந்துமதம் பற்றிச் சொன்ன அத்தனை குற்றச்சாட்டுக்களையும் அப்படியே இவர்கள் ஒத்துக்கொண்டு ஆமாம் அப்படித்தான் இருப்போம், நீ விமர்சித்தால் தாக்குவோம் என்று கொக்கரிக்கிறார்கள் இல்லையா?

அதைச்சொல்ல இந்த பதர்களுக்கு என்ன உரிமை? இவர்களுக்கு அந்த இடத்தை யார் அளித்தார்கள்? இன்றைக்கு வெறும் அரசியல் காரணத்துக்காக இந்தக் குரலை நாம் அனுமதித்தால் இந்துமதத்தை நாம் மீண்டும் பழைய சாதிய ஒடுக்குமுறை காலகட்டத்திற்குள் கொண்டுசெல்கிறோம். இதைக்கூட ஒரு சராசரி இந்து புரிந்துகொள்ளவில்லை என்றால் அவன் இருக்கும் ஆன்மிகமான இருட்டு, அவனுடைய அறவீழ்ச்சி மிகக்கேவலமானது.

இணையத்தில் பிராமணர்கள் சிலர் உங்களை பிராமண எதிர்ப்பாளர் என்று சொல்லி வசைபாடியிருந்தனர். தெளிவாகவே பிராமணர்கள் மீது உங்களுக்கு இருக்கும் மதிப்பை எழுதிவருபவர்கள் நீங்கள். ஒரு சாதியாக அவர்கள்மேல் தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிராக பிராமணர்கள் அல்லாதவர்களின் தரப்பில் இருந்து எழுகின்ற முதன்மைக்குரல் நீங்கள். அவ்வகையில் ஜெயகாந்தனின் வாரிசு. அதற்காக பிராமண அடிவருடி என்று வசைபாடப்படுகிறீர்கள். ஜெயகாந்தனைப்போலவே அதை பொருட்படுத்துவதுமில்லை

ஆனால் ஜெயகாந்தனேகூட பிராமணர்களின் வெற்றுஆசாரவாதத்தை, போலிப்பெருமிதத்தை, மனிதநீதிக்கு எதிரான பழமைவாதத்தை கடுமையாக கண்டித்தவர்தான். அவர் பிராமணர்களின் சிறப்புகளை ஏற்றுக்கொண்டவர். பிராமணர்கள் மீதான ஒட்டுமொத்த தாக்குதலை கண்டித்தவர்.ஆனால் அவர் சுயதரிசனம், அக்னிபிரவேசம்,யுகசந்தி போன்ற கதைகளை எழுதியபோது இதேபோல ஆசாரவாத பிராமணர்களால் பிராமணவிரோதி என்று வசைபாடப்பட்டார்

அதாவது இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்றால் பிராமணர்களை ஒருவர் மதிப்பார் என்றால் அவர் ஆசாரவாதத்தையும் சாதிமேட்டிமைத்தனத்தையும் மனிதநெறிக்கு எதிரான பழமைவாதத்தையும் ஏற்றுக்கொண்டாகவேண்டும். இல்லாவிட்டால் அவர் பிராமண விரோதி. பிராமண சமூகம் இன்று இந்த ஆஷாடபூதிகளை நம்பி இல்லை. ஒரு பத்துசதவீதம்பேர் கூட இவர்களுக்கு காதுகொடுப்பதில்லை. ஆனால் இவர்கள் பிராமண சமூகத்தின் சார்பில் கூச்சலிட்டு தங்களை பிராமணசமூகத்தின் குரலாக காட்டிக்கொள்கிறார்கள்.

இதன் விளைவாக ஒட்டுமொத்த பிராமணர்களே சாதிவெறிகொண்ட, பிறமக்களை தங்களைவிட கீழாக நினைக்கக்கூடிய , பழமைவாதிகள் என்று நினைக்க வழியமைகிறது. திருமாவளவன் போன்றவர்கள் பிராமணர்களைப் பற்றி என்ன சொல்கிறார்களோ அதுவே உண்மை என்று இவர்கள் நிரூபிக்கிறார்கள்.

நான் பிராமணன். எனக்கு என்னுடைய குடும்பம் பற்றிய பெருமையும் உண்டு. என் குடும்பத்தின் பண்பாடு, கல்வி, என் முன்னோர்கள் செய்த அறச்செயல்கள் ஆகியவை பற்றிய பெருமை அது. நான் மற்றவர்களை விட மேலான பிறப்பு கொண்டவன் என்ற பெருமை அல்ல அது

இந்த சந்தர்ப்பத்தில் முற்போக்கு எண்ணமும் நவீனக்கல்வியும் கொண்ட பிராமணர்கள் முன்வந்து இந்த பழமைவாத ஆசாரவாத ஆஷாடபூதிகளை கண்டிக்கவேண்டும். இவர்கள் தங்கள் குரல் அல்ல என்று தெளிவுபடுத்தவேண்டும். அதற்காகவே இதை எழுதுகிறேன்

எஸ்.ஸ்ரீனிவாஸ்

டாலஸ்

அன்பு ஜெ,

உங்களின் ’மனு இன்று’ கட்டுரையைப் படித்தேன். கேள்விகளால் பகுத்து, ஒவ்வொரு படி நிலையாக வந்து மிகத் தெளிவாக விளக்கியிருந்தீர்கள். இந்த கேள்விகள் அது சார்ந்த விவாதங்கள் யாவும் இன்னும் பல நூற்றாண்டுகள் பேசப்பட்டுக் கொண்டே வரும் என்பது உறுதி. அதற்கான ஒரு தெளிவுரையை வருங்கால தலைமுறையினருக்கு வழங்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. நீர்த்துப் போன மனுவை திரும்பத் திரும்ப அரசியல்வாதிகள் கையாள்வதற்கான ஓர் உள்ளார்ந்த தேவையை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மனுவை மட்டுமல்ல பிரிவினைவாதத்தை வளர்க்ககூடிய எந்தவொரு விடயத்தையும் அரசியல்வாதிகள் என்றைக்குமே கீழிறக்கி வைக்க மாட்டார்கள் என்பது உறுதி.

உலகளவில் தோல்நிறம் சார்ந்த பிரிவினைவாதம், மக்களாட்சி-கம்யூனிசக் கொள்கைகள் சார்ந்த பிரிவினைவாதம்,  சில உலக நாடுகளில் இனக்குழுக்கள் சார்ந்த பிரிவினைவாதம், இந்தியாவில் மதம் சார்ந்த பிரிவினைவாதம், பிரந்தியப் பிரிவினைவாதம், தமிழகத்தில் திராவிட ஆரியப் பிரிவினைவாதம், தமிழ் தேசியம், சாதியப் பிரிவினைவாதம் என அனைத்துப் பிரிவினைவாதத்தின் வேரையும் உள்நோக்க அது அரசியல் நோக்கத்திற்காகவும், மக்களை ஓட்டு வங்கியாக மாற்றும் அரசியலுக்காகவுமே இருக்கிறது என்பதைக் காண முடிகிறது.

இதனால் சாமனியர்களுக்கு துளியளவும் பயனில்லை. இந்தப் பிரிவினைவாதத்தினால் அதிகமாகத் தூண்டப்படுபவர்கள் இளைஞர்கள். உங்கள் தளத்தில் வந்த “முன்னால் இடது சாரியின் கடிதம்” என்ற கடிதமே அதற்கான சான்று. இது தீவிர இடது சாரிகளுக்கு மட்டுமல்ல, தீவிர வலது சாரி, தமிழ் தேசியவதி, திராவிடவாதி, மதவாதி என தீவிரமாக ஒரு முனையில் செயல்படும் யாவருக்கும் பொருந்தும். எவன் ஒருவன் தன்னை ஒரு இஸத்துக்குள்(ism) அடைத்து அதில் மிகத்தீவிரமாக செயல்படுகிறானோ அவனுக்காக விரிக்கப்படும் வலை இந்த பிரிவினைவாதம்.

இளமை துடிப்புமிக்கது. அங்கு காந்தி வெறுக்கப்படுகிறார். ஒருவகையில் காந்தி கொலை செய்யப்பட்டதும் கூட இந்த தீவிர மத/ பிரிவினைவாதத்தினால் தான். காந்தி மட்டுமல்ல நடு நிலையோடு, எந்த தீவிர நிலைப்பாடும் இல்லாமல் உண்மையை உரைக்கும் பலரும் – நீங்கள் உட்பட மறைக்கப்படுவதும், அறிந்து கொள்ள தடுக்கப்படுவதும் இதே அடிப்படைவாதிகளால் தான்.

இந்த நிலை அறமும் அரசியலும் என்ற மு.வ –வின் நூலில் வரும் ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. ”முப்பது சிறுவர்கள் விளையாடும் ஒரு தெருவில் வழக்கம் போல் சண்டை வருகிறது. திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் நபர் ஒருவர் அவர்களை ஒற்றுமையோடு இருக்கச் சொன்னால் அவரையே பையன்கள் எள்ளி நகையாடுவர். ஆனால் அதே திண்ணையார் அவர்களில் ஒரு சிறுகுழுவைப் பிரித்து பிற சிறுவர்களை தீயவர்களாகக் கூறி பிரிவினையை வளர்த்தால் அச்சிறுவர்கள் திண்ணையாரை தலைவராகக் கருதுவார்கள்.

வேறுபாடு கருதாத ஒற்றுமையை அறிவுறுத்தினால் கேட்பார் எவருமில்லை. தனித் தனியே பிரிந்த பிரிவுகளை உறுதிபடுத்தி  அவர்களுக்கு ஏற்றபடி தூபமிட்டால் தலைமைப்பதவி உண்டு; மதிப்பு உண்டு; போற்றுதல் உண்டு” இந்த வரிகள் என்றைக்குமே உண்மையாக நிற்கக்கூடியவை. இந்த பிரிவினைவாதத்தால் சிக்குண்டு இளமையின் பொன்னான நாட்களை தவறவிடும், வழிதவறும் இளஞர்களின் மேல் அக்கறை கொண்டு மத்தியத் தரப்பை எடுத்துச் சொல்லும் தலைவர்கள், எழுத்தாளர்களை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். அவ்வாறான புறக்கணிப்புகளையும் தாண்டி குறுகிய கால நோக்கமில்லாமல் சிலருக்காவது பயனளிக்குமென உங்களின் இது போன்ற பல நிலைப்பாடுகளை நான் ஆர்வத்தோடு கவனித்தும், கிரகித்தும் வருகிறேன். நன்றி.

தேசியவாதத்தைத் தாண்டிய பிரிவினைவாதத்தை வார்த்தெடுக்க இந்தியாவில் தீவிர இந்துத்துவாவும், தமிழகத்தில் திராவிட-ஆரிய பிரிவினைவாதமும் பயன்பட்டது. ஐம்பது ஆண்டுகாலத்தில் அது நீர்த்துப்போகவே இன்று தமிழ் தேசியப் பிரிவினைவாதம் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. மாதவாதக்கட்சிகள் தமிழகத்தில் உள் நுழைய மதம் சார்ந்த பிரிவினைவாதப் பேச்சுகள் பயன்படும் என்பதால் ”திருமாவளவன் ஐயாவின் மனு” போன்ற விவாதங்கள் பெரிதாக்கப்பட்டு வருவதாகப் பார்க்கிறேன். திராவிடக் கட்சிகள் தீவிரமாக இருந்த கால கட்டத்தில் மனு பற்றிய இந்த வார்த்தைகள் இவ்வளவு விவதமாக மறியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் மனுவை எதிர்ப்பதென்பது அவர்கள் அனிச்சையாக செய்யும் ஒன்று தான். ஆனால் இன்றோ திராவிடப் பிரிவினைவாதத்திற்கும் தமிழ் தேசியப் பிரிவினை வாதத்திற்கும் இடையில் மதப் பிரிவினைவாதம் நுழைய இடமிருப்பதால் இது நிகழ்வதாகப் பார்க்கிறேன்.

மனுவை எதிர்ப்பதையும் அதற்கு வரும் எதிர்வினையாற்றல்களையும் அரசியலாகக் கடந்துவிட்டு மத்தியில் நின்று உங்களின் நிலைப்பாட்டை கவனித்தால் இளமையின் நேர விரயங்களைத் தவிர்க்கலாம் என்பது உறுதி.

இந்து மத அடிப்படைவாதங்களும் மனுவும் பெண்களை இழுக்கரைக்கட்டும், வர்ணப்பிரிவினை செய்யட்டும், பைபிலும், குர்ஆனும் பெண்ணடிமைத் தனத்தை ஆதரிக்கட்டும் எனக்கு அதைப்பற்றிய கவலை இல்லை. ஏனென்றால் நான் ஆளப்படுவது அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சிரத்தையோடு சமத்துவம் சமைத்த ”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால்”. பிரிவினைவாதத்தால் ஏற்பட்ட பாகுபாடுகளை சட்டம் கொண்டு, கல்வி கொண்டு, மக்களாட்சி கொண்டு அது தரும் சுதந்திரங்கொண்டு சமன் செய்ய அந்த ஆயுதமொன்றே போதுமானது என்பதை தீர்க்கமாக நம்புகிறேன் ஜெ. உங்கள் கட்டுரையும் அதே ஒரு நேர்மறை எண்ணத்தை எனக்குத் தந்தது. நன்றி.

அன்புடன்

இரம்யா.

அன்புள்ள ஜெ

மனுநீதி சம்பந்தமான விவாதங்களில் மிகமிக கேவலமான விஷயம் என்பது இங்கே அறிவுஜீவிகள் எனப்படுபவர்கள்கூட முக்கியமான அடிப்படையான வரலாற்றாய்வுகள், பண்பாட்டாய்வுகள் எதையுமே படித்ததில்லை என்பது. பெரும்பாலானவர்கள் வெற்றிகொண்டான் தரத்து திராவிட மேடைப்பேச்சுக்கள் வழியாக சின்னவயசிலே கேள்விப்பட்டதைத்தான் வரலாற்று அறிவாக விளம்பிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது  உபன்யாசகர்கள்  சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் படிக்கப்படிக்க கூசுகிறது.

இங்கே ஒரு பேச்சு, சங்ககாலத்திலே இங்கே சாதியே இல்லை. தமிழனுக்குச் சாதியில்லை. மனு புகுத்திவிட்டார் என்பது. சங்ககாலத்தின் இறுக்கமான சாதியமைப்பு பற்றியும் அன்றிருந்த சாதிப்பூசல்களைப் பற்றியும் முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களும் பண்பாட்டு ஆய்வாளர்களும் எழுதிய நூல்கள் எந்த சர்வதேச நூலகங்களிலும் இருக்கும். புரட்டியாவது பார்க்கமாட்டார்களா?

எம்.ராஜசேகர்

இனிய ஜெயம்

பேருந்து பயணங்களில் சிறந்த பொழுதுபோக்கு, சமூக ஊடகங்களில் நிகழும் அடிதடியினை வாசிப்பது. வழக்கம்போல எல்லா தரப்பும் மனு இன்று பதிவை விட்டு விட்டு, ஜெயமோகனை போட்டு புடைத்து அள்ளி காயவைக்கும் முயற்ச்சியில் இருக்கிறது.

மனுவுக்கு முட்டுக்கொடுக்கும் பதிவுகள் வரிசையில் சுவாரஸ்யமான குறிப்பு ஒன்று கண்டேன். மனு நான்கு வர்ணம் மட்டுமே வகுக்கிறார். பஞ்சமர் என ஒரு பிரிவு இல்லை என்பதே அது.  அம்பெத்காரின் ஆய்வு அதில் நிகழ்ந்த அநீதி குறித்தே பேசுகிறது. மகாபாரத கால முடிவில் (எங்குமே இதுதான் நெறி என வகுக்கப்படாத)  பஞ்சமர் எனும் படிநிலையும்  தீண்டாமையும் துவங்கி விட்டது. புஷ்யமித்ர சுங்கன் காலத்தில் ( இந்த அரசன் பிராமணன் என்றும் அரசன் என்று ஆகி விட்டதால் சத்ரியனாக படி இரக்கம் அடைந்தான் என்றும் ஒரு ஆய்வு விவாத திரி உண்டு) ஒட்டு மொத்தமாக பஞ்சமர் எனும் படித்தரம் முழுமையும்  அரசு, நெறி, நீதி,அனைத்தாலும் கைவிடப்பட்டார்கள். ஒட்டுமொத்த சமூக மறதியின் கீழே நான்காம் வர்ணத்துக்கும் கீழே பஞ்சமர் புதைந்து போகிறார்கள்.

இன்றைய சூழல்களின் சிக்கல்களில் ஒன்று, காந்தியர்களின்  தொடர்ச்சி ஒன்று இருப்பதைப்போல, பெரியாரியர்கள் போல, இடதுசாரி போல், கோட்பாட்டு வளர்ச்சி நோக்கிய  வகையில் அம்பேத்காரியர்கள் தொடர்ச்சி என்ற ஒன்று தமிழில் இல்லை.  அதனால்தான் இந்துத்துவ காந்தியோ, பெரியாரோ, மார்க்ஸோ முளைப்பதற்கு எது தடையாக நிற்கிறதோ அது அம்பேத்காருக்கு இல்லாமல் போய், இந்துத்துவ அம்பேத்கார் எல்லாம் முளைத்து எழுகிறார்.

ஒவ்வொரு தொகுதியும்வெறும் 40 ரூபாய் விலையில் அம்பேத்காரின் அறிவுச் செல்வம்  முழுமையும் பல ஆண்டுகளாக  தமிழில் வாசிக்கக் கிடைக்கிறது. ( சூத்திரர் என்போர் யார்: இந்தோ ஆர்ய சமூகத்தில் அவர் நான்காம் வருணத்தவர் ஆனது எப்படி; எனும் தலைப்பிலான ஆய்வு நூல் இந்தியவர் ஒவ்வொருவரும் வாசித்தே ஆக வேண்டிய நூல்களுள் ஒன்று) ஆனாலும் இத்தகு விவாதங்களில் அம்பேத்காரின் நூலை கையில் கொண்டு  எழும் ஒரு தலித் தரப்பு குரல் எழுவதே இல்லை.  இன்றைய முதல்  தேவை அம்பேத்காரின் ஆய்வுகளின் பரவலாக்கம்

கடலூர் சீனு

அன்புள்ள ஜெ

மனு இன்று கட்டுரை பிரச்சனையின் இரு கோணத்தையும் அழகாக சுட்டி காட்டுகிறது. ஆனால் இங்கு தற்பொழுது நடைபெற்று வரும் விவாதங்கள் எதுவும் மனு ஸ்மிருதியின் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இல்லை.

தேர்தல் நேரம் வந்தாலே கட்சிகளுக்கு சில நெருக்கடிகள் ஏற்படுகிறது. அதுவும் சாதிய கட்சிகளுக்கு இந்த நெருக்கடிகள் அதிகம். தன் சொந்த சாதி வாக்குகளை கட்டு கோப்பாக வைத்துக் கொள்வது, சாதிய கட்சி என்பதால் மற்ற சதியினர் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் சிறுபான்மையினரை கவர ஏதேனும் செய்து தங்களது வாக்கு வங்கியை அதிகரிக்க செய்வது, பின்னர் அந்த வலிமையை சுட்டிகாட்டி தாங்கள் இணையப்போகும் கூட்டணிக்கட்சி தலைமையிடம் வாதாடி அதிகம் இடங்களைப் பெறுதல் போன்றவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.

விடுதலை சிறுத்தை கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. செத்துப் போனதாக அவர்களால் சொல்லப்படும் சமஸ்கிருத மொழியில் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல்தான் இன்று நடக்கும் அத்தனை அவலங்களுக்கும் காரணமென்று சுட்டி காட்டி தனது கட்சி வாக்குகள் சிதறாமல் இருக்க முயற்சிக்கிறார்கள். மனு நீதி இந்து மதத்தின் ஆதார நூல்களில் ஒன்றாக அறிவித்து அதனை தடை செய்யப் போராட்டம் நடத்தியதால் அவர்கள் எதிர்பார்த்தப்படியே சிறுபான்மையினரில் ஒரு சில பிரிவுகளின் ஆதரவு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வும் நடந்துள்ளது.எதிர் தரப்பினர் இவர்கள் எடுத்துக் காட்டிய மனு ஸ்மிருதி வாசகங்களை, இவர்களே சொன்னதாக திசைத் திருப்பி  பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை பெறும்  முயற்சியில் இறங்கிவிட்டார்கள்.இந்த நிலையால் விசிகவினர் தாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முயற்சியிலும், எதிர் தரப்பினரோ மனு நீதிக்கும்  இந்து மதத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள்.

இருதரப்புக்குமே நீங்கள் சுட்டி காட்டியிருக்கும் மனு ஸ்மிருதியின் மீதான உண்மையான புரிதல்கள் எதுவும் இல்லை.வெறும் அரசியல் கீழ்மைத் தனம்தான் விஞ்சி நிற்கிறது..

கொ.வை. அரங்கநாதன்

மனு- கடிதங்கள்-1

மனு- கடிதங்கள்-2

மனு- கடிதங்கள்-3

முந்தைய கட்டுரைகாந்தி,எம்.கோவிந்தன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநிழல்வெட்டுகள்