மனு இன்று
மனு- கடிதங்கள்-1
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
மனு ஸ்மிருதி பற்றிய தங்களது விளக்கம் மிக அருமை. சர்ச்சைகள் நடக்கும் போது சத்தம் அதிகமாகி நமக்குப் புரிய வேண்டிய செய்திகள் அந்த சத்தத்தில் மூழ்கடிக்கப் படுகின்றன.
தங்களுடைய விளக்கம் நீண்டதாக இருப்பது என் என்று அதைப் படித்து முடிக்கும் தருணத்தில் உணர்ந்து கொண்டேன்!
நன்றியுடன்
ராமசந்திரன் எஸ்
சென்னை
***
அன்புள்ள ராமச்சந்திரன்,
இது ஒரு சிக்கலான நிலைமை. இத்தகைய ஒரு விவாதத்தை ஒட்டித்தான் இதைப்போன்றவை கவனிக்கப்படுகின்றன. இப்போதுதான் இவற்றை விரிவாகப் பேசமுடியும். இத்தகைய சந்தர்ப்பங்களில்தான் இவற்றை பேசியுமாகவேண்டும்
அதேசமயம் இத்தகைய தருணங்களில் ஒவ்வொருவரும் ஒரு நிலைபாடு எடுத்து அதீத நிலையில் இருக்கிறார்கள். எவரும் எதையும் கவனிக்கவில்லையோ என்று தோன்றும். பலர் புண்படுவார்கள் [இந்த புண்படும்கும்பல் மேல் எனக்கு மதிப்பில்லை. அவர்கள் எதையோ மறைத்து இன்னொன்றை சூழலில் பேசுகிறார்கள். ஆகவேதான் புண்படுகிறார்கள்]
ஆனால் இவை இங்கிருக்கும். இந்த விவாத அலைகளுக்கு அப்பால் பேசப்படும். உதாரணமாக நான் எழுதிய பல கட்டுரைகளைச் சுட்டிக்காட்டமுடியும்
ஜெ
***
அன்புள்ள ஜெமோ,
ஒரு சந்தேகம். நீங்கள் ‘மனு தர்மத்திற்கான’ பதிலில் சில இடங்களில் பிராமணர்கள் , பிராமண உபன்யாசகர்கள், இணையத்தில் பிராமணர்கள் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.
1930-களில் பிராமணர்களின் எண்ணிக்கை 3% (பெரியார் பேச்சுக்களில் இருந்து சொல்கிறேன்)அதன் பிறகே அவர்களின் புலம்பெயர்தல் பெரிய அளவில் அதிகரித்தது (Diaspora). நீங்கள் முன்பு ஒரு கட்டுரையில் சொன்னபடி பிராமணர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள் (சென்னை நீங்கலாக). எல்லாம் சேர்த்து பார்க்கும் பொது அவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகத்தான் இருக்கும் (எனது புரிதல் 1% க்கும் கீழாக).
உபன்யாசகர்கள் அதனை கேட்கும் 75% மக்கள் பிராமணர்களே (அந்த 1 சதவீதத்தில் ). அதற்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? அதில் சீரியஸாக மனு தர்மம் அளவு செல்பவர்கள் மிக மிக சொற்ப எண்ணிக்கை. எந்த வகையான அரசியல் அதிகாரம் இல்லை (தமிழகத்தில்).கருத்தியல் ரீதியாக செல்வாக்கு இருக்கலாம் ஆனால் அது பிராமணர் வட்டாரத்தை தாண்டி மிகச்சிறிய வட்டத்திலேயே..
அதற்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா . இந்துத்துவா பேசும் பிராமணர் அல்லாதவரையே பார்த்தாலும் அவர்கள் எண்ணிக்கை மிக மிக சொற்பமே (2 கவுன்சிலர் பதவி கூட வெல்ல முடியாத அளவு). குஷ்பு கூட அமர்ந்தது வெறும் 10-15 பேர்.
வேறு விஷயமில்லாத ஊடகங்களுக்கு இது தீனி போடலாம் ஆனால் மனு தர்மம் ஆதரவு தரப்பு .. Ignorable,miniscule,insignificant.
இதனை ஒரு விவாத பொருளாக ஆக்குவதே தி.க , தி.மு.க போன்றவையே.உங்கள் கருத்து மிகத்தெளிவாக இருந்தது,அது இன்றைய தேவையும் கூட. இந்த விஷயத்தில் ,இவ்வளவு தெளிவாக நான் யார் பேசி எழுதியும் கண்டதில்லை,இந்த எண்ணிக்கை விஷயம் தவிர்த்து.
கோகுல்
***
அன்புள்ள கோகுல்,
பிராமணர்களின் எண்ணிக்கை மிகக்குறைவானது என்பதை ஏற்கிறேன். அவ்வண்ணம் குறைவது நல்லது அல்ல என்பதும் என் எண்ணம். பிராமணர்கள் மீதான சமூகதளத்து தாக்குதல்கள் அவர்கள் உளரீதியாக அயன்மைப்பட, விலகிச்செல்ல காரணமாகின்றன என்பதையும் சொல்லிவருகிறேன்
ஆனால் இன்றும்கூட இரண்டுதளங்களில் பிராமணர்களின் இடம் வலுவானது. இன்றும் ஆலயவழிபாடு, சடங்குகள் ஆகியவற்றில் அவர்களே நிகழ்த்துநர்களாக, வழிகாட்டியாக திகழ்கிறார்கள். அவர்களின் சொல்லுக்கு மதிப்புள்ளது. இந்துசமூகம் அவர்களை முதற்சொல் உரைப்பவர்களாகவே காண்கிறது.
இரண்டாவதாக, பொதுவான அறிவுத்தளத்தில் பிராமணர்களின் குரல் வலுவான ஒரு தரப்பாகவே ஒலிக்கின்றது. பொதுவாக நீங்கள் இங்கே பேசப்படுவனவற்றைக் கவனித்தாலே இது தெரியும்.
இவை இரண்டும் தமிழ்ச்சமூகத்தில் ஆழ்ந்த பாதிப்புகளை உருவாக்குவன. பிராமணர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் நவீனக் கல்வி கற்றவர்கள், நவீன மாறுதல்களை இயல்பாக அகவாழ்விலும் ஏற்றுக்கொண்டவர்கள், நவீன ஜனநாயகப் பண்புகளை உள்வாங்கியவர்கள். தமிழகச் சாதியினரில் எவர் ஆக முற்போக்காளர்கள் என்று பார்த்தால் பிராமணர்களே.
தமிழத்தில் இடைநிலைச் சாதியினர் பலர் இன்னும் எந்த வகையான முற்போக்குக்கூறுகளையும் தனிவாழ்க்கையில் கொள்ளாதவர்கள். சாதிவெறியையே வாழ்வாகக் கொண்டவர்கள். அதை மறைக்கவே பிராமணர்களைக் குற்றம்சாட்டுகிறார்கள்.தங்களை ‘பாதிக்கப்பட்டவர்கள்’ என்று கற்பிதம்செய்துகொள்கிறார்கள்.
இவர்கள் தங்கள் முன்னோர் இழைத்த, தாங்கள் இன்றும் இழைக்கும் சாதிய-அநீதிகளை மறைத்துக்கொள்கிறார்கள். இன்று இணையவெளியில் பிராமணவெறுப்பை கொட்டும் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்தச்சாதியின் வன்முறைப்போக்கு குறித்து, பழமைவாதம் பற்றி ஒருவார்த்தைகூட கண்டனம் தெரிவிக்கும் துணிவோ உளவிரிவோ இல்லாதவர்கள்.
இவர்கள் அடைந்திருக்கும் ‘முற்போக்கு’ என்பது மத- ஆன்மிக அம்சங்களை களைந்துவிட்டு அப்பட்டமான உலகியல்வெறியை, அதற்கான சகல ஊழல்களையும் கற்றுக்கொண்டிருப்பது மட்டுமே. அதையும் எப்போதும் சுட்டிக்காட்டுகிறேன்
ஆனால் பிராமணர்களில் ஒருசாரார் இன்றைய வாழ்க்கையைப் பற்றிய எந்த அறிதலும் இல்லாமல், மானசீகமாக நூறாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துகொண்டு, ஆன்மிகமான எந்த உயர்வும் இல்லாமல், ஜனநாயகம் மானுடசமத்துவம் பொதுஅறம் என இந்நூற்றாண்டின் விழுமியங்களுக்கு எதிராக, வெறுமே பிளவுபடுத்தும் மேட்டிமைவாத எண்ணங்களை நவீனகாலகட்டத்தின் பொதுவெளியில் சொல்வது மிக இழிவானது, இந்துமதம் மற்றும் பிராமணர்கள் பற்றி மக்கள் கொண்டிருக்கும் ஐயங்களை வளர்ப்பது.
இன்று பாரதியஜனதா ஆட்சி இருப்பதனால் சட்டென்று இந்த சின்னக் குரல்கள் முண்டியடித்து பொதுவெளியில் வெளிப்பாடு கொள்கின்றன. முற்போக்கு எண்ணங்கள் கொண்ட அந்தணர்களின் குரல்கள் பொதுக்குரல்களில் மறைவதனால் இவர்களின் குரலே அந்தணர்குரலாக ஒலிக்க நேர்கிறது. இந்தக்குரல் இந்துமதத்தின், இந்துமெய்யியலின் குரலாக அடையாளம் காணப்படவும் வாய்ப்பமைகிறது.
அந்தணர்களுக்கே மிகத் தீங்கிழைப்பது இது. அவர்கள்மேல் எஞ்சியிருக்கும் நல்லெண்ணத்தையும் அழிப்பது. அவர்களை ஒட்டுமொத்தமாக எதிர்மறைச்சக்தியினர் என எண்ணவைப்பது. அரசியல்நோக்கங்களுக்காக இவர்களை சிலர் தூக்கிப்பிடிப்பது மிக வருந்தத் தக்கது.
எனக்கு எந்தக் குழப்பமும் என்றும் இல்லை. நான் பிராமண குடியில்பிறந்த பலரை முன்னுதாரண மனிதர்களாக எண்ணுபவன். வழிபடுபவன்.அதற்கு அப்பால் ஒரு சாதி என்று நோக்கினாலும் பிராமணர்கள் பிராமணரல்லாத பிறரைவிட வன்முறையின்மை, இசைந்துபோகும் இயல்பு,கல்வி கலைகளில் முதன்மை நாட்டம் ஆகியவை கொண்டிருப்பதனால் மேலானவர்கள் என்றே நம்புகிறேன்.
ஆனால் ஒருவர் பிராமணப்பிறப்பை மட்டுமே தன் தகுதியாக முன்வைப்பார் என்றால், அதைக்கொண்டு எளிமையான சாதியமேட்டிமைவாதம் பேசிக்கொண்டிருப்பார் என்றால் அவர்மேல் எந்த மதிப்பும் இல்லை. அந்த மேட்டிமைவாதம் வெறுக்கத்தக்கது, புறக்கணிக்கத்தக்கது.
அக்கூட்டம் மனுநெறியை சமூக அதிகாரத்துக்காக, தன்னடையாளத்துக்காகப் பேசிக்கொண்டிருக்கும் என்றால் அது ஒட்டுமொத்தச் சமூகத்தையே விலக்குகிறது. பிறரை இழிவுசெய்கிறது.
ஆகவே எஞ்சிய பிராமணர்களும், இந்து மெய்யியல்மேல் நம்பிக்கை கொண்டவர்களும் அதை கண்டிப்பதும், அது இன்றைய இந்துமதம் அல்ல என்று வலியுறுத்துவதும் இன்றியமையாதவை. அது இங்கே நிகழாதவரை நம்மால் இந்துமதம் மீது ஐயம்கொண்டு எதிர்ப்புகாட்டும் எவரையும் குறைசொல்லமுடியாது. நான் சொல்வது இதுவே
ஜெ