பேச்சும் பயிற்சியும்
மேடைப்பேச்சுக்கான அழைப்புக்கள் வரும்போது நான் பீதியடைகிறேன். கூடுமானவரை தவிர்க்கவே முயல்வேன். அவ்வப்போது ஒப்புக்கொள்வதுகூட எவரேனும் நண்பர்களுக்காக. அல்லது பணம். பேசிப்பெறுவது விஷ்ணுபுரம் அமைப்புக்கு அல்லது ஏதாவது இலக்கியநண்பருக்கான நிதியுதவி என்று வைத்திருக்கிறேன். ஆகவே தேவை இருந்துகொண்டிருக்கும்
ஆனால் பேச்சு எனக்கு பெருஞ்சுமை. அதற்கு நான் பயிலவேண்டும், பயிற்சியும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கப்பாலும் மூச்சுத்திணறும். அவ்வப்போது பேச்சு தோல்வியடைவதுமுண்டு. என் பேச்சுக்களை கேட்டால் எனக்கு உச்சரிப்புப்பிழைகள் மட்டுமே செவிக்குப் படுகின்றன. மேற்கொண்டு கேட்கவே பிடிப்பதில்லை.
நான் பேசியதை ஒருமுறை கேட்டபின் தமிழின் சிறந்த பேச்சாளர் ஒருவர் நான் பேச்சுக்குப் பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார். “இங்க உக்காந்திருந்தவங்களிலே அம்பதுபேருக்கு மட்டும்தான் உங்க பேச்சு புரியும்” என்றார். அது உண்மை. நான் மேடையில் பேசியபின் அரங்கினர் கேட்கும் கேள்விகள் ‘பட்டுக்கோட்டைக்கொட்டைப்பாக்கு நியாய’ப்படி அமைந்திருக்கும்
அவர் எனக்குச் சொன்ன சில நெறிகள்
அ. உரக்க கத்திப்பேசுங்கள். இங்கே பெரும்பாலான மேடைகளில் ஒலியமைப்பு பரிதாபகரமானது..
ஆ. பொதுவான பேச்சுமொழியில் பேசுங்கள். இங்கே ஊருக்கொரு வட்டாரவழக்கு உண்டு.
இ. சொற்றொடர்களின் கடைசிச்சொல்லை மிக அழுத்தி உரக்கச் சொல்லுங்கள். அச்சொற்றொடர் முடிந்துவிட்டது என அப்போதுதான் புரியும். ஆணித்தரமாகப் பேசுகிறீர்கள் என்றும் தெரியும்
ஈ.முக்கியமான சொற்றொடர் என்றால் அதை பல அலகுகளாக பிரித்து தனித்தனியாகச் சொல்லுங்கள்.
உ. குரல் ஒரேபோல ஒலிக்கக்கூடாது. மெல்ல தாழ்ந்துவரவேண்டும். சட்டென்று வெடிக்கவேண்டும். நிறுத்தி நிறுத்திப் பேசி சிலவற்றை வேகமாகச் சொல்லவேண்டும். இந்த மாற்றங்கள் இன்றியமையாதவை. கேட்பவரின் மனம் விலகிச்சென்றிருந்தால் அதை பிடித்து இழுத்து திரும்பக்கொண்டுவருபவை
ஊ. ஒருகருத்தைச் சொன்னபின் இடைவெளி விடுங்கள். ஓரிரு சொற்றொடர்களுக்கு ஒருமுறை ஐந்து நொடி இடைவெளி.
எ. எதையும் மூன்றுமுறை சொல்லுங்கள். ஒவ்வொரு கருத்தையும். உதாரணமாக, ‘கம்பனின் கவித்திறன் அவனுடைய வர்ணனைகளில்தான் உள்ளது. கம்பன் வர்ணனைக்கே அரசன். வர்ணனை இல்லேன்னு வைங்க, கம்பனே கெடையாது’ இப்படி எல்லாவற்றையும் மூன்றுமுறை சொல்லவேண்டும். மிக எளிமையான கருத்தைக்கூட மூன்றுமுறை சொல்லவேண்டும். “நாட்ல இப்ப ஊழல் பெருத்துபோச்சு. எங்கபாத்தாலும் ஊழல். ஊழல் இல்லாத இடமே இல்லை’ இப்படித்தான் நம் பேச்சுக்கள் அமைகின்றன. இதுதான் நம் அரங்கினருக்குச் சென்றுசேர்கிறது.
ஏ.பேச்சில் ஒட்டுமொத்தமாக தொடர்ச்சி இருக்கக்கூடாது. இருபதுநிமிடங்களுக்குமேல் நம் அரங்கினரின் நினைவு நீடிக்காது. பொதுவான தலைப்பு இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பேச்சுக்கு ஒரு கட்டமைப்பு இருக்கக்கூடாது. கம்பனின் கவிநயம் என்பது தலைப்பு என்றால் கம்பனின் வர்ணனைகளைப் பற்றி ஒரு இருபது நிமிடம். அதை அப்படியே விட்டுவிட்டு கம்பனின் பாட்டுத்திறம் பற்றி அடுத்த இருபது நிமிடம். முதல் இருபது நிமிடம் பேசியது ஞாபகமிருந்தால்தான் மூன்றவாது இருபது நிமிடம் பேசுவது புரியும் என்றால் அந்த உரையை புரிந்துகொள்ள மாட்டார்கள்.
இதைத்தவிர மேடையில் சில உடல்மொழிகள் தேவை என்று அந்நண்பர் சொன்னார்
அ. மேடையில் அசைந்துகொண்டிருங்கள். அப்போதுதான் மேடையில் பேச்சு நிகழ்கிறது என்று தோன்றும்.
ஆ.கையசைவு முக்கியம். அது கேட்பவரின் கவனத்தை பேசுபவர்மேல் நிலைநிறுத்தும்
இ.அரங்கில் அனைவரையும் மாறிமாறிப் பார்ப்பதுபோல திரும்பி பேசவேண்டும். ஒருபக்கம் மட்டுமே பார்த்துப்பேசினால் பார்வையாளர்கள் அன்னியப்படுவார்கள்
ஈ. மேடையிலிருப்பவர்களையும் அவ்வப்போது திரும்பிப்பார்த்து பேசி அவர்களையும் உள்ளே இழுக்கவேண்டும். மேடையில் இருப்பவர்கள் சலிப்புடன் இருந்தாலோ செல்பேசி நோண்டிக்கொண்டிருந்தாலோ பார்வையாளர்கள் திசை திரும்புவார்கள்.
உ. மேடைப்பேச்சு என்பது ஒருவகை நடிப்பு. உணர்ச்சிகரம் கோபம் எல்லாமே நடிக்கப்படவேண்டும்
மேடைப்பேச்சில் கோபம் உருக்கம் நகைச்சுவை ஆகியவை தேவை என்பது நண்பரின் எண்ணம். முதல் இரண்டும் இல்லாவிட்டால் நகைச்சுவை இருந்தே ஆகவேண்டும். தமிழ்மக்கள் மேடை என்றாலே ஒருவகை கேளிக்கை என்றுதான் நினைக்கிறார்கள். மேடை நகைச்சுவைக்கு அவர் சில இலக்கணங்கள் சொன்னார்.
அ. நம்மவர் நகைச்சுவைக்குப் பழகியிருக்கிறார்கள். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை நகைச்சுவை இல்லாமல் பேசமுடியாது. ஆகவே காலக்கணக்கு முக்கியம்
ஆ. நகைச்சுவை என்பது பேச்சுடன் இயைந்து இயல்பாக வருவது அல்ல. அதை நகைச்சுவை என நம்மவர் நினைக்கமாட்டார்கள். ‘டிராக் காமெடி’ போல அது தனியாக வரவேண்டும். அது பேச்சில் ஒருவகை இடைவெளி.
இ. தன்னை மேலே வைத்துக்கொண்டு நகைச்சுவையை சொல்லக்கூடாது. தன்னை தாழ்த்தி, இழிவுசெய்துகொண்டு நகைச்சுவையைச் சொல்லவேண்டும்.தமிழ்ப்பார்வையாளர்களுக்கு ஒரு தாழ்வுணர்ச்சி உண்டு. மேடைப்பேச்சாளர் தன்னை தாழ்த்திக்கொண்டால் பார்வையாளர்களுக்கு நிறைவு உருவாகிறது
ஈ.நகைச்சுவையின் இன்னொருவழி வசை. ‘அடப் பரதேசிப்பயலே…’ வகையான ஏகத்தாளம். அதை மக்கள் ரசிப்பார்கள். அங்கே அதில் எந்த வகை செல்லுபடியாகும் என்று ஊகிக்கவேண்டும். கோயிலில் என்றால் எல்லாவகை நவீன விஷயங்களையும் நையாண்டிசெய்யலாம். அரசியல்மேடையில் கோயிலை நையாண்டிசெய்யலாம்
எல்லாமே சரி என்றுதான் எனக்குப் பட்டது. ஆனால் நான் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. நேரமில்லை
ஜெ