மனு இன்று
அன்புள்ள ஜெ
மனு ஸ்மிருதி பற்றிய அவதூறுகளை விளக்கும் இந்தக் கட்டுரையை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். அந்த நீதிநூலை தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்
மனுஸ்மிருதியும் திருமாவளவனின் பொய்களும்
ரமேஷ் மகாதேவன்
***
அன்புள்ள ரமேஷ்
உண்மையில் இப்படி விளக்கமளிக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இப்படி விளக்கம் அளிக்கிறார்கள் என்பதுகூட நல்லதுதான்.
அதேசமயம் ஒன்று கவனிக்கப்படவேண்டும். ‘தவறாக’ புரிந்துகொண்டவர் திருமாவளவன் மட்டுமல்ல. அவர் மட்டும் ‘பொய்’ சொல்லவில்லை. காஞ்சி சங்கராச்சாரியாரும் மனுஸ்மிருதி பற்றி திருமா சொல்வதையே தான் சொல்கிறார்.
மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி முதல் இன்றுவரையிலான பிராமணர்கள் பெண்கள் கல்விகற்கக்கூடாது, இளமையில் திருமணம் செய்யவேண்டும், வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்றெல்லாம் சொல்லுமிடங்களில் எல்லாம் இந்த விளக்கம் அளிக்கப்பட்டிருக்கவேண்டும். சரி இனியாவது அளிக்கட்டும்.
இப்போது சிலகாலமாக கலப்புமணத்துக்கு எதிராக பால்யவிவாகமே தேவை என்று ஒரு கூட்டம் இணையத்தில் மனுவை மேற்கோளாக்கி பேசுகிறது அங்கெல்லாம் இவர்கள் இதே குரலுடன் விளக்கச் செல்லவேண்டும்.
அதோடு மனுஸ்மிருதி சாதிப்படிநிலைகள் பற்றிச் சொல்லுமிடங்களிலும் இதைப்போல விளக்கமளிக்க இவர்கள் முன்வரவேண்டும்
ஜெ
***
அன்புள்ள ஜெ,
மனு இன்று ஆழமான விரிவான கட்டுரை. ஒரு நவீனப்பார்வையை, ஓரம்சாய்ந்த பிடிவாதங்கள் இல்லாத அணுகுமுறையை பார்க்கமுடிந்தது. மனுநெறியை மட்டுமல்ல, அதைப்போன்ற அணுகுமுறைகொண்ட நூல்களை எப்படி பார்க்கவேண்டும் என்று விளக்கியது அக்கட்டுரை
இந்த மனுநீதி சம்பந்தமான விவாதங்களில் பரவலாக மேற்கோள்காட்டப்பட்ட காணொளிகள் சங்கடத்தை அளித்தன. பெண்களை வேலைக்கு அனுப்பக்கூடாது, பால்யவிவாகம் செய்துவைக்கவேண்டும், என்றெல்லாம் கூச்சமே இல்லாமல் பேசுகிறார்கள்.
ஒரு சாமியார் திருமாவளவன் பெண்களை அவமானப்படுத்திவிட்டார் என்று கண்டிக்கிறார். அவர் பேசும் காணொளியை வெளியிட்டு இந்துத்துவர்கள் புளகாங்கிதம் அடைகிறர்கள். அவர் ஒரு காணொளியில் தன் ஜபதபங்களைப் பற்றிச் சொல்லும்போது கிணற்றில் தண்ணீர் எடுத்து முதலில் அந்த கிணற்றையே சுத்தம் செய்வேன், தண்ணீரை மந்திரசுத்தம் செய்வேன், எந்தெந்த சாதிக்காரன்லாம் புழங்கினானோ என்கிறார். இவர்கள்தான் திருமாவளவனுக்கு எதிராகப் பேசுகிறார்கள்
சம்பத் குமார்
***
அன்புள்ள சம்பத்குமார்
அந்தக் காணொளிகளில் உள்ள அனைத்து கருத்துக்களையும் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதியின் உரைகளில், நூல்களில் காணலாம். அந்நூல்தொகையேகூட தீண்டாமை ஒழிப்புச் சட்டப்படி கிரிமினல் குற்றமாகக்கூடும் என்பதனால் பிற்காலத்தைய பதிப்புகளில் வெட்டிச் சுருக்கப்பட்டது.
ஜெ
***
அன்புள்ள ஜெ
மனு இன்று ஆழமான கட்டுரை. நேற்றைய சமூக அநீதிகளை இன்று தெள்ளத்தெளிவாக உணர்வதும், அதற்காக குற்றவுணர்ச்சி கொள்வதும், அவற்றைவிட்டு வெளியேறுவதும்தான் நாகரீக மனிதனுக்கு அழகு. நீங்கள் பலமுறை சொன்னதுபோல குரூரமான மதப்போர்களுக்காக இஸ்லாமியரும், அடிமைமுறை மற்றும் பழங்குடிகளின் அழித்தொழிப்புக்காக கிறிஸ்தவனும்,சாதிமுறைக்காக இந்துவும் குற்றவுணர்ச்சி கொண்டே ஆகவேண்டும்.
ஆனால் அதை வரலாற்றில் வைத்துப்பார்க்கவேண்டும். அவை அன்றைய சமூகப்பரிணாமத்தில் எப்படி பங்களிப்பாற்றிய என்று ஆராயவேண்டும். ஒரு நூலை தலைக்குமேல் தூக்கிவிட்டு அதையே சொல்லும் இன்னொரு நூலை பழிப்பது என்பது வெறும் Nepotism மட்டும்தான்..
இந்தியாவில் மனுநீதி ஒரு பொதுவாக ஏற்கப்பட்ட நூலாக இருக்கவில்லை, இந்தியவைல் வட்டார அளவில் ஆசாரங்களும் குலநீதிகளுமே நீதியை வழங்கின என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் சாதியை நிலைநிறுத்திய பொறுப்பு மனுநீதிக்கு இல்லையா?
அர்விந்த்குமார்
***
அன்புள்ள அர்விந்த்
இந்தியாவில் இன்றும் சாதியை நிலைநிறுத்துவதில் பெரும்பொறுப்பு வகிப்பவை ஆசாரங்களும் குலநீதிகளுமே. தாழ்த்தப்பட்ட மக்களும் பழங்குடிகளும் கூட குலநெறிகளின்படி சாதிப்பெருமை சாதிப்பிரிவினை பேணுபவர்களாகவே உள்ளனர். மனுநீதிக்கும் பொறுப்பு உண்டு,
சாதி இங்கே சமூகப்பரிணாமத்தில் ஒருபகுதியாக உருவாகி வந்தது. சமூகத்தை உறையவைக்கும் முயற்சியே நெறிநூல்களாகியது. டி.டி.கோஸாம்பி உள்ளிட்ட ஆய்வாளர்கள் விரிவாகவே பேசியிருக்கிறார்கள். மனுநெறி முதலிய ஸ்மிருதிகள் குலநெறிகளுக்கு ஓர் அமைப்பை, புனிதத்தை கட்டமைத்த பணியையே செய்தன..
கண்டிப்பாக அதற்கும் பொறுப்பு உண்டு, ஆனால் அதுமட்டுமே பொறுப்பு என்பது சாதியடுக்கு- பழமைமனநிலை ஆகியவற்றுக்கான முழுப்பொறுப்பையும் பிராமணர்மேல் சுமத்திவிட்டு தங்களை விடுதலைசெய்துகொள்வதற்கான முயற்சி. அந்த மோசடியின் உள்ளடக்கம் சாதியடுக்கு- பழமை மனநிலை ஆகியவற்றை தங்கள் நலனுக்காக தக்கவைத்துக்கொள்வதே
ஜெ
***
அன்புள்ள ஜெ
நீங்கள் எப்படி ஒரு புரிதலுடன் இருக்கிறீர்கள் என்று பார்க்கையில் பிரமிப்பே ஏற்படுகிறது. நீங்கள் எழுதிய நாலாயிரம் வார்த்தை கட்டுரையில் இருந்து எட்டுவரி ஸ்கிரீன்ஷாட் ஒன்று எடுத்திருக்கிறார்கள். அதை மட்டுமே படித்துவிட்டு திட்டிக்கொண்டிருக்கிறார்கள் திராவிட அறிவாளிகள். ஆச்சரியமாக இருக்கிறது. இந்த இணையச்சூழலில் அந்த மூலக்கட்டுரை சுத்தமாக வேறொன்றைச் சொல்கிறது என்று ஒருவர்கூட போய்ப்பார்க்கமாட்டார்களா என்ன? எப்படி இந்த வெட்கம்கெட்ட விவாதத்தை நடத்துகிறார்கள்?
எஸ்.ஆனந்த்
***
அன்புள்ள ஆனந்த்,
அவர்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்று உண்டு, அவர்கள் எவரிடம் பேசுகிறார்களோ அவர்களும் இவர்களைப்போலவே படிக்கவே மாட்டார்கள். அவர்கள் அந்த ஸ்கிரீன்ஷாட்டையே புரிந்துகொள்ளாமல்தான் பேசுவார்கள்.
மறுதரப்பு ஸ்க்ரீன்ஷாட்டுக்காக காத்திருக்கிறேன்
ஜெ
***
அன்புள்ள ஜெ
சமூகவலைத்தளத்தில் நீங்கள் பாஜக பற்றிச் சொன்னதாக ஒரு ஸ்க்ரீன் ஷாட் ஓடிக்கொண்டிருந்தது. நான் அதை வந்து வாசித்துப்பார்த்தால் நீங்கள் எழுதிய வரி அல்ல அது,ஒரு வாசகர் எழுதியது. நான் அதை அங்கே சுட்டிக்காட்டினேன். ஆனால் அதைப்பற்றி கவலையே படாமல் வசைபாடினர். தெறித்துவிலகிவிட்டேன்
எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை
ராம்குமார்
***
அன்புள்ள ராம்குமார்,
எத்தனை பயிற்சி எடுத்தாலும் நரி ஒரே ஊளையைத்தான் போடும். நம்பிக்கை எதுவானாலும் மனிதர்களை அதேபோல ஆக்கிவிடுகிறது. மதநம்பிக்கை, கருத்தியல்நம்பிக்கை.
ஜெ