வெண்முரசும் மகாபாரதமும் கமல் ஹாசனும்

வெண்முரசு- கமல்ஹாசன் சொல்வது சரியா?

வெண்முரசு,மகாபாரதம்,கமல்- விவாதங்கள்

கமல், மகாபாரதம்,மரபு

கமல், மகாபாரதம் பற்றி மேலும்

அன்புள்ள ஜெ

குழுமத்தில் பேசிக்கொண்டிருந்தேன். உண்மையிலேயே எண்ணி எண்ணி ஆச்சரியப்படவேண்டியிருக்கிறது. மகாபாரதம் தமிழில் வரலாற்றுடன் கலந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. அதை எவர் இல்லை என்று சொல்லமுடியும்? ஆனால் சொல்கிறார்கள். ஆதாரங்கள் கொடுத்தால் வசைபாடுகிறார்கள். மிகமிக எளிய உண்மைகளைக்கூட செவிகொடுத்துக் கேட்கமறுக்கிறார்கள்.

ஒரு பேரிலக்கியம் என்பது அந்தப் பண்பாட்டின் அனைவருக்கும் உரியது என்றும் அதை ஆத்திகர்களோ நாத்திர்களோ உரிமைகொண்டாட விடக்கூடாது என்றும் சொன்னால் சங்கி என்கிறார்கள். என்னதான் இவர்களுக்கு புரியும்? ஒரு சின்ன ஆசாரக்கூட்டம் மூவாயிரமாண்டு தொன்மையான பேரிலக்கியத்தை தங்கள் சொத்து என்று சொன்னால் அதை ஏற்கலாமா என்று கேட்டால் புரியவில்லை.

அதன்மேல் இந்தியாவின் பேரறிஞர்களெல்லாம் ஆய்வுசெய்திருக்கிறார்கள், இந்தியாவின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை அதை வைத்து எழுதியிருக்கிறார்கள், உங்கள் மடத்தனத்தால் அதை மதநூலாக்கி அவர்கள் கையில் கொடுக்காதீர்கள். இந்தியாவின் பாரம்பரிய பண்பாட்டுச் சொத்து அது. அது மதவாதிகளின் சொத்து அல்ல. அதை நாளை நம்மால் மீட்க முடியாமல் போகும். ஒருவார்த்தைகூட சொல்லமுடியாமலாகும். ஆராய்ச்சி செய்யமுடியாது. அதிலுள்ள இடைச்செருகல்களைக்கூட சொல்லமுடியாது. அதையொட்டித்தான் இந்தியாவின் கலையிலக்கியம் அத்தனையும் உள்ளது. அத்தனையும் அவர்களால் கட்டுப்படுத்தப்படும். கொஞ்சம் மண்டையைத் திறந்து யோசியுங்கள்.

கிளாஸிக்குகள், கலைச்சின்னங்கள் எந்த தனிப்பட்ட குழுவுக்கும் சொந்தமில்லை. இந்தியாவில் மகாபாரதத்தை வைத்து இலக்கியங்கள் படைத்தவர்கள் ஏராளமானவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மதநம்பிக்கையாளர்களோ ஆசாரவாதிகளோ இல்லை. அவர்களெல்லாம் நவீன இலக்கியவாதிகள். சொல்லிச்சொல்லி களைப்படைந்துவிடுகிறேன். ஒருபக்கம் மதமூர்க்கம். அதைவிட நூறுமடங்கு மூர்க்கம் இங்கே பகுத்தறிவுபேசுகிறவர்கள். மதவாதிகளுக்காவது கொஞ்சம் மதம் பற்றி தெரியும். இவர்களுக்கு எதைப்பற்றியும் எதுவும் தெரியாது. இந்தியா இரண்டு மூர்க்கத்தரப்புகள் நடுவே சிக்கிச் சீரழிகிறது. திறந்தமண்டையுடன் சிந்திக்க அங்கே ஆளில்லாமலாகிவிட்டது.

என்ன எழுதுவது என்று தெரியவில்லை. இதைப்போல இவ்வளவு சலிப்பு எப்போதுமே வந்ததில்லை.

ஸ்ரீனிவாஸ்

அன்புள்ள ஸ்ரீனிவாஸ்,

இப்படித்தான் எப்போதுமே இருந்தது, இனியும் இப்படித்தான் இருக்கும். சோர்வூட்டும் அம்சம் ஒன்றே, முன்பு எத்தனை பாமரர்கள் இந்த விவாதங்களுக்குள் வருவார்களோ அதைவிட பலமடங்கு பாமரர்களை சமூக ஊடகங்கள் உள்ளே கொண்டுவருகின்றன

ஆனால் கலையிலக்கியச் செயல்பாடுகள், பண்பாட்டுச் செயல்பாடுகள் இந்த மூர்க்கத்தனத்தின் ஊடாகவே என்றும் நிகழ்ந்து வந்துள்ளன.

ஜெ

அன்புள்ள ஜெ

வெண்முரசின் முதன்மையான சாதனை என்பது மகாபாரதத்தை ஒரு மதநூல் என்ற அடையாளத்திலிருந்து மீட்டு பண்பாட்டுத்தொகுப்பு என்று நிறுவியதுதான். அதை இந்திய மனதின் ஆழத்திலுள்ள தொன்மங்கள் மற்றும் படிமங்களின் அடித்தளம் என்று காட்டியது அது. நம் கனவுகளின் ஆழம் அது. கமல் ஹாசன் அவர்கள் வெண்முரசு பற்றி மிகச்சரியாக அதையே சொன்னது ஆச்சரியமளிக்கிறது.

வெண்முரசு பற்றிய அந்தக்கருத்து ஆசாரவாதிகளை எரிச்சலூட்டுகிறது. அவர்களுக்கு மகாபாரதம் என்பது ஒரு மதநூல்.மதநூல்களின் இயல்பு அவை மாற்றமில்லாதவையாக இருக்கவேண்டும் என்பதும் ஆசாரங்களுடன் இணைந்திருக்கவேண்டும் என்பதும். அப்போதுதான் மத அதிகாரத்தை கையாள்பவர்கள் அதை தங்கள் சொத்தாக நினைக்கமுடியும். இதனால்தான் மகாபாரதத்தை இவர்கள் ஒரு மாற்றமில்லாத நூலாக சொல்கிறார்கள்.

அடிக்கடி மூலம் மூலம் என்று சொல்கிறார்கள். எந்த மூலம் என்றால் ஏதாவது ஒன்றைச் சுட்டிக்காட்டுவார்கள். மகாபாரதத்திற்கு பாடபேதங்கள் உண்டு. அதன் கதைகள் புராணங்கள்தோறும் மாறுபடுகின்றன. அதெல்லாம் பல அறிஞர்கள் எழுதிவிட்டார்கள். அதை இவர்களால் ஏற்கமுடியாது. இவர்கள் சொல்வதெல்லாம் மகாபாரதத்துக்கு நாங்கள் அத்தாரிட்டி என்பதுதான். அப்படிச் சொல்லத்தக்க அறிஞர்கள் எவரும் இல்லை என்றாலும் எல்லா ஆசாரவாதிகளும் அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மகாபாரதத்தை ஒரு பண்பாட்டுநூலாக வாசிக்கும்போது அது வளர்ச்சியடைகிறது. பலவகையான பார்வைகளுக்கு இடமளிக்கிறது. இன்றைய பண்பாட்டுத்தேவைகளுக்காக அது நெகிழ்வடைகிறது. இந்த மாற்றத்தைத்தான் கண்மூடித்தனமாக இவர்கள் எதிர்க்கிறார்கள். ஆரம்பத்தில் எம்.எஃப்.ஹூசேன், எம்.எம்.பஷீர் போன்றவர்கள் மகாபாரதம் ராமாயணம் ஆகியவற்றை மறுபடைப்பு செய்தபோது எதிர்த்தனர். இப்போது ஆசாரவாதிகள் அல்லாதவர்கள் அதைப்பற்றி எழுதினால் எதிர்க்கிறார்கள்.

கொஞ்சம்கொஞ்சமாக ஒரு ஆதிக்க வட்டம் அதை கையில் வைத்திருக்கவும் அதன்மேல் அதிகாரம் செலுத்தவும் முயலும். அதை மதநூல் என்று இவர்கள் கோஷமிடும் நோக்கம் அதுதான். என்றைக்கும் அது ஒரு சாராருக்கு மதநூல்தான். ஆனால் இன்னொருசாராருக்கு பண்பாட்டின் கதைகளின் கருவூலம். காளிதாசனுக்கு அது மதநூல் இல்லை. பாரதிக்கும் அது மதநூல் இல்லை. அவர்கள் அதை தங்கள் கற்பனைக்கேற்ப மாற்றினார்கள். அதைத்தான் இவர்கள் அஞ்சி கூச்சலிடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் இந்த நாத்திகக்கூட்டம். அவர்கள் உண்மையில் இந்து எதிர்ப்பு கூட்டம்தான். அவர்களுக்கு நாத்திகம்தான் கொள்கை என்றால் இந்து மரபுக்குள் உள்ள நாத்திகம் ஏற்புடையதாக இருக்கலாமே. அந்த நாத்திகசிந்தனை மகாபாரதத்தில் உண்டே. இவர்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்கள் என்றால் மகாபாரதத்தில் பிராமணரல்லாதவர்களின் கதைகள்தானே மிகுதி. இவர்களுக்கு ‘ஆரியர்கள்’தான் பிரச்சினை என்றால் அதில் பெரும்பகுதி கதை மற்றகுடியினரைப்பற்றித்தானே?

இவர்களுக்கு உண்மையான பிரச்சினை இந்துப் பண்பாடுதான். அது அழியவேண்டும். அதைச்சார்ந்த ஓர் இலக்கியம் வாசிக்கப்படக்கூடாது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மாறுவேடமிட்ட மாற்றுமத வெறியர்கள். எஞ்சியவர்கள் அவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டம். இந்த  இரண்டு கூட்டத்துக்குமே வெண்முரசு கோபத்தை அளிக்கிறது. அதை கமல் ஹாசன் சரியாகவே அடையாளப்படுத்தும்போது கொந்தளிக்கிறார்கள். இரு சாராரும் சேர்ந்து அவரை வசைபாடுகிறார்கள்.

ஆனால் இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஆர்வம் உடைய ஒருசாரார் வந்து வாசித்துக்கொண்டேதான் இருப்பார்கள்.

எம்.பாஸ்கர்

அன்புள்ள பாஸ்கர்

இதில் நான் சாதகமான கூறுகளைத்தான் காண்கிறேன். தமிழ்ச்சூழலில் ஒரு ஆயிரம்பேர் இந்நூலை நோக்கி வர இது வழிவகுக்கும். அது போதும். இன்றைய நிலையில் அதுவே பெரிய எண்ணிக்கை

ஜெ

முந்தைய கட்டுரைமனு இன்று
அடுத்த கட்டுரைவெற்றுப்பாடல்