காந்தி,எம்.கோவிந்தன் – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். குமார் சண்முகம் எழுதுவது. ஈரோட்டில் நடைப்பெற்ற உங்களுடனான புதிய வாசகர் சந்திப்பு என்னுள் நிறைய மாறுதல்களை உருவாக்கியுள்ளது. அதனை இந்த நோயச்ச காலத்தில் பூரணமாக உணர்கிறேன். தற்போது சில மாதங்களாக ஈஷா கல்விப்பணியில் இணைந்து பணியாற்றுகிறேன். சிறுகதையாளர், தெருக்கள் பள்ளிக்கூடம் நூலை மொழிபெயர்த்த சுஷில் அண்ணனின் உறுதுணை முக்கியமானது. நிறைய தமிழ் ஆசிரியர்களிடம் தினமும் இணைய வழியில் நல்ல நல்ல படைப்புகளை பகிரும்போது அதிகம் உங்களுடைய எழுத்து நல்லதிர்வுகளை உண்டாக்குவதை காண்கிறோம்.

திண்டுக்கல் காந்தி கிராமத்தில் நடைப்பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் உங்களது உரையினை கேட்டேன். சமகாலத்தில் இட ஒதுக்கீடு சார்ந்து சமூக வலைத்தளங்களில் நிகழும் விவாதங்களுக்கு நல்ல தெளிவினை தரும் முக்கியமான உரை. நிறைய நண்பர்களுக்கு அனுப்பிவைத்தேன்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் அருங்காட்சியகம் உங்கள் கைகளால் திறக்கப்பட்டது, இன்றைய காந்திகள் நூல் வெளியீடு, தமிழகத்தின் சமூக செயல்பாட்டாளர்களின் சந்திப்பு என்று நிகழ்வு பல காரணங்களால் மனதுக்கு நெருக்கமாக இருந்தது.

நெஞ்சார்ந்த நன்றிகள்.

குமார் சண்முகம்

அன்புள்ள குமார்

சில நிகழ்வுகள் நமக்கு நெடுங்காலத்திற்குப் பிறகுதான் உண்மையில் அவை எவ்வளவு பெரியவை என்று புரியும். என் ஐம்பது வயதுக்குப்பின் திடீரென்று நான் சந்தித்த மாமனிதர்களை நினைக்கையில் ஒரு வகையான பதைப்பு ஏற்படும். எத்தனை எளிதாக அவர்களையெல்லாம் கடந்துவந்துவிட்டேன் என்று தோன்றும்.

காந்தியைப் பற்றிய உரையில் எம்.கோவிந்தன், பி.கே.பாலகிருஷ்ணன், ஜான் ஆப்ரகாம் ஆகியோரைப்பற்றிப் பேசியபோது அந்த உணர்வெழுச்சியை அடைந்தேன்\

காந்திகிராம நிகழ்வும் அப்படிப்பட்ட ஒன்று

ஜெ

அன்புள்ள ஜெ

காந்தியிடம் ஆற்றுப்படுத்தியவர்கள் பற்றிய உங்கள் உரை மிகமிக நன்று. இன்றைக்குள்ள சூழலில் உண்மையில் காந்தி எப்படி முக்கியமாகிறார் என்று சொல்லியிருக்கிறீர்கள். வழக்கமான சத்தியம் அகிம்சை ஆகியவற்றுக்கு அப்பா, இயற்கையுடன் இணைந்து வாழ்தல் போன்றவற்றுக்கும் அப்பால், அவர் எப்படி ஒரு அராஜவாதி, எப்படி ஒரு மையமறுப்பாளர் என்பதை காட்டியிருக்கிறீர்கள். ஆழமான பேச்சு

சபரி

அன்புள்ள சபரி

அந்த உரைக்காக எம்.கோவிந்தனின் படங்களை இணையத்தில் தேடினேன். பல படங்களில் கோவிந்தன் சட்டை இல்லாமலிருக்கிறார். நேரிலும் பெரும்பாலும் அப்படித்தான் இருப்பார். வருகையாளர்களை அப்படித்தான் சந்திப்பார். ஆனால் புகைப்படங்களில் இப்போது பார்க்கையில் திகைப்பாக இருக்கிறது

1987 வாக்கில் சுந்தர ராமசாமியுடன் அவரை ஷொர்ணூர் அருகே அவருடைய இல்லத்திற்குச் சென்று பார்த்தேன். அப்போது சட்டைபோடாமல் இருந்தார். சுரா சொன்னார். “அவர்லே ஒரு காந்தி தெரியறாரு பாத்தீங்களா?”. நான் அப்போது அதை தெளிவுற உணரவில்லை. “ஒருத்தரோட மனசிலே உண்மையிலேயே இருக்கிறவர் காலப்போக்கிலே உடம்பிலேயும் தெரிய ஆரம்பிச்சிருவார். காந்தியர்கள் பலபேர் உடம்பிலே காந்தி தெரிவார்” என்று சுரா சொன்னார்

ஜெ

முந்தைய கட்டுரைபெருவெள்ளத்தின் பாதை
அடுத்த கட்டுரைமனு- கடிதங்கள்-4