சு.ரா- ஒரு பழைய பேட்டி

சுந்தர ராமசாமி,விஷ்ணுபுரம்- கடிதம்

இரட்டைமுகம்

அன்பு ஜெ அவர்களுக்கு, வணக்கம்.

25-01-2004 ல் வெளிவந்த கல்கியில் சுந்தர ராமசாமி அவர்களின் விரிவான பேட்டி வெளியாகி இருந்தது. இளம் எழுத்தாளர்களின் வரிசையில் உங்களைப்பற்றி குறிப்பிடும்போது, “ஜெயமோகன் இளம் வயதிலேயே முன்னுதாரணங்களற்ற பல அரிய சாதனைகளை புரிந்திருக்கிறார்” என்கிறார். (வெண்முரசு மூலம் குருநாதரின் வார்த்தை பலித்திருக்கிறது)

மிக விரிவாக இந்த பேட்டியில் பல தளங்களை தொட்டு பேசியிருக்கிறார். சமீபத்தில் ‘அஸ்வத்தாமன்'(கண்ணன்?)உங்களைப்பற்றி கிளப்பிவிட்ட புரளிக்கு மத்தியில், சு.ராவின் இந்த நேர்காணல் இதமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அவருக்கு, கதா அமைப்பின் சார்பில்விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் 2004 ஜனவரியில் நடந்திருக்கிறது. அந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் பட்டியலில் நீங்கள் இல்லை. அந்த நினைவுகளையும், அப்போதைய சூழ்நிலைகளையும் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அன்புடன்,

எம்.எஸ்.ராஜேந்திரன்

திருவண்ணாமலை.

அன்புள்ள ராஜேந்திரன்,

இலக்கியத்தில் ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இடையேயான உறவு முரணியக்கத்தன்மை கொண்டது. ஏற்பும் மறுப்புமாகவே அது நிகழும். ஆனால் பொதுவாக ஒரு சூழலில் கருத்தியலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ ஐம்பதாண்டுகள் ஆகுமென்பதனால் இரண்டு தலைமுறைக்கு ஒருமுறையே அந்த மாற்றம் மிகத்தீவிரமானதாக இருக்கும்

உதாரணமாக, க.நா.சு, எம்.கோவிந்தன் இருவரின் மாணவர் சுந்தர ராமசாமி. அவர்களின் நடுவே மெல்லிய உரசல் உண்டு. ஆனால் கிட்டத்தட்ட பண்பாட்டு- இலக்கியக்களத்தில் க.நா.சுவும் கோவிந்தனும் என்ன சொன்னார்களோ அதைத்தான் சுந்தர ராமசாமி மேலெடுத்தார். க.நா.சு தமிழ் நவீனத்துவத்தையும் எம்.கோவிந்தன் மலையாள நவீனத்துவத்தையும் உருவாக்கினார்கள். சுந்தர ராமசாமி நவீனத்துவத்தின் உச்சத்தை நோக்கிச் சென்றார். ஆகவே அவர்கள் நடுவே பெரிய அடிப்படைமோதலேதும் இல்லை.

சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன், ஓ.வி.விஜயன், ஆற்றூர் ரவிவர்மா, கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், யூ.ஆர்.அனந்தமூர்த்தி போன்றவர்கள் ஒரே அலை. நவீனத்துவத்தின் உச்சகட்ட நிகழ்வுகள். அவர்களை க.நா.சு, எம்.கோவிந்தன் பாதித்திருக்கிறார்கள்.ஆனால் என் தலைமுறை வரும்போது நவீனத்துவத்தின் இறுதி எல்லைகள் தெளிவடைந்துவிட்டிருந்தன. புதிய முன்னகர்வுக்கான காலம் வந்தமைந்திருந்தது. நவீனத்துவத்தின் வாழ்க்கைப்பார்வை, வடிவம் ஆகியவற்றை கடக்கவேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது

உதாரணமாக, மேலே சொன்ன எந்த எழுத்தாளருக்கும் வேதாந்த மரபோ சைவசித்தாந்த மரபோ ஒரு பொருட்டே அல்ல. அவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரியம் மீது அனேகமாக ஆர்வமே இல்லை. ஐரோப்பாமேல் தான் மோகம். யோகம், ஊழ்கம் ஆகியவற்றிலோ மரபின் தொன்மங்களிலோ ஆழ்படிமங்களிலோ அவர்களுக்கு அக்கறையுமில்லை, பயிற்சியுமில்லை. அவர்கள் உருவாக்கிக்கொண்ட சுயம் அது. அவர்களின் தேடலுக்கு அவை தேவையில்லை.

ஆனால் எனக்கு வேதாந்தம் தேவை. மரபு தேவை. டி.ஆர்.நாகராஜுக்கு பௌத்தம்,எச்.எஸ்.சிவப்பிரகாஷுக்கு சைவம் தேவை. ஓ.வி.விஜயன் இறுதியில் வேதாந்தத்தை வந்தடைந்தார். ஆகவே மீறிச்செல்லவேண்டியிருந்தது. நிராகரிக்கவேண்டியிருந்தது. அது முந்தையோரின் சாதனைகளை அங்கீகரித்து, அவர்கள்மீதான பெருமதிப்புடனேயே அவர்களின் எல்லைகளை வகுத்துக்கொண்டு, கடந்துசெல்லுதல்.

அது ஆழமான விவாதங்களை உருவாக்கியது. கண்டிப்பாக அதில் அரிதாகச் சோர்வும் சலிப்பும் உளக்கசப்புகளும் உண்டு. ஊடே பிறர் நுழைந்து உருவாக்கும் கலகங்களும் நிகழ்வதுண்டு. அவ்வாறாக சுந்தர ராமசாமியிடம் ஒரு அணுக்க-விலக்க உறவே எனக்கு இருந்தது.

ஆனால், எனக்கு அவருடைய இடமும் சாதனையும் தெரியும். அவருக்கு என்னுடைய ஆற்றலும் நான் நிகழ்த்துவது என்ன, நிகழ்த்தப்போவதென்ன என்றும் நன்றாகவே தெரியும். அதை நான் பலமுறை எழுதியுமிருக்கிறேன். ஆனால் அதனால் அவர் என்னுடைய மரபுக்குள் ஊடுருவும் பார்வையை, கட்டற்ற கலைவடிவை, தர்க்கத்தைக் கடந்துசெல்லும் புனைவுகளை ஏற்கிறார் என்று பொருளல்ல. அவர் நிராகரிப்பார், கூடவே அது இயல்பான அடுத்தகட்ட எழுச்சி என்றும் எண்ணுவார்.

சுந்தர ராமசாமியின் இப்பேட்டி அதையே காட்டுகிறது. அது கதா அமைப்பு வாழ்நாள் சாதனைக்காக அவருக்கு அளித்த விருதை ஒட்டி நிகழ்ந்த சந்திப்பு.அதில் தமிழ்நவீன இலக்கியத்தை பொதுவாக இலக்கியமறியாதவர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக விரிவாக அனைவரையுமே குறிப்பிடுகிறார்.

இலக்கியத்தில் நிகழும் கருத்துமோதல்கள் இருவகை. ஒன்று, கலைப்படைப்புகளை உருவாக்குபவர்கள், சிந்தனைகளை உருவாக்குபவர்கள் தங்களுக்குள் கொள்ளும் முரண்பாடும் விவாதமும். இன்னொன்று, கலையிலக்கியத்திற்கு தொடர்பற்றவர்களை கலைஞர்களும் சிந்தனையாளர்களும் விமர்சித்து நிராகரிப்பது. இரண்டையும் வேறுபடுத்திப்பார்க்க நம்மால் முயலவேண்டும்

ஆனால் எத்தனை அருகிருந்தாலும் உண்மையில் கலையை உணராதவர்கள், சிந்தனைகள் செயல்படும் முறையை அறியாதவர்கள், எல்லாப் பூசல்களையும் ஒன்றென்றே காண்பர். எல்லாவற்றையும் வம்புகளாகவே புரிந்துகொள்வார்கள். அவ்வாறே நினைவிலும் வைத்திருப்பார்கள். அதற்கு ஒன்றும் செய்யமுடியாது. அப்படி ஒரு இலக்கிய வம்பாளர்களின் ஒரு கூட்டமே இன்று இணையத்திலும் உள்ளது.

அவர்கள் உருவாக்கும் குழப்பங்கள் நாக்கைச்சுழற்றிக்கொண்டு அவர்கள் சொல்லும் புரளிகளுக்கு அப்பால் வந்தால் மட்டுமே ஓர் இளம் வாசகன் அறிவியக்கம் எப்படி நிகழும் என்பதை உணரமுடியும். அதற்கு இத்தகைய பேட்டிகள் உதவும். இவை ஒருவகை ஆவணங்கள்.

ஜெ

சுந்தர ராமசாமி மார்க்ஸியரா?

சுந்தர ராமசாமி பிராமண மேட்டிமைநோக்கு கொண்டவரா?

பிள்ளைகெடுத்தாள் விளை -சுந்தர ராமசாமியின் பிற்போக்குப் பார்வையா?

ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…

இரட்டைமுகம் -அரசியல்சழக்குகள்-கடிதங்கள்

முந்தைய கட்டுரைபூட்டிய அறைக்குள் தனிமை
அடுத்த கட்டுரைவெண்முரசு – வாசிக்கக் கடினமா?