அரசியலும் எழுத்தாளனும்

கவிதையின் அரசியல்– தேவதேவன்

அன்புள்ள ஜெயமோகனுக்கு…

வணக்கம். நலம் வேண்டுகின்றேன்.

தமிழக தினசரிகளில் தமிழ் இந்துவின் தரம் குறிப்பிடத்தக்கது என எண்ணுகின்றேன். ஆனால், சமயங்களில் கருத்துக்கள் என்ற பெயரில் உளறல்களை அள்ளித்தெளிப்பதும் வாடிக்கையாகி வருகின்றதோ என எண்ணத்தோன்றுகிறது.இது சமீபத்தில் தமிழ் இந்துவில் வந்த கட்டுரை: https://www.hindutamil.in/news/opinion/columns/580611-writers-about-politicians.html

தலைப்புஅரசியலர்கள் மீது ஏன் எழுத்தாளர்களுக்கு வெறுப்பு?

இதை எழுதியவரான இளவேனில் சொல்கிறார்,

திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இப்படிப் பேசினேன், ‘புதுமைப்பித்தன் குறித்துப் பேசுகிறீர்கள். திருநெல்வேலியில் அவருக்கு ஒரு சிலை வைக்க முடியவில்லையா? எந்தப் பேருந்து நிலையம், சந்திக்குச் சென்றாலும் எவனாவது ஒருவன் கையைத் தூக்கிக்கொண்டு நிற்கிறான். அவர்கள் செய்ததைவிட குறைவான பணிகளையா புதுமைப்பித்தன் செய்திருக்கிறார்என்றேன்.” கி.ரா.வின் பிறந்த நாள் செப்டம்பர் 16 அன்று. அதற்கு முதல் நாள்தான் அண்ணாவின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் எல்லா சாலைச் சந்திப்புகளிலும் அண்ணாவும் அம்பேத்கரும் எம்ஜிஆரும் கையைத் தூக்கியபடி நிற்கிறார்கள். நிச்சயமாக இவர்களில் யாரோ ஒருவரை அல்லது எல்லோரையுமே சேர்த்துத்தான் அவர் தமது பேச்சில் குறிப்பிட்டிருக்க வேண்டும். எழுத்தாளர்கள் மேடையேறிவிட்டாலே உணர்ச்சிவயமாகிவிடுவார்கள் என்பதையெல்லாம் ஜெயகாந்தன் காலத்திலிருந்தே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி நெல்லையிலும் நடந்திருக்கலாம். ஆனால், அதை மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நினைவுகூர்ந்து பேசும்போது முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் அவ்வாறு அவர் தொடர்ந்து பேசிவருகிறார் என்றும் பொருள்கொள்ள வாய்ப்பிருக்கிறது. புதுமைப்பித்தனின் இலக்கிய, இதழியல் பங்களிப்புகள் போற்றப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அவருக்கு திருநெல்வேலியின் மையமான ஓரிடத்தில் சிலை நிறுவப்பட வேண்டும். திருநெல்வேலியில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் சிலை வைக்கத் தகுதியான பேராளுமைதான் அவர். ஆனால், அண்ணாவும் அம்பேத்கரும் எம்ஜிஆரும் இந்தச் சமூகத்துக்குச் செய்திருக்கும் அரசியல் பங்களிப்புகள் இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தரம் நிர்ணயிக்கக்கூடியவை அல்ல என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இதனை எழுதியவரின் தகுதி குறித்தோ, அவரின் கட்டுரை குறித்தோ கவலைபட தேவையில்லை என்ற போதும், இம்மாதிரியான ஒரு கட்டுரை தமிழ் இந்து மாதிரியான பத்திரிக்கையில் வரும்போது, மக்களுக்கு எழுத்தாளர்கள் என்றால் என்ன மாதிரியான எண்ணம் வரும்?

மேலும், இந்த விமர்சனங்கள் பல காலமாகத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் சொல்லி வருவது தானே? இப்போது நாஞ்சில் நாடன் மூன்று வருடம்  கழித்தும்  புதுமைப்பித்தனுக்கு சிலை கூட இல்லை என்கிறார் என்றால், அதை சதி என்று நினைக்கத்தான் தோன்றுகிறதே தவிர தமிழின் முக்கிய படைப்பாளி ஒருவரின் கருத்தை ஒட்டி மூன்றாண்டுகளில் ஒரு விவாதம் கூட நடக்கவில்லையே என்ற ஆதங்கம் இல்லையே?

நியாமாக எழுத்தாளர்களை நாம் ஏன் புறக்கணிக்கின்றோம் என்றல்லவா தலைப்பு இருந்திருக்க வேண்டும்? ஆனால், எழுத்தாளர்கள்மேல் ஏன் இவ்வளவு வன்மம்?

பி.ஏ.பிரவீன்

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் ஒரு விவாதம் நண்பர்களுடன் நடந்தது. நண்பன் சொன்னான், எழுத்தாளர்கள் பெரும்பாலும் திமுக கட்சிக்கு எதிரானவர்கள் என்று. நான் சொன்னேன், அவர்கள் அதிமுகவையும் ஏற்றுக்கொள்வதில்லையே என்று. எழுத்தாளர்கள் எந்தக் கட்சியையும் ஏற்றுக்கொள்வதில்லை என்று ஒரு நண்பன் சொன்னான். சில எழுத்தாளர்கள் சில கட்சிகளில் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் எழுத்தாளர்கள் அரசியலை வெறுப்பவர்களாகவே இருக்கிறார்கள். இது ஏன்?

செல்வக்குமார் மாரித்துரை

அன்புள்ள பிரவீன், செல்வக்குமார்

இந்த ஐயம் முன்பு எழுந்ததில்லை, ஏனென்றால் இதற்கான விடை சிற்றிதழ்சார் இலக்கியச் சூழலில் மட்டுமல்ல பேரிதழ்களின் சூழலிலேயே இருந்தது. சுஜாதா, பாலகுமாரன் எந்தக் கட்சி என்று எவரும் கேட்டது இல்லை. சாண்டில்யன், பி.வி.ஆர் எந்தக் கட்சி என்று கேட்கப்பட்டதில்லை

இந்தக் கேள்வி இன்றைய இணைய- சமூக ஊடக உலகில் இருந்து எழுகிறது. இணையம் ஒரு மாபெரும் அரட்டைவெளி. அங்கே சினிமா, அரசியல், பாலியல் கிசுகிசுக்கள்தான் முக்கியமான பேசுபொருள். சொல்லப்போனால் சினிமா, அரசியலைவிடவும் பாலியல் கிசுகிசுக்கள்தான். எந்த சினிமா, அரசியல் பதிவுக்கும் வனிதா விஜயகுமாரின் யூடியூப் பக்கம் பெற்ற வருகையாளர் எண்ணிக்கை கிடைக்கவில்லை- விஜய், ரஜினிகாந்த் படங்களுக்குக் கூட.

அரட்டைவெளியில் எழுத்து இலக்கியம் எதுவுமே முக்கியமல்ல. அங்கே பேசப்படும் தரப்புகளில் நீ எந்த தரப்பு என்று மட்டுமே கேள்வி. நீ திமுகவா அதிமுகவா? நீ ரஜினியா கமலா? நீ ராஜாவா ரஹ்மானா? நீ விஜயா அஜித்தா? அவ்வளவுதான். அது முச்சந்தி டீக்கடையானாலும் சரி முகநூலானாலும் சரி. “இல்லீங்க, நான் வேற” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவதே எழுத்தாளன் செய்யக்கூடுவது. அது அறிவுத்தளம் அல்ல, கருத்துப்புலம் அல்ல, வெறும் அரட்டைச்சூழல் என்று புரிந்துகொண்டால் அவன் தப்பித்துக்கொண்டான்.

எழுத்தாளனுக்கு ஏன் கட்சிச்சார்பு இருப்பதில்லை என்ற கேள்வியை அரட்டைத்தளத்துக்கு அப்பால் சென்றுதான் யோசிக்கவேண்டும். ஏன் ஒரு பிரபலக் கேளிக்கைக் கலைஞனுக்கு இருக்கும் ஒட்டுமொத்த ஏற்பு எழுத்தாளனுக்கு கிடைப்பதில்லை? ஏன் ஓர் எளிய மேடைப்பேச்சாளன் அளவுக்குக் கூட எழுத்தாளன் ஏற்கப்படுவதில்லை? யூடியூபில் சென்று பாருங்கள், தமிழின் சராசரிப் பேச்சாளனின் அளவுக்கு வருகையாளர் பதிவுள்ள எந்த எழுத்தாளனும் இல்லை.

ஏன்? எழுத்து என்பது எப்போதுமே ஓர் ஒவ்வாமையிலிருந்துதான் எழுகிறது.இன்றிருக்கும் சமூகச்சூழல், பண்பாட்டுச்சூழல், அரசியல்சூழல் பற்றிய ஆழமான ஓர் ஒவ்வாமை, ஓர் உடன்படாமை எழுத்தாளனுக்குள் உள்ளது. அதுதான் அவனை எழுதவைக்கிறது. ஒரே வரியில் இலக்கியத்தை ‘முரண்பட்டவனின் வெளிப்பாடு’ என்று சொல்லிவிடலாம்.

அது நேற்றும் அப்படித்தான் இருந்தது. நேற்றைய இலக்கியம் மெல்லமெல்ல அமைப்பின் பகுதியாகி ஏற்படைகிறது. தமிழின் ஈராயிரம் ஆண்டு இலக்கிய வரலாற்றை எண்ணிப்பாருங்கள். முடியுடை மூவேந்தருடன் முரண்பட்டு பாரியுடன் நின்று பாரிமகளிரை அழைத்துக்கொண்டு அலைந்த கபிலரின் இயல்பு என்ன?

தமிழ் என்றென்றும் போற்றும் பெருங்காவியத்தை எழுதியபின் ஒட்டக்கூத்தன் முதலிய அவைக்கவிஞர்களால் சிறுமைசெய்யப்பட்டு, அரசனிடம் பூசலிட்டு, சேரநாடு சென்று ஒளிந்துவாழ்ந்து, பிடிபட்டு அரசனால் கொல்லப்பட்ட கம்பனின் இயல்பு என்ன?

எட்டையபுரம் மன்னனிடமும் பிரிட்டிஷ் அரசிடமும் முரண்பட்டு தலைமறைவாக பாரதியை வாழச்செய்தது எது? நடிப்புச் சுதேசிகள் என தன் கட்சிக்காரரையே வசைபாடச் செய்தது எது?

மலையாளக் கவிஞர் வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோன் ஆரம்பகால முற்போக்கு இலக்கியவாதி. அவர் ஒருமுறை எழுதினார் “நல்ல நாளை என்ற ஒன்றுக்காக போராடுபவர்களுடன் நிற்பது என் கடமை. ஆனால் அப்படி உண்மையிலே பொன்னுலகு ஒன்று வந்தால்கூட நான் கோழிக்குஞ்சை பிடித்து கதறக்கதறக் கிழித்துச் சாப்பிடும் காகத்தைக் கண்டு கண்ணீருடன் மா நிஷாத என்று சொல்பவனாகவே நீடிப்பேன்”

பறவையிணையை கொல்லத்துணியும் வேட்டைக்காரனைக் கண்டு “நிறுத்து காட்டளனே” என்று கூவிய வால்மீகியே ஆதிகவி என்று நம் மரபு சொல்கிறது. தீது கண்டு அநீதி கண்டு எழும் கொந்தளிப்புதான் இலக்கியத்தின் அடிப்படையாக இருக்கமுடியும். அதற்கு இருக்கும் ஒரே தரப்பு அதுதானே ஒழிய, எந்த அரசியல் கருத்தியல் தரப்பும் அல்ல.

அந்த முரண்படும் இயல்பு, மீறல்தான் இலக்கியத்தின் அடிப்படை. அதையே புதுமைப்பித்தன் முதல் இன்று வரையிலான எழுத்தாளர்களிடம் காண்கிறோம். அவர்கள் சமூகமனநிலைக்கு எதிராக நிலைகொள்கிறார்கள். பண்பாட்டின் பொதுப்போக்கை எதிர்க்கிறார்கள். அரசை ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள்.

ஏனென்றால் அதுதான் இலக்கியத்தின் அடிப்படியான உணர்வுநிலை. நவீன எழுத்தாளன் தனிவாழ்வில் புரட்சிகரமாக இருக்கவேண்டும் என்பதில்லை. அவன் எழுதும்போதே எழுத்தாளன். மற்றபொழுதுகளில் அவன் ஒரு குமாஸ்தாவாக வணிகனாக விவசாயியாக இருக்கலாம். எழுதும் தருணத்தில் எழுத்தாளனுக்குரிய சுதந்திரமும் தேடலும் எதிர்ப்பும் அவனிடம் திகழவேண்டும்.

அவன் தனிவாழ்வில் எல்லா இடங்களிலும் சமரசம் செய்துகொண்டானென்றால் அந்த எதிர்ப்பு அவனிடம் இயல்பாக எழாமலாகிவிடுகிறது. அது வெற்றுநடிப்பாக வீண்சொற்களாக வெளிப்பட நேர்கிறது. அவன் கலை அழிகிறது. அதுதான் அவன் வாசகர்களிடம் ஒவ்வாமையை உருவாக்குகிறது

இந்த முரண்பட்டு மீறும் இயல்பை நாம் கேளிக்கைக் கலைஞர்களிடம் காணமுடியாது. பிரபலப் பேச்சளர்களிடம் காணமுடியாது. அதை நாம் வாலியிடமும் வைரமுத்துவிடமும் பார்க்க முடியாது. ஆகவே அவர்களுக்கு எங்கும் பணிய எந்த தயக்கமும் இல்லை. வைரமுத்து பேதமே இல்லாமல் திமுக, பாஜக எங்கும் பணிகிறார். அது எவருக்குமே உறுத்துவதில்லை. ஏனென்றால் அவர் ஒத்துப்போகும் பண்பாட்டின் முகம் என அனைவருக்கும் தெரியும்.

ஆகவேதான் இலக்கியவாதிகளை அவன் எழுத்தினூடாக அவனை அறிபவர்களால் மட்டுமே ஏற்கமுடிகிறது. வாசிக்காத பொதுமக்களுக்கு இலக்கியவாதிகள் மேல் ஒவ்வாமையே உள்ளது. ஏனென்றால் அவர்கள் ஏற்றுக்கொண்டவற்றை அவன் மறுக்கிறான். அவர்கள் போற்றுவனவற்றை ஐயப்படுகிறான். அவர்கள் நம்பும் பொதுவான கருத்துக்களை நிராகரிக்கிறான். அவர்களின் மரபை, அவர்களின் நிகழ்கால வாழ்க்கைப்போக்கை அவன் மறுவரையறை செய்யமுயல்கிறான். அவன் அவர்கள் விரும்புவனவற்றைப் பேசுவதில்லை. அவர்கள் நின்றிருக்கும் தளத்திலேயே அவன் இல்லை.

பிரபலக் கலைஞர்கள், பிரபலப் பேச்சாளர்கள் மக்கள் நம்புபவற்றையே சொல்கிறார்கள். மக்கள் உண்மை என ஏற்றுக்கொண்டிருப்பவற்றையே மீண்டும் வலியுறுத்துகிறார்கள். சுகி சிவம் பேச்சை அல்லது சாலமன் பாப்பையா பேச்சை கேட்டுவிட்டு செல்பவனுக்கு எந்த நிலைகுலைவும் இல்லை. நாஞ்சில்நாடன் பேச்சை கேட்டுச் செல்பவன் எப்படியோ அமைதி இழக்கிறான். சீண்டப்படுகிறான், கசப்படைகிறான்.

அவர்களில் ஒருசாரார் நாஞ்சில்நாடனுடன் ஒரு விவாதத்தை தொடங்குவார்கள், அவர்களே இலக்கியவாசகர்கள் ஆகிறார்கள். எஞ்சியோர் நாஞ்சிலை வெறுப்பார்கள். அவர்களே எண்ணிக்கையில் மிகுதி.தமிழ் ஹிந்துவில் நீங்கள் கண்ட அந்தக் குறிப்பை எழுதிய பேதை அந்த பொதுமக்களில் ஒருவன். ஏன் அவன் பேதை என்றால் பொதுமக்களுக்கு ஏதோ ஒருவகையில் தாங்கள் பொதுமக்கள் எனத்தெரியும், இந்த அறிவிலிக்கு அது தெரியாது.தன்னை அறிவுஜீவி என நினைத்துக்கொண்டிருக்கிறான்.

எல்லாவற்றிலும் இருக்கும் ஒவ்வாமையே எழுத்தாளனுக்கு அரசியலிலும் இருக்கிறது. மதம், பண்பாடு, அரசு, அரசியல் எதையும் ‘முழுமையாக’ ஏற்றுக்கொண்டு ஒழுகுவது எந்த எழுத்தாளனுடைய இயல்பும் அல்ல. இதற்கு உலக இலக்கியத்திலேயே விதிவிலக்கு கிடையாது. நாஞ்சில்நாடன் தன் ஊர், தன் சாதி, அரசு, சைவமதம் பற்றியெல்லாம் என்ன எழுதியிருக்கிறார்? ஒவ்வாமையும் எள்ளலும் மட்டுமே. ஏன் அவர் வழிபடும் கம்பனைப்பற்றிக்கூட ஒவ்வாமையின் மொழி அவ்வப்போது எழுவதுண்டு.

அரசியலில் ஒரு கட்சியை, ஒரு தரப்பை ‘ஏற்று’ ‘ஆதரித்து’ எழுதவோ பேசவோ எழுத்தாளனுக்குத் தடையாக இருப்பது அவனுடைய இந்த அடிப்படையான ஒவ்வாமைதான். அவனுக்கு தனிப்பட்டமுறையில் ஓர் அரசியல் நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு கூட இருக்கலாம்.அல்லது அந்தந்தக் காலகட்டத்தின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவனும் அடையலாம். ஆனால் அவன் அதை தன் தரப்பாக முன்வைக்க முடியாது

ஏன்? இப்போது ஓர் எழுத்தாளன் திமுகவை ஆதரிக்கிறான் என்று கொள்வோம். திமுகவினர் செய்யும் எல்லாவற்றையும் அவன் ஆதரிக்கமுடியுமா? அவற்றுக்கு சப்பைக்கட்டு கட்டமுடியுமா? நாளை அவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் என்ன நிகழுமென்பதற்கு எந்த ஐயமும் தேவையில்லை, இதுவரையிலான ஆட்சிகளில் என்ன நடந்ததோ அதுதான். அதை ஆதரித்தபின் அவன் எதை எதிர்க்கமுடியும், என்ன நியாயம் பேசமுடியும்?

வைலோப்பிள்ளி

இங்கே இப்போது சகல அநீதிகளும் நிகழ்கிறது, திமுக வந்தால் ஒளிவந்துவிடும் என்று திமுக தொண்டன் சொல்லலாம். திமுக வந்தபின் தமிழகம் ஒளிர்கிறது என்று அவன் கூசாமல் வாதிடுவான். எழுத்தாளன் அன்றும் இன்றும் அவலங்களை, சரிவுகளை, அநீதிகளையே சுட்டிக்காட்டுவான். அவன் பணி அதுவே.

எந்த ஒரு அரசியல்தரப்பையும் ஆதரித்து நிலைபாடு கொள்ள எழுத்தாளனால் இயலாது. சீரிய எழுத்தாளர்கள் இந்தியாவின் காங்கிரஸ் இயக்கத்தையும், கம்யூனிஸ்டு இயக்கத்தையும் ஆதரித்தது உண்டு. திராவிட இயக்கத்தை ஆதரித்தவர்களும் சிலர் உண்டு. ஆனால் அந்த அமைப்புக்கள் அதிகாரம் நோக்கிச் சென்றபோது, அவையே அதிகார அமைப்புகளாக ஆனபோது அவர்கள் விலகிச் சென்றுவிட்டனர்.

இந்த உளநிலை இலக்கியம், பண்பாட்டுச்செயல்பாடு ஆகியவற்றில் ஆரம்ப அறிமுகம்கூட இல்லாதவர்களுக்குப் புரிவது அல்ல. அவர்கள் அதை எழுத்தாளனின் திமிர் என்றே எடுத்துக்கொள்வார்கள். இங்கே பாமரரகள் ஓர் அரசியல்வாதியின், ஒரு சினிமா ஆளுமையின் திமிரை ஏற்றுக்கொள்வார்கள், அவள் முன் கைகட்டி நிற்பார்கள். எழுத்தாளனின் திமிரை கண்டு சீற்றம்கொள்வார்கள். ஏனென்றால் அவர்களின் பார்வையில் எழுத்தாளன் ஒரு பொருட்டே அல்ல. அவன் என்ன செய்கிறான், அவனுடைய இடமென்ன என்று அவர்களுக்குத் தெரியாது.

இங்கே ஏதேனும் ஒரு கட்சியைச் சார்ந்து பேசும் அனைவருமே எழுத்தாளர்கள் தங்கள் தரப்பை ஏற்று தங்களுடன் சேர்ந்து கொடிபிடிக்க ஏன் வரவில்லை என்று கேட்பார்கள். எந்த ஒரு விவாதம் எழுந்தாலும் பத்துபேர் ‘இந்த எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள்?”என்று கேட்டு திட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அது ஏதோ அறச்சீற்றம் போலிருக்கும். ‘எங்கள் அரசியலை ஏற்று எங்கள் கோஷத்தைப் போடு’ என்று மட்டுமே அதற்குப் பொருள். அறமென்பதெல்லாம் இவர்கள் அறியாதது. இவர்கள் தங்கள் தரப்பின் பிழைகளை காணும்போது கண்மூடிக்கொள்வார்கள். எது எழுத்தாளன் பேசவேண்டிய இடம், எப்படி அவன் பேசவேண்டும் என்று இவர்களே முடிவெடுத்துச் சொல்வார்கள், எழுத்தாளன் அடிபணியவேண்டும் என கருதிக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கு அரசியல்நிலைபாடே ஆதாரம். கருத்து சிந்தனை ஏதுமில்லை.  ‘இந்த தரப்பு என்னுடையது, இதிலுள்ள எல்லாவற்றையும் நான் நியாயப்படுத்துவேன் எதிர்தரப்பை முழுமையாக எதிர்ப்பேன்’ இவ்வளவுதான் சிந்தனை. இதற்கு தேவையான தர்க்கங்கள், நையாண்டிகள், தாண்டிக்குதித்தல்கள் எல்லாவற்றையும் கற்று வைத்திருப்பார்கள்.

தன் தரப்பில் நின்று தன்னைப்போல பேசாத எல்லாருமே இந்த கும்பலுக்கு எதிரிகளாகவே படுகிறார்கள். ஒருவன் அப்படி ஒரு நிலைபாடு எடுக்காமல் சுதந்திரமாக சிந்திக்க முடியும் என்பதே தெரியாது. அதை நம்பவே முடியாது. ‘நீ என் தரப்பா இல்லையென்றால் அந்த தரப்பு’ அவ்வளவுதான். ‘நீ சங்கி, நீ தேசத்துரோகி, நீ விலைபோய்விட்டவன்’.

முன்பு எம்.கோவிந்தனை இடதும் வலதும் சேர்ந்து திட்டினார்கள். டீ குடிக்கப்போனபோது பீடிப்புகை அருகிலிருந்த ஒருவர் கண்ணில் விழுந்தபோது அவர் கோவிந்தனை கெட்டவார்த்தை சொன்னார். எம்.கோவிந்தன் பூரிப்புடன் சொன்னார். “அப்பாடா, இவனும் திட்டிவிட்டான்!”

எம்.கோவிந்தன்

எவர்மேலும் இவர்களுக்கு மதிப்பில்லை. இலக்கியம் பற்றியோ பண்பாடு பற்றியோ தெரியாது, ஆகவே எழுத்தாளர்கள் மேல் மதிப்பில்லை. ஆனால் உண்மையில் தன் தரப்பிலிருப்பவர் மீதும் மதிப்பில்லை. இவர்கள் தலைமேல் தூக்கிவைத்து ஆடிய ஒருவர் இவர்களுடன் சற்று முரண்பட்டால் தூக்கிப்போட்டு மிதிப்பார்கள்.அவர் சற்று ஒதுங்கிக்கொண்டால் ‘யார் அந்தாள்?”என்பார்கள்.

இணையத்திலேயே பாருங்கள், இடதுசாரி வலதுசாரி ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமே இல்லாமல் அத்தனை அரசியல்கும்பலும் எழுத்தாளனை வசைபாடித் தள்ளியிருப்பார்கள். ஒரே எழுத்தாளன் இரு தரப்பாலும் வசைபாடப்பட்டிருப்பான். எழுத்தாளனே சமூகத்தின் முதல் எதிரி என்று இவர்கள் நம்புவதாகத் தோன்றும். எழுத்தாளர்கள் எல்லாருமே அயோக்கியர்கள் என அத்தனை அரசியல் அயோக்கியர்களும் ஒரே குரலில் சொல்கிறார்கள்

எழுத்தாளனின் பார்வையில் அரசியல் என்பது அதிகாரத்தின் அடையாளம், அதிகாரத்துக்கான விளையாட்டு. அரசியல்வாதிகள் அனைவருமே அதன் முகங்கள்தான். அது எவராக இருப்பினும். எண்ணிப்பாருங்கள், தமிழிலக்கியங்களில் காந்தியும், காந்தி சிலைகளும் எப்படியெல்லாம் கேலிக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகியிருக்கின்றன. அன்றெல்லாம் எழாத குரல் இப்போது எழுகிறது. ஏன்? நேரடியாகவே எண்ணிப்பாருங்கள் காந்தியை கேலி செய்தால் சீற்றம் வருவதில்லை, சாதித்தலைவர்களை எவரேனும் மறைமுகமாகச் சொன்னால்கூட அறச்சீற்றம் எழுகிறதே ஏன்?

இந்தக் குறிப்பைப் பொறுத்தவரை இந்த எதிர்ப்பை எழுப்புபவர் ஓர் அரசியலை முன்வைத்து எழுத்தாளனை வசைபாட விரும்புகிறார், அவ்வளவுதான். வசைபாடுவதுதான் அவருக்கு முக்கியம். அதற்கு ஆதரவு எப்படிச் சேருமென எண்ணிக் கணக்கிடுகிறார்.

தமிழ் ஹிந்து அற்பர்களின் மையமாக, பண்பாட்டுக்கும் இலக்கியத்திற்கும் எதிரான கீழ்மக்களின் களமாக ஆகிவிட்டிருக்கிறது. கலை இலக்கியத்திற்கு எதிரான உளநிலைகளை திட்டமிட்டு உருவாக்குகிறது. இவர்களுக்கு இலக்கியவாதிகளைப் பற்றிப் பேசும் தகுதி என்ன? உள்ளூர அரசியல்வாதிகளை தொழுதுண்டு பின்செல்லும் கடையர்கள். அவர்களுக்கு இலக்கியவாதி என்றால் என்றும் அச்சமும் ஒவ்வாமையும்தான் எழுகிறது. அதுவே இயல்பானது.

ஜெ

எனது அரசியல்

எழுத்தாளனின் சாட்சி

எழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்

மனுஷ்யபுத்திரன் ,இலக்கியம் அரசியல்

இன்றைய அரசியல்

அரசியல்வெளி

எழுத்தாளனின் மதிப்பு

முந்தைய கட்டுரைதீவிரவாதமும் இலட்சியவாதமும்-எதிர்வினை
அடுத்த கட்டுரைகாந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்பு