செயல்வழி ஞானம் – காந்திகிராம் நிகழ்வு

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

“இளம் வயதில் இலட்சியவாதம் நம்மை வந்தடைகிறது. இலட்சியநோக்கு சூழ இருக்கும் சமூகத்தீங்குகள், அநீதிகள், ஒழுங்கின்மைகள் குறித்த ஒவ்வாமையை உருவாக்குகிறது. ஆகவேதான் நாம் செயல்படத்தொடங்குகிறோம். எதிர்ப்பு இன்றி செயல்பாடு இல்லை. ஆனால் அந்த எதிர்ப்பு கருதுகோள்கள் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டும். நாம் எதிர்ப்பனவற்றை விட மேலானவர்களாக நம்மை நாமே நிலைநிறுத்திக்கொள்வதாக இருக்கவேண்டும். அதுவே காந்திய வழி. கசப்பு வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான எச்செயல்பாடும் இறுதியில் வெறுமையையே எஞ்சவைக்கும். எதிர்ப்புச்செயல்பாடும்கூட நம்பிக்கையின் கனிவின் அடிப்படையிலேயே நிகழ்ந்தாக வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம் கழிந்த பின்னால் எது சாதிக்கப்பட்டதோ அதுவே எஞ்சும். எது பேசப்பட்டது என்பதல்ல…”

உங்களுடைய மேற்கண்ட வார்த்தைகளை நாங்கள் எங்களுக்குள் அடிக்கடிச் சொல்லிக்கொள்வதுண்டு. உளத்தீயைத் தூண்டிக்கொள்வதற்கான இத்தகைய சொற்கள் ஆயிரமாயிரம் நிறைந்துபெருகி செழித்து நிற்கிறது உங்களுடைய படைப்புலகத்திற்குள். அவ்வகையில் அண்மையில் எங்களுக்கு அமைந்த ஒரு செயலூக்கக் கொடுப்பினை என்பது, திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைக்கழகத்தின் ஊழியரகம் இல்லத்தில் நிகழ்ந்த ‘சுதந்திரத்தின் நிறம்’ மற்றும் ‘இன்றைய காந்திகள்’ நூல்களின் வெளியீட்டு நிகழ்வு!

ஜவஹர்லால் நேரு, இவான் இல்லிச், மார்டின் லூதர் கிங் (ஜூனியர்), காமராஜர், ஜே.சி.குமரப்பா, ராலே கெய்த்தான்… என பேராளுமைகள் பலபேர் இங்குவந்து தங்கிச்சென்ற இடமாதலால் ‘ஊழியரகம்’ என்பதை ஒரு செயலாலயம் போலவே எண்ணத் தோன்றுகிறது. அத்துணை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், அம்மனிதர்களின் நிறையிருப்பில் அந்த நிகழ்வு நிகழ்ந்தேறியது தாளவியலாத ஒரு செயற்பதட்டத்தை மனதிற்குத் தந்திருக்கிறது. உரையாடிக் களைந்துசெல்லும் வழமைபோல் அல்லாமல், உறுதியேற்று ஏதோவொரு செயலுக்குள் செலுத்திக்கொள்கிற ஒரு நுழைவெனவே இந்தக் கூட்டம் எங்கள் எல்லோருக்குள்ளும் அர்த்தப்பட்டது.

அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு ஒரு பழக்கமுண்டு. அடுத்தகட்டமாக எந்தவொரு செயலுக்குள்ளும் ஈடுபட முடியாமல், தன் மனம் அவநம்பிக்கையை அடைகிற நேரங்களிலெல்லாம், எங்கிருந்தாலும்  அம்மா காந்திகிராம் ஊழியரகத்திற்கு கிளம்பி வந்துவிடுவாராம். அங்கு அறைக்குள் ஒரு வள்ளலார் படம் உள்ளது. அதன்முன்பு ஒரு சிறுதீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அந்த அறைக்குள்ளேயே தன்னை முடக்கிக்கொள்வாராம். ஒரு ‘பதில்’ தன் மனதுக்குக் கிடைக்கும்வரை அம்மா அதற்குள்ளேயே உணவேதும் எடுத்துக்கொள்ளாமல் உபவாசம் இருப்பாராம்.  ஒருசில சமயங்களில் இந்தக் காத்திருப்பு நான்கைந்து நாட்கள் வரைகூட சென்றிருக்கிறது. சூரிய சந்திர வெளிச்சங்கள் சாளரத்தில் தோன்றி மறைய, அம்மா அருட்பெருஞ்ஜோதி அகவலை உச்சரித்து, தன்னுடைய ஆன்மாவுக்கு ஒரு பதிலை வேண்டிக்கொண்டே இருப்பாராம்.

ஊழியரகத்தில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில், ‘அப்படித்தான் ஆறேழு மாதங்கள் முன்பாக இங்கு வந்து ஒரு பதிலைக் கேட்டு பிரார்த்தித்தேன். முதன்முதலாக இந்த ஊழியரகம் துவங்கப்பட்டபோது இங்கு தோன்றிய அதே மகிழ்வையும் நம்பிக்கையையும் நான் திரும்பக் காண்கிற நாளாக இந்தநாள் மாறிவிட்டது!’ எனச்சொல்லி நிகழ்வுக்கு வந்திருந்த ஒவ்வொரு இருதயத்துக்கும் பேரன்னையாக அகவூக்கம் அருளிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் தூய இருப்பை இக்கணம் நன்றியோடு நினைத்துக்கொள்கிறோம்.

இது அத்தனைக்குமான  முதற்துவக்கமாக அமைந்தது நீங்கள்தான். கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதனின் வாழ்க்கைக் கதையான ‘சுதந்திரத்தின் நிறம்’ புத்தகமும் சரி, அண்ணன் பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதிய ‘இன்றைய காந்திகள்’ புத்தகமும் சரி, இந்த இரு புத்தகங்களும் தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளிவந்து முழுமைகொள்வதற்கான வாய்ப்பு நீங்கள் உருவாக்கித் தந்தது. உங்களுடைய கட்டுரையிலோ அல்லது உரையிலோ நீங்கள் சுட்டிக்காண்பித்த பிறகே இந்த இருநூல்களும் புத்தகமாக ஆவதற்கான நல்லுள்ளங்களைக் கண்டடைந்தன.

சுதந்திரத்தின் நிறம் மற்றும் இன்றைய காந்திகள்… இந்த இரு புத்தகங்களுமே தற்சமயம் சமகால இளைஞர்களிடத்தில் ஒரு மெளனமான உரையாடலைத் துவக்கிவைத்திருப்பதை அவ்வப்போது எங்களை வந்தடையும் கடிதங்கள் மற்றும் அலைபேசித் தனிக்குரல்கள் வழியாக நாங்கள் அறிகிறோம். இப்புத்தகங்கள் ஒருவித செயல்தெளிவை அளிப்பதாக சில வாசிப்புத் தோழர்கள் பகிர்ந்துகொண்டார்கள். கடந்த ஒரு வருட காலத்தில் வாசிப்பு மனதில் நேர்மறையான அகவெழுச்சியை இந்நூல்கள் உருவாக்கியிருப்பதை உணரமுடிகிறது.

இதே நாள் (அக்டோபர் 18), கடந்த ஆண்டு, திண்டுக்கல் காந்திகிராம் ஊழியரகத்தில் நிகழ்ந்த சுதந்திரத்தின் நிறம், இன்றைய காந்திகள் புத்தக வெளியீட்டு நிகழ்வின் காணொளிப்பதிவை இக்கடிதத்துடன் உங்களோடும், விஷ்ணுபுரம் தோழமைகளோடும் பகிர்ந்துகொள்வதில் நிறைமகிழ்வு அடைகிறோம். இந்த நிகழ்வின் ஒட்டுமொத்த ஜீவனென்பது பெருந்தாய் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் அருளிருப்பும், உங்களுடைய காந்தியப் பேச்சும் தான். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் செயலாற்றும் நண்பர்கள் இந்நிகழ்வுக்காக வந்திருந்தார்கள். ஒரு செயலுக்கு சுயப்பொறுப்பேற்கையில் காலம் எத்தகைய வாசல்களையெல்லாம் வாய்ப்புகளாக்கித் தருமென்பதை அன்று உங்களுடைய உரைப்பேச்சின் வழியாக உணர்ந்தோம்.

தொடர்வண்டியைத் தவறவிட்டும்கூட அந்தப் பின்னிரவு முழுக்கப் பயணித்துக் கிளம்பிவந்து நீங்கள் நிகழ்வைத் துவக்கிவைத்தது; கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதனின் அவர்களின் வாழ்வுக்கதை ஒளிப்படங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை திறந்துவைத்தது; கருவிலிருக்கையிலே வெண்முரசு கேட்டுவளர்ந்த அருண் – ரேணுகா தம்பதியின் பச்சிளம் சிசுவுக்கு ‘லிகிதன்’ எனப் பெயரிட்டது; உங்கள் கையில் கொடுத்து வாங்குவதற்காகவே தன்னுடைய குழந்தையைக் கொண்டுவந்திருந்த  சுயம்புச்செல்வியின் குழந்தையை நீங்கள் நெஞ்சோடு வாரிக்கொண்டது… என அந்நிகழ்வின் ஒவ்வொரு தருணங்களும் வார்த்தைகளைக் கடந்த உணர்வாழத்தில் சென்றுறைபவை.

இந்த நல்நிகழ்வினை ஒளிப்பதிவு செய்து உதவிட்ட கிருஷ்ணகிரி பாலா – மேகலா, இதைக் காணொளியாக உருமாற்றித் தந்து உதவிட்ட திருச்சி அலெக்ஸ் நண்பர்கள், ஒளிப்படக்கலைஞர் வினோத் பாலுச்சாமி, தொகுப்பாளர் வரதராஜன், வடிவமைப்புக்கலைஞர் தியாகராஜன் மற்றும் உறுதுணையாக நின்ற செயற்தோழமைகள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சின் கரங்குவிந்த நன்றிகள்! இக்கணத்தில்… அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் தினந்தோறும் கைத்தொழுகிற விடியற்காலை அருட்பிரார்த்தனையை எண்ணத்தில் ஏந்துகிறோம். வழிசெல்பவர்களின் திசையில் வெளியென திறக்கிற உங்கள் படைப்புமனதுக்கும், அதைக் கண்ணெனக் காக்கும் உங்கள் குடும்பத்துக்கும், உளச்சோர்வை அளிக்காத சூழியற்கைக்கும் அன்புநிறை நன்றியும் வணங்குதல்களும்…

காணொளிப்பதிவு   – https://youtu.be/4E2GOv3CGEc

மகிழ்வின் நன்றியுடன்,

குக்கூ குழந்தைகள் வெளி 

Thanks & Regards,

Thannaram Noolveli

“செய்யக்கூடியது, செய்யக்கூடாதது மட்டுமல்ல
செய்தே ஆகவேண்டியதையும் சேர்த்ததுதான் தன்னறம்”

முந்தைய கட்டுரைகமல் -ஒரு பழையபாடல்
அடுத்த கட்டுரைஎட்டு நாவல்கள்