
மூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு
அன்புள்ள ஜெ..
மூன்று எழுத்தாளர்கள் − வெண்முரசு என்ற கட்டுரை மனதை வெகுவாக புண்படுத்தியது.
எந்த அரசியல் வலைகளிலும் சிக்காமல் சிங்கம்போல வாழ்ந்து மறைந்த ஞாநியையும் அரசியல்வாதியான மனுஷ்யபுத்திரனையும் எப்படி ஒரே நிலையில் வைத்துப்பேச மனம் வந்தது ?
வெண்முரசு வெளிவந்தால் அதைபயன்படுத்தி பிஜேபி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விடும் என்பது மனுஷ்யபுத்திரனின் தரப்பு. எதையாவதுபேசி தன்னை திமுக அனுதாபியாகக்காட்டிக்கொண்டு திமுக ஊடக வாய்ப்புகளைப்பெறுவது அவர் நோக்கம். அதில் அவர் வெற்றியும் பெற்றுவிட்டார். மற்றபடி அவர் சொன்னது இலக்கியரீதியாக பொருட்படுத்தத்தக்கதன்று. ஒருவேளை பிஜேபி திமுக இருந்திருந்தால் , வெண்முரசு நாவல் இந்துமத நம்பிக்கைகளைகேலி செய்து காங்கிரசுக்கு உதவுகிறது என எழுதியிருப்பார்
ஆனால் ஞாநி இது போன்ற ஊடக பிச்சை எடுப்பதை கனவிலும் விரும்பாமல் நெருப்பென வாழ்ந்தவர். அவர் எழுதியது அன்றைய ஒரு தரப்பின் நேர்மையான ஆவணம்.
பத்தாண்டுகள் ஒரு நாவலுக்காக உழைப்பது என்பது சாதாரணமான பணி அன்று. படைப்பாற்றலின் உச்சத்தில் இருக்கும் ஒருவர் எத்தனை சிறுகதைகள் , நாவல்கள் எழுதலாம் .. ஒரு நாவலுக்காக தனது வாழ்வின் அரிதான பத்தாண்டுகளை செலவிடுவது தற்கொலை முயற்சியல்லவா என உங்கள் மீதான மரியாதையின் அடிப்படையில் ஒரு தரப்பினர் நினைத்தனர்.
ஜெ எழுத்து எனக்குப்பிடிக்கும் என்பதை சொல்லிவிட்டு பத்தாண்டுகள் ஒரு நாவலுக்கு செலவிடுவது சரியல்ல என ஞாநி சொன்னது ஒரு தரப்பு கருத்தாக இருந்தது
அது ஆரம்ப கட்டம் என்பதால் நீங்கள் என்ன எழுத உத்தேசித்திருக்கிறீர்கள் என்பது தெரியாத நிலையில் ஞாநியின் கருத்தின் நியாயம் புரியும்
ஆனால் போகப்போக அது வேறு வகை வடிவம் , வேறு வகை எழுத்து என்பது புரிந்தது. அதன் தேவையும் புரிந்தது. வெண்முரசு நாவல் உங்கள் மற்ற பணிகளை பாதிக்கவில்லை என்பதும் தெரிந்தது. ரஜினி உட்பட பல உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் , பயணங்கள் , சிறுகதைகள் , சந்திப்புகள் என உங்கள் பணிகள் வழக்கத்தைவிட உச்சத்தில் இருந்தன
ஆகவே ஞாநி தெரிவித்த கவலை பொருத்தமில்லாமல் போனது. ஆனால் அன்று அந்த கவலை நியாயமானதுதான்.
இன்று ஞாநி இருந்திருந்தால் இது குறித்து அவருடன் சுவராஸ்யமான உரையாடலை நிகழ்த்தியிருக்கலாம்.அவர் இல்லாத நிலையில் அவரை மனுஷ்யபுத்திரன் அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு எழுதுவது மனதை நோகச்செய்கிறது.
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
***
அன்புள்ள பிச்சைக்காரன்,
நான் மூன்றும் ஒரேவகையான கருத்துக்கள் அல்லது எதிர்மறையான கருத்துக்கள் என்று சொல்லவரவில்லை. இக்கருத்துக்கள் ஏன் முக்கியம் என்றால் அன்பாகவும் எதிர்த்தும் ஐயம்கொண்டும் எல்லா கோணங்களிலும் ஒரு பெருஞ்செயலுக்கு எதிர்ப்பு வரும் என்று பதிவுசெய்யும்பொருட்டு மட்டுமே. பெருஞ்செயல் எதுவாக இருந்தாலும் அவ்வெதிர்நிலைகளைக் கடந்தே இயற்றப்படுகிறது.
ஜெ
***
அன்புள்ள ஜெ.
வெண்முரசில் ஒட்டுமொத்தமாக கவனித்தால் மற்ற மகாபாரதப் படைப்புகளில் இல்லாத அளவு பெரும்பாலான பாத்திரங்கள் ஊன் உணவு உட்கொள்பவர்களாக வருகின்றனர். புராண காலத்திலிருந்து உணவு நுகர்வின் பரிணாமம் ஆராய்ச்சிக்குட்பட்டது என்பது என் கருத்து.இது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.
அன்பன்
ரமேஷ் கிருஷ்ணன்
***
அன்புள்ள ரமேஷ்
தொல்காலத்தில் ஊனுணவு அந்தணருக்கும் உரியதாகவே இருந்தது. யாக்ஞவால்கியர் ஊனுணவு உண்டார் என்பதையே பிருகதாரண்ய உபநிடதம் காட்டுகிறது. ஒரு தொல்குடிப் பண்பாடு ஊனுணவு இன்றி இருக்க இயலாது. ஏனென்றால் அதுவே இயற்கையிலுள்ள இயல்பான புரதச்சத்துணவு. ஊனுணவு இயல்பானது.
சைவ உணவுப்பழக்கம் என்பது ஒரு பண்பாட்டின் முதிர்ச்சிநிலையில், தத்துவத்தில் இருந்து அன்றாடம் நோக்கி வரும் ஒரு கொள்கை மட்டுமே. வான்மீகி ராமாயணத்தில் ராமனே ஊனுணவு உண்டதாகவே இருக்கிறது. ஷத்ரியர் உள்ளிட்டவர்களுக்கு ஊனுணவு ஒரு கட்டாயம். இதிகாசங்கள் பெரும்பாலும் ஷத்ரியர்கள், அடுத்தபடிநிலையிலுள்ள அரசர்களின் கதைகள்
இது ஒன்றும் ‘ஆராய்ந்து’ கண்டுபிடிக்கவேண்டிய கருத்து அல்ல. மிகமிக அடிப்படையான புரிதல்தான். சாதாரணமாக எந்த ஆய்வுநூலை ஆராய்ந்தாலும் கிடைக்கும் செய்திகளே. நீங்கள் புராணக்கதைகளில் இருந்து நவீன வரலாற்று உரைப்புகளுக்குள் வரவில்லை என நினைக்கிறேன்
வெண்முரசு வாசிப்பது இதற்காகவெல்லாம் அல்ல. அது மேலதிகமான வரலாற்றுப்புரிதல்களை, சமூகப்புரிதல்களை முன்வைப்பது. அரிய வாழ்க்கைத்தருணங்களை, தரிசனநிலைகளை பேசுவது
ஜெ
***
நவீன வியாசருக்கு,
பெருமதிப்பிற்குரிய எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் முக்கால்வாசி சிறுகதைகளை வாசித்துள்ளேன். காடு, இரவு போன்ற நாவல்களையும் வாசித்து மகிழ்ந்துள்ளேன். அதில் இரவு என்னை வெகுவாகப் பாதித்த நாவலாகும். இரவிற்கு பெரும் இலக்கணம் வகுத்திருந்தீர்கள். இடையிடையில் தங்களின் விவாதங்கள், கட்டுரைகள், உரைகள் கேட்டும் வந்திருந்தேன். இன்றளவும் (2009 இல் இருந்து) அவை தொடர்ந்த வண்ணம் உள்ளன. மிக அறிமுகமான மனிதராக ஒரு நீண்ட பயணத்தை உங்களுடன் கடந்து வந்திருக்கிறேன். அன்றிலிருந்து இதுவரை நான் பார்த்த ஜெயமோகன் இன்று என்னிடமிருந்து காணாமல் போய்விட்டார்.
நதிக்கரையில், பத்மவியூகம் போன்ற மஹாபாரதச் சிறுகதைகள் எனக்குள் எற்படுத்திக் கொடுத்த ஒருவகை பதற்றத்தை நினைத்து நினைத்து பூரித்த அந்த எழுத்து சித்தர் நினைவை விட்டுப் போய்விட்டார்.
இப்போது நான் காண்பது நவீன வியாசர் மட்டுமே. நவீன வியாசராகவே என் முன்னே பேருருவம் எடுத்து நிற்கிறீர்கள்.
வெண்முரசில் ‘பிரியாகை’ நூல் வடிவில் கிடைத்து வாசித்து முடித்தபோதோ ‘ காண்டீபத்தை’ இணையத்தில் வாசித்து முடித்த போதோ தங்களின் எழுத்து ஆளுமையை , எழுத்தின் அழகியல் வடிவங்களை மட்டுமே வரிக்கு வரி கொண்டாடினேன். நிறைய பத்திகளை நண்பர்களிடன் பகிர்ந்து மகிழ்ந்துள்ளேன்..அதில் காணப்பட்ட நுட்பம், மரபின் மறு ஆக்கம் போன்றவை பெரிதும் என்னை ஆட்படுத்தவில்லை. ஆனால் வெண்முரசை நூல்வரிசைபடி வாசித்து கொண்டிருக்கையில் சொற்களற்று திகைத்து நிற்கிறேன். சில சொற்றொடர்களை வாசித்தப்பின் எனக்குள் எந்த உரையாடலோ சிந்தனையோ எழ மறுக்கின்றன. எனக்குள் பேச ஏதும் இல்லாதது போன்றும் அக்கணத்தில் காண கிடைக்காததை கண்டு விட்டது போலவும் மௌனத்தில் தியானிக்கிறேன். பெரும் தரிசனத்தை பெற்றது போல் உவகை கொள்கிறேன்.
எழுத்தை தியானித்து வாழும் மகா படைப்பாளிக்கும் இப்படி எழுத வருமா? கற்பனை திறன் இவ்விதம் அமையுமா? மிகத் தொன்மையான மரபிலான இதிகாசத்தை மிக யதார்த்தமாக தத்துவார்த்தமாக நவீனத்தில் அருளும் கரங்களை வாழ்த்துகிறேன்.
இப்போதெல்லாம் எனக்கிருப்பது ஒரே கவலை மட்டுமே.. வெண்முரசு நூல் வரிசை அனைத்தையும் வாசித்து முடிக்க ஆயுளை இறைவன் எனக்கு அளிக்க வேண்டும் என்பதே.
நவீன வியாசருக்கும் மீண்டும் என் வணக்ங்கள்.
அன்புடன்
வாணி ஜெயம்.
***
அன்புள்ள வாணி
வாசிப்பிற்குப் பிந்தைய ஓர் உணர்ச்சிநிலையில் அப்படி தோன்றுவதும் அதை எழுதுவதும் இயல்பானதே எனப் புரிந்துகொள்கிறேன். ஆனால் அத்தகைய புகழ்மொழிகள், அடைமொழிகள் உண்மையில் ஓர் ஆசிரியனை அணுகுவதற்கு மிகவும் தடையானவை. எவரைப்பற்றியானாலும் அத்தகைய புகழ்ச்சொற்களை பெயருடன் சேர்த்துக்கொள்ளலாகாது
என்னைப்பொறுத்தவரை வெண்முரசு முற்றாக முடிந்துவிட்டது. அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லை. நான்கு நாவல்களுக்கு முன்னுரைக்குறிப்பு எழுதவேண்டும். ஒரே நாளில் எழுதக்கூடியதுதான். ஆனால் மூன்றுமாதங்களாக எழுதாமல் தவிர்க்கிறேன். எழுதமுடியவில்லை. வெண்முரசை என்னால் என்னுடைய ஆக்கமென உரிமைகொண்டாட முடியவில்லை. முயன்றாலும் வேறெங்கோ இருக்கிறது
நான் அதன் வழியாக ஒரு பயணத்தை மேற்கொண்டேன். இப்பால் வந்துவிட்டேன். இப்போது மெல்லிய சில நினைவுகளன்றி ஏதுமில்லை என்னிடம். அதை எழுதிய பெருமிதம்கூட சிலநாட்களுக்கே. அதை பாராட்டுபவர்கள் முன் எனக்கு ஒருவகையான அகச்செயலின்மையே உருவாகிறது. பெரும்பாலும் சங்கடமான ஒரு புன்னகையுடன் அத்தருணத்தை கடக்கிறேன்.
முற்றாக அதை உதிர்த்தபின் இயல்பாக உணர்கிறேன்
ஜெ
முதற்கனல் வாசிப்பினூடாக
வெண்முரசு – பீஷ்மர் முதல் சிகண்டி வரை- லக்ஷ்மி மணிவண்ணன்
மழைப்பாடல்- சுரேஷ் பிரதீப்
வண்ணக்கடல்- சுரேஷ் பிரதீப்
முதற்கனல் – சுரேஷ் பிரதீப்
வெண்முரசு நிலமும் மானுடரும்
மழைப்பாடலும் மழையும்
அம்பை
திசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம்- அந்தியூர் மணி
மகாபாரத அரசியல் பின்னணி
வெண்முரசு வாசிப்பு- சுசித்ரா
மழைப்பாடல்- மாறுதலின் கதை
‘இமைக்கணத்தில் எழுந்த முழுமையின் துளி’- இரா.அர்விந்த்
முரசும் சொல்லும்- காளிப்பிரசாத்