அன்புடன் ஆசிரியருக்கு
சென்ற வருட விஷ்ணுபுர விழாவின் போது மாலை அறையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது ‘எத்தனை பேர் நாடகங்களை நேரில் பார்த்து இருக்கிறீர்கள்?’ என்று கேட்டீர்கள். நாடகம் பார்த்த ஒரு சிலரில் நானும் ஒருவன். அன்று ஏனோ அப்படி சிலரில் ஒருவனாக இருந்தது ஒரு சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சியை எனக்குக் கொடுத்தது. என் தலைமுறையினர்(தொன்னூறுகளில் பிறந்தவர்கள்) ஒரு சிலரே கோவில் திருவிழாக்களில் நாடகங்கள் பார்த்தவர்களாகவும் அதுபற்றி ஏதும் நினைவுகள் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையில் ஏறத்தாழ நாடகம் பார்த்திருக்கக்கூடியவர்கள் இல்லை.
தொன்னூறுகளில் கிராமங்களில் பிறந்தவர்கள்தான் அனேகமாக திருவிழாக்களுடனும் பண்டிகைகளுடனும் ஓரளவு உணர்வுப்பூர்வமான நெருக்கம் கொண்ட கடைசி தலைமுறையாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் என் பால்யமும் பழமைகளும் புதுமைகளும் கலந்ததாகவே இருந்தது. வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி, கிரிக்கெட், தொலைபேசி, WWE என நாங்களும் ஜனரஞ்சகமான பொழுதுபோக்குகளுக்குள் நுழைந்து கொண்டிருந்தோம். கிரிக்கெட் வீரர்கள் , WWE வீரர்களின் படமும் அவர்களுடைய பிற சாதனைகளும் குறிப்பிடப்பட்டிருக்கும் அட்டைகளை வெறிகொண்டு சேமித்திருக்கிறோம். ஒரு நாளைக்கு ஏழெட்டு மணிநேரங்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் பார்த்திருக்கிறோம். 2003 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தோற்றபோது ஒட்டுமொத்தமாக சோகத்தில் மூழ்கினோம். ரிக்கி பாண்டிங் மட்டையில் ஸ்பிரிங் இருந்தது என்று புரளி பேசினோம். இவ்வாறாக ஒரு தலைமுறையே நேரடியாக எந்தத் தொடர்பும் கொள்ளமுடியாத விவாதிக்க முடியாத இதுபோன்ற ‘பொழுதுபோக்கு வணிக’ வெளியில் இணைக்கப்பட்டுவிட்டது.
சுனில் கிருஷ்ணன் ஒளிர்நிழல் பற்றி எழுதிய கட்டுரையில் சுரேஷ் கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர் எனினும் கோவில்கள் பற்றியோ திருவிழாக்கள் பற்றியோ நாவலில் எந்த சித்தரிப்பும் இல்லை என்று குறிப்பிட்டிருப்பார். இப்போது யோசிக்கும்போது என் தலைமுறையில் பலரும் என்னைப் போலவே கிராமங்களில் இருந்து உணர்வுப்பூர்வமாக வெளியேறிவிட்டனர் என்று தோன்றுகிறது. இணையமும் சமூக ஊடகங்களும் இந்த வெளியேற்றத்தை மேலும் துரிதப்படுத்துகின்றன.
இன்றைய தமிழக கிராமங்களில் நிகழும் ‘புத்துயிர்ப்பு’ வேறு வகையானது. பட்டாதாரி இளைஞர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகிறவர்களால் கிராமங்களுக்கு ஏதோ ஒரு வகையில் செல்வம் வந்து சேர்கிறது. இந்த செல்வத்தைக் கொண்டு கிராமிய பழக்கங்கள் மீட்டெடுக்கப் படுகின்றன. ஆனால் இந்த மீட்டெடுப்பில் ஒரு பதற்றமும் செலவு செய்கிறவர் தன் பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கும் பெருமிதங்களுமே பெரும்பாலும் கண்ணில்படுகின்றன. பல கோவில்களுக்கு சுண்ணாம்பு பூசுகின்றனர். வழக்கத்தில் இல்லாத புதிய சடங்குகள் திருவிழாக்களில் நுழைகின்றன. என் ஊரில் உள்ள ஒரு காளியம்மன் கோவிலில் தீமிதித்தல், பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்வுகள் நான் சிறுவனாக இருக்கும்போது நடைபெறும். இப்போது அவை பின்னுக்குச் சென்று தசரா பண்டிகை போல கடவுள் வேஷங்கட்டி ஆடும் வழக்கம் முதன்மை பெறுகிறது. ஆனால் ஊர்க்காரர்கள் வேஷங்கட்டுகிறவர்களை கடவுள்களாக பார்ப்பதில்லை. வித்தைக்காரர்கள் என்கிற ரீதியிலேயே நடத்துகின்றனர். வேஷங்கட்டுகிறவர்களிடமும் கடவுளரின் பாவங்கள் வெளிப்படுவதில்லை. ஆகவே இந்தச் சடங்கு ஒரு கேளிக்கையாக மட்டுமே கண்களுக்குத் தெரிகின்றது.
திருத்துறைப்பூண்டியில் சில வருடங்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் ‘அறுபடை முருகன் கோவில்’ என்றொரு ஆலயம் கட்டப்பட்டது. அக்கோவிலில் பழனி, திருத்தணி, சுவாமிமலை, திருச்செந்தூர், பழமுதிர்சோலை,திருப்பரங்குன்றம் என ஆறு சன்னிதிகள் உண்டு. வெவ்வேறு தூரங்களில் உள்ள ஆறு கோவில்களுக்கு பதில் ஒரு One stop shop! இதுபோன்ற ‘பல்முனை ஆலயங்கள்’ வாழ்வின் வேகம் இன்னும் அதிகரிக்கும்போது தமிழகத்தில் பெருகக்கூட செய்யலாம். என் ஊர் காளியம்மன் கோவிலில் இருப்பது பணம் வைத்திருக்கும் ஒரு சிலரின் ‘போலச்செய்யும்’ ஆர்வம் என்றால் அறுபடை முருகன் கோவிலில் இருப்பது தெளிவான வணிக நோக்கம். இத்தகைய முயற்சிகள் செயற்கையானதாகவும் பகட்டானதாகவும் மட்டுமே போய் முடியும். ஏனெனில் இதுபோன்ற செயல்களின் முன்னெடுப்பாளர்கள் உணர்வளவில் அந்த வழிபாடுகளில் இருந்து வெளியேறிவிட்டனர்.
2016ஆம் ஆண்டு உங்களுடனான முதல் சந்திப்பின்போது கொல்லிமலையில் இருத்த கொங்குலாயி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தோம். அவர்கள் அந்த வழிபாட்டின் சடங்குத்தன்மையை முறையாகக் கடைபிடிக்கின்றனர். மலைமேல் தனித்திருக்கும் அக்கோவிலில் சடங்குகள் தன்மை மாறாமல் நீடிக்கின்றன. ஆனால் சமவெளிப் பகுதிகளிலும் மிக வேகமாக நகர்மயமாகிவரும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கோவில் திருவிழாக்கள் சார்ந்த கலைகளும் சடங்குகளும் அதன் அர்த்தத்தை இழந்து நலிவடைந்து பின்செல்கின்றன. மீட்டெடுப்பு என்ற பெயரில் நடைபெறுகிறவை ஜோடணைகளாகவே உள்ளன.
இந்தப் பின்னணியில் வைத்தே அ கா பெருமாள் அவர்களின் ‘சடங்கில் கரைந்த கலைகள்’ நூலினை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்டங்களில் வில்லிசை, கணியான் ஆட்டம், களம் எழுத்தும் பாட்டும், கண்ணன் விளையாட்டு என கோவிலைச் சார்ந்து இன்றும் (இன்றும் என்ற சொல்லை சற்று அவநம்பிக்கையுடன்தான் சொல்ல வேண்டி இருக்கிறது) நிகழ்த்தப்படும் கலைகளை இந்நூல் விவரிக்கிறது.
இக்கலைகள் மெல்ல மறைவது குறித்த ஆதங்கமோ இவை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்போ இல்லாமல் இக்கலைகள் நடைபெறும் முறை கலைஞர்களின் செயல்பாடுகள் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் தன்மை என முழுக்க முழுக்க ஆவணத்தன்மையுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ‘தமிழ் பண்பாடு’ அழிவது குறித்த போலியான கண்ணீர் சிந்தல்கள் மட்டுமே பெருகி ஒலிக்கும் ஒரு சூழலில் உண்மையில் அப்பண்பாட்டினை ஆவணப்படுத்துவது மட்டும அதை நிலைத்திருக்கச் செய்வதற்கான வழி என்ற புரிதலை இந்நூல் அளிக்கிறது.
இந்தியா முழுக்க கிரிக்கெட் இவ்வளவு புகழ்பெற்றதற்கு ஆட்டத்தின்போது பின்னணியில் ஒலிக்கம் வர்ணனை முக்கியமான காரணம் என்று சொல்வார்கள். மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியோ பார்த்தோ இராதவர்கள் கூட கிரிக்கெட் ரசிகர்களாக இருப்பதற்கு இந்த ‘தகவலறிவு’ காரணமாக இருக்கிறது. நாட்டுப்புற கலைகள் இன்றைய தலைமுறையினரிடம் எந்த ஆர்வத்தையும் தூண்டாததற்கு அக்கலைகள் குறித்த அறியாமையே முதன்மைக் காரணம். நேரடி அனுபவமாக ஒரு நாடகத்தையோ இசைநிகழ்ச்சியையோ நடனத்தையோ பார்த்திராதவரிடம் இதுபோன்ற நிகழ்த்துக்கலைகளை காணொளியில் பார்க்கும்போது என்ன இழக்கப்படுகிறது என்பதைச் சொல்லி புரியவைக்கவே முடியாது. யுவன் சந்திரசேகரின் புனைவுகளில் நேரடியாக இசை கேட்பதன் அடைதல்கள் நன்றாக வெளிப்பட்டிருக்கும் சொல்லப்பட்டிருக்கும். பரதம் போன்ற புகழ்பெற்ற கலைகளைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளமான நூல்கள் கிடைக்கின்றன. ஆனால் வில்லிசை, கணியான் ஆட்டம் போன்ற நாட்டுப்புறக்கலைகள் அவற்றைப் பற்றிய எந்தவித ஆவணப்படுத்தலும் இல்லாததாலேயே இன்றைய தலைமுறையினர் பார்க்க நினைத்தாலும் எந்தவித தொடர்புறுத்தலும் இன்றி கடந்து செல்கின்றன. இந்த நூல் மிக விரிவாக இக்கலைகளை அறிமுகப்படுத்துகிறது.
உதாரணமாக வில்லிசை அல்லது வில்லுப்பாட்டுக்குறித்து பேசும் முதல் கட்டுரை வில்லிசை நிகழ்த்தப்படும் களம் (அண்ணாவி எனப்படும் புலவர் கோவிலின் முக்கிய தெய்வத்திற்கு எதிராக அமர்ந்திருக்கும்படி அமையும்), நடைபெறும் மாதங்கள், விற்கதிர் செய்யப் பயன்படும் மரம், வில்லின் நாண் செய்யப் பயன்படும் தோல், வில் வைக்கப்பட்டிருக்கும் குடம், குடம் வைக்கப்பட்டிருக்கும் பந்தடை, நாணை அடித்துப்பாடும் வீசுகோல் என ஒவ்வொரு உபகரணமாக அறிமுகம் செய்கிறது. உடன் இந்த உபகரணங்களை தயாரிப்பதற்கான செலவுகளும் விவரிக்கப்படுகின்றன. அதன்பிறகு மேடையில் கலைஞர்கள் அமரும் முறை அவர்கள் பாடும் பாடல்களின் தன்மை அவர்களின் சம்பளம் போன்ற தகவல்கள் இடம்பெறுகின்றன. இக்கலைகளின் தொன்மையையும் கட்டுரை பேசுகிறது. ஏறத்தாழ மற்ற கலைகள் பற்றி கட்டுரைகளின் அமைப்பும் இதுவே.
வில்லிசை மற்றும் கணியான் ஆட்டம் என்ற இரு கலைகளுக்குமான ஒப்பீடு சுவாரஸ்யமானது. வில்லிசை கலைஞர்களுக்கு ஜாதி வேறுபாடு கிடையாது. (ஆனால் இந்த நூலினைக் கொண்டு பார்க்கும்போது பெரும்பாலான வில்லிசைக் கலைஞர்கள் நாடார் சமூகத்தினராகவே உள்ளனர்). ஆனால் கணியான் ஆட்டம் கணியான் சாதியினரால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. வில்லிசையில் மரபான கதைகளுடன் அன்றாட அரசியல் நிகழ்வுகளும் இணைத்துப் பாட்டாக புனையப்படுகின்றன. ஆனால் கணியான் ஆட்டத்தில் மரபான கதைப்பாடல்கள் மட்டுமே இடம்பெறுகின்றன. கணியான் ஆட்டத்தில் பெண் வேடக்காரர்கள் சுடிதார் அணிந்து ஆட அனுமதிக்கப்படுவது மட்டுமே அக்கலையின் நிகழ்ந்த மாற்றமாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.
/அறிஞர் டக்ளஸ் கென்னடி நாட்டுப்புறத் தெய்வக்கூறுகள் தொய்வுறும்போது அவற்றுடன் தொடர்புடைய நடனங்களில் இருக்கும் மறைபொருள் மாயக்கவர்ச்சியற்றதாகிவிடும் என்கிறார் . கணியான் ஆட்டம் நிகழும் நாட்டுப்புறக் கோவில்களின் சடங்குக் கூறுகள் மிக அண்மைக்காலம்வரை தொய்வுறாமலும் மேல்நிலையாக்கத்தை நோக்கிப் பெரிய அளவில் செல்லாமலும் இருந்ததன் காரணமாகக் கணியான் ஆட்டத்தின் வடிவமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை. வளர்ச்சியும் குறைந்த அளவில்தான் நிகழ்ந்துள்ளது./
கணியான் ஆட்டத்தின் மாற்றமின்மையை சுட்டுவதாக இவ்வரிகள் உள்ளன.
களம் எழுத்தும் பாட்டும் சாக்த வழிபாட்டுடன் தொடர்புடைய கலை. மிகக் குறைந்த அளவிலேயே வழக்கத்தில் இருக்கும் இக்கலை மிக விரிவானதும் நுணுக்கமானதுமான நிகழ்த்து முறையைக் கொண்டுள்ளது. அறுபத்துநான்கு, முப்பத்தியிரண்டு, பதினாறு என வெவ்வேறு எண்ணிக்கையிலான கரங்களைக் கொண்ட காளியின் உருவங்கள் வரையப்படுகின்றன. பின்னர் அவ்வுருவம் அழிக்கப்படுகிறது. (அறுபத்துநான்கு கரங்கள் கொண்ட உருவம் வரையும் கலைஞர்கள் அருகிவிட்டனர் என ஆசிரியர் குறிப்பிடுகிறார்.)
உச்சப்பாட்டு, நீரொழிச்சல், களம் எழுத்து, தோடயம், தாருகாவதம், களப்பூஜை, களம் அழித்தல் என்று களம் எழுத்தின் வழிமுறை விளக்கப்படுகிறது.
நூலில் இடம்பெற்றுள்ள பிற கலைகள் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையவையாக இருக்க கண்ணன் விளையாட்டு மட்டும் பாகவத நிகழ்வுகளை மையப்படுத்தி நிகழ்கிறது.கண்ணன் வெண்ணெய் திருடியதை சித்தரிக்கும் உறியடி இக்கலையின் பிரதான நிகழ்வு. இக்கலையின் விவரிப்பில் இடம்பெறும் நாட்டுப்புறத்தன்மை இந்நூலில் இக்கலை இணைக்கப்பட்டதற்கு நியாயம் செய்வதாகவே இருக்கிறது.
பெரும்பாலும் இக்கலைகள் அனைத்தும் நாட்டுப்புற தெய்வங்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. ஆனால் வில்லிசையில் இருந்து உருவான போட்டி வேதகதைப்பாடல் கிறிஸ்துவ சங்கீர்த்தனங்களை இரு குழுவாக பிரிந்து போட்டிபோட்டு பாடுவதாக அமைகிறது. அதுபோல கண்ணன் விளையாட்டினை புகழ்பெற்ற இங்கிலாந்து மருத்துவரும் கிறிஸ்தவ ஊழியருமான தியோடர் ஹாவேர்டு சாமர்வெல் மக்கள் மத்தியில் பரப்பி இருக்கிறார். இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்கள் நூல் முழுவதும் விரவி இருக்கின்றன.
நூலின் நோக்கம் நாட்டுப்புற கலைகள் விரைவாக அழிந்துவரும் சூழலில் கோவில் சடங்குகளில் ஒன்றாக மாறி இருக்கும் கலைகள் எவ்வாறு தங்களை தக்க வைத்துக்கொண்டு நீடிக்கின்றன என்பதைச் சொல்வதாக இருக்கிறது. கிராமங்களின் பொருளாதார நிலையே இக்கலைகளின் நீடிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவ்வகையில் இதுபோன்ற நூற்றாண்டு தொடர்ச்சி கொண்ட கலைகளை நீடிக்கச் செய்வதில் பொதுச் சமூகம் கொள்ள வேண்டிய கவனம் குறித்த ஒரு மறைமுக கோரிக்கையும் இருக்கிறது.
ஆனால் இவ்விஷயத்தைத் தாண்டி எனக்கு இன்னொரு வகையில் இந்நூல் முக்கியமானதெனப் படுகிறது. பேசப்படும் கலைகள் சார்ந்த தகவலறிவை இந்நூல் அளிக்கிறது. எந்த மிகைப்படுத்தலும் இல்லாத நேரடி விவரிப்புகள் நிறைந்த இதுபோன்ற ஒரு நூல் பல வகையிலும் முன்னோடித்தன்மை கொண்டது. தமிழகத்தின் பிற பகுதி ஆய்வாளர்களும் இதுபோன்ற கலைகளை ஆவணப்படுத்தி வாசகர்களிடம் கொண்டு சேர்த்தால் வட்டாரம் சார்ந்த கலைகள் மீது சமூக கவனம் குவியவும் வாய்ப்பிருக்கிறது. நுகர்வை மட்டுமே மையமாகக் கொண்ட பொழுதுபோக்குகள் எப்போதும் கலைக்கு எதிரானவை. கலை ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்டது. கிராமியக் கலைகள் கிராமம் சார்ந்த வாழ்வுமுறையுடன் தொடர்புடையவை. நவீன இலக்கியம், இசை என்றெல்லாம் நாம் பேசுவது அவற்றுக்குப் பின்னிருக்கும் நுகர்வுக்கு எதிரான மனநிலையை முன்னிட்டும்தான். அவ்வகையில் இதுபோன்ற வாழ்வியல் தொடர்புடைய கலைகளைப் பேணுவதும் கூட கலைச்செயல்பாடே. மக்களை அரசியல்படுத்துதல் என்ற சொற்றொடரை அடிக்கடி கேட்க முடிகிறது. இணையாகவே மக்களை கலைப்படுத்துதலும் அவசியம் என நினைக்கிறேன். அத்தகைய கலைப்படுத்துதல் இத்தகைய செயல்பாடுகள் வழியாகவே நிகழ முடியும். கலைப்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் செயல்பாடுகள் மேலும் உணர்வுப்பூர்வமானதாகவும் இருக்கும்.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்