பிள்ளைகெடுத்தாள் விளை -சுந்தர ராமசாமியின் பிற்போக்குப் பார்வையா?
வணக்கம் ஜெமோ!
‘பிள்ளைகெடுத்தாள் விளை’ புரிதல் தொடர்பான கட்டுரையில் பேராசிரியர் பார்னி பேட் குறித்து ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். பார்னி நினைவும், சந்திப்பை ஒத்திப்போட்டுக்கொண்டே போய் அவரது அகால மறைவின்போது நான் அடைந்த உணர்வுகளும் மேலெழுந்தன.
திராவிட அரசியல் கொண்டுவந்த மேடைப்பேச்சு அழகியல் குறித்த அவரது ஆய்வு பரவலாக வாசிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்குண்டு. இவ்விணைப்பில் உள்ள கட்டுரையில் அவரது ஆய்வின் சில கூறுகளைச் சுட்டிக்காட்டியுள்ளேன்.
கட்சியின் பெரிய தலைவர்கள் தமிழரின் பழைய பொற்காலத்தை மீண்டும் கண்முன் கொணர்ந்ததைப் போன்ற மாயையை உருவாக்கச் செந்தமிழில் பேசுவதும், அதே கட்சியின் கீழ்மட்டப் பேச்சாளர்கள் மலிவான பாலியல் பேச்சுக்களை மேடையில் பேசுவதும் என இரண்டும் ஒரே காலத்தில் நிகழ்ந்தது, ஒரே மக்கள் இரண்டையும் ரசித்தது எனப் பல குறிப்பான இடங்களை ஆராய்ந்த ஆய்வு அது.
பெர்னாட் பேட் (பார்னி) -சிவானந்தம் நீலகண்டன்
*
‘காலக்கண்ணாடி’ என்ற அசோகமித்திரன் கட்டுரைத் தொகுப்பு நூலை வாசித்துக்கொடிருந்தேன். கூட்டத்தின் மனநிலை எப்படி கணத்துக்குக்கணம் மாறும் என்பதை சீசர் கொல்லப்பட்ட காட்சியைக் குறிப்பிட்டு ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.
சீசர் கொல்லப்படவேண்டியவனே என்று உக்கிரமாகக் கோஷமிட்ட மக்கள் அந்த ஒலி காற்றில் கரைவதற்குமுன் ஆண்டனியின் உரையில் மனம்மாறி சீசரைக்கொன்ற சதிகாரர்களை வேட்டையாடக் கிளம்பிவிடுகின்றனர். ‘நான் சதிகாரன் சின்னா அல்ல, கவிஞன் சின்னா’ என்று கதறுபவனை ‘அதனாலென்ன, மோசமான கவிதைகளுக்காக இவனைக்கொல்வோம்’ என்று கூட்டம் நியாயம் கற்பித்துக்கொள்கிறது.
கூட்டத்தினின்று விலகி இருப்பது ஒன்றே வன்முறையாளனாக மாறுவதிலிருந்தும் வன்முறைக்கு உட்படுவதிலிருந்தும் காத்துக்கொள்ளும் உபாயம் போலும்.
தனித்திரு!
நன்றி
சிவானந்தம் நீலகண்டன்
சிங்கப்பூர்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
பிள்ளைகெடுத்தாள்விளை பற்றிய நீண்ட கட்டுரை மிகமிக முக்கியமானது. ஒரு கதைபற்றிய சர்ச்சையாக அது தோன்றும். ஒரு சர்ச்சையைப் பற்றிய சர்ச்சையாகவும் தோன்றும். ஆனால் அடிப்படையில் அந்தக்கதை வாசிப்பைப் பற்றிய ஓர் ஆய்வு. சமூகவாசிப்பு, தனிவாசிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான உறவைப்பற்றியது. ஒரு கதையை சமூகம் எப்படி வாசிக்கிறது என்பதை கூர்ந்து பார்க்கமுடிகிறது.
ஆசிரியனின் சாவு என்றெல்லாம் பேசப்பட்ட காலகட்டத்திலேதான் இந்த மாதிரி ஆசிரியனின் சாதியையும் அவனுடைய அடையாளத்தையும் மட்டுமே முன்வைத்து ஒரு வாசிப்பும் தாக்குதலும் நடத்தப்பட்டது என்பதை நாம் கவனிக்கவேண்டும். ஆசிரியனின் சாவைப்பற்றி பேசிய எவரும் அதை எதிர்த்து எதையும் சொல்லவில்லை. வாசிப்பை ஆசிரியன், பிரதி இரண்டிலும் இருந்து விலக்கி வாசகனை நோக்கி கொண்டுவந்த காலகட்டத்தில்தான் வாசிப்பின் விளைவான அர்த்தத்தை ஆசிரியன்மேல் சுமத்தி அவனை வசைபாடி நீதிமன்ற மிரட்டல்வரை சென்றிருக்கிறார்கள். அப்படியென்றால் இந்த கட்டுடைப்பாளர்கள் இங்கே சாதித்தது என்ன? ஆசிரியனின் அரசியலை படைப்பில் தோண்டியெடுக்கும் வழக்கமான முச்சந்தி விமர்சனத்துக்கு சில கலைச்சொற்களை அளித்தார்கள் அவ்வளவுதான்.
பின்நவீனத்துவம் ஒருபக்கம் பேசப்பட இன்னொருபக்கம் இங்கே வாசகர்கள் பழைய ஃப்யூடல் காலத்திலேயே இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த ஒட்டுமொத்த விவாதத்திலும் காண்கிறோம். இப்படி ஒரு விவாதம் நிகழ்ந்தது, அதை இடதுசாரிகள் முன்வைத்தார்கள் என்பது ஒரே வீச்சில் இங்கே பேசப்பட்ட அத்தனை பின்நவீனத்துவச் சிந்தனைகளையும் காலிபண்ணிவிட்டது. நாம் இதை நினைத்து வெட்கப்படவேண்டும்
அருண்குமார் எம்