நண்பரும் பாராளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அவர்களுக்கு கோவிட் தொற்று என அறிந்தேன்.
நான் அவருடனிருக்கும் பொழுதிலெல்லாம் சம்பந்தமில்லாத எளிய மக்கள் எந்தத் தடையுமில்லாமல் வந்து அவரிடம் பேசுவதை கண்டிருக்கிறேன். ஒரு மணிநேரத்தில் ஐந்தாறுபேரை அவர் சந்திப்பதுண்டு. கோரிக்கைகளையோ முறையீடுகளையோ முன்வைக்கையில் மற்ற அரசியல்வாதிகளிடம் அவர்கள் காட்டும் பணிவும் மன்றாட்டுபாவனையும் இருப்பதில்லை. உரிமையும் கொஞ்சம் எல்லைமீறலும்கூட இருக்கும்.
இடதுசாரி அரசியலின் முதன்மை அடையாளம் என்பது அந்த தடையின்மைதான். அதே தடையின்மையை பிணராயி விஜயன் வரை நம்மால் உணரமுடியும். மக்கள் அவர்களை சாமானியர்கள் என்று எண்ணுகிறார்கள், அவர்களும் சாமானியர்களாகவே இருக்கிறார்கள்.
கோவிட் தொற்றுக் காலம் என்பது இந்த தடையின்மையே ஆபத்தாக மாறக்கூடியது. ஆனால் வெங்கடேசன் போன்ற இடதுசாரிகள் அவர்களின் அரசியலின் அடிப்படையை மாற்றிக்கொள்ள முடியாது. அவர்கள் மக்களுடன்தான் இருக்கமுடியும். நேற்று முன்தினம் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது வெங்கடேசன் போன்ற இடதுசாரி அரசியல்வாதிகளின் பாதுகாப்பைப் பற்றிச் சொன்னேன்
நோய்த்தொற்றிலிருந்து சு.வே மீண்டுவரவேண்டும். நோய் முடிந்தபின் வரும் ஓய்வுக்காலமே மேலும் முக்கியமானது என்கிறார்கள். அதை அவர் முழுமையாகவே எடுக்கவேண்டும்.