செய்திநிறுவனங்களின் எதிர்காலம்
அன்புள்ள ஜெ
சமீபத்தில் சில முகநூல் குறிப்புகளை வாசித்தேன். நான் விவாதங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டுவரவில்லை. இவை தமிழில் பேசப்படவேண்டும் என்பதனால் சொல்லியிருக்கிறேன்
எஸ்,ராமகிருஷ்ணன் இதழியலில் நிகழும் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.நோபல் பரிசுகளைப் பற்றிய ஒரு கட்டுரையில் அவருடைய ஒருநூலைப்பற்றிக்கூட ஆங்கில ஹிந்து செய்தி வெளியிட்டதில்லை என்று எழுதியிருந்தார். சாரு நிவேதிதா எழுதும்போது ஹிந்து நிருபர் கோலப்பன் உங்கள் ஊர்க்காரர் என்பதனால் உங்களைப்பற்றிய செய்திகள் வருகின்றன என்று சொன்னார்
காலச்சுவடு கண்ணன் தமிழ் இந்து நாளிதழில் அவர் பதிப்பித்த ஒரு நூல் பற்றி எதிர்மறையான விமர்சனம் வெளிவந்தமைக்காக தமிழ் ஹிந்துவில் பணியாற்றும் ஊழியர்களை நேரடியாக தாக்கினார் என்று சொல்லி அவர்மேல் கடுமையாக தாக்குதல் தொடுக்கப்படுகிறது.
இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன? நம் ஊடகச்சூழலை எப்படி பார்க்கிறீர்கள்?
விவேக்ராஜ்
***
அன்புள்ள விவேக்ராஜ்,
நான் தமிழ் ஹிந்துவை நிறுத்தி நீண்டநாட்களாகின்றது. தினமணிதான். செய்திகளை ஐந்தே நிமிடத்தில் படிக்க அதுபோதும். தமிழ் ஹிந்துவின் அரைவேக்காட்டுக் கட்டுரைகளை காலைக் காபியுடன் படிப்பது அந்நாளையே குலைத்துவிடுவது.என் நண்பர்களிடமும் தமிழ் ஹிந்துவை முற்றாகத் தவிர்க்கவே சொல்வேன். உங்கள் இணைப்புகள் வழியாகவே இந்த விவாதங்களை கவனித்தேன்.
உலகம் முழுக்கவே ஊடகங்கள் ஒரு வகையான அறிவதிகார வட்டமாகவே உள்ளன. அவ்வாறுதான் இருக்கமுடியும். அந்த அதிகாரத்தைத் தீர்மானிப்பவை மூன்று விசைகள். முதன்மையானது ஊடகமுதலாளிகளின் தனிப்பட்ட திட்டங்கள். தமிழ் ஹிந்து திடீரென்று அண்ணா, கருணாநிதி என்று பேச ஆரம்பித்தது அதனால்தான்.
இரண்டாவது விசை, சமூகச்சூழலில் திகழும் அலைகள். ஊடகங்களின் வாசகர்களின் அல்லது பார்வையாளர்களின் அழுத்தம் என அதைச் சொல்லலாம். ஏற்கனவே சமூகத்தில் செல்வாக்குபெற்றிருக்கும் கருத்துக்களும், ஆளுமைகளும் ஊடகங்களை தங்கள் போக்குக்கு இழுத்துச் செல்வார்கள். அக்கருத்துக்களையும் ஆளுமைகளையும் ஊடகங்கள் தவிர்க்கவே முடியாது.
அது ஒரு கொடுக்கல்-வாங்கல். அந்த ஆளுமைகளை ஊடகங்கள்தான் முதலில் வளர்க்கின்றன. அதன்பின் அந்த ஆளுமைகளைச் சார்ந்து தாங்கள் வாழ்கின்றன. ஊடகங்களின் ‘உள்ளடக்கம்’ எப்போதும் ஆளுமைகளாலேயே அளிக்கப்படுகிறது. கருத்துக்களானாலும் கிசுகிசுக்களானாலும்.
தமிழ்ச்சூழலில் ஊடகஆளுமைகள் என்றால் முதன்மையான சினிமா நடிகர்களும் நடிகைகளும் இயக்குநர்களும்தான். அதன்பின் அதிகாரபலம் கொண்ட அரசியல்வாதிகள். அதன்பின் பரபரப்பாக கவனிக்கப்படும் அரசியல்பேச்சாளர்கள். அவ்வப்போது புகழ்பெற்ற குற்றவாளிகள். அவ்வளவுதான், மற்ற எவருமே எக்காலத்திலும் ஊடக ஆளுமைகள் அல்ல.
மூன்றாவது விசை, இருப்பதிலேயே மிகப்பலவீனமானது, ஊடகவியலாளகளின் கருத்துநிலை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், தொடர்புகள் மற்றும் அரசியல் நிலைபாடுகளால் ஆனது. தமிழ்ச்சூழலில் அதற்குமேல் சாதியும் ஊடகவியலாளர்களின் கருத்துநிலையைத் தீர்மானிக்கும் முக்கியமாக அடிப்படை. தமிழ் ஊடகசசூழலில் பிராமணர்கள், முக்குலத்தோர் என இரண்டு சாதிய அதிகார மையங்கள் உண்டு.
மேலே சொன்ன இரு மையவிசைகளுக்கு நடுவே ஒரு சமரசம்போல ஊடகவியலாளர்கள் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட மிகச்சிறிய இடத்தில் அவர்கள் செயல்படவேண்டும். அதிகாரத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.அவர்கள் ஊடகமுதலாளிகளுடன் ஒத்துப்போவதற்கான சலுகையாக எழுதுவதற்கான இடம் அவர்களுக்கு ஊடக முதலாளிகளால் அளிக்கப்படுகிறது.
ஊடகங்களைச் சென்றடைவதில் அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களுக்கு வேறுவழிகள் உள்ளன. பணம் மற்றும் அதிகாரத்தினாலானது அந்த வழி. அதில் இதழாளர்களுக்கு தேர்வே இல்லை. ‘கொடுப்பதை வாங்கிக்கொண்டு சொன்னதை எழுதுடா போடா’ என்பதுதான் அவர்களிடம் ஆளுமைகள் கொள்ளும் உறவு. அதை அருகிருந்து பார்த்திருக்கிறேன்.
ஊடகவியலாளர்களின் அந்த சின்னஞ்சிறிய இடத்திற்குள்தான் மொத்த இலக்கியமும், பண்பாடும் பேசப்படுகிறது. ஏனென்றால் முதலாளிகள் அதை மட்டும் அவர்களுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்கள்.இலக்கிய- பண்பாட்டுச் சூழலில் இதழாளர்களை அதிகாரம் செய்யுமளவுக்கு அதிகாரமும் பணமும் உள்ள ஆளுமைகள் ஓரிருவர் உண்டுதான், ஆனால் பொதுவாக முழுக்கமுழுக்க அது ஊடகவியலாளர்களின் அதிகாரவெளி.அங்கே அவர்கள் தங்களை ஆயுதம் தாங்கியவர்களாக உணர்கிறார்கள்.
அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ அப்படி அல்ல. அங்கே இலக்கியமும் பண்பாடும் பேசப்படும் இடங்கள்கூட பணமும் அதிகாரமும் செயல்படும் களங்கள்தான். பதிப்பாளர்களின் செல்வாக்கும் பணமும்தான் அங்கே ஊடகத்தில் இடத்தை உருவாக்கி அளிக்கின்றன. சென்ற முப்பதாண்டுகளாக இந்திய ஆங்கில ஊடகங்களும் அந்நிலையை நோக்கிச் சென்றுவிட்டன.
தமிழ்ச்சூழலில் ஊடகவியலாளர்களின் சில இயல்புகள் உண்டு. அவர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு இலக்கியம், பண்பாடு எதைப்பற்றியும் ஆரம்பநிலை அறிதல்கூட கிடையாது. ஆர்வமும் கிடையாது. எந்த இலக்கிய, பண்பாட்டு ஆளுமையும் அவர்களின் பார்வையில் கவற்சியானவரோ மதிக்கத்தக்கவரோ அல்ல.
முன்பு ஒரு பேச்சில் “தி.ஜானகிராமன் எழுதிய கதையை வாசிச்சேன், நல்லா இருக்கு”என்று ஒருவர் சொன்னபோது மூத்த ஊடகவியலாளர் “அந்தாள்கிட்ட ஒரு கதை கேட்டுப்பாரு. ஆனா பிடிச்சிருந்தாத்தான் போடுவோம், ஸ்பேஸுக்கு வெட்டுவோம்னும் சொல்லிரு” என்றாராம். “பாஸ் தி.ஜானகிராமன் செத்துப்போய் நாப்பது வருசமாச்சு” என்று இவர் சொன்னபோது “போய்ட்டரா ? சரிதான்”என்று பதில்வந்தது.
ஆகவே தமிழ் ஊடகங்களில் நூல்களைப் பற்றி, இலக்கியம் பற்றி, பண்பாடு பற்றி எதாவது வருமென்றால் அது வெவ்வேறு தற்செயல்களின் விளைவாகவே. இங்கே பொதுமக்கள் எவ்வகையிலும் பண்பாட்டு, இலக்கியச் செய்திகளை கவனிப்பதே இல்லை. ஒவ்வொருநாளும் உங்கள் பெயரும் உங்கள் நூல்களும் இங்குள்ள நாளிதழ்களில் அச்சாகிவந்தால்கூட ஆயிரம்பிரதிகள் நூல்விற்பனை நிகழப்போவதில்லை. ஆகவே அவ்வாறு வரும் செய்திகள் ஊடகவியலாளர்கள் அளிக்கும் கொடை, அல்லது வேறுவழியில்லாத பக்கநிரப்பல்.
இந்தப் பொதுப்போக்குக்கு மாறாக அவ்வப்போது ஓரிரு ஊடகவியலாளர்கள் செயல்படுவது உண்டு. இலக்கியவாசிப்பார்களாகவும் கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் பண்பாட்டியக்கத்தை ஓரளவு அறிந்தவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். தாங்களறிந்தவகையில் இலக்கியத்தை ‘உள்ளே நுழைக்க’ போராடிக்கொண்டே இருப்பார்கள்.
எனக்குத்தெரிந்து பாவை சந்திரன், மணா, கே.என்,சிவராமன், கோலப்பன், நா.கதிர்வேலன், கடற்கரய் போன்று சிலர் உண்டு. அவர்கள் தயவால் அவ்வப்போது சில செய்திகள் இலக்கியவாதிகளைப் பற்றி வெளிவருகின்றன.இதனால் இவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. சொல்லப்போனால் இழப்புதான். தனிப்படட ஆர்வத்தால் இதைச செய்கிறார்கள் அவ்வளவுதான். ஆனால் இவர்களால்தான் நவீன இலக்கியம் பரவலாக அறிமுகமாகியது
இவர்கள் தங்களை வாசகர்களாகவே நிலைநிறுத்திக் கொண்டவர்கள். ஆகவே பொதுவாக இலக்கிய அறிமுகம் செய்யமுயல்பவர்கள். ஆனால் சிற்றிதழ்ச்சூழலில் இருந்து ஊடகங்களுக்குச் சென்றவர்கள் நேர்மாறாக தங்கள் வலுவான காழ்ப்புகளுடன் அங்கே சென்று, ஒருசார்பான செயல்பாடுகள் வழியாகவும், இலக்கியப்பூசல்களை அங்கே அரங்கேற்றியதன் வழியாகவும் இலக்கியத்தை எதிர்மறையாக பொதுவெளியில் முன்வைத்தார்கள்.
சிற்றிதழ்ச்சூழலில் இருந்து ஊடக உலகுக்குச் சென்று உண்மையான பங்களிப்பை அளித்த ஒருவர்கூட, ஒரே ஒருவர்கூட, இதுவரை காணக்கிடைக்கவில்லை. கிசுகிசுக்கள், காழ்ப்புகள், அவதூறுகளை மட்டுமே இலக்கியச் சூழலில் இருந்து அங்கே கொண்டுசென்றனர். ஒரே ஒரு நல்ல விஷயத்தைக்கூட செய்யக்கூடாது என்று உறுதிகொண்டவர்களாகவே செயல்பட்டார்கள். அக்கறை கொண்ட இதழாளர் உருவாக்கிய நல்லெண்ணங்களைக்கூட அழித்து, இலக்கியசெயல்பாடு என்பது ஒருவகையான வம்பு என்று காட்டியது மட்டுமே இவர்களின் கொடை . அந்த மரபு இப்போதும் தொடர்கிறது.
ஏனென்றால், இவர்கள் தங்களை படைப்பாளிகள் என்றும் விமர்சகர்கள் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள்.இவர்கள் விமர்சகர்கள் என்றால் அந்த ஊடகச்சூழலுக்கு வெளியேதான் தங்கள் பெறுமதியை நிறுவவேண்டும். தங்கள் கருத்துக்களின் ஆற்றலால் நிலைகொள்ளவேண்டும்.ஊடகம் அளிக்கும் இடத்தை அதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாகாது. அது ஒரு வரலாற்று வாய்ப்பை வீணடிப்பது.
உண்மையில் இவர்கள் ஊடகம் அளிக்கும் இடம் இல்லையென்றால் எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கவர்கள் அல்ல. மிக ஆரம்பநிலை வாசகர்கள், எந்த நுண்ணுணர்வும் அற்றவர்கள். ஒரு சூழலின் இலக்கியரசனையை அல்லது இலக்கியப்பார்வையை வழிநடத்துவதோ, சூழலுடன் ஓர் உரையாடலை நிகழ்த்துவதோ எளிதல்ல. அதற்கு ஒரு தகுதி வேண்டும், அதை வளர்த்துக்கொள்ளவேண்டும். பதிலாக ஊடகம் அளித்த இடத்தையே தகுதியாக எடுத்துக்கொண்டு பேசும்போது அது சூழலில் ஒவ்வாமையையே உருவாக்கும்.
ஓர் ஊடகவியலாளர் தன்னை ஓர் ஊடக ஊழியன் மட்டுமே என்று எண்ணுவாரென்றால் அவருக்கு ஒரு சமநிலை கைகூடும். உண்மையில் ஊடகங்களில் பணியாற்றிய பேரறிஞர்கள் சிலரை எனக்குத்தெரியும், அவர்கள்கூட தங்களை அவ்வண்ணமே எண்ணிக்கொண்டனர். ஊடகத்தில் பணியாற்றுவதனாலெயே தன்னை அறிஞன் என்றும் இலக்கியவாதி என்றும் ஒருவர் எண்ணிக்கொள்கையிலேயே சிக்கல்கள் தொடங்குகின்றன. அது ஒரு போலிஅதிகாரம், அதை ஒருபோதும் அறிவுச்சூழல் ஏற்றுக்கொள்ளாது.
தமிழ்ச் சூழலில் இலக்கியம், பண்பாடு சார்ந்த களம் பொதுவாக எவராலும் கவனிக்கப்படாத ஒன்று. ஊடகமுதலாளிகளுக்கும் அது அக்கறைக்குரிய விஷயம் அல்ல. புழக்கமில்லாத இடத்தில் புழுதியும் ஒட்டடையும் தேங்குவதுபோல இங்கே ஆணவமும் அற்பத்தனமும் சேர்கின்றன. சிலரை ‘தூக்கிவிடுவது’ சிலரை ‘ஒதுக்குவது; வேறுசிலரை ‘மட்டம்தட்டுவது’ வழியாக இங்கே ஓர் அறிவதிகாரத்தை கட்டி எழுப்பிவிடலாம் என்று இந்த சிற்றிதழாளர்கள் அங்கே சென்றதுமே கற்பனைசெய்துகொள்கிறார்கள்.
ஆனால் அது ஒருபோதும் நிகழாது. அச்செயல்பாடு ஊடக அறத்தை மீறும் பிறழ்வு, அபத்தமான ஆணவமுன்வைப்பு என்று மட்டுமே கொள்ளப்படும். முன்பு ஊடகங்களில் செயல்பட்ட இலக்கியவாசகர்கள் அப்படி எண்ணியதே இல்லை. அவர்களுக்கு தங்கள் இடமென்ன என்று தெரியும். சிற்றிதழாளர்களின் மனச்சிக்கல் இது.
ஊடகங்களில் இலக்கியம்- பண்பாடு பேசப்படுவதற்கு ஓர் எல்லை உண்டு. அதற்குரிய இலக்கணங்களும் அறமும் உண்டு. ஊடகவியலாளர்கள் அதை அறிவார்கள். சிற்றிதழிலிருந்து செல்பவர்களுக்கு அது தெரிவதில்லை. அரசியல்நோக்கு கொண்டவர்கள் அதை விருப்பப்படி மீறுகிறார்கள். அதுதான் உண்மையான பிரச்சினை.
ஒரு பொது ஊடகம் முதன்மையாக இலக்கியம் மற்றும் பண்பாட்டுச் சூழலை அறிமுகம்தான் செய்கிறது.அது உருவாக்கும் விவாதங்கள்கூட அறிமுகம் செய்யும்பொருட்டே. இந்த நோக்கம் பற்றிய தெளிவு ஊடகவியலாளர்களுக்கு இருந்தால் அவர்களுக்கு அதன் இலக்கணமும் அறமும் தானாகவே புரியும்.
ஒரு பொதுஊடகம் இலக்கியம் மற்றும் பண்பாட்டுச் சூழலை அறிமுகம் செய்யும்போது சூழலில் ஏற்கனவே என்ன இருக்கிறதோ அதைத்தான் அறிமுகம் செய்யவேண்டும். அதன் எல்லா தரப்புகளையும் முன்வைக்கவேண்டும். அதில் அந்த பொது ஊடகத்துக்குச் சார்புநிலை இருக்கக் கூடாது. அந்த ஊடக ஊழியர்களின் சார்புநிலையும் அதில் வெளிப்படக் கூடாது. வெளிப்பட்டால் அது ஓரம்சார்ந்த பார்வைதான்
அந்த ஊடகம் தனக்கான ஒரு பொதுவான தரநிலையை வகுத்துக்கொள்ளலாம். பொதுவான ஓர் அளவுகோலை வெளிப்படையாகவே கடைப்பிடிக்கலாம். அது வாசகர்முன் பொதுவில் வைக்கப்பட்டுள்ளது, காலப்போக்கில் நிறுவப்படுகிறது. அந்த நிறுவன ஊழியர்கள் அந்த பொதுவான தரநிலைக்குக் கட்டுப்பட்டவர்கள் மட்டுமே.
உதாரணமாக, மலையாள இதழான மாத்ருபூமிக்கு ஒரு தரநிலை உண்டு. அந்த நூல்களை, ஆசிரியர்களை மட்டுமே அவர்கள் கருத்தில்கொள்வார்கள். எஞ்சிய பேருலகம் ஒன்று உண்டு, அது அவர்களுக்குரியது அல்ல. அதற்கான இதழ்கள் சூழலில் வேறு உண்டு. இதுவே உலகம் முழுக்க இதழியலின் நெறி
அந்த இதழில் எந்த எழுத்தாளரை அட்டையில் போடுவது, எவரை சிறுசெய்தியில் அடக்குவது என்பதை மாத்ருபூமி முடிவுசெய்யாது. அதை இலக்கியச் சூழலில் விமர்சகர்களும் வாசகர்களும் முடிவுசெய்திருப்பார்கள். அதையே மாத்ருபூமி கடைப்பிடிக்கும். மாத்ருபூமி அதை தன் அதிகாரம் மூலம் நிறுவ முயலாது.
அந்த தரநிலைக்கு கீழிருக்கும் நூல்களை ‘இறங்கி அடிப்பது’ எல்லாம் எந்த பொதுஊடகமும் செய்வதில்லை.முழுமையான எதிர்மறை விமர்சனம் என்பது பொது ஊடகங்களில் வழக்கமில்லை.ஒரு விமர்சனத்தில் சில குறைபாடுகள் சுட்டப்படலாம். அக்குறைபாடுகளுடனேயே அந்நூல் பொதுவெளியில் முன்வைக்கப்படவேண்டிய நூல் என அந்த ஊடகம் கருதுகிறது என்றுதான் அதற்குப்பொருள்
முற்றான எதிர்விமர்சனம் முன்வைக்கப்படலாமா? வைக்கப்படலாம். ஏற்கனவே தன்னை விமர்சகராக, பண்பாட்டுச் செயல்பாட்டாளராக நிறுவிக்கொண்ட ஓர் ஆளுமை தன்பெயரில் அதை முன்வைக்க பொதுஊடகம் இடம்கொடுக்கலாம். அது அவருடைய கருத்து. அவருக்கு நிகரான தகுதிகொண்ட, அத்தகுதியை ஏற்கனவே சூழலில் நிறுவிவிட்ட, இன்னொருவர் அதை மறுத்தால் அதற்கும் இடம்கொடுக்கவேண்டும்.
நூல்மதிப்புரைகளில் முழுநிராகரிப்பை எந்த பொறுப்பான ஊடகமும் செய்வதில்லை. ஏனென்றால் அதுசார்ந்து ஒரு விவாதம் நிகழ அந்த ஊடகம் இடமளிப்பதில்லை. அந்நிலையில் அது ஒரு தீர்ப்பாக ஆகிவிடுகிறது.
அத்துடன் அந்த ஊடகத்தின் ஊழியர்களே அந்த நிராகரிப்பை எழுதுவார்கள் என்றால் அந்த ஊடகத்தின் குரலாகவே அந்த நிராகரிப்பு மாறிவிடுகிறது. ஒரு பெருநிறுவனம் ஒரு தனி எழுத்தாளனை நிராகரிப்பதாக தோற்றமளிக்கிறது. எந்நிலையிலும் ஒரு நிறுவனத்தின் ஊழியர் அந்நிறுவனத்தின் குரலாகவே ஒலிக்கிறார். அவருடைய எல்லை அது.
இதுவே விவாதங்களுக்கும் விதி. . விவாதத்திற்குரிய ஒரு கருத்தை அந்நிறுவன ஊழியர் முன்வைத்தால் அதை அந்நிறுவனமே முன்வைக்கிறது என்றுதான் பொருள். ஏற்கனவே சூழலில் தன் கருத்துக்களால் அறியப்பட்ட ஓர் ஆளுமை அவற்றை முன்வைக்கையில் மட்டுமே அது அவர் குரலாக ஆகிறது. அவர் அதற்குப் பொறுப்பேற்கிறார். அது மறுக்கப்படவும் இடமளிக்கப்படவேண்டும்.
அனைத்துக்கும் மேலாக ஒன்று உண்டு, ஓர் இலக்கியப்- பண்பாட்டு சூழலில் உள்ள சமநிலைகள் முக்கியமானவை. அவை இயல்பான கருத்துமோதலால் உருவாகி வருபவை. இங்கே ஒவ்வொரு தரப்பும் தன்னை முன்வைத்து பிறதரப்பை மறுக்கிறது. வாசகர்களிடம் அந்த ஏற்பும் மறுப்பும் செல்வாக்கு செலுத்துகிறது. எவருடைய இடம் எங்கிருக்கிறது என்பது அவ்வாறு வரையறை செய்யப்படுகிறது.
அந்த வரையறையை தன் செல்வாக்கால் மாற்றியமைக்கலாம் என பொது ஊடகம் எண்ணக்கூடாது. அந்த சமநிலையை பொது ஊடகம் அப்படியே தான் முன்னிறுத்தவேண்டும். அந்த ஊடகவியலாளருக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அவர் தனக்கான ஊடகத்தில், அல்லது தன் தரப்பினருக்கான ஊடகத்தில் அதை முன்வைக்கலாம். பொது ஊடகத்தை அதற்காக பயன்படுத்தலாகாது, அது அறிவார்ந்த ஊழல்.
ஒருவரின் இடம் என்பது வாசக ஏற்பால், விமர்சனங்களால் உருவாகி வருவது. எந்த ஊடகமும் அதை மெய்யாகவே மாற்றிவிடமுடியாது. ஒரு தற்காலிக கவன ஈர்ப்பையே அளிக்கமுடியும். ஊடகங்களால் தகுதிக்கு மீறிய இடம் அளிக்கப்படுபவர்கள் இலக்கிய வாசகர்களிடம் எரிச்சலை மூட்டி மேலும் நிராகரிப்பையே ஈட்டிக்கொள்வார்கள்.
இங்கே காலச்சுவடு கண்ணன் சொல்வது என்ன? அந்த ஊடகநிறுவன ஊழியர் காலச்சுவடு பிரசுரித்த நூலை மொத்தமாக நிராகரிக்கிறார். பதிப்பாசிரியராக கண்ணன் அந்த விமர்சகரிடம் “நீ யார் அதைச் சொல்ல? உன் தகுதி என்ன”என்கிறார். அந்த விவாதம் நிறுவன ஊழியரால் எழுதப்பட்டது என்பதனால் அது அந்நிறுவனத்தின் நிலைபாடு என எடுத்துக்கொள்கிறார். இயல்பான கேள்விகளும் ஐயமும்தானே?
விமர்சனம் செய்யும் தகுதியை தன் வாசிப்பு வழியாக, எழுத்து வழியாக, வாசக ஏற்பு வழியாக ஈட்டிக்கொண்ட ஒருவரிடம் அக்கேள்வி எழாது. அது ஒரு விமர்சனத் தரப்பு என்று கொள்ளப்படும். எற்கனவே போகன் அதை எழுதியிருக்கிறார். அதைச் சொல்லும் தகுதி போகனுக்கு உண்டு. அதை அவர் எழுதி ஈட்டியிருக்கிறார். ஊடகம் அளிக்கும் இடத்தை மட்டுமே தகுதியாகக்கொண்ட ஒருவரிடம் அக்கேள்விதானே எழும்?
விமர்சனத்தை முன்வைப்பவர் அதை தன் நிறுவனம் அளிக்கும் இடத்தில் எழுதலாகாது. தனக்கான இணையப்பக்கத்தில் எழுதலாம். சிற்றிதழ்களில் எழுதலாம். அங்கே அவருடைய கருத்தின் தகுதியாக் அது கவனிக்கப்படலாம், விவாதிக்கப்படலாம். அதுவே இயல்பான செயல்பாடு.
தமிழ் ஹிந்து நாளிதழின் இலக்கியப்பக்கங்கள் இதழியல்சார்ந்த நடுநிலைமையுடன் இல்லை. ஏனென்றால் அங்கே அவர்கள் சிற்றிதழாளர்களை தெரிவுசெய்திருக்கிறார்கள். அவர்கள் அங்கே சென்று அந்த பல்லிமுட்டை உலகுக்குள் ஓர் அதிகாரத்தை உருவாக்கிக்கொள்ள முயல்கிறார்கள். தங்களால் இலக்கியவாதிகளை தூக்கவும் ஒழிக்கவும் முடியும் என்னும் மாயையில் உழல்கிறார்கள்.
‘நீ இலக்கியவாதி அல்ல இதழாளன் மட்டுமே அந்த எல்லைக்குள் நில்’ என்று சூழல் வெவ்வேறு குரல்களால் அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அவர்களின் அறியாமையின் ஆணவம் அதை கேட்க மறுக்கிறது.
அவர்கள் எவரை தொடர்ந்து முன்னிறுத்துகிறார்கள், எவரை முற்றாகப் புறக்கணிக்கிறார்கள் என்று பாருங்கள். தொடர்ச்சியாக அவர்கள் தமிழிலக்கியத்தில் செயல்படும் பெருவாரியானவர்களை நிராகரித்து ஒரு சிறுவட்டத்தையே முன்வைத்து வருகிறார்கள். அவர்களால் முன்னிறுத்தப்படுபவர்கள் வாசக சூழலால் ஏற்கப்படுகிறார்களா, அவர்கள் புறக்கணிப்பவர்கள் மறைகிறார்களா என்று பார்த்தால் அவர்களுக்கும் கொஞ்சம் அறிவுத்தெளிவு வரலாம்.
இனி கடைசியாக, சாரு சொன்னது பற்றி. கோலப்பன் என் நண்பர். ஆனால் இந்து நாளிதழில் என்னைப்பற்றியோ என் புத்தகங்கள் பற்றியோ ஒரு சொல்லாவது வந்திருக்கிறதா? வெண்முரசு எழுதப்பட்டது பற்றி ஒருவரி அதில் வந்திருக்கிறதா? சரி, கமல்ஹாசன் அதைப்பற்றிச் சொல்லி ஒரு விவாதம் வந்துள்ளதே அதுவாவது செய்தியாக ஆகுமா? குங்குமம் இதழ் தவிர எந்த ஊடகத்திலாவது வெண்முரசு பற்றி ஏதாவது செய்தி வந்ததா? நூறுகதைகள் எழுதியதைப்பற்றி எந்த ஊடகமாவது பொருட்படுத்தியதா?
கோலப்பன் அவருக்கு ஏதாவது செய்திக்கட்டுரை எழுத தகவல்கள் தேவை என்றால் அழைப்பார். நான் பேசுவேன், அவர் அவ்வப்போது அந்த செய்திக்கட்டுரைகளில் என்னை ஒரு வரி குறிப்பிட்டு எழுதுவார், அவ்வளவுதான். அவர் என்னைப்பற்றியெல்லாம் ஏதும் எழுதமுடியாது. அங்கே அதைக் கிழித்துவீசிவிட ஆளிருக்கிறது.
ஆங்கில ஹிந்துவின் அரசியலில் சாதி,மதம்,இடதுசாரித்தனம் ஆகிய மூன்றும் விசித்திரமாக கலந்துள்ளன. அத்துடன் அங்கே அதிகார ஊடுருவலும் உண்டு. அங்கே காலச்சுவடு நூல்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டுமே இடம்.
இந்த ஊடகஅரசியலை நான் பொருட்படுத்துவதுமில்லை. நான் என் ஊடகத்தை நானே உருவாக்கி வந்த எழுத்தாளன். எந்த அச்சு ஊடகமும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்களுக்குத்தான் நன தேவை, அவர்கள் எனக்கு தேவை இல்லை.
இந்த அச்சு ஊடகங்கள் தமிழில் ஒட்டுமொத்தமாக உருவாக்கும் செல்வாக்கு என்பது மிகமிகக் குறைவு. அதிலும் இணையம் வந்தபின் அவர்கள் எங்கோ பாதாளத்திலிருந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். பரப்பு அல்ல, குறைந்த அளவிலாயினும் தீவிரமே இலக்கியத்தில் பொருட்படுத்தத் தக்கது. அதை எண்பதுகளில் எழுதவந்த நாளில் இருந்தே நான் அறிந்திருக்கிறேன். என் தீவிரத்தாலேயே என் வாசகர்களை அடைந்திருக்கிறேன்.ஆகவே இதையெல்லாம் ஒரு பண்பாடடாய்வாளனின் ஆர்வத்துடன் மட்டுமே கவனிக்கிறேன்.
ஜெ
தமிழ் ஹிந்து –சிறுமையைக் கடத்தல்
தமிழ் ஹிந்துவுக்கு ஒரு விண்ணப்பம்
பசவர், தமிழ் ஹிந்து – உளறல்களின் பெருக்கு
ஞானக்கூத்தன் – தமிழ் ஹிந்து- கடிதம்
தமிழ் ஹிந்து- பாராட்டுக்களும் கண்டனமும்
தமிழ் ஹிந்து செய்தி – கடிதங்கள்
தமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம்
தமிழ் ஹிந்து- இரு எதிர்வினைகள்
ஹிந்து தமிழ்- நாயும் நாணும் பிழைப்பு
வாஞ்சி,தி ஹிந்து, டி .ஆர்.வெங்கட்ராமன்
தி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்
பெண்வெறுப்பும் அம்பையும்- ஹிந்துவுக்கு எழுதப்பட்ட கடிதம்