வெறுப்பெனும் தடை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நான் உங்களை மிகத்தாமதமாக வாசிக்க வந்தவன். இணையம் வழியாக வாசிக்க ஆரம்பித்தபோது உங்களைப் பற்றி மிக எதிர்மறையான ஒரு சித்திரம் கிடைத்தது. எட்டு ஆண்டுகள் உங்களை கேள்விப்பட்டும்கூட வாசிக்கவில்லை. தற்செயலாக பவா செல்லத்துரை சொன்ன ஒரு கதையை வாசித்தேன். நெடுந்தூரம் என்னும் கதை. அதிலிருந்த வாழ்க்கைச் சித்திரமும், அதன் தீவிரமும் என்னை கொந்தளிக்கவைத்தன. கடந்த இரண்டு மாதமாக வெறிகொண்டு வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒருநாளில் கிட்டத்தட்ட பத்துமணிநேரம் உங்களைத்தான் வாசிக்கிறேன்.

உங்களை வாசிப்பது கொஞ்சம் கடினம். கவனமாக வாசிக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் ஒருசிறிய அந்தரங்க வாழ்க்கையை எழுதுபவர் அல்ல.இந்தியப்பண்பாடு, தமிழ்ப்பண்பாடு, ஃபோக், கிளாஸிக் எல்லாவற்றிலும் குறிப்புகளுடன் எழுதுகிறீர்கள். சரித்திரம் தத்துவம் எல்லாவற்றையும் இணைத்துக்கொண்டு விரிந்துகொண்டே செல்லும் எழுத்து. உண்மையில் தமிழில் நூறாண்டு இலக்கியவரலாற்றில் இத்தனை பிரம்மாண்டமான இன்னொரு இலக்கிய உலகம் இல்லை. இதை இன்றைக்கு ஆணித்தரமாகவே சொல்வேன். எத்தனை விஷயங்களுடன் இணைந்து ஒரு பிரம்மாண்டமான சித்திரத்தை முன்வைக்கிறீர்கள் என்ற வியப்பு அணையவே இல்லை

இப்படிப்பட்ட ஓர் உலகத்தை வாசிக்க வாசகனை உள்ளே இழுத்து, அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கற்பிக்கவேண்டும். ஆனால் நேர் மாறாக அவனை வாசலிலேயே அடைத்துவிடுகிறார்கள். திசைதிருப்பி விட்டுவிடுகிறார்கள். அவனே தேடிவந்தால்தான் உண்டு. தன்னுடைய சொந்த தேடலால் வந்தாகவேண்டும். இப்படி வழிமுடக்குபவர்களில் இன்று பிறபெயர்களில் எழுதும் இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் என்னை தவறான திசைதிருப்புதலுக்கு உள்ளாக்கியவர்கள் எல்லாருமே அவர்கல்தான். அவர்கள் எவருமே உங்களை வாசிக்கவுமில்லை.

இது ஒரு மிகப்பெரிய தடை. இந்தத்தடை முன்பும் இருந்திருக்கலாம். முற்போக்கு முகாம், திரவிட முகாம் எல்லாம் உங்களை கண்டிப்பவர்கள்தான். ஆனால் இன்று சமூகவலைத்தளச் சூழல் மிகப்பெரிய ஒரு வம்புமடமாக ஆகிவிட்டது. அது பெரிய வம்புகள் மூலமாகவே எல்லாவற்றைப்பற்றியும் மனத்தடையை உருவாக்கிவிடுகிறது. நான் அதன்பிறகுதான் பார்க்கிறேன். சரி, ஜெமோ பற்றி இப்படி பேசுகிறார்கள். எஸ்.ரா பற்றி என்ன சொல்கிறார்கள்? ஆச்சரியமென்னவென்றால் அவரைப்பற்றியும் வசையும் ஏளனமும்தான் கண்ணுக்குப் படுகிறது. ஒன்று எழுத்தாளர்களைப் பற்றி பேச்சே இல்லை. இருந்தால் அவர்களை எவரும் வாசிக்கவிடாமல் செய்யும் வம்புகள்.

இன்றைக்கு உங்கள் தளம் இருக்கிறது.சலிக்காமல் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். ஆகவே எவ்வளவு எதிர்த்தாலும் நீங்கள் கொஞ்சபேரை ஈர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். எதிர்காலத்தில் உங்கள் மாணவர்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இதைச்செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் உங்கள் எழுத்துலகம் ஒரு பெரிய பல்கலைக்கழகம்போல

டி.எல்.ராஜ்குமார்

அன்புள்ள ஜெமோவிற்கு,

வணக்கம். நான் உங்கள் எழுத்துகளை ஒருவருடமாக வாசித்து வருகிறேன். உங்கள் வலைப்பக்கத்தையும் தொடர்ந்து வாசிக்கிறேன். நான் ஜெயமோகன் என்று சொன்னாலே எதிர்மறையான கருத்தைத்தான் சக வாசகர்கள் முன் வைக்கிறார்கள். சரி ஜெமோ யார்? என்ற கேள்வியைக் கேட்டால் அவர் இந்துத்துவா என்றும் மேலும் சில வசைகளையும் தான் பதிலாக தருகிறார்கள். ஜொமோவின் எழுத்துகளை வாசித்திருகிறீர்களா? என்றால் படிப்பதற்கு அவரிடம் என்ன இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

அதன் பிறகு இவர்களிடம் உரையாடலைக் குறைத்துக் கொண்டேன். ஜெமோவை வாசித்தால் சங்கி என்று சொல்லுகிறார்களே இந்த முகநூல் போராளிகள் என்று ஒரு பதிவை முகநூலில் பதிவு செய்தேன். அதைப் பார்த்த எழுத்தாளர் புலியூர் முருகேசன் என்பவர் என்னை ப்ளாக் செய்தார். பிறகு தான் புரிந்தது இலக்கிய உலகம் தனக்கான அரசியல் உள்ளவர்களை மட்டும் ஏற்கும், மற்றவரை கடிந்து தள்ளும் என்று. இது பற்றி இனி கவலைப்பட போவதில்லை ஜெமோவை வாசிக்கதான் போகிறேன் என்று நான் முடிவெடுத்துவிட்டேன்.

என் தந்தையும் சமீபமாக ‘இந்திய பயணம், குகைகளின் வழியே, அருகர்களின் பாதை’ இவையெல்லாம் வாசிக்க தொடங்யிருக்கிறார். என் தந்தை திக ஆதரவாளர். அவர் குறிப்பிடுகிறார் ஜெமோவின் எழுத்துகள் வரலாற்றை புரிய வைக்கிறது, படிப்பதில் என்ன தவறு. இறுதியாக ஒன்று சொல்கிறேன், படைப்பாளனை அவனது படைப்பினை சரியாக வாசித்து விமர்சித்தால் மட்டுமே ஏற்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் தர வார்த்தைகள் பயன்படுத்தி பேசுபவர்களை காணாது போக வேண்டும்.

நன்றி.

தமிழ் சுப்பிரமணியம்,

அருப்புக்கோட்டை

முந்தைய கட்டுரைகமல், மகாபாரதம்,மரபு
அடுத்த கட்டுரைஅமுதமும் தீவண்டியும்- கடிதங்கள்