வெண்முரசு,கமல் ஹாசன்-1
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
Big Boss-ல் வந்த கமலின் , வெண்முரசு பற்றிய அறிமுக உரையை திரும்ப திரும்பக் கேட்கிறேன். அவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள், அவருக்கெ உரியவை. உதாரணமாக ‘மறு உரைப்பு’. நாம் மறுஆக்கம் என்று சொல்லுவோம். திரௌபதியின் துகிலுரிப்பை பற்றி சொல்லும்பொழுது, மந்திரத்தை நீக்கிவிட்டு, அரசியலைக் கலந்து எனும் இடத்தில், ‘நூற்பு’ என்ற சொல்லை உபயோகம் செய்கிறார்.
பெரிய பெரிய புத்தகமாக இருக்கும் என்று சொல்லும்பொழுது, பம்மல் கே சம்மந்தம் / வசூல் ராஜா MBBS, வந்துபோகிறார். எந்த ஒரு சாதாரண மனிதனுக்கும் புரிந்துவிடும் ஒரு முன்னுரை. அவர் சொன்னதிலிருந்து எதையும் எடுக்க முடியாது. என்ன விட்டுப்போயிற்று என்றும் சொல்லமுடியாது.
மிக்க மகிழ்ச்சி!
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்
அன்புள்ள சௌந்தர ராஜன்
ஆம், கமல் ஹாசனின் சுருக்கமான அறிமுகம் சிறப்பாக இருந்தது. அந்த மேடை பொதுமக்களுக்குரியது. இன்று தமிழிலுள்ள பொது ஊடகங்கள் அனைத்துமே முழுமையாகவே வெண்முரசை புறக்கணிக்கும் நிலையில் கமல் ஹாசனின் அந்த அறிமுகம் மிகமிக அவசியமானது. என்றும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தொடக்கம் முதலே அவர் துணையாக இருந்து வருகிறார்.
அவருடைய நண்பர் என்றமுறையில் அறிவார்ந்த செயல்பாடுகள் மீது அவருக்கிருக்கும் தொடர்ச்சியான ஈடுபாட்டை நான் அறிவேன். எனக்கு முந்தைய தலைமுறையிலும் அதற்கு முந்தைய தலைமுறையிலுமுள்ள பல எழுத்தாளர்கள் அவருடைய உதவிகளை ஆதரவை பெற்றவர்கள்தான். தன்னை அவர் முதன்மையாக ஒரு நடிகராகவே நிலைநிறுத்திக்கொள்கிறார். ஒரு நடிகர் என்றவகையில் இலக்கியம் இசை இரண்டிலும் ஆர்வத்துடன் இருக்கிறார். ஒரு பிரபலமுகம் என்றவகையில் தன் வழியாக தமிழின் சிறந்தவை அறிமுகமாகவேண்டும் என நினைக்கிறார். ஓரு கலைஞன் செய்யக்கூடுவது இதைத்தான்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்
பிக்பாஸ் நிகழ்வில் கமல் உங்கள் வெண்முரசு நூலை அறிமுகம் செய்து பேசினார். நான் அறம் வாசித்திருந்தாலும்கூட உங்கள் வெண்முரசு நாவலைப்பற்றி அறிந்திருக்கவில்லை. எட்டு ஆண்டுகளாக நீங்கள் எழுதியிருந்தாலும் அதைப்பற்றிய எந்தச் செய்தியையும் எங்கும் நான் காணவில்லை.
கமல் அவர்கள் சொன்ன பிறகு இணையத்தில் தேடியபோதுதான் இந்த மாபெரும் முயற்சியின் ஆழமும் தீவிரமும் புரிந்தது. ஆனால் இணையத்திலேயே கூட நல்ல அறிமுகங்கள் மிகக்குறைவு. பெரும்பாலும் எழுத்தாளர்கள் மௌனமாகக் கடந்துசென்றிருக்கிறார்கள். அல்லது ஓரிருவரி இடக்குகளைச் சொல்லியிருக்கிறார்கள். காழ்ப்புகளும் கசப்புகளும் மட்டுமே கண்ணில்படுகின்றன.
ஊடகங்கள் எதையுமே சொல்லவில்லை. உங்கள் இணையதளத்தில் மட்டுமே செய்திகள் உள்ளன. இந்நிலையில் கமல் அவர்களின் இந்த அறிமுகம் மிகமுக்கியமானது. ஒரு பொறுப்புள்ள கலைஞனாகவும் ஒரு பொது அறிவுஜீவியாகவும் தன் பணியை அவர் செய்திருக்கிறார்.
மிகத்தெளிவாகவே அதை தான் முன்வைப்பதற்கான காரணத்தைச் சொல்கிறார். அது ஒரு பெரிய கலைப்படைப்பு என்பதனாலும் சமகாலத்துப் பார்வையுடன் மரபை அணுகுகிறது என்பதனாலும்தான் அதை முன்வைப்பதாகச் சொல்கிறார். மதநூல் பக்திநூல் என்பதனால் அல்ல என தெளிவுபடுத்துகிறார். சுருக்கமான அழகான அறிமுகம்.
அவர் சொல்லாவிட்டால் நான் வெண்முரசை வந்தடைந்திருக்கவே மாட்டேன். இன்னும் வாசிக்கவில்லை. நூல்களை வாங்கியிருக்கிறேன். விரிவாக எழுதுகிறேன்.
ஜே.குணசேகர்
அன்புள்ள குணசேகர்
நன்றி. வெண்முரசு தொடங்கியபோது ஒரு வாசக அலை உள்ளே வந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அதை முடித்துவிட்டனர். இன்று அடுத்த அலை வாசகர்கள் முதற்கனலில் இருந்து தொடங்கவேண்டியிருக்கிறது. ஏற்கனவே அறிவுச்சூழலில் இல்லாதவர்கள் அதைநோக்கி வரவேண்டியிருக்கிறது. அதற்கு இந்த அறிமுகம் பெரிதும் உதவும்.
ஏற்கனவே கமல்- இளையராஜா இருவரும் அளித்த அறிமுகம் வழியாக ஒரு வாசகர்திரள் உள்ளே வந்தது. அவர்களின் ஆதரவுக்கு என்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். நம் சூழலில் அறிவியக்கம் ஒன்றை மட்டுமே கருத்தில்கொண்டு, தனிப்பட்ட காழ்ப்புகள் அரசியல்நோக்கின் திரிபுகளுக்கு அப்பாற்பட்டு, தன்முனைப்பில்லாமல், நூல்களை முன்வைக்கும் பணி என்பது மிகமிக முக்கியமானது. அதை இன்று திரைக்கலைஞர்களே செய்கிறார்கள்.
ஜெ