சுந்தர ராமசாமி மார்க்ஸியரா?

அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

சுந்தர ராமசாமி 

அன்புள்ள ஜெ,

சுந்தர ராமசாமி பற்றிய உங்கள் குறிப்பை வாசித்தேன். சு.ரா ஓர் இடதுசாரி என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். சு.ரா நினைவின் நதியில் நூலில்கூட அவர் இடதுசாரியாகவே வாழ்ந்தவர், அவர் உடல்மேல் கம்யூனிஸ்டுக் கொடி மட்டுமே போர்த்தப்பட்டது, அதுவே அவருக்கு கௌரவம் என்று எழுதியிருந்தீர்கள். சுந்தர ராமசாமி அவ்வாறு தன்னை வெளிப்படுத்தினாரா? அவர் அப்படி தன்னை வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டதுண்டா?

மாறாக ஒரு புளியமரத்தின் கதை நாவலின் முதல்பதிப்புக்கான முன்னுரையில் இடதுசாரிகளுடன் தான் வேறுபடும் புள்ளிகளைப் பற்றித்தான் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்..

உங்கள் கருத்து உங்கள் மனப்பதிவு மட்டுமே என்றுதான் நினைக்கிறேன்

எம்.ராஜசேகர்

அன்புள்ள ராஜசேகர்,

சுந்தர ராமசாமியின் இடதுசாரி காலகட்டம் எப்படி இருந்தது, எதனால் அவர் ஈர்ப்படைந்தார் என்பதை அறிய அவர் ஜீவாவைப் பற்றி எழுதிய ஜீவா- காற்றில் கலந்த பேரோசை என்ற கட்டுரையை வாசிக்கவேண்டும். பின்னாளில் அவர் எழுதிய நினைவோடைக் குறிப்புகள் அனைத்துக்கும் அதுவே ஆதாரமானது.

சுந்தர ராமசாமி இளமையிலேயே கம்யூனிஸ்டுக் கட்சியாலும், மார்க்ஸியக் கொள்கையாலும் ஈர்க்கப்படுவதற்கு வழிவகுத்தவர்கள் ஜீவாவும், ஜீவாவின் மாணவர்கள் என்று கருதத் தக்கவர்களாக அன்று நாகர்கோயிலில் இருந்த சி.பி.இளங்கோ போன்ற கம்யூனிஸ்டுச் செயல்பாட்டாளர்களும். பாலதண்டாயுதம், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் தலைவர்களாகவும் வ.ஜெயபாஸ்கரன், ஜி.நாகராஜன், பா.விசாலம்- ராஜூ தம்பதியினர்,எம்.எம்.அலி போன்றவர்கள் தோழர்களாகவும் அவர்மேல் செல்வாக்கு செலுத்தியிருக்கிறார்கள்.

கேரளத்து இடதுசாரிகளில் எம்.என்கோவிந்தன் நாயர்,கௌமுதி பாலகிருஷ்ணன், கே.தாமோதரன், தோப்பில் பாஸி ஆகியோர் கொள்கையளவிலும் , மார்தாண்டம் சோமன்நாயர் [பன பாடுமோ என்ற கதையின் ஆசிரியர், அன்று கேரள இளம் இடதுசாரிகளிடையே பெரும்செல்வாக்கை செலுத்திய கதை அது. பின்னர் அவர் தொடர்ந்து எழுதவில்லை] கணியாபுரம் ராமச்சந்திரன் போன்றவர்கள் நண்பர்களாக நேரடியாகவும் அவரிடம் செல்வாக்கு செலுத்தினார்கள்.

சுந்தர ராமசாமியின் ஆளுமையின் உருவாக்கம் இடதுசாரிகளிடமிருந்தே. அவர் எழுதத்தொடங்கியதும் அறியப்பட்டதும் சாந்தி,சரஸ்வதி போன்ற இடதுசாரி இதழ்களில்தான். அவரும் ஜெயகாந்தனும் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் இரு இளம் நட்சத்திரங்களாக அன்று அறியப்பட்டார்கள்

1964ல் கம்யூனிஸ்டுக் கட்சியின் உடைவு சுந்தர ராமசாமி போன்றவர்களை பாதித்தது. அவர் வழிபட்ட ஆளுமைகள் இரு கட்சிகளாகி மாறிமாறி ஒருவரை ஒருவர் எதிர்த்தனர். அது அன்று இலட்சியவாதத்தால் கொதித்துக்கொண்டிருந்த அவரைப்போன்ற இளைஞர்களை எப்படியெல்லாம் துயரடையச் செய்திருக்கும் என்று எவரும் ஊகிக்கலாம்.

உதாரணமாக சுந்தர ராமசாமியின் ஆதர்சமான ஜீவா இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியில் நீடிக்க, சுந்தர ராமசாமி வழிபட்ட பிற தலைவர்கள் சிலர் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்து ஜீவாவை பலவாறாகப் பழிப்பதை அவர் காணநேர்ந்தது. பின்னாளில் ஜீவா பற்றி உணர்ச்சிகரமான நினைவுக்குறிப்புகளை எழுதியபோதுகூட சுந்தர ராமசாமி அந்த கசப்புகளைப் பதிவுசெய்யவில்லை. அதை கடந்துசெல்லவே விரும்பினார்.

அத்துடன் அப்போது வெளியாகத் தொடங்கிய ஸ்டாலின் காலகட்டத்து கொடுமைகள் அவரைப்போன்றவர்களில் ஆழமான நம்பிக்கையிழப்பை உருவாக்கின. ஸ்டீபன் ஸ்பெண்டர், லூயி ஃபிஷர்,ஆர்தர் கோஸ்லர் ஆகியோரால் வெளிப்படுத்தப்பட்ட ருஷ்யாவின் மானுடஅழிவுகள், கருத்துநிலை ஒடுக்குமுறைகள் அவரை கட்சியிலிருந்து விலகச் செய்தன. அந்த விலகலையே அவர் ஒரு புளியமரத்தின் கதை நாவலின் முகவுரையில் சொல்லியிருக்கிறார்.

நீங்கள் ஒன்று கவனிக்கலாம். இந்திய முற்போக்கு எழுத்தாளர்களின் கூட்டமைப்பு 1936ல் கல்கத்தாவில் உருவானது. 40களுக்குள் வெவ்வேறு மொழிகளில் அதன் வெவ்வேறு வடிவங்கள் உருவாகிவிட்டன. அன்று அந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் பலர் அதில் உறுப்பினராக இருந்தனர்.

ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன்,ஜி.நாகராஜன், தகழி சிவசங்கரப்பிள்ளை, பி.கேசவதேவ், வைக்கம் முகமது பஷீர், பொன்குந்நம் வர்க்கி, எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.வி.விஜயன், ராஜேந்திரசிங் பேடி, இஸ்மத் சுக்தாய், கிஷன் சந்தர், யஷ்பால்,பிரேம்சந்த்,அமிர்தா பிரீதம், பிமல் மித்ரா,அதீன் பந்த்யோபாத்யாய அனைவருமே தொடக்கத்தில் முற்போக்கு எழுத்தாளர்களாக, முற்போக்கு கலையிலக்கிய அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களாகச் செயல்பட்டவர்கள்தான்

இரு கம்யூனிஸ்டுக் கட்சிகள் பிரிந்ததும், சோவியத் ருஷ்யாவின் மானுடஅழிவுகள் வெளிப்பட்டமையும் பெரும்பாலான எழுத்தாளர்களை கட்சிசார் அமைப்புக்களில் இருந்து வெளியேறச் செய்தன. 1970களுக்குப்பின் இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் தங்களுக்கான தனி அமைப்புக்களை உருவாக்கிக்கொண்டு அவற்றில் எழுத்தாளர்களை இணைக்கத் தொடங்கின.

இந்த இரண்டாம் அலை முற்போக்கு எழுத்தாளர் சங்கங்களில் கட்சிக்கு விசுவாசமாக இருப்பது முதல் தகுதியாக கொள்ளப்பட்டது. அந்த அமைப்புக்களை கட்சியால் அனுப்பப்பட்ட ஊழியர் ஒருவர் வழிநடத்தினார். அதை மூத்த முதன்மைப் படைப்பாளிகள் ஏற்க மறுத்தது இயல்பே.அவர்களில் பெரும்பாலானவர்கள் அதில் உறுப்பினர்களாக இணையவில்லை. நாம் இன்று முற்போக்கு முகாம் என்று பார்ப்பது இந்த இரண்டாவது கட்ட அமைப்புக்களையே

மேலே சொன்ன அத்தனை முதற்காலகட்டத்து முற்போக்குப் படைப்பாளிகளும் அடிப்படையில் இடதுசாரிகளாகவே நீடித்தனர். இடதுசாரிகளின் அரசியல்செயல்திட்டங்களில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொண்டனர். அதேசமயம் மார்க்சிய இலட்சியவாதமும் மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையும் அவர்களில் என்றும் திகழ்ந்தன.

அவர்களில் பலர் இடதுசாரி அமைப்புக்களை பலவற்றுக்காக விமர்சனம் செய்திருக்கிறார்கள். இடதுசாரிகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர்கள் உண்டு. சிலர் இடதுசாரிகளால் அவதூறும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எவரும் மார்க்ஸிய இலட்சியவாதத்தை, மார்க்சிய தத்துவத்தை நிராகரிக்கவில்லை. எவரும் இன்னொரு கொள்கையாளர்களின் மேடையில் ஒருமுறைகூட தோன்றவில்லை.

14-9-2017 அன்று கேரளத்தில் கொல்லம் நகரில் கேரள மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் இதழான தேசாபிமானியின் எழுபத்தைந்தாவது ஆண்டுவிழாவில் சிறப்பு அழைப்பாளராக நான் கலந்துகொண்டு விருதுகள் வழங்கிப் பேசினேன்.அன்று என்னிடம் பேசும்படி கோரப்பட்டது இந்திய முற்போக்கு எழுத்தின் பொதுவரைபடம் பற்றி.

நான் அன்று ஒன்று சொன்னேன். இந்திய முற்போக்கு எழுத்து என ஒரு சிறுவட்டம் இன்று போடப்படுகிறது, இரண்டாம் காலகட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கங்களுடன் சேர்ந்து செயல்பட்டவர்களை மட்டுமே கருத்தில் கொள்கிறது. ஆனால் இந்திய முற்போக்கு இலக்கியம் எனும்போது கொள்கையளவில் மார்க்சியத்தை ஏற்றுச் செயல்பட்ட அனைவரையுமே உள்ளடக்கித்தான் பேசவேண்டும். அவ்வகையில் யஷ்பால் அல்லது பிமல்மித்ரா அல்லது சுந்தர ராமசாமி இல்லாமல் அந்த தொகுதி முழுமையடையாது.

முற்போக்கு எழுத்தாளர்களை இப்படி இரண்டு காலகட்டங்களாக பிரித்து, ஒரு பொதுவட்டத்தை உருவாக்கிக்கொள்ளாமல் ஒரு இந்தியச் சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளமுடியாது. அந்த உரையில் அப்படி ஒரு விரிந்த பொதுவரைவை உருவாக்கி முன்வைத்தேன்.

சுந்தர ராமசாமியின் கட்டுரைகள், பார்வைகளினூடாகச் செல்பவர்கள் அது தெளிவான செவ்வியல் மார்க்ஸிய உலகப்பார்வை என உணரலாம். அவர் ஒவ்வொன்றையும் புறவயமான மார்க்சியநோக்கில் இணைக்கவே முயல்கிறார். ஒரு புளியமரத்தின் கதை மட்டுமே அவருடைய வரலாற்றுநோக்கை வெளிப்படுத்தும் ஆக்கம். அது வெளிப்படையாகவே மார்க்சியத்தின் வரலாற்று முரணியக்கப் பொருள்முதல்வாத அணுகுமுறையை கொண்டது. அடித்தள மக்கள் அதிகாரம்நோக்கி எழுவதை முன்வைப்பது, அதை வரலாற்றின் வெற்றி என கொண்டாடுவது, கூடவே அதிலுள்ள தோல்விகளையும் துயருடன் பதிவுசெய்வது.

சுந்தர ராமசாமிக்கு இந்தியக் கம்யூனிஸ்டுகள் பற்றிய விமர்சனங்களும் உளக்குறைகளும் நிறையவே இருந்தன. அவருடைய தலைமுறையின் மற்ற மார்க்ஸியர்களைப் போல அவர் அவற்றைப் பொதுவெளியில் முன்வைக்கவில்லை. சொல்லப்போனால் அவர் தன் நாவால் இந்திய இடதுசாரிகளை ஒருமுறைகூட விமர்சிக்கவில்லை. மார்க்ஸியர்களின் இலக்கிய அழகியல்நோக்கைப் பற்றிய மாற்றுப்பார்வையை முன்வைக்கையில்கூட மிகமிக மென்மையான சொற்களையே முன்வைத்திருக்கிறார். இத்தனைக்கும் அவரை இடதுசாரிகள் கடித்துக் குதறிக்கொண்டிருந்த காலம் அது.

சுந்தர ராமசாமிக்கு மார்க்ஸியம் மீதான விமர்சனமாக இருந்தது அதிலிருந்த மெய்யியல் தனிமனித அகத்தை கருத்தில்கொள்ளவில்லை என்பது மட்டுமே. அதுவும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து உருவான ஓர் அலைக்கழிப்பு. அவருடைய மூத்தமகள் சௌந்தரா இளவயதில் ஒரு விபத்திற்கு ஆளானார்.பலவகையான உடற்சிக்கல்கள் வழியாக வாழ்ந்த அவர் பின்னர் நீண்ட நோயில் இருந்து உடல்நலிந்து மறைந்தார். சுந்தர ராமசாமியின் வாழ்க்கைப்பார்வையில் அந்த துயர் மிக அழுத்தமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது. அவருடைய துயரை இன்று மிக அணுக்கமாக உணர்கிறேன்.அன்று அதை என்னால் உணரக்கூடவில்லை.

அறுபதுகளில் மார்க்சியம் பற்றிய தன் விமர்சனத்தைச் சொல்லும்போது சுந்தர ராமசாமி ‘என் குழந்தை இறந்ததென்றால் என்னிடம் சொல்ல மார்க்சுக்கு ஒரு சொல்கூட இல்லை’ என்றார். அது ஒரு இலக்கியச் சொல்லாட்சி. அதை வரட்டு மார்க்சியர்களின் தர்க்கம் புரிந்துகொள்ள முடியாது. மார்க்ஸை நிராகரிக்கிறார் என்று கூவினார்கள். தனிமனிதனின் அகத்தவிப்புக்கு மார்க்சியம் பதில்சொல்லவில்லை, மனிதனை அது தொகுப்படையாளமாகவே காண்கிறது என்பதே அந்த வரியின் பொருள்.

மனிதன் உணரும் சில அகநிலைகள் உண்டு. வாழ்க்கையின் பொருளின்மை, மாற்றிலாத தனிமை, உறவுகளிலுள்ள நுண்சிக்கல்கள் என அவை பலவகையானவை, ஆழமானவை. வாழ்வின் இறுதியில் சுந்தர ராமசாமி சொன்னார்,  ‘மேலே சொன்ன மூன்றும்கூட பெரியவிஷயம் அல்ல மனிதன் தனக்குத்தானே உணரும் ஆணவமும் அடங்கா விழைவும்தான் உண்மையான தத்துவப்பிரச்சினை’.

அவர் மார்க்சியத்துக்கு வெளியே அவற்றுக்கான பதில்கள் என்ன என்று தேடிச்சென்றார். அவ்வாறுதான் ஜே.கிருஷ்ணமூர்த்தியை பயின்றார். காஃப்கா போன்ற நவீனத்துவர்களில் ஈடுபாடு கொண்டார். மார்க்சிய எழுத்தாளராக இருந்த அவர் நவீனத்துவ படைப்பாளியாக உருமாறினார்.

அவருடைய பிற்காலக் கதைகள் பெரும்பாலும் இந்த அகச்சிக்கல்களைப் பேசுபவை. ஆகவே தனிமனித அகம்நோக்கி திரும்பியவை. தண்ணீர்,பிரசாதம்,வாழ்வும் வசந்தமும் போன்ற கதைகளில் இருந்து அழைப்பு, வாசனை, ரத்னாபாயின் ஆங்கிலம் போன்ற கதைகளை நோக்கிய நகர்வு இதுவே.

மார்க்ஸியர்கள் அவரை தனிமனிதவாதம் பேசுகிறார் என்று விமர்சனம் செய்தனர். அது இயல்பானதே, செவ்வியல் மார்க்சியம் சுந்தர ராமசாமியின் அந்த திசைமாற்றத்தை அப்படித்தான் எதிர்கொள்ள முடியும். ஆனால் சுந்தர ராமசாமி தனிமனித அகம்நோக்கிச் சென்றாரே ஒழிய ஒருபோதும் மதம் போன்ற வேறுவகை அமைப்புக்களை நாடவில்லை. பல மார்க்சியர்கள் அந்த திசைநோக்கியே பின்னாளில் சென்றிருக்கிறார்கள்.

விரைவிலேயே சுந்தர ராமசாமி ஜே.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்தும் விலகினார். ஜே.கிருஷ்ணமூர்த்தி அழகான சொற்களால் ஒரு மாயவலையைத்தான் உருவாக்குகிறார், உங்கள் துயரங்களை திசைதிருப்புவதையே அவர் கற்பிக்கிறார் என்று அவர் கருதலானார்.  ‘உங்கள் துக்கங்களுக்கு அவர் சொற்களை தருவார். அச்சொற்களை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது’ என்றார்.

அவருடைய தேடல் அவரை எங்கே கொண்டுசென்றது, அவர் என்ன அடைந்தார் என்பதெல்லாம் அவர் எழுதிய புனைகதைகளைக் கொண்டு வகுக்கப்படவேண்டியவை. அவருடைய புனைவுலகை குறித்து ஒரு முழுநூல் எழுதவேண்டும் என்னும் எண்ணம் எனக்கு உண்டு.

பெரும்பாலான நவீனத்துவர்களைப்போல அவர் எங்கும் சென்றடையவில்லை என்பதே உண்மை. அந்த தேடலை, தத்தளிப்பை, ஆழ்ந்த வினாக்களை அவர் பதிவுசெய்திருக்கிறார். காஃப்கா போல, காம்யூ போல, சார்த்ர் போல.அதனால்தான் அவர் தமிழுக்கு முக்கியமான இலக்கியக் கலைஞராக ஆகிறார்.

சுந்தர ராமசாமி தன் தேடலினூடாக அவரிடமிருந்த மார்க்சிய உலகியல்தத்துவ நோக்குக்குள் தனிமனிதனின் அகத்தேடலை, அவன் கண்டடையும் தனிப்பட்ட பிரபஞ்சப்புரிதலை பொருத்திக்கொள்ள முடியுமா என்று பார்த்தார் என பொதுவாகச் சொல்லலாம். அந்த முரண்பாட்டில்தான் அவர் உழன்றுகொண்டிருந்தார்.

அவர் தானுணர்ந்த மார்க்சியத்தின் போதாமைகள் வழியாக நகர்ந்துசென்று அடைந்தது என்று பார்த்தால்கூட எம்.என்.ராயின் ராடிக்கல் ஹ்யூமனிசத்தைத்தான். அவர் இறுதியாக நேரடியாக நடத்திய காலச்சுவடு இதழில் அவர் முன்வைத்த ஆளுமைகள் எம்.என்.ராய், எம்.கோவிந்தன் போன்ற ராடிக்கல் ஹ்யூமனிஸ்டுகள் அல்லது கே.தாமோதரன், டி.டி.கோசாம்பி, ரொமீலா தாப்பர் போன்ற மார்க்சியர்கள்தான்.

நான் சுந்தர ராமசாமியின் எல்லையாக காண்பதும் அவர் உண்மையான மார்க்சியர் என்பதைத்தான். அதை அவருடைய சிறப்பாக, அறுதி வெற்றியாக கருதவில்லை. அவருடைய தலைமுறையின் மார்க்சியர்கள் மெய்யாகவே மார்க்சிய உலகப்பார்வையை உள்ளூர ஏற்று, அதன்படியே தன்னை உருவாக்கிக் கொண்டவர்கள்.ஆகவே உறுதியான ஆளுமை கொண்டவர்கள். வளைந்துநெளிந்து செல்லும் நுண்மையான ஊடுபாதைகளில் நுழையமுடியாத கல்லுடல் கொண்டவர்கள்.

மார்க்சியம் அடிப்படையில் உலகியல்தன்மைகொண்டது, புறவயத்தர்க்கத்தன்மை கொண்டது.உலகியலுக்கு அப்பாலுள்ள, புறவயத்தர்க்கத்திற்கு சிக்காத சிலவற்றாலும் ஆனது இந்த மாபெரும் வாழ்க்கைவலை. அவற்றை குறியீட்டுச்செயல்பாடுகள் வழியாக, நுண்ணுணர்தல்கள் வழியாக, ஆழ்ந்துசெல்லுதலினூடாக மட்டுமே சென்றடைய முடியும்.தன்னை உதறிவிட்டுச் சென்றடையவேண்டிய தளம் அது. தன்னைச் சூழ்ந்துள்ள புறவய உலகுடன் தன்னை உறுதியாகப் பிணைத்துக்கொள்ளுதல், தன்னை தெளிவாக வரையறுத்துக்கொள்ளுதல் அதற்கு பெரிய தடை.

இப்படிச் சொல்கிறேனே, ஒருவன் ஓர் உண்மையை கனவு வழியாகவே அறிய முடியும் என்றால் அவனுடைய தர்க்கமனம் அவனுக்கு பெரிய சுமையாக ஆகிவிடும். அவன் அக்கனவை அறிய முயன்று அதை தர்க்கப்படுத்திக்கொண்டான் என்றால் அவனுக்கு அவன் எண்ணிய கனவையே ஆழுள்ளம் காட்டும், தன் ஆழத்தை முழுமையாகவே அது மறைத்துக்கொண்டுவிடும்.

சுந்தர ராமசாமி அவருடைய சொந்தவாழ்வின் அழுத்தங்களால்கூட அவருடைய எல்லையை கடக்கமுடியவில்லை. ஏனென்றால் அவர் அந்தக்கால ‘உண்மையான’ மார்க்ஸியர். இக்கால மார்க்சியர்கள் தங்களை எளிதாக இரண்டாகப் பகுத்துக்கொள்வார்கள். மார்க்சியம் புறம் என்றும் மதமும் சாதியும் அகம் என்றும் இருக்க அவர்களால் இயலும். விளைவாக அவர்கள் அகச்சிக்கல்களுக்கு மதத்தின் விடைகளை பிறர் அறியாமல் ஏற்றுக்கொள்வார்கள். அவர்களில் சிலரால் மதம்கடந்து அகம்நோக்கிச் செல்லவும் முடியும்.

சுந்தர ராமசாமியின் தலைமுறையின் மார்க்ஸியர்கள் மிகப்பெரும்பாலானவர்கள் முழுமையான புறவயநோக்கு என்னும் எல்லையில் அறுதியாக முட்டி நின்றவர்கள். சிலர் காலப்போக்கில் இறுகி இறுகி வரண்டவர்கள் ஆனார்கள். சிலர் சிதறி நிலையழிந்தார்கள். கலைஞனுக்கு சிதறலும் நிலையழிதலுமே இயல்பானது.

ஜெ

முந்தைய கட்டுரைஓர் அமெரிக்கக் குழந்தை
அடுத்த கட்டுரைசு.வெங்கடேசன்