அ.கா.பெருமாள் ‘வயக்காட்டு இசக்கி’

வயக்காட்டு இசக்கி

வயக்காட்டு இசக்கி

அன்புநிறை ஜெ,

அ.கா.பெருமாள் எழுதிய ஆறு நூல்களை 2016 புத்தக விழாவில் வாங்கியிருந்தேன். ‘சடங்கில் கரைந்த கலைகள்’, ‘தென்குமரியின் சரித்திரம்’ ஆகிய நூல்களை வாசித்துமிருந்தேன். ஆனால் சென்ற ஏப்ரல் மாதம் இந்தியா திரும்பிவிடும் எண்ணமிருந்ததால், சென்ற வருடப் பயணத்தில் அனேக புத்தகங்களை பெங்களூரில் வீட்டில் கொண்டுபோய் வைத்துவிட்டிருந்தேன்.

தளத்தில் இவரது சந்திப்பு குறித்த அறிவிப்பு வந்ததும் பெங்களூரில் இருக்கும் எனது தோழியை ஒவ்வொரு புத்தகமாக பக்கங்களைப்  புகைப்படம் எடுக்கச் சொல்லி வாசித்து முடித்தேன். முதலில் அ.கா.பெருமாள் போன்ற ஒரு ஆய்வாளர் குறித்து விரிவாக எழுதி அறிமுகம் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். ஒவ்வொரு நூலும் அதன் கட்டுரைகள் ஒவ்வொன்றுக்கும் அவர் மேற்கொண்டிருக்கும் கள ஆய்வும் அவ்வளவு உழைப்பைக் கோருவன. அத்தனை அரிய தகவல்கள், நுண் அவதானிப்புகள்.

இந்தக் கடிதத்தை அவரது வயல்காட்டு இசக்கி நூலில் இடம்பெற்றுள்ள வயல்காட்டு இசக்கி என்னும் ஒரு கட்டுரையைக் குறித்தே எழுதுகிறேன்.

அருமநல்லூர் என்னும் மலையடிவார ஊரை அடுத்த குக்கிராமத்தில் இருக்கும் ராப்பாடி ஒருவரைத் தேடிச் செல்வதிலிருந்து தொடங்கும் இக்கட்டுரை நாஞ்சில் நாட்டு ராப்பாடிகளின் பின்புலம், சாதியமைப்பில் இருக்கும் நுண்ணிய அடுக்குமுறைகள், அவர்கள் பாட்டில் இடம்பெறும் பாடுபொருட்கள் எனப்பேசி, இறுதியாக ஒரு சிறுகதையின் உச்சத்தோடு (வயக்காட்டு இசக்கியின் கதை) நிறைவு பெறுகிறது (ஆருணியாகிய உத்தாலகர் நினைவு வருகிறது)

இக்கட்டுரையில் ராப்பாடிகள் ஊரில் நுழையும் போது நாய்கள் குரைக்காமலிருக்க மேற்கொள்ளும் உத்தி, அவர்களுக்கு அளிக்கப்படும் காணிக்கை, பெண்கள்  ராப்பாடிகளை விழிநோக்கக்கூடாது என்ற நம்பிக்கையும் அதற்கும்

மண்ணாப்பேடி, புலைப்பேடி குறித்த கல்வெட்டு ஆதாரம் சொல்லும் செய்திக்கான  தொடர்பு, மழை பெய்வதற்கும் பொய்ப்பதற்குமான இயற்கை அறிகுறிகள், அவர் குறிப்பிடும் பல வகை நெல்கள், அவற்றைத் தாக்கும் நோய்கள் மற்றும் இயற்கை மருந்துகள் தொடர்பான அரிய தகவல்கள் என மிக மிக சுவாரசியமான கட்டுரை. அதை மிகச் சுவையானதாக ஆக்கும் நடை.

அன்னத்துப் பூச்சியால் பாதிக்கும் செம்பநோய் வந்தால் பன்றியின் மலத்தை நீரில் கலக்கித் தெளிக்கலாம் என்ற குறிப்போடு, வீட்டுக் கொட்டிலில் தனியே அடைத்து வளர்க்காத ஊர்சுற்றிப் பன்றியின் உரம் சாலச்சிறந்தது என்ற வரி புன்னகைக்க வைத்தது.

ஆளுர் வீரணி என்னும் ஊரிலிருந்து மகளுடன் இருசக்கர வாகனத்தில் ஊர்திரும்பும் பயணத்தின் நிலச்சித்தரிப்பு – அந்தப் பிரம்மாண்டமான நீர் ததும்பும் குளம் ஒருபுறமும் பச்சைப்பசேலென்ற வயல் ஒருபுறமும், இடைஇடையே தெரியும் தாமரை மலர்கள், அரும்புகள், இலைகளின் மேல் தாவிய கொக்கு, நாரைகள் என இசக்கி கதைக்கான களத்தை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்.

நெல்வகைகளிலும் உயர்சாதி, ஒடுக்கப்பட்ட சாதிகள் இருந்தன என்று சொல்லி உயர்வசதி படைத்தவர்கள் தங்களுக்குரிய நெல் குறித்த தகவல்களையும் வித்துகளையும் தங்களைப் போன்ற ஒரு சில வசதி படைத்தவர்களிடம் மட்டுமே வைத்துக்கொண்டதையும் குறிப்பிடுகிறார். எந்த ஒரு உணர்ச்சிக் கலப்பும் இல்லாதது போல ஆய்வுக் கட்டுரையின் தீர்க்கத்தோடு மட்டுமே எழுதப்படும் இவரது கட்டுரைகளில் இக்கட்டுரையின் இறுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நெல்நிறைந்து அறுவடைக்கு காத்திருந்த முதலாளியின் வயலை ஏரி உடைப்பிலிருந்து காக்கும் பொருட்டு உயிரைவிட்ட  கர்ப்பிணி அவள் கொடிவழியினருக்கு வயக்காட்டு இசக்கி ஆகும் கதையை சொல்லிவிட்டு இப்படி முடிக்கிறார்:

“இப்படியாக வயல்வெளியைக் காப்பாற்ற உயிரைவிட்டுத் தெய்வமானவர்கள் வேறு இடங்களிலும் உள்ளனர். அபூர்வமான நெல்வகைகளைப் பயிரிட்டுப் பரிமாறிக் கொண்டவர்கள் மட்டும் மனிதர்களாகவே செத்துப் போனார்கள்”.

நாட்டாரியல் அறிஞர் ஒரு தேர்ந்த கதைசொல்லியின் குரலாக  வெளிப்படும் கட்டுரைகளில் ஒன்று இது.

மிக்க அன்புடன்,

சுபா

முந்தைய கட்டுரைகுறங்கு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாவேரியின் முகப்பில்-3