விளைநிலத்தில் வாழ்வது
வணக்கம் ஜெயமோகன்.
உங்கள் காடுசூழ் வாழ்வு, விளைநிலத்தில் வாழ்வது கட்டுரைகள் எங்களின் கடந்த பத்து ஆண்டுகால பண்ணை வாழ்வை அதன் எளிய ஆனால் அரிய இன்பங்களை அசைபோட வைத்தது.
பெங்களூர் பெருநகரத்திலிருந்து பெயர்ந்து, ஒரு நாளைக்கு ஒரு பேருந்து மட்டுமே செல்லும் இந்த கிராமத்துக்கு மீண்டும் ஒரு கற்றலுக்காக வந்து சேர்ந்தோம். அதுவும் கிராமத்தை விட்டு ஒரு கிமீ தொலைவில் இருக்கும் காட்டிலேயே ( இங்கே விளைநிலத்தை காடு என்று தான் சொல்கிறாரகள்.) ஒரு சின்னஞ்சிரிய வீட்டை கட்டிக் கொண்டு வசிக்கத் தொடங்கினோம். அண்டை வீடு (கொட்டாய்) அரை கிமீ தள்ளி – அதுவும் பகலில் மட்டுமே ஆட்கள் இருப்பார்கள் – மாலையில் கிராமத்திற்கு போய்விடுவார்கள். இப்படி ஒரு அத்துவானக் காட்டில் நான், என் மனைவி, எங்கள் இரு மகன்கள் கனவுகள் கொடுத்திருந்த துணிச்சலுடன் புகுந்தோம்.
ஆரம்ப மாதங்கள் மிகமிக கடினமாய் கழிந்தன. மிக மெல்லிய சப்தங்கள் கூட பூதாகரமாய் ஒலித்தன. கூரை மேல் விழுந்த மழைச் சாரல் ஒலி நடுங்க வைத்தது தவளைகளின் பாட்டு டைனசோர்களின் உறுமல்கள் போல தூங்கவிடாமல் செய்தது. பகல் இரவாவதும் மீண்டும் விடிவதும் துல்லியமாய் புலப்பட்டது. அணிலும் ஓணானும் கொய்யா மரங்களில் ஏறி இறங்கும் சத்தம். ஐம்புலன்களும் பட்டை தீட்டப்பட்டு வேலை செய்தன. பிறகு இதுவே இயல்பு நிலையானது.
மலைப் பகுதி என்பதனாலும் பாரம்பரிய நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட வீடு என்பதாலும் வெய்யில் காலத்திலும் மின்விசிறி தேவையில்லை. இதனால் நாங்கள் நகரத்திற்கு சென்று தங்க நேரும்போதெல்லாம் சோதனை தான். மின்விசிறியின் சத்தம் தூங்கவிடுவதில்லை. அது இல்லாவிட்டாலோ கொசுக்களின் தாக்குதல். . .
வீட்டிற்கு வரும் உறவினர்கள் நண்பர்கள் பலரும் கேட்கும் கேள்வி “இந்த சத்தமின்மையை எப்படி சமாளிக்கிறீர்கள்? பயமாக இல்லையா?” என்பது தான். இதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? எப்போதும் ஏதோ ஒரு பிண்ணனி ஓசையில் வாழ்ந்து பழகிவிட்ட கொடுமை! “எப்படி பொழுது போகிறது?” என்னும் அடுத்துவரும் கேள்வி பெரும்பாலும் புன்னகைக்க வைத்தாலும் சில சமயம் கோபப்படவும் வைக்கும்.
சூரிய ஒளி சக்தியை பேட்டரிகளில் சேமித்து அதையே பயன்படுத்தி வருகிறோம் – அரசின் மின் இணைப்பு பெறவில்லை. மழைக்காலங்களிலும் மேகமூட்டமான நாட்களிலும் குறைவாகக் கிடைக்கும் சக்திக்கு ஏற்றபடி சாதனங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வோம். நகர்ப்புரமிருந்து கிராமப்புரம் பெயர தேவையான இன்னொரு முக்கியமான மனப்போக்கு தற்சார்பு பற்றியது. பம்பு ஓடவில்லை என்றால், தண்ணீர் குழாய் உடைந்து போனால், விளக்கு எரியவில்லை என்றால் நாமே சரிசெய்து கொள்ள பழக வேண்டும் – போன் போட்டால் மெக்கானிக் வரமாட்டார் – எனவே தினம் தினம் கற்றல் என்பதும் இயல்பாகிப் போகிறது.
காலைகள் பறவைகளின் பூபாளத்தோடு விடிகின்றன. ஒவ்வொரு நாளும் காணக்கிடைக்கும் பல்விதமான உயிரினங்கள் – வண்ணத்துப் பூச்சிகள், சிலந்திகள், வண்டுகள், புழுக்கள் – நாமும் இயற்கையில் ஒரு சிறு துளி மட்டுமே என்று உணர்த்துகின்றன. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்னும் பாரதியின் வரிகள் மெய்ப்படுகின்றன.
அசைபோட வைத்ததிற்கு மிக்க நன்றி!
அன்புடன்
ராமசுப்ரமணியன்
தேக்கம்பட்டு.