செய்திநிறுவனங்கள்- கடிதம்

செய்திநிறுவனங்களின் எதிர்காலம்

அச்சிதழ்கள்- கடிதங்கள்

செய்திநிறுவனங்களின் எதிர்காலம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

உங்கள் தளத்தில் ‘செய்திநிறுவனங்களின் எதிர்காலம்’ கட்டுரை படித்தவுடன் செல்வேந்திரனின் தளத்தில் உள்ள அவருடைய கட்டுரையையும் வாசித்தேன். என் தந்தை கடந்த முப்பது வருடங்களாக பத்திரிகை விற்பனையாளராகவும் முகவராகவும் பணியற்றியவர். உங்கள் கட்டுரை வெளியான அந்த வாரத்தில் தான் அவர் அந்த வேலையில் இருந்து உடல்நலம் கருதி விலகலானார்.

உங்கள் கட்டுரையில் இருக்கும் அனைத்து கருத்துக்களுடனும் உடன்படுகிறேன். பள்ளி செல்லும் காலத்தில் இருந்து நானும் நாளிதழ்கள் விற்பனையிலும் வீட்டு விநியோகத்திலும் இருந்ததால் (படித்து முடித்து வேலைக்கு சென்ற பின்னரும் உதவியாக வேலை செய்வது உண்டு) அதில் என்றும் ஒரு நேச உணர்ச்சி உண்டு. நான்  இலக்கிய வாசிப்பிற்குள் நுழைய அது முதல் படிக்கட்டாக அமைந்தது.

தொண்ணூறுகளிள் ராஜேஷ் குமார், சுஜாதா, இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் நாவல்களை வாங்கி கடைவாசலில் பேருந்துக்கு காத்து நிற்கும் நேரத்தில் அதை வாசித்து முடித்துவிட்டு செல்கின்ற வாசகர்களை கண்டு நானும் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் இருந்து ஜெயகாந்தன் வழியாக இலக்கியத்திற்குள் வந்தேன். உங்கள்தளத்தையும் படைப்புகளையும் படித்த பிறகு முறையான இலக்கிய அறிமுகம் கிடைத்தது, வாசிப்பின் அடுத்த தளத்திற்கு சென்றேன்.

நீங்கள் கூறியது போல் அச்சு ஊடகங்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன.  விதிவிலக்காக தந்தி மற்றும் ஆங்கில இந்து. தந்தியில் வரும் செய்திகள் அரசுக்கு எதிராக இராது என்றாலும், அதில் பொய் செய்தி வராது என்ற நம்பிக்கை மக்களிடம் என்றும் உள்ளது. அதே போல்  ஆங்கில இந்து பத்திரிகை மீதும் உள்ளது, அதை படிக்காதவர்களிடமும்.

மற்ற அனைத்து பத்திரிகைகளிலும் இன்றைய இணைய உலகத்தில் பொய்ச்செய்தி வெளியிட்டு அதற்கான சிறுவருத்தமும் தெரிவிக்காதவர்கள். அதை அந்த பத்திரிகை வாங்கும் வாடிக்கையாளர்களே உணர்வார்கள், இருந்தும் பழக்கத்திற்காக வாங்குபவர்களே மிகுதி.

மாலை முரசில் ஒரு Facebook பதிவை எடுத்து தனது முதல் பக்கத்தில் சிறு மாற்றம் இன்றி வெளியிட்டார்கள், அதுவும் ஒரு பெண்ணை பற்றிய பதிவு. சில நாட்கள் கழித்து அதை அவளின் முன்னாள் ஆண்நண்பர் அவதூறாக பரப்பிய செய்தி எனதெரிந்தது, ஆனால் அதற்கு ஒரு சிறு வருத்தமும் தெரிவிக்கவில்லை. மற்றும் பிரபல பத்திரிகை துணை ஆசிரியர்கள் பிரபலமாகாத சிறுபத்திரிகைகளின் பல கட்டுரைகளை கலந்து தங்களின் பத்திரிகைகளில் வெளியிடுவதை நேரடியாக கண்டிருக்கிறேன்.

இன்று பத்திரிகை வாங்க வருபவர்கள்  குறைந்தபட்சம் ஐம்பதை கடந்தவர்கள் ,அல்லது அவர்களுக்காக வாங்கும் இளைஞர்கள்(70%). மற்றும் சொற்பமானோர் அன்றைய விளம்பரத்திற்காகவும், மலிவான நாளிதழ்களை வாங்கி வீட்டின் அலமாரிக்கு விரிக்க உபயோகம் படுத்துவோர் (10%). மற்றவர்கள் அலுவலகத்திற்கு வரவேற்பறையில் வைப்பதற்கு வாங்குவோர்.

மிக எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட தமிழ் இந்து இன்று முரசொலியுடன் போட்டி போடுவதில் மும்முரம் காட்டுகிறது. இன்று அச்சு ஊடகத்தை காப்பாற்றகூடிய, நீங்கள் கூறிய அறமும் நம்பகத்தன்மையும் உடைய, ஒரே நாளிதழ் ஆங்கில இந்து மட்டுமே. இதை எந்த பத்திரிகை வாங்குவோரும் அனேகமாக தமிழ் நாட்டில் ஏற்றுக்கொள்வர்.

இந்து பத்திரிக்கை தங்களது விளம்பரத்திற்காக கணிசமான தொகையை செலவு செய்கிறது. நான் அச்சு ஊடகம் வருங்காலத்தில் நிலைக்க பரிந்துரை, அரசுபள்ளிகளுக்கும், அரசு உதவி பெரும்பள்ளிகளுக்கும் இலவசமாக தரலாம். அந்த மாணவர்களின் கட்டுரையை மற்றும் கடிதத்தை வெளியிட ஒரு சிறு பகுதி ஒதுக்கலாம். இது அவர்களின் ஆர்வத்தை  தூண்டுவதாக அமையலாம். தினமும் பத்திரிகையை கவனிக்க அவர்களை தூண்டலாம். அதில் இருந்து ஒவ்வெரு பள்ளிக்கூடத்தில் இருந்தும் பத்திரிகை படிக்கும்ஒருசிலரையாவது நம்மால் உருவாக்கமுடியும்.

நாளிதழ்கள் பரபரப்பான செய்திகள் வெளியிடுவதில் இணையத்துடன் போட்டி போட முடியாது, அந்த வாசகர்களை கவரவும் முடியாது என்பதை உணர்ந்து  விமர்சனம் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை நாடி வரும் வாசகர்களை நோக்கி செல்ல வேண்டும் (அ) உருவாக்க வேண்டும்  .

இந்தவாரம் எங்கள் நாளிதழ் விற்கும் கடையை எழுது பொருட்கள் விற்கும் கடையாக மாற்ற முடிவானது. நாளிதள்களின் விற்பனை சீராக வீழ்ச்சி அடைந்து வருகிறது, இன்னும் எத்தனை ஆண்டுகள் நாளிதழ்கள் விற்போம் என்று தெரியவில்லை. அதிகபட்சம் இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் தரை தட்டிவிடும் என்றே எண்ணுகிறேன் . அப்படி நடக்க கூடாது என்பேதே எனதுவிருப்பம்.

என்றும் அன்புடன் ,

A.M. கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்

உங்கள் கடிதம் ஒரு நடைமுறை சூழலை காட்டுகிறது. ஆனால் ஒரு கொள்கை உண்டு. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுப்பொருள் தனக்கான ரசனையை உருவாக்குகிறது. குறியீடாகவும் ஆகிறது. ஆகவே அது அழியாது, ஏதோ ஒருவகையில் உருமாறி நீடிக்கும்.

செய்தி இதழ்கள் எப்படி நீடிக்குமென பார்ப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு,கமல் ஹாசன்
அடுத்த கட்டுரைசிம்மமும் பெண்களும்- கடிதங்கள்