நிழலெழுத்து- கடிதங்கள்

நிழலெழுத்து

அன்புள்ள ஜெ.

உங்கள் பதில் அருமை. வெளிப்படைத்தன்மை இருக்கும் பட்சத்தில் நிழலெழுத்து மிக நல்ல முன்னெடுப்பாக அமையுமென்று தோன்றுகிறது. சரளமான சுவாரசியமான எழுத்து நடை கைவரப் பெற்றவர்களுக்கு நல்ல களங்களும்,கருக்களும் கிடைக்கும் பட்சத்தில் அருமையான படைப்புகள் பல  வருவதும், துளி வரும்படியாகிலும் கிடைக்கவும் ஏதுவாகும். இருவர் பங்களிப்புடன் வெளி வருகின்ற மொழிபெயர்ப்புப் படைப்புகள் நிழலெழுத்தின் வேறு பரிமாணமாக, ஆனால் இரண்டு படைப்புகளாக இருப்பதாகத் தோன்றுகிறது.

நீங்கள் சொல்கிறபடி எழுத்தில் ஈடுபடுவது நல்ல விஷயம்தானே.

திரை இசை உலகில் தனி இசை அமைப்பாளர்கள் உரிய மரியாதை அளிக்கப் பட்டு, பிற இசை அமைப்பளர்களுக்காக இசைக் கோர்ப்பு, பின்னணி  இசை ஆகியவற்றில் பங்களித்திருக்கிறார்கள், இசையோடு இருப்பதே நல்லது என்பது போல.இது அதை  ஒத்திருக்கிறது.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெ

நிழலெழுத்து கட்டுரை யோசிக்கவைத்தது. உண்மையில் அந்தக்கோணத்தில் எண்ணியதே இல்லை. இதை இப்படி பிரித்துக்கொள்கிறேன். ஓர் எழுத்தாளனில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று திறமை அல்லது தேர்ச்சி. அது பயிற்சியால் வருவது. மொழி, வடிவம் ஆகியவற்றில் அது வெளிப்படுகிறது. இன்னொன்று அவனுடைய ஆழ்மனம் அல்லது படைப்புமனம். எழுத்தாளன் தன் ஆழ்மனதை படைப்பை தன்னுடைய வெளிப்பாடாகவே வைத்திருக்கவேண்டும். ஆனால் தன் திறமையை அவன் ஒரு தொழிலாக செய்யலாம். அதை இன்னொருவருக்கு விற்கலாம். அதனால் தேர்ச்சிமிக்க எழுத்துக்கள் வரவே வாய்ப்பு உண்டாகும். பல்வேறு தளங்களில் இருந்து நல்ல வெளிப்பாடுகள் சூழலில் நிகழும். சரியா?

சாரங்கன்

***

அன்புள்ள ஜெ

நிழலெழுத்து கொஞ்சம் குழப்பும் கட்டுரை. நம்முடைய பாரம்பரிய மனதுக்கு ஏதோ அறமில்லாதது செய்யப்படுவதுபோல தோன்றுகிறது. காரணம் நாம் எழுத்தை புனிதமாகக் கருதுகிறோம். எழுத்துக்கு ஒருவருக்கு பணம் கேட்டாலே அய்யோ புனிதம் போச்சே என்று கூச்சலிடுகிறோம்.

எழுத்தாளர் ஒருவர் பட்டினி கிடந்தால்தான் நம் மனசு நிறைவடைகிறது. மேலோட்டமாக புதுமைப்பித்தன் பட்டினி கிடந்தான், பாரதி பட்டினி கிடந்தான் என்றெல்லாம் சொல்லிக்கொள்வோம். ஆனால் உண்மையில் நம் மனசு அப்போது உள்ளூர் மகிழ்ச்சி அடைகிறது. எழுத்தாளன் வசதியாக இருந்தால் நாம் புண்படுகிறோம். அவனுக்கு செல்வம் கல்வி புகழ் மூன்றுமே அளிக்கப்பட்டிருக்கிறது, அது அநீதி என நினைக்கிறோம்.

இதை எங்கே பார்க்கலாமென்றால் தாகூர்- பாரதி ஒப்பீட்டில் பலரும் தாகூர் பணக்காரர் என்பதைத்தான் சுட்டிக்காட்டி வசைபாடுவார்கள். தாகூரின் சாதனைகள் நாவல், கவிதை, நாடகம், இசை, ஓவியம் என எல்லாவற்றிலும் பரவியிருக்கிறது. அதற்குக் காரணம் அவர் உயிர்வாழ்க்கைக்கான போராட்டங்கள் இல்லாதவராக இருந்தார் என்று சொன்னால் கூச்சலிடுவார்கள்.

எழுத்து என்பது புனிதம் அல்ல. அது ஒரு திறமை. ஆனால் அது வெறும் திறமை மட்டும் அல்ல. க்ரியேட்டிவிட்டியும் உண்டு. க்ரியேட்டிவிட்டியை எவருக்கும் கொடுக்கமுடியாது. ஆனால் திறமையைக்கொண்டு எழுத்தாளர்கள் வசதியாகவே வாழலாம் என்று நினைக்கிறேன். அதற்கான வாய்ப்புகள் வரவேண்டும். நிழலெழுத்து அதில் ஒன்று. இங்கே வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் அனுபவங்களும் ஞானமும் வாசிப்புக்கு உகந்த நூல்களாக வெளிவரவும் அது பயன்படும்.

எம்.பாஸ்கர்

முந்தைய கட்டுரைமுதற்கனல் வாசிப்பினூடாக
அடுத்த கட்டுரைதியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதங்கள்