அன்பின் ஜெ,
இவ்வருடம் எல்லா வருடம் போல ஏப்ரல் மேயில் இந்தியா வர முடியவில்லை. விமானங்களில்லை. பயணத்தை அடுத்த வருடத்திற்கு ஒத்திப்போட்டாக வேண்டிய நிலை. ஆனால் கடந்த மூன்று மாதங்களில் இலக்கிய இணைய நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இலக்கியத்திற்காக இத்தனை இணைய நிகழ்வுகள் நடப்பதே ஆச்சர்யமாக இருந்தது. நான் சந்திக்க நினைத்திருந்த என் பிரிய எழுத்தாளர்கள் பலரைச் சந்திக்கும் பெரும் பாக்கியம் கிடைத்தது (கி.ரா, வண்ணதாசன், இமையம், சாம்ராஜ், வெண்ணிலா). இலக்கியம் வாசிப்பு சார்ந்த ஒத்த அலைவரிசையுள்ள நண்பர்கள் பலர் கிடைத்தார்கள் (விஷ்ணுபுர நண்பர் லோகமாதேவியை பல நிகழ்வுகளில் பார்க்க முடிந்தது மகிழ்ச்சி).
பல நிகழ்வுகளை கென்யா இந்தியா இடையிலான நேர வித்தியாசம் காரணமாக தவறவிட நேர்ந்தது. வெண்ணிலா அவர்களின் முகநூல் பக்கத்தில், அகநி வெளியீட்டின், “ஆனந்தரங்கம் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பி”ன் 12 தொவ்குதிகளுக்கான அறிமுக ஆய்வரங்க நிகழ்வுகள் 12 நாட்கள் தொடர்ந்து மாலை நடைபெறும் என்ற அறிவிப்பைப் பார்த்தபோது சநதோசமாக இருந்தது. சட்டென்று எத்தனை மணிக்கென்று நேரத்தைத்தான் பார்த்தேன். தினமும் மாலை ஏழு மணிக்கு இந்திய நேரத்தில். அப்போது இங்கு மாலை நாலரை மணி. பண்ணையில் பணி நேரம். சனி, ஞாயிறுகளில் கவலையில்லை. வார நாட்களில் இடையிடையில் பணித் தொந்தரவுகளுடன்தான் கலந்துகொள்ள முடிந்தது. சில நிகழ்வுகளைத் தவறவிட்டேன். ஸ்ருதி கபிலன் பதிவு செய்திருந்த காணொளிகள் உதவின.
சிறப்பான ஆய்வரங்க நிகழ்வுகள் ஜெ. பனிரெண்டு தொகுதிகள் குறித்து பனிரெண்டு நாட்கள் பனிரெண்டு ஆளுமைகள் பேசினார்கள். எனக்கு தொகுப்பு குறித்தும், ரங்கப்பிள்ளை குறித்தும் முழுமையான சித்திரம் கிடைத்தது. கடந்த ஆண்டு இறுதியில் ரங்கப் பிள்ளை குறித்து ஒரு கட்டுரை உங்கள் தளத்தில் படித்தது. உங்கள் தளம் வாயிலாகவே இராசசெல்வத்தின் பிள்ளையின் சேதிக்குறிப்புகளின் பதிப்பு வரலாறு பற்றிய ஒரு கட்டுரையையும் படித்திருக்கிறேன்.
ஆய்வரங்கத்தின் மூன்றாம் நாள் நிகழ்வில் சாம்ராஜ் பேசினார். ஆய்வரங்கின் முதல் நிகழ்வில், ஆனந்தரங்கத்தின் முதல் தொகுப்பு குறித்து டாக்டர் சுதா சேஷையன் உரை நிகழ்த்தினார். சரியான துவக்கம். பேராசிரியரல்லவா?. இரண்டாம் நாள் இரண்டாம் தொகுப்பு குறித்து இந்து ராம் பேசினார். பதிப்பாசிரியர்கள் ராஜேந்திரன் மற்றும் வெண்ணிலா அவர்களுடன் கேள்வி பதில் பகுதியும் இருந்தது.
மூன்றாம் நாள் சாம்-ன் உரை கேட்டபிறகு ஆனந்தரங்கம் மனதிற்கு அண்மையாகிவிட்டார். என் போன்ற புனைவெழுத்தின் வசியத்திற்கும் மந்திரத்திற்கும் கட்டுண்ட பழக்கமான மனதிற்கு ஒரு புனைவெழுத்தாளனின் மொழிதான் எதையும் முற்றிலுமாய் மனதுடன் ஒருங்கிணைத்து நெருக்கமாக்குகிறது போலும். சாம்-ன் உரை, ஆனந்தரங்கப்பிள்ளை, குறிப்புகளை ஒரு பெரிய புனைகதை தன்மையுடன்தான் எழுதி வைத்திருக்கிறார் என்று எண்ண வைத்தது. அது கிட்டத்தட்ட உண்மை என்று தொடர்ச்சியாக பல ஆளுமைகளின் ஆய்வரங்க உரைகள் கேட்டபோது உறுதியானது. பதினைந்து இருபது நாவல்களும், நூற்றுக்கணக்கான சிறுகதைகளும் ஒளிந்து கொண்டிருக்கும் குறிப்புகள் என்று மனம் எண்ணம் கொண்டது. கதைகள் முகிழ்க்கும் சாத்தியங்கள் கொண்ட நிலம். 18-ம் நூற்றாண்டின் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய அன்றைய வாழ்வின், மொழியின், சமூகத்தின், அரசின், அரசியலின் ஆழமான முழுமையான குறுக்கு வெட்டுச் சித்திரமாகத் தோன்றியது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் மட்டுமல்லாமல், இன்னும் பல காலம் பொக்கிஷமாய் திகழப் போகும் அசல் சேதிகள், வரலாறு என்று உறுதியானது.
அந்நூற்றாண்டின் மொழியை, தமிழ் வார்த்தைகளை, அன்றிலிருந்து இன்று வரையான அவ்வார்த்தைகளின் பரிணாமங்களை, வேரை அறிந்துகொள்வதற்காகவே தனியாக ஒரு முறை தொகுப்பை வாசிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக சாம் நூலிலிருந்து ஒரு வார்த்தை சொன்னார். ‘தட்டுவாணி’ என்பது. இந்த வார்த்தை எனக்குப் பழக்கமான வார்த்தை. என் பால்யத்தில், கிராமத்தில், பெண்களுக்கிடையிலான சண்டையின்போது இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்டிருக்கிறேன். ‘தட்டுவாணி’ என்றால் குதிரையைக் குறிக்கும் சொல் என்று இத்தொகுப்பைப் படித்தபின்தான் அறிந்துகொண்டதாக சாம் சொன்னார். எனக்கும் புதிய விஷயம் இது.
சாம்-ன் வார்த்தைகளில் சொல்வதானால், இந்தப் பனிரெண்டு தொகுதிகளும் ஒரே மூச்சில் படித்து முடிக்க வேண்டிய தொகுதிகள் அல்ல (ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக் கூடிய தொகுதிகளும் அல்ல). வாங்கி வைத்துக்கொண்டு சிப் சிப்பாக சுவைத்து ரசித்து உள்வாங்க வேண்டிய தொகுதிகள் என்று.
என் புத்தக அலமாரியில் பனிரெண்டு பர்கண்டி வைன் பாட்டில்களுக்கான இடமேற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டேன்.
வெங்கி