சவரக்கத்திமுனைப் பாதை

சர்வப்பிரியானந்தர்- கடிதம்

ஆசிரியருக்கு,

வணக்கம். சுவாமி சர்வபிரியானந்தா பற்றிய நண்பர் ஒருவருடைய கடிதத்தினையும், தங்களது பதிலையும் பார்த்தேன்.

சுவாமி சர்வபிரியானந்தா வேதாந்த பார்வையுடன் உலகியலை காண்பதை பற்றித்தான் தனது உரைகளை , பதில்களை வடிவமைப்பார்.  வேதாந்தத்தினை உலகியல் கொண்டு காணும் மாறுபட்ட சமூக அடுக்குகள் பற்றி அவர் பேசுவதில்லை.ஒரு உரையில் அது பற்றி பேச்சு வருகையில் அது பழைய காலத்தில் வழக்கில் இருந்த பழக்கம் என சுட்டுவதோடு நிறுத்திக் கொண்டார்.  இன்றைய காலத்தில் நம் கவனத்துக்கு தேவைப்படுவது வேறு என நகர்ந்து விட்டார்.

வேதாந்த மையப்பொருளின் மீது ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் வைக்கும் பார்வையை பின்பற்றுபவர். அந்த குருமரபில் வந்ததாக சொல்லித்தான் தன் உரைகளை கொண்டு செல்வார். அவருடைய உரைகள் ஆவேசமாக, யாரையும் கேலி செய்வதாக, யாரையும் கூட்டியோ, குறைத்தோ சொல்ல வேண்டுமென இருக்காது.  வேதாந்தம் பற்றி ஆர்வமுள்ளவர்களுக்கு வேதாந்தம் பற்றிய தெளிவு நல்லதை செய்யும் என்ற அன்பும், அக்கறையுமே இருக்கும்.

மேலைத்தனமாக  உலகினை காணும் பழக்கத்தில் ஊறி போன என் போன்ற துவக்க நிலை ஆட்களுக்கு சுவாமியின் உரைகள் வேதாந்தத்தினை நல்ல அறிமுகம் செய்யும்  என்பதால்தான் உங்களுக்கு எழுதினேன். அவரது உரைகள் எளிய ஆங்கிலத்தில், வேதாந்தம் பற்றிய துவக்க நிலை கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்வதாக , ஆர்வம் உள்ளவர்களுக்கு மேலும் ஆர்வம் தூண்டுவதாக இருக்கும்.

அவருடைய நேரத்தினையும், உழைப்பினையும் வேதாந்தம் பற்றி ஆர்வமுள்ளவர்களுக்கு அதன் விளக்கங்களை சேர்க்க வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்வோர். வேதாந்தம் பற்றி ஆர்வமும், கேள்விகளும் இருந்து சுவாமியை அணுகினால் நல்ல அறிமுகம் கிடைக்கும். ஆர்வமில்லாதவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் அவரது உரைகளை வடிவமைப்பது இல்லை. தனது உரைகளின் மையப்பொருள் விலகாமல், அதே நேரம் சுவராஸ்யத்தோடு பேசும் இயல்புடையவர்.

என்னை பொருத்தவரை  ஆர்வத்தோடு சுவாமி சர்வபிரியானந்தர் உரையாடுவார், ஆணவ செயல்பாடுகளுக்கு அவரது உரைகள் தீனி போடுவதில்லை.

யூட்யூப் உரைகள் அதை பார்க்கும்  குரு சிஷ்ய உறவினை கொடுக்க உருவாக்கப்பட்டதில்லை. மெய்ஞானம் போதிக்க உருவாக்கப்பட்டதில்லை. அவை ஒரு விசய ஞானத்தினை பற்றி அனுபவம் உள்ள ஒருவர், மேதமை உள்ள ஒருவர் பேசி அதை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு கருவியாக மட்டுமே உள்ளது. வீடியோவை காணும் பார்வையாளன் தன்னிடம் உள்ள ஆணவமோ, ஆர்வமோ, கோபமோ, போட்டி மனப்பான்மையோ எதை வேண்டுமானாலும் பட்டைத் தீட்டிக் கொள்ளலாம். அது பார்ப்பவருடைய விருப்பம்.

சுவாமி சர்வ பிரியானந்தனரின் உரைகளும் அது போன்றவைதான். அவை குரு குலங்கள் அல்ல. யூட்யூப் வீடியோதான். அறிமுகம் தரும்.  நீங்கள் மெய்ஞானம் என்பது டெக்ஸ்ட்புக் அல்ல, வாழ்வது என பல முறை சொல்லியுள்ளிர்கள். திருமந்திரம் பற்றி சொல்லும் பொழுதே மெய்ஞானம் என்பது வெறுமனே படிப்பது அல்ல என்பதை பற்றீ சொன்னீர்கள்.

அன்புடன்
நிர்மல்

***

அன்புள்ள நிர்மல்,

நீங்கள் சுவாமி சர்வப்பிரியானந்தரின் உரைகளை சுட்டிகொடுத்தபோது அவர் உங்களைக் கவர்ந்தவர் என்ற அளவிலேயே நான் அவரை கவனித்தேன். பொதுவாக இன்றைய சிந்தனைப்போக்குகளை உள்வாங்கிக்கொண்டு, இந்த நூற்றாண்டின் மானுடஅறவியலுக்கு இயைப, மரபின் ஆன்மிக நோக்கை முன்வைப்பவர்கள் மேல் எனக்கு நம்பிக்கையும் ஏற்பும் உண்டு. இப்போது வரை சர்வப்பிரியானந்தரின் உரைகள் அந்நம்பிக்கையை அளிப்பவையாகவே உள்ளன.

ஆனால் எங்கும் எவரும் தன் ஆன்மிகவழிகாட்டிகளை, தத்துவ ஆசிரியர்களை ஏற்பதிலும் தொடர்வதிலும் மேலதிகக் கவனம் கொண்டிருக்கவேண்டிய சூழல் இன்று உள்ளது என்று நினைக்கிறேன். இந்த ஊடகப்பெருக்க காலகட்டத்தில் தன்னியயல்பாக ஒருவரை பின்தொடர்வது பிழையான முடிவாக ஆகக்கூடும். எதுவும் உச்சகட்டப் பிரச்சாரம் வழியாக முன்வைக்கப்படும் காலம் இது. எவரையும் சில அற அடிப்படைகளில் அவருடைய நோக்கென்ன என்று பரிசீலித்த பின்னரே ஆசிரியராகவோ வழிகாட்டியாகவோ கொள்ளவேண்டும்.

என் பார்வையில் உலகளாவிய மானுடப்பார்வை இல்லாத ஒருவரை, இனமொழிமதக் காழ்ப்புகளுக்கு அப்பால் நின்று பேசாத ஒருவரை, ஆன்மிகத்தை அன்றாட அதிகார அரசியலில் இருந்து அகற்றி நோக்கத் தெரியாத ஒருவரை, நேர்நிலைநோக்கு இல்லாத ஒருவரை ஏற்பதென்பது பேரிழப்பு. அவர் என்ன அறிவார்ந்த முறையில் பேசினாலும். சொல்லப்போனால் அறிவார்ந்த முறையில் பேசினால் நாம் வெளியேறும் வாய்ப்பையும் அவர் மூடிவிடுவதனால் மேலும் ஆபத்தானவர்.

ஒருவரின் அறவியல் என்னவாக இருந்தாலென்ன, தத்துவத்தை மட்டும் கற்றுக்கொள்ளக்கூடாதா என்று கேட்கலாம். அது அறிவியலில் இயல்வது. மேலைத்தத்துவம்போன்ற புறவயமான தருக்கபூர்வ அறிதலுக்கும் ஓர் எல்லைவரை உகந்தது. இந்திய மெய்யியல் போன்ற அகவயமான அறிதல் நிகழவேண்டிய தளத்தில் மிகுந்த இழப்பை உருவாக்கிவிடக்கூடும். அடிப்படை மானுடஅறவியலில் இருந்து தன் பழமைநோக்கினாலோ அல்லது பிறவிசார்ந்தமேட்டிமை நோக்கினாலோ பின்தங்கியிருக்கும் ஒருவர் அவருடைய எல்லா பார்வைக்கூறுகளிலும் அக்கோணலை கொண்டிருப்பார், அதையே முன்வைப்பார்.

நான் அக்குறிப்பை எழுதியதற்கு முந்தைய பதினைந்து நாட்களில் இரு கடிதங்கள் வந்தன- தனிப்பட்ட கடிதங்கள். நான் எழுதியது அவற்றுக்கான எதிர்வினையாகவே.

முதல்கடிதம் எழுதியவர் ஒரு ‘பிற்படுத்தப்பட்ட’ சாதியினராகிய நண்பர். என் தளத்தில் முன்பு எப்போதோ அளிக்கப்பட்ட ஓர் இணைப்பின் வழியாக அவர் ஒரு நவீன வேதாந்த ஆசிரியர் ஒருவருடன் அறிமுகமானார். [அவ்விணைப்பை நீக்கிவிட்டேன்] ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் அவருடைய உரைகளை கேட்டு வந்தார். அவருடைய மாணவராகவே பயின்றார். அந்த வேதாந்தச் சொற்பொழிவாளர் ஒரு பிராமணர்.

அந்த ஆசிரியரின் உரைகளில் ஏதோ ஒரு புள்ளியில் அவர் கூறிய சாதிமேட்டிமை சார்ந்த விளக்கம் இவரை துணுக்குறச் செய்தது. இவர் அதற்கு விளக்கம் கோரினார். அது விவாதமாகி கடைசியில் அந்த வேதாந்த ஆசிரியர் தெளிவாகவே சொல்லிவிட்டார். “ஆமாம், பிராமணப்பிறப்புதான் உயர்வானது. வேதாந்த ஞானம் அவர்களுக்கு மட்டுமே உரியது. மற்றவர்கள் இப்போது ஆரம்பித்து அடுத்த பிறப்பில் பிராமணப்பிறப்பு எடுத்து மட்டுமே அதை முடிக்கமுடியும்”

நண்பர் எனக்கு மிகுந்த மனக்கொந்தளிப்புடன் எழுதினார். ”நீங்கள்தான் என்னை தவறாக அவரிடம் கொண்டுசென்றீர்கள். நீங்களும் பொறுப்பேற்கவேண்டும்” நான் அதனால் சற்று புண்பட்டேன். நண்பர் சொன்னார் “நான் கிறிஸ்தவனாக ஆகலாமென எண்ணுகிறேன்.  இந்து மதத்தின் பழமைவாத, ஆசாரவாத ஆசிரியர்கள் இதைத்தான் சொல்வார்கள் என எனக்குத்தெரியும். அவர்கள் பழங்காலத்தில் சிறையுண்டவர்கள் என நினைத்தேன். இவர் ஃப்ராய்டியமும் யுங்கியமும் பேசுபவர். ரோஜர் பென்ரோஸை மேற்கோள்காட்டுபவர். இத்தனையும் கடைசியில் தன் சாதிக்கு மட்டுமே மோட்சம் உண்டு என்று நம்புவதற்கு என்றால், இத்தனை கல்வியும் இவருக்கு எந்த விடுதலையையும் அளிக்கவில்லை என்றால் இவற்றால் என்ன பயன்?”

“இவரைப்போல முப்பதாண்டுகள் இதையெல்லாம் படித்துவிட்டு அடிப்படையில் இருள்நிறைந்த, பழமைவாத முட்டாளாக ஆவதைத்தான் இந்துமதத்தில் இருந்து என்னால் பெறமுடியுமா? என் குடும்பம் ஏற்கனவே கிறிஸ்தவக்குடும்பம், நான் ஏன் இந்துமதத்தில் இருக்கவேண்டும்? இந்துமதம் மானுடமீட்புக்காக, கடையனுக்கும் மீட்புக்காக எதையாவது உண்மையில் சொல்கிறதா?” என்றிருந்தார் நண்பர்.

நான் நீண்ட ஒரு கடிதம் எழுதினேன். ”மதம் மாறுவதென்றால் அது அவருடைய விருப்பம். ஆனால் கிறிஸ்துவில் மீட்புண்டு என நம்பி, அம்மதத்தின் மெய்யியல்மேல் ஈடுபாடுகொண்டு மாறவேண்டும். நேர்நிலை மனநிலையில் அந்த மாற்றம் நிகழவேண்டும். அது அவருக்கு மீட்பளிக்கும். கிறிஸ்தவ ஆன்மிகத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் எதிர்நிலையில், ஒரு கசப்பில் தொடங்கி அம்மாற்றம் நிகழ்ந்தால்  வாழ்நாள் முழுக்க அக்கசப்பே நீடிக்கும். அதைப்போல ஆன்மிகமாக அழிவுநிலை வேறில்லை. அப்படி முழுக்கசப்பில் திளைக்கும் சிலரை எனக்குத்தெரியும். எந்தக்கசப்பும் எவருக்கும் மீட்பை அளிக்கப்போவதில்லை. உங்கள் தேடல் உங்களுக்கு வழிகாட்டட்டும்”

இன்னொரு கடிதம் அமெரிக்காவிலிருக்கும் ஒரு நண்பர் எழுதியது. அவர் பிராமணர், அவருக்கு இதே அனுபவம். அவர் நம்பி நீண்டநாட்களாக தொடரும் ஓர் ஆன்மிக வழிகாட்டி கீதையுரையின் மீதான தனிப்பட்ட உரையாடலில் ஒவ்வொரு சாதியும் அந்தந்த சாதிக்கு பிறப்பால் அளிக்கப்பட்ட தொழிலையே செய்யவேண்டும் என்பதே கீதையில் கிருஷ்ணன் சொல்வது என்று விளக்கினார்.

நண்பர் ”அப்படியென்றால் நான் பிராமணனுக்குரிய வேலையைச் செய்யவில்லையே?” என்று கேட்டிருக்கிறார். “ஆமாம், உன் சாதிக்குரிய வேலையைச் செய்வதே உயர்ந்தது. ஒரு பிராமணர் தன் அமெரிக்கவேலையை துறந்து இந்தியா சென்று மடப்பள்ளியில் வேலைசெய்வதை எப்படி கொண்டாடுகிறார்கள் பார். அதுவே உத்தமம். ஆனால் பிராமணர் எந்த வேலை செய்தாலும் அந்த வேலை செய்யும் பிறரைவிட மேல்தான்” என்றார்

நண்பர் எனக்கு எழுதினார். “இத்தனை கல்வியும், உலகம்சுற்றும் வாய்ப்பும் இந்த பழங்கால இருளில்தான் இவரைக் கொண்டுசென்று நிறுத்தும் என்றால், இந்த சித்தாந்தங்கள் இம்மிகூட மாறுதலை உருவாக்காது என்றால், சற்றும் உளவிரிவையோ உளக்கனிவையோ அளிக்காது என்றால், இவற்றால் என்ன பயன்? நான் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நவீன மனிதன். எனக்கு இன்றைய அறமும் ஒழுக்கமும் உண்டு. என்னிடம் பேச இவர்களுக்கு ஏதாவது இருக்கிறதா என்ன?”

என்னை மிகவும் சிந்திக்கவும் சோர்வுறவும் வைத்தவை இக்கடிதங்கள். உண்மையில் சென்ற சில ஆண்டுகளாகவே நண்பர்களிடம் சூழல் அளிக்கும் இத்தகைய அவநம்பிக்கையை, கசப்பை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.

வெள்ளையராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்களின் வரலாறு அவர்களுக்கு அளிக்கும் பாரம்பரிய நோயாக இனவெறி உள்ளது. அவன் தன் தனிப்பட்ட பண்பாட்டால், ஆன்மிகத்தால் எதிர்த்து வென்று வெளியேறவேண்டிய ஒன்று அது. அதேபோன்ற பாரம்பரிய நோய் நமக்குச் சாதி. இதில் பிராமணரோ பிறரோ எவ்வகையிலும் விதிவிலக்கல்ல. எவரும் சாதிவெறியில் ஒருபடியும் குறைவானவர் அல்ல. எவருக்கும் ஒரு சாதியடையாளத்துடன் நின்று இன்னொரு சாதியினரை குற்றம்சாட்ட உரிமை இல்லை.

என் அனுபவத்தில் தங்கள் பாரம்பரியம் அளிக்கும் சாதிவெறி என்னும் நோயிலிருந்து ஒப்புநோக்க அதிகம் வெளியேறியவர்கள் பிராமணர்களே. மற்றவர்கள் பெரும்பாலும் அந்த முயற்சியையே இன்னமும் தொடங்காதவர்கள். தங்களை ‘பாதிக்கப்பட்ட’ சாதியினர் என்ற பாவனைக்கு கொண்டு சென்று சாதிவெறியை சுலபமாக மறைத்துக்கொள்பவர்கள்.பிராமணர்களைக் குற்றம்சாட்டி தப்பித்துக்கொள்பவர்கள்.

ஆனால் இங்கே இரு சாதியினரே இந்து மதம் சார்ந்த விஷயங்களைப் பேசுபவர்கள். முதன்மையாக பிராமணர்கள், சற்று குறைவாக வேளாளர்கள்- அதற்கு நிகர்ச்சாதியில் இருப்பவர்கள். இவர்கள் வெளிப்படுத்தும் சாதிவெறி மிகச்சிக்கலானது. இவர்கள் இந்துமதத்தின் அத்தனை ஆசாரங்களையும் தங்கள் சாதிமேட்டிமை நோக்கில் வளைப்பார்கள். அத்தனை கொள்கைகளையும் அதற்கேற்ப திரிப்பார்கள். இந்துக்கள் அனைவரையும் கீழே நிறுத்தி தங்களை மேலே நிறுத்திக்கொள்ள முயல்வார்கள். விளைவாக ஒட்டுமொத்த இந்துசிந்தனையையும் காலத்தில் தேங்கிச்சீரழிந்த ஒன்றாகக் காட்டிவிடுவார்கள்.

இன்று பலருக்கும் தெரியாத ஒன்று, தேவநேயப்பாவாணர் திருவாவடுதுறை ஆதீனத்தில் சாதிய இழிவுக்கு உள்ளாக்கப்பட்டது, உ.வே.சாமிநாதய்யர் அதற்குமுன் அமைதிகாத்ததுதான் திராவிட இயக்கத்தின் கடுமையான இந்து எதிர்ப்புக்கான அடித்தளமாக அமைந்த நிகழ்ச்சிகளில்  தலையாயது. பலவகையிலும் அது பதிவாகியிருக்கிறது. பின்னாளில் உருவான அரசியல் சமன்பாடுகளில், முன்னெழுந்த ‘பார்ப்பன எதிர்ப்பு’ கோஷங்களில், அது மூழ்கி மறைந்தது. சேரன்மாதேவி குருகுலத்தில் வ.வே.சு அய்யர் பிராமண மாணவர்களுக்கு தனி பந்தி அமைத்தார் என்ற குற்றச்சாட்டே பெரிதும் பேசப்பட்டது.

பாரம்பரிய மடங்கள் மேல் எனக்கு பெரிய குற்றச்சாட்டுக்கள் இல்லை. அவர்கள் காலத்தில் உறைந்தவர்கள். காஞ்சிமடத்துக்குச் செல்லும் ஒருவர் அது பிராமண மடம் என அறிந்தே செல்கிறார். பிராமணச் சாதிக்குள் மட்டுமே புழங்கும் மதப்பேச்சாளர்கள், வேதாந்த ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களும் தெளிவாக அவர்கள் எவருக்காக எவரிடம் பேசுகிறார்கள் என்று முன்வைத்துவிடுகிறார்கள். அத்தகைய இனம் சார் குறுங்குழுக்கள் எல்லா மதங்களிலும் உண்டு. பிரச்சினை இந்த நவீன வேதாந்திகளிடமும், நவீன சைவசித்தாந்திகளிடமும்தான். அவர்கள் இளைஞர்களிடம் பேசத்தக்க கல்வி கொண்டவர்கள். ஆனால் உள்ளடக்கம் இன்னும் பழைய இனக்குழுவாதம் மட்டுமே.

இவர்கள் பேசும் வேதாந்தம் நேராக பிராமணமேட்டிமைவாதம், பாரதியஜனதா ஆதரவு என்று சென்று சேரும். இவர்கள் முன்வைக்கும் சைவசித்தாந்தம் நேராக வேளாள மேட்டிமைவாதம், தமிழர்பெருமை, லெமூரியாக் கண்டம், திராவிடவாதம் என்று சென்று சேரும். இரண்டுமே இரண்டு ஆன்மிகப்படுகுழிகள்.

ஒருவர் தத்துவம் பயில்வதோ ஆன்மிகம் தேர்வதோ அகவிடுதலைக்கு, முழுமீட்புக்த்தானே ஒழிய இந்த சாதிமேட்டிமைகளில் அரசியலாடல்களில் சென்று சிக்கிக்கொண்டு வம்புகளில் உழல்வதற்காக அல்ல. அதை தொட்டு அங்கே செல்லும் ஒழுக்கில் இழுக்கப்பட்டால் மீறிக்கரையேறுவது கடினம். கரையேறும்போது பல ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கும். உள்ளமெல்லாம் கசப்பும் நிறைந்திருக்கும். அக்கசப்பு மேலும் இருளுக்கு கொண்டுசென்று நிறுத்தும்.

இந்த ஏமாற்றத்தைப்பற்றியே நான் பேசவந்தேன். இது ஒரு மிகப்பெரிய  அழிவுசக்தி. அந்தச் சாதிமேட்டிமைகளால் புண்படும் ஒருவர் கசப்படைகிறார். அக்கசப்பு அவருடைய பார்வையையே திரிபடையச் செய்துவிடுகிறது. அனைத்துமே திரிபடைந்தே தெரிகின்றன. எளிதில் தன் நேர்நிலைப்பார்வையை, இயல்பான நம்பிக்கையை மீட்டுக்கொள்ள முடிவதே இல்லை. கசப்படைந்த அனைவரிடமும் நான் சொல்வது ஒன்றே. அக்கசப்பினால் அக்கசப்பை அளித்தவர்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படுவதில்லை. அக்கசப்பு உங்களுக்கே நோய் என நீடிக்கிறது. அதை முற்றாக உதறிவிட்டு வெளியேறுங்கள்.

ஆனால் அவர்களைவிட சிக்கலில் இருப்பவர்கள் அந்தச் சாதிமேட்டிமைப்பார்வையை தங்களை அறியாமலே ஏற்றுக்கொள்ள நேரும் அச்சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீள்வதே இல்லை. எவராயினும் தங்கள் இளமையிலேயே கல்வியின் ஊக்கத்தால், புதியன தேடும் ஆர்வத்தால் பழமையின் களிம்பிலிருந்து வெளியேற முடியும். இளமையில் அந்த நச்சு வளையத்திற்குள் சென்றுசேர்பவர்களுக்கு அதன்பின் மீட்பு மிக அரிது. அந்த நச்சுவளையம் இன்றைய இளைஞர்களைக் கவரும் நவீனச் சொல்லாடல்களுடன் இருந்தால் அதை அடையாளம் காண்பதற்குள்ளாகவே உள்ளே நெடுந்தூரம் சென்றுவிட்டிருப்பார்கள்.

என்ன நிகழ்கிறதென்பது மிக நுட்பமானது. நாம் சொற்களை பொருள்கொள்ளும் ஓர் அகப்பயிற்சி உள்ளது. நாம் சிந்தனைகளை அடுக்கிக்கொள்ளும் ஒரு தர்க்கமுறை உள்ளது. இவை இரண்டுமே நம்முடைய பார்வையை வடிவமைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பாதையில் நாம் நம்பிக்கையுடன் தீவிரமாக சில ஆண்டுகள் சென்றோமென்றால் நம்முடைய அகச்சொற்கள், அகத்தர்க்கம் மாறிவிடுகிறது. மாறுவது நமக்கே தெரியாது. அதன்பின் நாம் அந்தக்கோணத்திலேயே பார்த்துக்கொண்டிருப்போம், நாம் சரியாகப்பார்க்கிறோம் என்று நமக்கு உண்மையிலேயே தோன்றும். நம் பிழையை நாமே கண்டடைவது கடினம். கண்டடைந்தபின்னர் அதை அறுத்துக்கொண்டு நம்மை மீட்டெடுப்பது மேலும் கடினம்.

அப்படி சென்றுவிட்டவர்கள் மிகமிக பரிதாபத்திற்குரியவர்கள். சென்ற இருநூறாண்டுகளில் இந்நிலத்தில் மாபெரும் ஞானியர், சிந்தனையாளர்கள், கலைஞர்கள் உருவாக்கிய ஒட்டுமொத்த சிந்தனைமாற்றத்தையும் உதறிவிட்டு அவர்கள் காலத்தில் திரும்பிச் சென்றுவிட்டிருக்கிறார்கள்.

மெய்நோக்கிய பயணமென்பது சவரக்கத்தியின் கூர்முனைமேல் நடப்பது என்று அதனால்தான் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஅன்னை மாயம்மா, அ.கா.பெருமாள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவண்ணக்கடல்- சுரேஷ் பிரதீப்