அவதூறுகளும் நினைவுக்குறிப்புகளும்

இயல்,கனடா- ஒரு வம்பு

அன்பு ஜெயமோகனுக்கு,

உங்கள் இயல் விருது சார்ந்த காலச்சுவடு கண்ணனின் முகநூல்  போஸ்ட்டை நானும் பார்த்தேன்.   இது மாதிரி இட்டுக்கட்டிய பொய்களை தொடர்ந்து அவர் எழுதிகொண்டே  இருக்கிறார். அது தெரிந்ததுதான், ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. தனது அப்பா சு.ரா என்பதால், சு.ரா அப்படி சொன்னார் இப்படி சொன்னார் என்று அவர் எதை வேண்டுமானாலும் இட்டுக்கட்டி சொல்லலாம், அதை நம்புவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.

இந்த பதிவையே  எடுத்துக்கொள்ளுங்கள்,  நான் பார்த்தபோது சரவணன் விவேகாந்தன்தன் மறுப்பு தெரிவித்து கமெண்ட் உடனே போட்டிருந்தார், அப்போது 15 லைக்குகள்தான் இருந்தது. கண்ணனின் அந்த பொய் பதிவு மொத்தமுமே நிற்பது “உங்களுக்கும் சு.ரா வுக்கும் அடுத்ததடுத்து ஒரே வருடத்தில் விருது கொடுக்கப்பட்டது” “அதுவும் 2001 ல்” என்ற இரண்டே தகவல்கள் மேல்தான். அந்த இரண்டுமே பொய், அந்த பதிவின் கீழேயே அது மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்க்கு பின்னும் 40 பேர் லைக் போட்டிருக்கிறார்கள். அந்த பதிவில் வேறு ஒருவரும் ஏன் இப்படி பொய் சொல்லுகிறீர்கள் என்று கேட்கவோ, அல்லது இந்த பதிவை எடுத்துவிடுங்கள் என்று சொல்லவோ இல்லை.

இப்படியான எல்லா அவதூறுகளிலும் தகவல் பிழைகளை சார்ந்து மட்டுமே அவற்றை பொய் என்று நிரூபிக்க முடியும் இல்லையா?, ஒருவேளை தகவல்பிழை இல்லாமல் ஆனால் அதைச் சுற்றி பொய் கட்டமைக்கப்பட்டால்? அதை தவறு என்று கூட நம்மால் நிரூபிக்க முடியாது இல்லையா? அதுவும் “மகன்” எனும் பெரும் தகுதி கொண்டிருப்பவர், சு.ரா என்று எல்லோரும் மதிக்கும் ஒரு இலக்கிய ஆளுமையின் எண்ணங்களாக, கருத்துக்களாக இப்படி சொல்லிக்கொண்டே இருந்தார் எனில் அதை பெரும்பாலானவர்கள் “உண்மைதான் போல” என்று நம்பவே செய்வார்கள்.

சமீபத்தில் கண்ணனின் நண்பர் ஒருவர் எழுத்தாளர் சி. மோகன் உங்களை பற்றி சொன்னதாக ஒரு அவதூறு பரப்பப்பட, அதை கேள்விப்பட்டு சி.மோகனே அதை மறுத்து கருத்து சொல்லி அதை பொய் என்று நிரூபிக்க வேண்டி இருந்தது. பொய்யின் “பலமே” அது வெகு விரைவில் பல்லிளித்துவிடும், நிலைத்து நிற்கும் சக்தியற்றது என்பதுதான்.

இப்போது இன்னொன்று ஞாபகம் வருகிறது, இதே கண்ணன் அசோகமித்திரனின் மறைவை ஒட்டி எழுதிய குறிப்பில் ’ அசோகமித்திரனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது அப்போதைய திமுக அமைச்சர் தமிழ்க் குடிமகன் கன்னட எழுத்தாளர் யூ.ஆர் அனந்தமூர்த்திக்கு அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் ஒரு கடிதம் எழுதியதாகவும் சாகித்ய அகாதமி வரலாற்றிலேயே இப்படி ஒரு கடிதம் எழுதபட்டதில்லை என்று அனந்த மூர்த்தி அதிர்ச்சி அடைந்ததாகவும், இதை யூ.ஆர் அனந்த மூர்த்தியே தன்னிடம் கூறியதாகவும்’ ஒரு அப்படடமான பொய்யை எழுதினார்.

அது அசோகமித்திரன் என்ற ஒரு பெரும் இலக்கிய ஆளுமையின் மறைவின் போது என்பதனால் மிகப்பெரும் அதிர்ச்சியை   உருவாக்கியது. அதுமட்டுமல்ல கலைஞர் ஒரு முறை அனந்த மூர்த்தியை விமானத்தில் நேரில் சந்தித்தபோதும் அசோகமித்திரனுக்கு விருது கொடுத்ததை ஆட்சேபித்தார் என்றல்லாம் இட்டுக்கட்டி எழுதினார்.

அதை அப்போதே நீங்கள் “மு.கருணாநிதி சமகாலத்தின் முதன்மை ஆளுமை. அசோகமித்திரன் வரலாற்றில் வளர்பவர். ஆகவே  கண்ணன் சொல்லும் கூற்றை  வெறும் அரட்டை என எளிதாக ஒதுக்கிவிடமுடியாது. அதற்கு  வரலாற்றில் நிலைகொள்ளும் தன்மை உண்டு. எனவே கண்ணன் ஆதாரங்களை வெளியிட வேண்டும் அல்லது வெளிப்படையாக மன்னிப்பு கோருவதே இத்தருணத்தில் அவர் செய்யவேண்டியது” என்று கூறினீர்கள். அப்போது மனுஷ்யபுத்திரன் ஒருவர் மட்டுமே கண்ணனின் அவதூறுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

கண்ணன் கருணாநிதி குறித்துச் சொன்னது மிகக்கடுமையான, நேரடியான குற்றச்சாட்டு. அவருடைய ஆளுமையையே கீழ்மையாகக் காட்டுவது. அது உண்மை என்றால் இந்தியாவின் முதல்வர்களில் எவரும் செய்யாத ஒன்றை அவர் செய்திருக்கிறார். அந்தப்பழி என்றும் அசோகமித்திரன் பெயருடன் இலக்கிய உலகில் பேசப்படும் என்று கண்டித்தீர்கள்.

கருணாநிதி இலக்கியவாதிகள், கலைஞர்கள் சார்ந்து மிக மதிப்புடனே எப்போதும் நடந்திருக்கிறார். ஜெயகாந்தன் அதீத திராவிட எதிர்ப்பில் இருந்த காலங்களிலும், அதற்குப் பின்னும் எப்போதும் மதிப்புடனே நடத்தப்பட்டிருக்கிறார். கருணாநிதி ஒரு பரப்பியல் கட்சி தலைமையாக தமிழை அதன் வெகுஜன தளத்தில் வெகுஜன தன்மை அளவில் பரவல் செய்தார், ஆனால் அதே நேரத்தில் அதன் இலக்கியபரப்பில், அதன் மேம்பட்ட தளத்தில் அதை செய்ப்பவர்கள் சார்ந்து மதிப்புடன் நடத்தினார். அதை குலைக்கும் எதையும் செய்தவரில்லை. கலாப்பிரியா தொடங்கி பிரபஞ்சன் வரை அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஜெயகாந்தனும்.

அப்படிப்பட்ட ஒருவரை வருங்காலத்தில் அவருடைய இயல்பை வகுக்கும் செய்தியாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டவர் சார்ந்து எந்த எதிர்ப்பும் இல்லவேயில்லை. திராவிட எழுத்தாளர்கள், அல்லது அதன் அடுத்தகட்ட சிந்தனைத் தளத்தை உருவாக்குபவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எழுத்தாளர்கள் கூட அதை எதிர்க்கவில்லை. இப்போதும் அவர்கள் கண்ணனின் இந்த பொய்மூட்டைப் பதிவுகளுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் இருக்கும் ஒரே ஆறுதல் ஒரு சாதாரண  தகவலைக் கூட சரிபார்த்து ஒரு பொய்யைக்  கட்டமைக்கமுடியாத  அளவிலான ஒருவராக கண்ணன் இருப்பதே :-) . இன்னும் இதுபோல் எவ்வளவு பொய்களை அவர் கட்டமைத்து சென்றாலும் அதற்க்கு எந்த மதிப்பும் இருக்காது.

அன்புடன்

பிரவீன் கார்த்திக்

அன்புள்ள பிரவீன்

உண்மையில் இந்த வகையான வம்புகளின் அடிப்படையே இவற்றுக்கு இருக்கும் ஆதரவுதான். அதற்குப்பின்னால் முதன்மையான விசையாக இருப்பது பலசமயம் எளிமையான சாதிப்பற்று. அதன்பின் தனிப்பட்ட காழ்ப்புகள், இலக்கியக் காழ்ப்புகள். மிகமிக தெளிவான சார்புநிலைகளும் தெரிவுகளும் ஒவ்வொருவருக்கும் உண்டு.

அசோகமித்திரனைப் பற்றி நான் சொன்ன செய்தி ஒன்று பிழை என சொல்லி கொதிப்பும் கொந்தளிப்புமாக எழுதப்பட்ட வசைகள், நேரடி அவமதிப்புகள் நூற்றுக்கும் மேல். முப்பதாண்டுகளாக அசோகமித்திரனை எழுதி எழுதி முன்னிறுத்தியவன், அவருக்காக மலர்கள் வெளியிட்டவன் நான். நான் அவரை ‘அழிக்க’ முயல்கிறேன் என்று குற்றச்சாட்டு. ஆனால் என்னிடம் ஆதாரம் கேட்ட ஒருவர்கூட கண்ணனிடம் அவர் எழுதிய அவதூறுக்கு ஆதாரம் கேட்கவில்லை [என்னிடம் அசோகமித்திரனின் கடிதமே ஆதாரமாக உள்ளது, ஆனால் இப்போது அதை வெளியிடப்போவதில்லை]

இங்கே நாம் கவனிக்கவேண்டிய ஒன்று உண்டு. இத்தகைய அவதூறுகளில் வம்புகளில் திளைப்பவர்கள் அதைப்பற்றி கேட்டால் உடனே இலக்கியவாதிகளைப் பற்றிய நினைவுக்குறிப்புகளைச் சுட்டிக்காட்டி ‘அதை மட்டும் எழுதலாமா?’ என்பார்கள். நம்மிடம் படைப்பிலக்கியவாதிகள் மற்றும் சிந்தனையாளர்கள் பற்றிய நினைவுக்குறிப்புகளுக்கும் இதைப்போன்ற எளிமையான வம்புகளுக்கும் நடுவே வேறுபாடு உண்டு என்னும் புரிதல் இல்லை.

அறிவுத்தளச் செயல்பாடு கொண்டவர்களைப் பற்றிய நினைவுக்குறிப்புகள் அறிவியக்கத்தின் முக்கியமான கூறு. நான் சுந்தர ராமசாமி, ஞானி உட்பட பலருடனான என் உரையாடல்களை நினைவுப்பதிவுகளாக எழுதியிருக்கிறேன். ஆனால் அவர்கள் தங்கள் சக எழுத்தாளர்களைப் பற்றி, தனிமனிதர்களை பற்றிச் சொன்ன தனிப்பட்ட செய்திகள் எதையுமே பதிவுசெய்ததில்லை. கடிதங்களாக பதிவான கூற்றுக்களே என் கையில் இருந்தபோதும்கூட.

அத்துடன் நான் எழுத்தாளர்களின் தனிவாழ்க்கை, குறிப்பாக அவர்களின் குடும்பம் பற்றி ஒருவரி கூட எழுதியதில்லை. அவர்களின் குடும்பத்தவரின் பெயர்களைக்கூட குறிப்பிட்டதில்லை. பலசமயம் அவர்களின் குடும்பத்தவர் எனக்கு நெருக்கமானவர்கள் என்ற போதிலும். சிலருடன் கசப்பான அனுபவங்களும் உண்டு என்ற போதிலும். உதாரணமாக சு.ரா.நினைவின் நதியில் நூலில் கண்ணன் பற்றி எதுவுமே இல்லை. ஏனென்றால்  இந்த ஆளுமைகள் நமக்கு எழுத்தாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் மட்டுமே அறியவந்தவர்கள், அந்த முகமே நமக்குரியது. அதைப்பற்றி மட்டுமே நாம் பேசவேண்டும்.

ஏன் அவர்களைப்பற்றிய நினைவுகள் எழுதப்படவேண்டும்? என்ன காரணத்தால் உலகம் முழுக்க அவை எழுதப்படுகின்றன? எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தனிப்பட்ட முறையில் சொல்லும் விஷயங்கள், உரையாடல்களில் எழுந்து வரும் கருத்துக்கள் முக்கியமானவை. ஏனென்றால் அவை தன்னிச்சையாக நிகழ்பவை. திட்டமிடப்படாத கருத்துக்களுக்கு சிந்தனையில் ஓர் இடம் உண்டு. அவை ஆழுள்ளத்தின் வெளிப்பாடுகள். மேலும் ஒரு கருத்து ஒரு வாழ்க்கைச் சந்தர்ப்பத்துடன், ஒரு சூழலுடன் இணைந்து வெளிப்படும்போது மேலதிக பொருளை அளிக்கிறது

எழுத்தாளர்கள் நம்மிடம் தனிப்பட்ட முறையில் பேசுபவை நம்மில் ஆழமான விளைவை உருவாக்கி நம் சிந்தனையில் நீடிக்கின்றன. அந்த தனிப்பட்ட உரையாடல்கள் வழியாகவே நாம் அவர்களை ஆழமாக அறிகிறோம். அவர்களை ஆசிரியர்களாக ஏற்கிறோம். நித்யா எழுதிய நூல்கள் பல்லாயிரம் பக்கங்கள் உள்ளன. அதிலுள்ள நித்யா எல்லாருக்குமானவர். என்னிடம் பேசியவற்றால் நான் அடைந்த நித்யா எனக்கானவர். நான் அவரைத்தான் முன்வைக்க முடியும்.

அவ்வண்ணம் அவரை முன்வைக்கையில் நான் என்னையும் சேர்த்தே முன்வைக்கிறேன். அவருடைய கருத்துக்கள் அல்ல அவை, அவர் என்னுடன் பேசும்போது உருவானவை. ஆகவே அவற்றில் நானும் உண்டு. நான் அவருடன் உரையாடியதைச் சொல்லும்போது உண்மையில் நான் உருவாகி வந்ததை பற்றியும்தான் சொல்கிறேன். என்னை பிரித்துக்கொண்டு அவற்றை முன்வைக்க முடியாது.

உண்மையில் ஏதேனும் ஓர் ஆசிரியருடன் உரையாடியவர்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்பது எளிதில் விளங்கும். நான் எப்போதும் சொல்வதுதான், நூல்களின் வழியாக சிந்தனைகளையே பெற முடியும், சிந்திப்பது என்பதை ஆசிரியரிடம் நேரடியாகவே கற்றுக்கொள்ளமுடியும்.

உரையாடலில் பதிவாகும் கருத்துக்கள் எப்போதும் சற்று மாறுபட்டவையாகவே இருக்கும். அவை மேலதிகக்கூர்மையுடன் இருக்கலாம். பெரும்பாலும் அவை துண்டுபட்டவையாகவே இருக்கும். பொதுவாக அவ்வாசிரியர்கள் நூல்வடிவில் பதிவுசெய்தவற்றின் நீட்சியாக அக்கருத்துக்கள் இருக்கும். நூல்வடிவில் வெளிப்படுத்திய கருத்துக்களின் முன்வடிவங்களாகவும் அவை இருக்கக்கூடும்.பலசமயம் முழுமையாக வளர்ச்சியடையாமல் ஒரு மின்னல் போல வந்துசென்ற கருத்துக்களாக அவை இருக்கும்.

அந்த எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை முழுமையாகப் புரிந்துகொள்ள அவை உதவியானவை. சிலசமயம் அவர்களின் நூல்கள் அளிக்கும் அணுக்கத்தை விட இந்த உரையாடல்பகுதிகள் ஆழ்ந்த நெருக்கத்தை அளிக்கும். அவர்களின் நூல்களுக்குள் நுழைவதற்கான சிறந்த வாயில்களை திறக்கும். அவர்களின் கருத்துக்கள் உருவாகி வந்த களத்தை அவை காட்டும். நல்ல வாசகன் அந்த ஆசிரியருடன் ஒரு கற்பனையான உரையாடலை தான் நிகழ்த்திக்கொள்ள இந்த வகையான உரையாடல்பதிவுகள் உதவும்.

இத்தகைய கருத்துக்கள்  நிகழ்ந்து அக்கணமே காற்றில் மறைபவை. கேட்ட நம் நினைவில் மட்டுமே நீடிப்பவை. ஆனால் அவை பண்பாட்டின் சொத்துக்கள். அடுத்த தலைமுறைக்கு உரியவை. ஆகவே அவை பதிவாகவேண்டும். நான் சுந்தர ராமசாமி, நித்யசைதன்ய யதி, ஆற்றூர் ரவிவர்மா, ஞானி, ஜெயகாந்தன் போன்றவர்களின் உரையாடல்களை அவ்வண்ணம் பதிவுசெய்திருக்கிறேன்.சு.ரா, ஞானி பற்றிய என் நினைவுப்பதிவுகளை வாசிப்பவர்கள் அவர்களின் தனிப்பட்ட ஆளுமையை மேலும் அணுக்கமாக அறியவும் , தாங்களே கற்பனையில் விரிவாக உரையாடவும் முடியும். அதுவே அந்நூல்களின் பங்களிப்பு.

என் நினைவுப்பதிவுகள் எல்லாமே அவ்வெழுத்தாளர்களின்  சிந்தனைகளுக்குள் செல்வதற்கான வழிகாட்டிகளாக, அவர்களை மேலும் புரிந்துகொள்ள வழிவகுப்பவையாகவே இருக்கும். அவர்களின் பேச்சில் உள்ள கவித்துவத்தை, நகைச்சுவை உணர்வை , அவர்கள் சிந்திக்கும் முறையை வெளிக்காட்டும் வரிகள் மட்டுமே என்னால் பதிவு செய்யப்படும். அவ்வாறல்லாத மனிதர்களை நான் பதிவுசெய்வதே இல்லை. அப்படி நான் நன்கு பழகியறிந்து ஒருவரி கூட பதிவுசெய்யாத ஆளுமைகளே மிகுதி.

நான் பதிவுசெய்யும் ஆளுமைகள் தமிழ்ப்பண்பாட்டுக்கு முக்கியமானவர்கள் என என்னால் நினைக்கப்படுபவர்கள். ஆசிரியர்கள் என்று நான் மதிப்பிடுபவர்கள். அவர்களின் கருத்துக்கள் மட்டுமல்ல, அவர்களின் ஆளுமையும் அறிவுலகுக்கு முக்கியம் என நினைக்கிறேன். ஆகவே நான் கூறும் செய்திகள் அவ்வாசிரியர்களின் ஆளுமையை ஒளியுடன் காட்டுவனவாக இருக்கும். ஒருபோதும் அவர்களை எதிர்மறையாகக் காட்டுவனவாக இருக்காது. எந்நிலையிலும் அவர்கள் தனிப்பட்ட முறையில் தன்னைப்பற்றியோ பிறரைப்பற்றியோ சொன்ன செய்திகளாக இருக்காது.

உதாரணமாக சுந்தர ராமசாமி பற்றிய என் நினைவுக்குறிப்பில் ஓர் இடத்தில்கூட அவர் பிரமிள் குறித்து என்ன உளநிலை கொண்டிருந்தார்,என்ன சொன்னார் என்று இருக்காது. சுந்தர ராமசாமி எழுபதுகளின் சிற்றிதழ்ச்சூழலில் மிகப்பெரும் கசப்புகளுக்கு ஆளானவர், அக்கசப்பு அவரிடமும் உண்டு என்று அனைவருக்கும் தெரியும். அதை அவர் என்னிடம் சொல்லியிருக்கக்கூடும் என எவரும் ஊகிக்கமுடியும். அதை ஒருவரிகூட நான் பதிவுசெய்யவில்லை. அவருடன் அணுக்கமாக இருந்த என்னால் அவருடைய தொழில் சார்ந்த செய்திகளை எளிதாகச் சொல்லமுடியும். ஆனால் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் அது இலக்கியவாசகனுக்கு எவ்வகையிலும் உதவுவது அல்ல.

அதேபோல ஞானி அவருடன் முரண்பட்ட முன்னாள் தோழர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர், அவர் அவர்களைப்பற்றி கடுமையாக எழுதிய கடிதங்களே உள்ளன. ஆனால் என் நினைவுக்குறிப்புகளில் இலக்கியம், அரசியல், தத்துவம் சார்ந்து அவர் சொன்ன கருத்துக்கள் மற்றும் பார்வைக்கோணங்கள் மட்டுமே உள்ளன.ஜெயகாந்தனுக்கும் சுந்தர ராமசாமிக்குமான கசப்புகளைப் பற்றியே நான் எழுதமுடியும். ஆனால் அதில் ஏதேனும் முதன்மையான இலக்கியக்கருத்து பேசப்பட்டிருந்தாலொழிய அதை பதிவுசெய்யவேண்டியதில்லை என்றே நான் கொள்வேன். இது பொதுவாக அறிவுச்சூழலில் கையாளப்படும் நெறி.

ஆனால் இப்படி நான் தனிப்பட்ட உரையாடல்களில் பேசப்பட்ட ஆழ்ந்த வரிகளை நினைவுக்குறிப்புகளில் மேற்கோள் காட்டும்போதெல்லாம் ஒரு அரைவேக்காட்டுக் கும்பல் கிளம்பிவந்து ‘ஆதாரம் உண்டா? அவர் சொன்னார் என்று மட்டும் சொன்னால் ஆயிற்றா?’ என்று கேட்பது வழக்கம். உலக இலக்கியத்தில் நினைவுக்குறிப்புகள் பல்லாயிரம் உள்ளன. எந்த நினைவுக்குறிப்புகளிலும் ஆவண ஆதாரங்கள் அளிக்கப்படுவதில்லை, அதற்கு வாய்ப்புமில்லை என்பது இந்த அசடர்களுக்கு தெரியாது. சொல்லிப்புரியவைக்கவும் முடியாது.

நினைவுக்குறிப்புகளை எழுதுபவனை நம்பலாம், அல்லது நம்பாமலிருக்கலாம். நினைவுக்குறிப்புகளில் சொல்லப்படும் செய்திகள், சிந்தனைகள் பயனுள்ளவையா என்பது மட்டுமே கருத்தில்கொள்ளப்படவேண்டும். நினைவுகள் அவற்றைச் சொல்பவனின் தகுதியால்தான் ஏற்பைப் பெறுகின்றன. பாரதி பற்றி வ.ரா எழுதிய நினைவுகள், தொ.மு.சி.ரகுநாதன் புதுமைப்பித்தன் பற்றி எழுதிய நினைவுகள், எம்.வி.வெங்கட்ராமின் என் இலக்கியநண்பர்கள் போன்ற நினைவுகள், சுந்தர ராமசாமி எழுதிய நினைவோடை நூல்கள் வரை இதுதான் இலக்கிய வழக்கம்.

ஆனால் இவர்கள் எவரும் இதோ கண்ணன் எழுதியிருப்பதுபோல தவறான செய்திகள் வழியாக ஆளுமைச்சிதைப்பை நிகழ்த்தும் குறிப்புகளின்கீழே சென்று ஆதாரம் உண்டா என்று கேட்கமாட்டார்கள். அங்கே அதை ரசிக்கவும் ஆதரிக்கவும் செய்வார்கள்.  இதுதான் நம் சூழலின் உண்மையான உளநிலை. இந்த வம்பர்மனநிலையை நம்பியே இவை எழுதப்படுகின்றன. இவற்றை ஓரளவுக்குமேல் பொருட்படுத்தக்கூடாது. மறுப்பை குறைந்த சொற்களில் பதிவுசெய்தபின் கடந்துசென்றுவிடவேண்டும், அவ்வளவுதான்

நாம் நம்மை வாசிக்கும் அடுத்த தலைமுறையிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்னும் உணர்வு நமக்குத்தேவை. அவர்கள் இன்றைய சூழலில் வந்து குவியும் ஏராளமான செய்திகள், கேளிக்கைகளைக் கடந்து இங்கே வந்து நேரம் அளித்து படிக்கிறார்கள். அவர்கள் முன் இப்படி சில்லறை வம்புகளைக் கொட்டிக்கொண்டிருப்பது அவர்களை உணர்வுமோசடி செய்வதுதான். அவர்களின் சிந்தனைத்திறனையே இந்த வகையான வம்புகள் மழுங்கடிக்கின்றன.

ஆகவேதான் பெரும்பாலான வம்புகளை கடந்துசென்றுவிடுகிறேன். எனக்கு சொல்லவோ விளக்கமளிக்கவோ முடியாமையால் அல்ல. அற்பமான பார்வை கொண்டவை, அடிப்படையில் அறியாமையின் மூர்க்கம் கொண்டவை, சாதிமத உள்நோக்கம் கொண்டவை, கீழ்த்தர மொழியில் பேசுபவை என நான் நினைக்கும் கூற்றுக்களை முழுமையாகவே புறக்கணித்துவிடுகிறேன். என் அறிவுச்செயல்பாட்டின் களத்தை நானேதான் வரையறை செய்துகொள்ளவேண்டும். என் செயல்களின் இயல்பையும் இலக்கையும் நான் வகுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த நீண்ட குறிப்புகூட இதிலுள்ள வம்புகளுக்கான பதிலைத் தவிர்த்துப்பார்த்தால் நினைவுக்குறிப்புகள் இலக்கியத்தில் ஏன் முக்கியம் என்ற ஒரு விளக்கத்தை கொண்டிருக்கிறது . அது வாசகனுக்கு உதவக்கூடியது. இந்த அவதூறு, இதை எழுதிய எளிய உள்ளம் எல்லாம் பொருளற்றுப் போகும்போதுகூட நினைவுக்குறிப்புகளின் தேவை மற்றும் அறம் பற்றிய இந்த விளக்கம் வாசகனுக்கு தேவையானதாக இருக்கலாம்.

எழுதிமுடித்தபின் இதை அழித்துவிடாமல் வெளியிட இதுவே காரணம்

சு.ரா.நினைவின் நதியில்

ஞானி,தத்துவம்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு நிலமும் மானுடரும்