அசோகமித்திரன் பார்வையில்

அரிதாக நிகழும் ஒன்று அண்மையில் எனக்கு அமைந்தது. அசோகமித்திரனின் நூல் ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன். அதில் அவர் என்னைப்பற்றி எழுதியிருந்த மதிப்புரை  ஒன்றைக் கண்டேன். முன்பு நான் அதை படித்திருக்கவில்லை. எங்கே எழுதியிருக்கிறார் என்றும் தெரியவில்லை.2006ல் எழுதியிருக்கிறார். 14 ஆண்டுகள் கழித்து, அவர் மறைந்த பின்பு, அது என் கண்களுக்குப் படுகிறது.

அசோகமித்திரன் என் படைப்புக்களைப் பற்றி தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார். அவருக்கு என் படைப்புக்களில் உள்ள கற்பனையின் பயணங்கள்மேல் மிகுந்த ஈடுபாடு இருந்தது என நினைக்கிறேன். 2000 வாக்கில் ஒருமுறை பேசும்போது ‘எழுத்து என்பது கற்பனையின் ஆற்றல் என்றுதான் நினைக்கிறேன். இங்கே வந்துசேர ரொம்ப பயணம் செய்யவேண்டியிருந்தது’ என்று சொன்னார்.

பாரம்பரியக்கதை சொல்லி

அசோகமித்திரன்

நூறாண்டுத் தமிழ் நவீனப்படைப்பிலக்கியத்தில் ஜெயகாந்தனுக்கு இணையாக பரபரப்பும் பரவலான வாசிப்பும் பாராட்டும் வசையும் பெற்றவர் ஒருவர் இருக்கக்கூடுமானால், அது ஜெயமோகன் தான். இருவருமே இந்த வினை – எதிர்வினை உச்சத்தை நாற்பது வயதுக்குள் பெற்றது இன்னுமொரு ஒற்றுமை. இருவருடைய சிறு பிராயமும் இளமைத்துவக்கமும் புனைகதைக்கேயுரிய இன்னல் நிறைந்ததாக அமைந்துவிட்டன. இதெல்லாவற்றையும் மீறி இருவரும் மனிதர் மீது அக்கறையுடனும், எவர் மீதும் ஏளன நோக்கு இல்லாமலும் மிகத்துரித கதியில் புனைகதை படைத்தது மனித இனத்தின் வியக்கத்தக்க சாத்தியத்தை நிரூபிக்கிறது. ஜெயகாந்தனுக்கு இன்று வயது 70, ஜெயமோகனுக்கு 42. மிகச்சில மாற்றங்கள் தவிர, ஜெயகாந்தனின் எழுத்து ஒரு திட்டமிட்ட பாதையில்  ஒத்த அம்சங்களோடு சென்றிருக்கிறது. ஜெயமோகனின் புனைகதை முயற்சியில் திட்டமிடல் இருந்தாலும் அவருடைய புனைகதை படைப்புகள் ஒன்றைப் போல இன்னொன்று ஒத்த அடையாளங்களை கொண்டிருக்கவில்லை.

ஜெயமோகனின் படைப்புகளை மதிப்பீடு செய்ய முற்படும்போது உடனே ஜெயகாந்தன் நினைவு வருவது இயல்பு என்றே தோன்றுகிறது. இருவருமே கதை சொல்பவர்கள்.  கதையம்சம் ஜெயகாந்தனின் படைப்புகளில் உள்ளது போலவே ஜெயமோகனிடமும் இருக்கிறது. ஆனால் காலத்தால் பின் வந்தவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் உலக இலக்கியத்தின் புதுப்போக்குகளை உள்வாங்கிக்கொண்டு எழுதத் தொடங்கியவர். ஜெயமோகனின் பல படைப்புகள் தென்னமெரிக்க  எழுத்தாளர்களை இணைத்து நினைக்க வைக்கின்றன. ஓர் உதாரணம் மூன்று சரித்திரக்கதைகள். இது தவிர இன்னும் சில கதைகளை சரித்திரத்திலிருந்து கூறியிருக்கிறார்.  பாடலிபுத்திரம், ரதம். ஆனால் மிக முக்கியமாகவும் ஆழ்ந்த அனுபவம் தருபவையாகவும் உள்ளவை  தமிழ்நாடு – கேரள எல்லையை ஒட்டிய மலைப்பிரதேச மக்களைப்பற்றியவை. இவை அமானுஷ்ய அனுபவங்களை கூறுவது போலிருந்தும் அடிப்படையில் கருணையால் வெளிப்படும் கதைகள். பேய் பிடிப்பதும் பேய் விரட்டுவதும் எல்லாக்கலாச்சாரங்களிலும்  இன்னும் இருக்கின்றன. இந்த அம்சம்  அவருடைய புனைகதை வகைகள் அனைத்திலும் திரும்ப திரும்ப நேருகின்றது. (கேபிரியல் கார்சியா மாக்வெஸ் புனைகதைகளிலும் இத்தகைய தன்மையுண்டு. அவருக்கும் முன்னோடி வில்லியம் ஃபாக்னர்)

ஜெயமோகனின் நடையில் அணிகள் சுயமாகவும் பிரமிக்க வைப்பதாகவும் உள்ளன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால்  எழுதிய கதையிலிருந்து ஒரு பகுதி. “அந்தக்காலத்தில் குலசேகரம் தாண்டினால் உச்சிப்பொழுதில் கூட நின்ற யானை மறையும் இருட்டு அதற்கப்பால் மூளியலங்காரி கண்ணீர் போல முப்பது நாளும் மழை .புலி போட்ட மீதத்தை நரி தின்கிற காடு. வானம் தெரியாமல் இலைப்படப்பு வழியாக மூத்த பட்டன் பூணூல் போல் ஒற்றையடிப்பாதை” சூழ்நிலை என்று தனியாக விவரிக்காமலே ஓர் அகன்ற இயற்கைச் சித்திரம் உருவாகிவிடுகிறது. சமீபத்திய கதையிலிருந்து ஓர் உதாரணம்: “தென் திருவிதாங்கூரின் ஒரே கிராத மூர்த்தி இதுதான். கிராதன் என்றால் காட்டுமிராண்டி, வனவாசி. பாசுபதம் தேடிப்போன அர்ச்சுனனை சிவன் கிராதனாக வந்து வழிமறித்துப்போரிட்டு பிறகு பாசுபதம் அளிக்கும் கிராத விருத்தம் என்ற கதகளி ஆட்டத்தை இங்கு ஒவ்வொரு வருடமும் போட்டாக வேண்டும் என்று நடைமுறை விதி உள்ளது” மகாபாரதப்பரிச்சயம் உள்ள வாசகருக்கு இது அந்த முழு காவியத்தையும் கண்முன் நிறுத்தும்

‘போதி” என்றொரு கதை இதிலும் குறிப்பிடத்தக்க வரிகள். ‘ஜடையை அவிழ்த்துப்போட்ட ராட்சசி போல ஒரு மரம்’ கதை ஒரு மடம் பற்றியது. பெரியவருக்கு காலில் புண் அழுகல் கண்டு புரையோடிக்கொண்டிருக்கிறது. மடத்தில் ஏராளமான பழஞ்சுவடிகள் ஆனால் திட்டமிட்டுக்கலந்தது போல ஒரு கட்டும் ஒரு பொருளையும்  பூரணமாகவும் புரியும்படியாகவும் கொண்டிருக்காது. கரையான் இந்த சூழ்நிலையும் ஒரு சிக்கல் ஒரு திடுக்கிடும் தீர்வு

ஜெயமோகனின் கதைகளின் ஒரு தனிச்சிறப்பு பலவற்றுக்கு துணைப்பாடம் எழுதி விளக்கம் அளிக்ககூடியதாக இருப்பது! இது ஒரு தடையாகவும் இருக்கக்கூடியது. ’போதி’ கதையிலேயே ஒரு விவாதம் விவேகானந்தரை எளிதாக பெரியவர் உதறி தள்ளுகிறார். சைவம் வைணவம் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை அறியாதவர்கள்தான் இரண்டையும் சேர்த்துப்பேசுவார்கள் என்கிறார்.

மிகக்குரூரமான சித்திரங்களும் இவருடைய படைப்புகளில் பல இடங்களில் வருகின்றன. (போதி தவிர ஒரு உதாரணம் சந்திப்பு என்ற கதை

“நீ என்ன கண்டாய்?”

”ஓர் அறை… ரத்தத்தால் தரையும் சுவர்களும் நனைந்திருக்கக்கூடிய கல்லாலான அறை அதில் கருங்கல் பீடத்தின் மீது ரத்தத்தில் ஊறிய வேப்பந்தழை படுக்கை மீது ஒரு பெண் அவளுடைய கைகளும் கால்களும் வீங்கியிருக்கின்றன. ஒரு கிழவி … ஒரு சதைத்துண்டை அந்தப்பெண்ணின் தொடைகளிலிருந்து எடுத்து கைகளைப்பிடித்து தூக்கி அவளுக்குக்காட்டுகிறாள்”

ஜெயமோகன் குறுநாவல்கள் என்ற நூலில் சில படைப்புகள் நீளத்தில் சிறுகதைகளை ஒத்தவை. ஆனால் வலுவான கதையம்சம் கொண்டவை. (பூமியின் முத்திரைகள், நிழலாட்டம்) திடுக்கிட வைப்பவை, இப்படியும் உண்டா என்றூ இளைய தலைமுறையினர் கேட்கக்கூடியவை. இந்த அம்சம், அவருடைய படைப்பிலக்கியத்தில் திரும்ப திரும்ப நிகழ்கிற்து. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படியோர் மரபு இருந்திருக்கவேண்டும். ‘கதா சரித சாகர’த்தில் இந்த பீபத்சம் என்ற சுவை தோன்றும் இடங்கள் பல உள்ளன. ஆனால் அதற்குத் தொடர்ச்சி கிடையாது. 19-ஆம் நூற்றாண்டில் மேலைய இலக்கியத்திலிருந்துதான் இது புத்துயிர் பெற்றது.

ஜெயமோகன் குறுநாவல்களில் அம்மன் மரம் என்றொரு படைப்பு சரித்திரம் கூறும் ஏதோ ஒருவன் வெற்றிகண்டான் இன்னொருவன் தோல்வியுற்றான் என்று  ஒருவாக்கியங்களில் முடிந்துவிடும். ஆனால் போர்க்களத்தில் அடிபட்டு நகரவும்முடியாமல் சாகவும் முடியாமல் தாகத்திற்கு தண்ணீர் இல்லாமல் இரவில் நரிகளும் நாய்களும் கைவிரல் கால்விரலைத்துண்டித்துச் செல்லும்போது தடுக்க முடியாமல் தவிப்போர் சித்திரம் இராது. அதேபோல ஒவ்வொரு போருக்குப்பிறகும் தோல்வியுற்றோனின் நகரம் மக்கள் சூறையாடப்படும் கொடுமை சித்தரிக்கப்படாது. மலையாள நவீன இலக்கியத்தில் மார்த்தாண்ட வர்மா என்ற நவீனம் ஓர் முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. அந்த மார்த்தாண்ட வர்மா அவனை எதிர்த்தவர்களை கொன்று குவித்தான் கழுவேற்றினான் வீடுகளை தரைமட்டமாக்கினான்.

அனைத்திற்கும் மேலாக அவனுடைய எதிரிகளாக செயல்பட்ட எட்டு வீட்டு பிள்ளைமார்களின் அத்தனை பெண்களையும் சங்கிலியிட்டு இழுத்து சென்று மீனவர்களுக்கு தானம் செய்தான். இந்தக்கதையில்; ஒருவன் தன்னுடைய சொந்த அம்மாவை மார்த்தாண்ட வர்மா எட்டுவீட்டுப்பிள்ளைமார் வீட்டு பெண்களை சங்கிலியிட்டு இழுத்துப்போனதுபோல இழுத்துச்சென்று பேயோட்டும் என்று நம்பப்படும் புனித இடத்தில் பல நூறு பேரோடு கட்டுப்போட்டு வருகிறான். ”நூற்றுக்கணக்கான பெண்களை இங்கு இரும்புச் சங்கிலிகள் தொட்ட இடங்களில் அவர்கள் கைகளும் கால்களும் ரணங்களாகி அழுகியிருந்தன. எங்கும் அழுகிய உணவும் மலமும் சிதறிக்கிடந்த ஈக்கள் சுழன்று சுழன்று ரீங்கரித்தன…”

ஜெயமோகனின் கதைகளில் இப்படித்திரும்ப திரும்ப அவலச்சுவையும் அருவருப்பு சுவையும் வருவதை போஸ்ட்மாடர்ன் கூறுகள் என்று சொல்லலாம். ஆனால் நான் படித்தவரை இந்த சுவை நிகழும் கதைகள் மற்றும் அவற்றின் சூழ்நிலை ஒரு பாரம்பரிய கதை சொல்லுபவனுக்கு உரியதாக உள்ளன. எந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சிகளின் விவரங்களை எடுத்துரைக்கலாம் என்பது பற்றி கருத்துவேற்றுமை இருக்ககூடும். வேறு பல கட்டங்களில் ஜெயமோகனே கடுமையான சொற்சிக்கனத்தை கையாண்டியிருக்கிறார். வாழ்க்கை இளகிய அல்லது சுமையில்லாத தருணங்களை  மனிதனுக்குள் தராது. தரவே தராது என்று அழுந்த கூறுவது போலிருக்கிறது. அவருடைய படைப்புலகம் ஒரு விதிவிலக்கு. கிளிக்காலம் ஒரு நெடுங்கதை.

இரு நூல்களையும் முழு தொகுப்பு என்று குறிப்பிட்டிருப்பது வருத்தத்தை தருகிறது. அகன்ற பார்வை அனுபவம் இவற்றுடன் சொற்களால் எந்த நிகழ்ச்சியையும் மனநிலையையும் வடிக்ககூடிய ஆற்றல் கொண்ட இளைஞரின் இந்த நூல்கள் இவற்றோடு முடியக்கூடியவையல்ல.

இவருடைய சிறுகதைகளில் உள்ள சில அம்சங்கள் தான் குறுநாவல்களாகவும் நாவல்களாகவும் விரிந்திருக்கின்றன. அந்த விதத்தில் இவருடைய ‘பின் தொடரும் குரல்’ என்ற நாவல் மாறுபடுகிறது.

ஜெயமோகனை சாடுபவர்களின் ஒரு வசை அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பது அவர்கள் இவருடைய கதைகளை படித்திருக்கவே முடியாது எனலாம். இவருடைய படைப்புகள் நிகழ்ச்சிகள் நம்பிக்கைகள் பழக்கங்கள் ஆகியவற்றை ஒரு விஞ்ஞானிக்குரிய கூர்மையுடனும் நாணயத்துடனும் பதிவு செய்பவை. மனிதவியல் துறையினர் ஆர்வத்துடன் பரிசீலிக்கக்கூடிய பல வழக்கங்கள் சடங்குகள் இவருடைய கதைகளில் திரும்ப திரும்ப விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை அவருடைய  மிக விரிவான  புனைகதை களத்தில் ஓர் அத்தியாயம் மட்டுமே. இன்றைய எழுத்தாளர்களிலேயே கதைக்களத்தில் இவ்வளவு விதவிதமான கூறுகளை இவ்வளவு தன்னம்பிக்கையோடு தமிழில் எழுதியிருப்பவர் இவர்தான்.

ஜெயமோகனே ஒரு முன்னுரையில் கூறியிருப்பது போல அவருடைய நாவல்கள் அவருடைய குறுநாவல்களையும் சிறுகதைகளையும் பின் தள்ளிவிட்டன. அவர் நம்புகிறபடி இவ்விரு ‘முழு’ தொகுப்புகள் அந்த சூழ்நிலையை ஓரளவு சரிப்படுத்தவேண்டும். இரு நூல்களும் அக்கறையுடன் தயாரிக்கப்பட்டிருக்கின்றன

(2006)

முந்தைய கட்டுரைமனு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு இசைக்கொண்டாட்டம் -முன்னோட்டம்