தமிழ் வாசகர்களுக்கு அ.மா.சாமி அவர்களின் பெயர் பெரும்பாலும் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய எழுத்தை படிக்காத வாசகர்களும் இருக்க மாட்டார்கள். ராணி வார இதழின் ஆசிரியராக 44 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அவ்விதழில் குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன்,கும்பகோணம் குண்டுமணி போன்ற பல பெயர்களில் எழுதினார். அல்லி பதில்கள்கூட நெடுங்காலம் அவரால்தான் எழுதப்பட்டன.
ராணி வார இதழை பெரும்பாலும் தனியாளாகவே எழுதி நிரப்பி வாராவாரம் கொண்டுவந்தார். ராணி வார இதழ் ஆரம்பநிலைக் கல்வி மட்டுமே பயின்ற வாசகர்களுக்கு உரியது. ஆகவே மிகமிக எளிய மொழி கொண்டது. அதற்கான ஒரு நடையை அவர் உருவாக்கிக்கொண்டார். அந்த நடையே பின்னர் தினமலர் நாளிதழின் நடையாக ஆகியது. இன்று முகநூலில் புழங்கும் நடை அதுதான். அவ்வகையில் அவர் ஒரு முன்னோடி.
ராணி வார இதழ் ஒருகாலத்தில் தமிழில் மிக அதிகமாக விற்பனை கொண்டதாகவும் இந்திய அளவில் மலையாள மனோரமா வார இதழுக்கு அடுத்ததாக இரண்டாமிடத்திலும் இருந்தது.விற்பனையை கருத்தில்கொள்வதென்றால் இதழியலில் அவர்தான் தமிழின் மிகப்பெரிய சாதனையாளர்.
ஆனால் அவ்வடையாளங்களை அவர் விரும்பியதில்லை. அவர் எந்த மேடையிலும் அவ்வண்ணம் தோன்றியதில்லை. அவருடைய எந்தப்புகைப்படமும் எங்கும் வெளியானதில்லை. அவருடைய முகமே பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது. நான் அவரை ஒருமுறை சந்தித்து அறிமுகம் செய்துகொண்டிருக்கிறேன்
அவருடைய அறிவுலகச் சாதனை அவர் தமிழ் இதழியலின் வரலாற்றை தொடர்ச்சியாக எழுதியவர் என்பதே. நீண்டநாட்களாக அவர் அதற்கான தரவுகளை சேகரித்துக்கொண்டிருந்தார். அவரிடமிருந்த இதழ்த்தொகுப்பு மிகப்பெரியது.
அவருடைய தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி என்ற நூல் 1987ல் வெளிவந்தது.தமிழ் இதழியல் வரலாற்று ஆய்வில் அதுதான் இன்றும் அடிப்படையான முன்னோடி நூல்.
அதன்பின்னர் திராவிட இயக்க இதழ்கள்,வரலாறு படைத்த தினத்தந்தி, தமிழ் இதழ்கள் வரலாறு,இந்திய விடுதலைப் போர் , இந்து சமய இதழ்கள், தமிழ் இசுலாமிய இதழ்கள், தமிழ் கிறித்தவ இதழ்கள்,19 ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள் என இதழியல் வரலாறு சார்ந்தே பல நூல்களை எழுதியிருக்கிறார்.
அ.மா.சாமியின் ஆய்வுநூல்கள் அனைத்துமே முறையான சான்றுகளுடன் தொகுக்கப்பட்ட சீரான ஆவணத்தொகைகள். பொதுவாசகனுக்குக் கூட வியப்பும் திகைப்பும் அளிக்கும் செய்திகள் கொண்டவை. தமிழ்ப்பண்பாட்டை புரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் இன்றியமையாதவை
அ.மா.சாமியின் இயற்பெயர் அருணாச்சலம் மாரிச்சாமி. தன் 85 ஆவது அகவையில் காலமானார்.தமிழ் இதழியல் ஆய்வுகளில் அவர் என்றும் பேசப்படுபவராகவே இருப்பார்.
செய்திஎழுத்துக்கலை குறித்து ராணி ஆசிரியராக இருந்த அ.மா.சாமி முக்கியமான முன்னோடி வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார். அ.மா.சாமியின் இதழியல் ஆய்வுநூல்கள் சீராக தகவல்களை தொகுத்து அளிப்பவை.