ஊழல் இந்திய மரபா?

அன்புடையீர்! வணக்கம்!

இன்று…ஒரு WhatsApp பகிர்வில்… எனக்கு கீழ் கண்ட…ஒரு பகிர்வு வந்தது!

படித்ததில் நமது நாட்டின் மானம்..மற்ற நாடுகளில்… எப்படி பறக்கிறது..என்ற வருத்தம் ஏற்பட்டது!  அந்த பகிர்வு விவரமறியாமல் எழுதப்பட்டதாகவே… கருதுகிறேன்!  நாம் கடவுளுக்கு செலுத்தும்

காணிக்கை. உண்மையில் அவருக்கு தரப்படும் லஞ்சமா?இப்படி எழுதவும் நான் தயங்குகிறேன்!

நான் அப்பகிர்வை கீழே தருகிறேன்:

இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்?  அவர்களின் அணுகுமுறையில் என்ன தவறு?….

நியூசிலாந்தில் எழுதப்பட்ட ஒர் ஆயுவு கட்டுரை தெரிவிக்கிறது.

இந்தியர்கள்  ஹோபிசியன்   (hobbesian) தான்  (சுயநலத்தின் கலாச்சாரம்)

இந்தியாவில் ஊழல் ஒரு கலாச்சார அம்சமாகும்.  ஊழல் குறித்து இந்தியர்கள் குறிப்பாக மோசமாக எதுவும் நினைக்கவில்லை.  ஏனெனில் ஊழல் இயற்கையாகவே நிலவுகிறது.

ஊழலை சரிசெய்வதை விட இந்தியர்கள் சகித்துக்கொள்கிறார்கள்.i ந்தியர்கள் ஏன் ஊழல்வாதிகள் என்பதை அறிய, அவர்களின் முறைகள் மற்றும் செயல்களைப் பாருங்கள்.

முதலில்: மதம் என்பது இந்தியாவில் ஒரு வணிகமாகும்.  ஒரு பரிவர்த்தனை, அதில் கடவுள் பணம் செலுத்தி, அதற்கு பதிலாக ஒரு வெகுமதியை எதிர்பார்க்கும் ஒரு முறை. தகுதி இல்லாதவர்கள் கூட கடவுளிடம் பணம்  கொடுத்து   வெகுமதியை   கேட்கிறார்கள்.

கோவில் சுவர்களுக்கு வெளியே உள்ள உலகில், அத்தகைய பரிவர்த்தனையை “லஞ்சம்” என்று அழைக்கப்படுகிறது. ஒரு பணக்கார இந்தியர் கோயில்களுக்கு பணம் மட்டுமல்ல, தங்க கிரீடங்கள் மற்றும் ரத்தினக் கற்களையும் நன்கொடையாக வழங்குகிறார். அவருடைய பரிசுகள் ஏழைகளுக்கு அல்ல, கடவுளுக்கு தான்.

ஜூன் 2009 இல், கர்நாடக அமைச்சர் ஜி. ஜனார்தன் ரெட்டி திருப்பதிக்கு ரூ .45 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர கிரீடம் வழங்கினார் என்று The hindu  பத்திரிகை சொல்லுகிறது.

இந்தியாவில் உள்ள கோவில்களில் செல்வம் குவிந்துள்ளது, பில்லியன் கணக்கான ரூபாய் வீணடிக்கப்படுகிறது, அதை என்ன செய்வது என்று தெரியாமல் பெட்டகங்களில் தூசி பட்டு கிடக்கிறது.

சிந்தனைமிக்க, ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது பள்ளிகளைக் கட்டினர். ஆனால் இந்தியர்கள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் செல்லும்போது, ​​அவர்கள் அங்கு வழிபாட்டுத் தலங்களைக் கட்டுகிறார்கள்.

ஆசீர்வாதம் கொடுக்க கடவுள் கூட பணத்தை ஏற்றுக்கொள்ளும்  போது, அதே போல லஞ்சம்  பெறுவதில் தவறல்ல என்று இந்தியர்கள் நம்புகிறார்கள் .இதனால்தான் இந்தியர்கள் இவ்வளவு எளிதில் ஊழல் செய்கிறார்கள்.

இந்திய கலாச்சாரம் இத்தகைய பரிவர்த்தனைகளை மேன்மை ஆக தழுவுகிறது

அ: மக்கள் முற்றிலும் ஊழல் நிறைந்த அரசியல்வாதியை நிராகரிக்கவில்லை, மாறாக அவரை ஏற்றுக் கொண்டு  அடுத்த ஆட்சியை செய்ய  வைக்கிறார்கள்.  மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற ஒரு விஷயத்தை ஒருவர்  கூட யோசிக்க முடியாது.

ஆ: ஊழலை நோக்கிய இந்திய அறநெறி அதன் வரலாற்றில் தெளிவாகக் காணப்படுகிறது.  நுழைவாயில்களைத் திறக்க காவலர்களுக்கு பணம் செலுத்திய பின்னர் நகரங்களும் தேசங்களும் பிடிக்க பட்டதாகவும் கைப்பற்றப்பட்டதாகவும் இந்திய வரலாறு கூறுகிறது.  புராணங்கள் பார்த்தால் சொல்லவே வேண்டாம்..

இது இந்தியாவில் மட்டுமே உள்ள ஒரே அம்சமாகும்.இந்த வகை ஊழல் இந்திய துணைக் கண்டத்திற்கு தனித்துவமானது.

பழைய  க்ரீக் தேசத்திலும் நவீன ஐரோப்பாவிலும் இருந்ததை விட இந்தியர்கள் மிகக் குறைவாகவே போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் போர் தேவை இல்லை, இராணுவத்தை  அடிபணிய வைக்க லஞ்சம் மட்டுமே போதுமானதாக இருந்தது.

இந்திய கோட்டைகளை கைப்பற்றிய வரலாற்றில் எப்போதும் நிதி பரிமாற்றம் இருந்தது.

முகலாயர்கள் மராட்டியர்களையும் ராஜபுத்திரர்களையும்  வெற்றி கொள்ள  லஞ்சம்  கொடுத்த வரலாறு உள்ளது.

ஸ்ரீநகர் மன்னர், லஞ்சம் வாங்கியபின், பரோஷிகோவின் மகன் சுலைமானைக் கொல்ல அவுரங்கசீப்பிற்கு விடுவித்தார்.

லஞ்சம் காரணமாக தேசத் துரோகத்திற்காக இந்தியர்கள் பெரிய அளவில் கைது செய்யப்பட்டதாக பல வழக்குகள்  பழைய காலம் முதலே உள்ளன.

கேள்வி என்னவென்றால்: பிற ‘நாகரிக’ நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத பரிவர்த்தனை கலாச்சாரம் ஏன் இந்தியர்களுக்கு மட்டும் வந்தது ?

இ: எல்லோரும் தார்மீக ரீதியாக நடந்து கொண்டால், எல்லோரும் உயரலாம் என்ற கோட்பாட்டை இந்தியர்கள் நம்பவில்லை, ஏனென்றால் அது அவர்களின் நம்பிக்கையின்  உள்ளது அல்ல.

அவர்களின் சாதி அமைப்பு அவர்களைப் பிரிக்கிறது. எல்லா மனிதர்களும் சமம் என்று அவர்கள் நம்பவில்லை. இது அவர்களின் பிரிவு மற்றும் பிற மதங்களுக்கு இடம்பெயர வழிவகுத்தது.

எனவே, பல இந்துக்கள் சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் புத்தமத விசுவாசிகள்  ஆனார்கள்.  பலர் கிறிஸ்தவத்திற்கும்  இஸ்லாத்திற்கும் மாறினர்.

உண்மை என்னவென்றால், இந்தியர்கள் ஒருவருக்கொருவர் நம்புவதில்லை.இந்தியாவில் இந்தியர்கள் இல்லை, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பிற மதங்கள் மட்டுமே.

இந்த பிரிவு இந்தியாவில் ஆரோக்கியமற்ற கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.  சமத்துவமின்மை ஊழல் நிறைந்த சமூகத்திற்கு வழிவகுத்தது.  இந்தியாவில், கடவுளுக்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு விஷயங்கள் வந்தன.

( உலகின் மிகக் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளில் நியூசிலாந்து ஒன்றாகும்.

தக்க பதிலளிப்பீர்கள் என நினைக்கிறேன்!

நன்றி! வணக்கம்!

இரா இரவிச்சந்திரன்

சென்னை!

அன்புள்ள இரவிச்சந்திரன்,

உண்மையில் சங்கடமளிக்கும் பதிவு, ஏனென்றால் இது முழுப்பொய் அல்ல. அவதூறோ வெறுப்புப்பேச்சோ மட்டும் அல்ல.

இந்திய வரலாற்றை நாம் பார்த்தால் வரலாற்றுக்காலம் முதல் பங்காளிச்சண்டை, எதிரியுடன் சேர்ந்துகொள்ளுதல், துரோகம் ஆகியவை அரசியலைத் தீர்மானிக்கும் முதன்மைக்கூறுகளாக உள்ளன என்பதைக் காணலாம். விசாகதத்தரின் முத்ராராக்ஷஸம் தனநந்தனை தோற்கடிக்க அவனுடைய முதன்மை அமைச்சனான ராக்ஷஸன் என்பவரை சாணக்யர் எப்படி சூழ்ச்சிகள் மூலம் அவனிடமிருந்து விலகச்செய்து துரோகியாக்கினார் என்பதை சொல்வது.

முகலாய ஆட்சிக்காலத்தில் இந்தியா அவர்களிடம் தோற்றதே தாயாதிச்சண்டைகளால், துரோகங்களால்தான். போர்க்களத்திலேயே அமைச்சர்களும் படைத்தலைவர்களும் துரோகம் செய்வது சாதாரணமகா நிகழ்ந்துள்ளது. வெள்ளையர் இந்தியாவின் பல போர்களில் இந்தியத்தரப்பின் சிலருக்கு லஞ்சம்கொடுத்து துரோகிகளாக்கித்தான் வெற்றியடைந்தனர்

விஜயநகர அரசின் வரலாறே நம்பிக்கைத் துரோகங்களின் வரலாறுதான். கிருஷ்ணதேவராயரின் மகனையே அவருடைய நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் நஞ்சூட்டிக் கொல்கிறார்கள். நம் தேசிய நாயகர்களின் வரலாறுகளில் மீளமீள இந்தச் சோர்வூட்டும் செய்திதான் நம்மை வந்தடைகிறது.

இந்தியாவை துரோகிகளைக்கொண்டே பிரிட்டிஷார் ஆண்டனர். துரோகிகளாலான ஒரு மாபெரும் அரசமைப்பையே உருவாக்கி இருநூறாண்டுக்கலாம் நிலைநிறுத்தினர்.அந்தத்துரோகிகளின் வாரிசுகளில் பெரும்பகுதியினர் சுதந்திரத்திற்குப் பின்னர் ஜனநாயக அரசியலில் புகுந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். இன்றும் நீடிக்கின்றனர்.

லஞ்சஊழல்,நேர்மையின்மை பற்றிய இந்தியாவின் சராசரிக் குடிமகனின் உணர்வுகளும் நிலைபாடுகளும் அறிவின்மையின் மூர்க்கம் கொண்டவை. பொதுவாக இந்தியக் குடிமகன் தான் சார்ந்த குழுவின், தன் தலைமையின் எந்த ஒழுங்கீனத்தையும் அறமின்மையையும் ஏற்பவனாகவே இருக்கிறான். குழுமனநிலையே அவனை ஆட்டுவிக்கிறது, பொதுவான அறங்களோ ஒழுக்கநெறிகளோ அல்ல.

தன் குழு அல்லது கூட்டம் சார்ந்த நிலைபாட்டின்பொருட்டு அதன் எச்செயலையும் நியாயப்படுத்துவார்கள், அதன் எதிர்த்தரப்பின் எந்த உயர்ந்தவிஷயத்தையும் சிறுமையும் செய்வார்கள். அவர்களின் அறமீறலை, ஒழுக்கச்சிதைவைச் சுட்டிக்காட்டினால் எதிர்த்தரப்பு அதைச் செய்யவில்லையா என்பார்கள். சுட்டிக்காட்டுபவர்களை தங்கள் எதிரிகளென முத்திரை குத்துவார்கள். எதிரிகளை முழு உள்ளத்துடன் வெறுத்து அவதூறுசெய்ய தயங்கமாட்டார்கள்.அறச்சார்பு என ஒன்று உண்டு என்றே அவர்களால் நம்பமுடியாது.

இந்தியாவின் சராசரிக்குடிமகன் ஊழலால் பாதிக்கப்பட்டவன். ஆனால் அவன் தன்னளவில் எல்லா ஊழலையும் செய்வதற்கும், அதில் கூட்டுப்பயனை அடைவதற்கும் தயாராகவே இருக்கிறான். ஓட்டுக்குப் பணம் வாங்குவது முதல் எல்லா இடங்களிலும் குறுக்குவழி தேடுவதுவரை அவன் செய்யத்தயங்குவது ஏதுமில்லை. ஆகவே எந்த ஊழலையும் அவன் மன்னிக்கத் தயாராகவே இருக்கிறான்- அது தன் தரப்பால் செய்யப்படுமென்றால்.

இவை அனைத்துமே உண்மை, ஆகவே மேலே கண்ட கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பவற்றை மறுக்கவேண்டியதில்லை. ஆனால் நாம் கேட்கவேண்டிய கேள்வி, இவைஎல்லாம் இந்தியர்களுக்கு மட்டுமே உரிய இயல்புகளா என்பது. இந்தியர்களுக்கு மட்டுமே உரிய எதிர்மறைப் பண்புகளாக இவற்றை வரையறைசெய்து அவற்றை இந்துமதம் மீது சுமத்தும் போக்குக்குப் பின்னாலுள்ள உளவியல் என்ன என்பது

இது ஒன்றும் புதியது அல்ல. இந்தியாவை மதமாற்றம் செய்யவந்த அனைத்து கிறித்தவ மதப்பரப்புநர்களும் ஏறத்தாழ இதையே எழுதியிருக்கிறார்கள். பலர் நம்பி எழுதியிருக்கிறார்கள், சிலர் இந்துமதத்தை ஒழிக்கும்பொருட்டு திட்டமிட்டும் சொல்லியிருக்கிறார்கள். அந்த மதப்பரப்புநர்கள் இதை உலகமெங்கும் கொண்டுசென்று பரப்பியிருக்கிறார்கள். அமெரிக்க வரலாற்றாசிரியர் காதரைன் மேயோ [Katherine Mayo ] 1927ல் எழுதிய மதர் இந்தியா என்ற நூலில் அவர் முன்வைத்த அதேவாதங்கள்தான் மேலே சொல்லப்பட்டவை

இருநூறாண்டுகள் இந்தப்பிரச்சாரம் நிகழ்ந்தது. இன்றும் சராசரி ஐரோப்பியன், அமெரிக்கன் இதை நம்புகிறான். வெவ்வேறு சொற்களில் இது இன்றும் கல்வியாளர்களால், ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. நான் வாசிப்பும் சிந்தனையும் உடையவர்கள் என்று நம்பும் பலர் இச்சிந்தனையோட்டம் கொண்டவர்கள். அதை அவர்கள் வெவ்வேறு சொற்களில் சுழற்றிச்சுழற்றி எழுதுகிறார்கள்.இந்தியா மீதான அக்கறை என மேலோட்டமாக அது தோன்றும், உள்ளீடு இந்த நம்பிக்கைதான்.

இந்த முன்முடிவுகள் நம் கல்வித்துறையிலும் இடதுசாரி சிந்தனைத்தளத்திலும் ஒருநூறு ஆண்டுகளாக செல்வாக்கு செலுத்துகின்றன. இந்துமதம், இந்து தத்துவம் மீதான இன்றைய கடுந்தாக்குதல்களுக்கு மேலோட்டமாக நோக்கினால் அரசியல்முகம்தான், ஆழமாக நோக்கினால் அந்த தாக்குதல்கள் மதமாற்ற தரப்புக்களால் கட்டமைக்கப்பட்டவை என்பதைக் காணலாம். யானையைச் சூழ்ந்துகொண்டு வேட்டையாடி உண்ணமுயலும் செந்நாய்க்கூட்டம்போல உலகின் மிகமூத்த பண்பாடு ஒன்று இப்படி முத்திரைகுத்தி அழிக்கப்படுகிறது.

ஒவ்வொன்றாகப் பாருங்கள். கடவுளுக்கு காணிக்கை கொடுப்பது இந்து மதத்தில் மட்டும் உள்ள வழக்கமா? காணிக்கை பெறாமல் உலகில் எந்த மதமாவது வாழமுடியுமா, வாழ்ந்த வரலாறு உண்டா? மத அமைப்புகளிடம் உள்ள பெருஞ்செல்வம் காணிக்கையால் வராமல் கடவுளிடமிருந்து நேரடியாக வருமா என்ன? இதை எழுதியவரின் அறிவுத்திறனின் எல்லைக்கு வேறு சான்று தேவையா என்ன?

கிறிஸ்தவ மதம் இரண்டாயிரம் ஆண்டுகளாக கட்டாய காணிக்கைவசூல் பெற்றுவந்தது. வருமானத்தில் பத்திலொரு பங்கு கடவுளுக்கு அளித்தாகவேண்டும் என்று அது வலியுறுத்தியது. இன்றும் நம் கிறித்தவதேவாலயங்கள் ‘தசமபாகம்’ என்றபேரில் இதை வலியுறுத்துகின்றன. ஐரோப்பாவில் பலநாடுகளில் மதநம்பிக்கையாளர்களிடமிருந்து அரசே அதை வசூலித்து திருச்சபைகளுக்கு வழங்குகிறது

இந்தக் காணிக்கையானது வேண்டுதலுக்கேற்ப, எதிர்பார்க்கும் நன்மைக்கு ஏற்ப அளிக்கப்படவேண்டும் என்று கிறித்தவசபை வலியுறுத்துகிறது. சென்ற நூற்றாண்டுவரை கத்தோலிக்கத் திருச்சபை பிரார்த்தனைச் சீட்டுக்களை விற்றுவந்தது. நீங்கள் வேண்டுவதை அடைய அதற்குரிய விலைகொடுத்து சீட்டுகளை வாங்கவேண்டும். அது கத்தோலிக்கத் திருச்சபைக்கு பெரும் வருமானமாக இருந்தது. இன்று தமிழகத்தில் பல்வேறு திருச்சபைகள் பலவகையான பிரார்த்தனைக் கட்டணங்களை வசூலிக்கின்றன.நோய்தீர ஒரு காணிக்கை, பதவிமேம்பட இன்னொரு காணிக்கை என.

நீங்கள் இணையத்தில் சாதாரணமாகப் பார்த்தாலே கிறித்தவப் போதகர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பக்தர்கள் பணம் கொடுக்கவேண்டும், பணம் குறைந்தால் பயன் குறையும் என சொல்லும் வீடியோக்களைப் பார்க்கலாம். மோகன் சி லாசரஸ் அழகாகச் சொல்வதுபோல ‘நிறைய அறுவடைவேண்டும் என்றால் நிறைய விதைக்கவேண்டும்’ என கிறிஸ்தவம் சொல்கிறது.

மாறாக எந்த இந்து ஆலயத்திலும் இன்ன நன்மைக்கு இத்தனை ரூபாய் என்ற ஆணை இல்லை. எந்தப்பேரமும் இல்லை. இந்துக்களில் 90 விழுக்காடு மக்கள் மதத்திற்காக, கடவுளுக்காக எந்த நன்கொடையும் கட்டணமும் அளிப்பவர்கள் அல்ல.பெரும்பாலானவர்கள் மரபான முறையில் படையலிடுதல் பூசைசெய்தல் போன்றவற்றையே செய்கிறார்கள்.

பிழைகளைச் செய்பவர்கள் இங்கே மரபான முறையில் ‘பரிகாரங்களை’ மட்டுமே செய்கிறார்கள். அந்தப் பரிகாரங்கள் பெரும்பாலும் தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் நோன்புகள், அன்னதானம் செய்வது போன்ற கொடைகளைத்தான் முன்வைக்கின்றன. சிலவகையான பூசைகளை ஆணையிடுகின்றன. இன்ன தவறுக்கு கடவுளுக்கு அல்லது பூசாரிக்கு இன்ன தொகை கொடு என்பதுபோன்ற பேரங்கள் இல்லை.

உலகம் முழுக்க ஐரோப்பிய ஆதிக்கம் என்பது அங்குள்ள மக்களை லஞ்சம் வழியாக கவர்ந்தும், மனப்பிரிவுகளை உருவாக்கியும், துரோகிகளை உருவாக்கியும்தான் நடந்துள்ளது. அந்த லஞ்சம்கொடுக்கும் மனநிலை என்பது கிறிஸ்தவ மரபில் இருந்து வந்தது என்று சொல்லிவிடலாமா என்ன? லஞ்சம் பெறுபவன் அயோக்கியனும் கொடுப்பவன் யோக்கியனும் ஆக மாறும்விந்தை எப்படி நடக்கிறது இந்த விவாதத்தில்?

இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் காலனியாதிக்க வரலாற்றில் நயவஞ்சகம் ஓர் அங்கமாகவே இருந்துள்ளது அவர்களாலேயே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சொன்னசொல் தவறுதல் ஐரோப்பியர்களின் முதன்மையான சூழ்ச்சிமுறை. அதை நம்பி ஏமாந்தவர்கள்தான் கீழைநாட்டு அரசர்கள் பலர். அது உயர்ந்த பண்புநலனா என்ன?அதைத்தான் கிறித்தவம் கற்றுக்கொடுத்ததா?

ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது அவர்கள் இங்கே உருவாக்கியதும் மாபெரும் தேவாலயங்களையும் மதநிறுவனங்களையும்தான்.மிகப்பெரும் செலவில் அவை உருவாக்கப்பட்டன. இன்றும் அவை நீடிக்கின்றன. ஐரோப்பியர் உருவாக்கிய கல்விக்கூடங்கள் அந்த மதநிறுவனங்களின் ஒரு பகுதியாக, மதமாற்றத்தை அடிப்படை நோக்கமாகக்கொண்டே உருவாயின. இன்றும் இந்தியாவின் ஆகப்பெரிய மதநிறுவனம் கத்தோலிக்கத் திருச்சபைதான். செல்வத்தில் அதற்குச் சமானமாக எந்த இந்து மதநிறுவனமும் இந்தியாவில் இல்லை.

இந்தியாவில் ஐரோப்பியர் ஆட்சியமைத்த பின் தங்கள் ஆட்சிக்குரிய அதிகாரவர்க்கத்தை உருவாக்கும்பொருட்டு, மக்களை தங்களுக்குரிய குடிகளாக பயிற்றுவிக்கும்பொருட்டு, கல்விநிறுவனங்களை உருவாக்கினர். அப்போதுகூட மதநிறுவனங்களுடன் தொடர்பற்ற கல்விநிறுவனங்கள் மிகமிகக் குறைவு.

இந்தியாவிலுள்ள தொன்மையான கல்விநிறுவனங்களிலேயேகூட ஒருபகுதிதான் கிறித்தவ மதநிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான கல்விநிறுவனங்கள் இந்திய அரசர்கள் மற்றும் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டவை. இருநூறாண்டுகள் இங்கே பிரிட்டிஷ் ஆட்சி இருந்தும்கூட இந்தியாவின் கல்விநிறுவனங்களில் இந்து அமைப்புகளின் கல்விநிறுவனங்களே எண்ணிக்கையில் மிகப்பெரும்பான்மை. இதுதான் வரலாற்று உண்மை.

இதை மிக எளிதாகப் புள்ளிவிவரங்கள் வழியாகக் காணலாம். ஆனால் இத்தலைப்பில் பேசுபவர்கள் எப்போதுமே கிறித்தவநிறுவனங்களே இங்கே கல்வியைப்பரப்பின என்ற பொத்தாம்பொதுவான மனப்பதிவுடன் பேசுவார்கள். கிறித்தவநிறுவனங்களின் பங்களிப்பைப் போற்றுபவன் நான், ஏராளமாக அவற்றின் பங்களிப்பை போற்றி எழுதியுமிருக்கிறேன். ஆனால் அவர்களின் பங்களிப்பு மிகத்தொடக்கநிலையிலானது, ஒப்பீட்டில் மிகக்குறைவானது என்பதையும் சுட்டிக்காட்டுவேன்.

இனி ஐரோப்பிய வரலாற்றைக் காணலாம். அது என்ன உயர்மானுடப் பண்புகளின் விளையாட்டாகவா இருந்தது? அதில் வஞ்சகமும் துரோகமும் ஊழலும் இல்லையா? எத்தனை துரோகங்களின் கதைகள். ஏன் பலநூற்றாண்டுகள் ஐரோப்பாவை ஆண்ட கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதரோமப் பேரரசிலேயே எத்தனை துரோகங்கள், படுகொலைகள். கொல்லப்பட்ட போப்பாண்டவர்கள் என்று மட்டும் தேடிப்பாருங்கள், திகைப்படைவீர்கள். [கொல்லப்பட்ட போப்பாண்டவர்கள்]

கத்தோலிக்கத் திருச்சபையின் உச்சகட்ட ஊழலில் இருந்து எதிர்விசையாக உருவானதே சீர்திருத்தச் சபைகள் என்றுதான் வரலாறு சொல்கிறது. அவை மிகமிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பா உலகம் முழுக்க காலனியாதிக்கம் வழியாக உருவாக்கிய ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள், பேரழிவுகளுக்கு எங்கே காரணம் தேடுவது? இவர்களின் இதே விதிகளின்படி கிறித்தவத்தைக் காரணம் காட்டிவிடலாமா? ஆஸ்திரேலியாவிலும் தென்னமேரிக்காவிலும் வாழ்ந்த பலகோடி பழங்குடிகளை திட்டமிட்டு நோய்களைப் பரப்பியும், பஞ்சங்களை உருவாக்கியும், போர்களிலும் கொன்று முற்றாகவே அழித்தது ஐரோப்பா. அதற்குரிய மனநிலைகளை கிறித்தவம் உருவாக்கியதா என்ன?

ஆப்ரிக்காவிலிருந்து கருப்பின மக்களை பிடித்துவந்து அடிமைகளாக உலகமெங்கும் கொண்டுசென்று விற்றனர் ஐரோப்பியர். அவர்களை தலைமுறை தலைமுறையாக அடிமையாக்கி அவர்களின் ஆன்மாக்களை சிதைத்தனர். அந்த மனநிலையை ஐம்பதாண்டுகள் முன்புவரைக்கும்கூட அப்படியே நீட்டித்தனர். இன்றைக்கும் இனவெறியுடன் இருக்கிறார்கள். கூடவே கிறித்தவ விழுமியங்களையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

ஆப்ரிக்கா உட்பட பல நாட்களை அடிமைப்படுத்தி ஆண்டனர். விட்டுச்சென்றநாடுகளில் வகுப்புக்கலவர விதைகளை விதைத்துச் சென்றனர். அங்கே அரசியல்மோதல்களை உருவாக்கி கனிமவளங்களைச் சூறையாடினர். இன்றும் ஐரோப்பாவின் வளம் என்பது ஆப்ரிக்க ஆசியநாடுகளைச் சுரண்டி உருவாக்கப்படுவது. போலி சர்வாதிகாரிகளை அதிகாரத்தில் நிறுத்தி நாடுகளைச் சுரண்டுகிறார்கள். வணிக ஒப்பந்தங்கள் வழியாகச் சுரண்டுகிறார்கள். கூடவே ஜனநாயக விழுமியங்களையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஹிட்லரின் வதைமுகாம்களுக்கு காரணம் கிறித்தவமா? முஸோலினியின் வெறியாட்டங்களுக்கு, சமீப காலம்வரை லத்தீனமேரிக்காவில் சர்வாதிகாரிகள் ஆடிய கொலைக்கூத்துக்கெல்லாம் அவர்கள் கத்தோலிக்கர்கள் என்பதுதான் காரணமா?

இந்தியாவில் செயற்கைப் பஞ்சங்கள் வழியாக மக்கள்தொகையின் பத்துகோடி பேரை கொன்றனர் காலனியாதிக்கவாதிகள். மானுடகுலம் தோன்றிய பின்னர் நிகழ்ந்த மாபெரும் உயிரழிவு என்பது அதுதான். அதைச்செய்தவர்கள்தான் அறத்தில்நின்றவர்களா? [பார்க்க இந்தியவின் இருண்ட காலம். சசி தரூர் மிகமிக விரிவான தரவுகளை அளிக்கிறார்]

நான் ஐரோப்பியர்களின் கொடைகளை மதிப்பவன். பண்பாட்டில் சிந்தனையில் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது. நவீன ஐரோப்பா உலகசிந்தனையின் மையங்களில் ஒன்று. ஆனால் அது அவர்களின் கிறித்தவப்பின்னணியை எதிர்த்து உருவானது. அது ஐரோப்பியப் பண்பாட்டின் ஒரு முகம் மட்டுமே, இன்னொரு முகம் அப்பட்டமான கொடூரமான சுரண்டலும் இரக்கமற்ற வணிகமும்.

ஐரோப்பியர்களுடன் ஒப்பிடுகையில் இந்துக்கள், இந்தியர்கள் அப்படி என்னதான் செய்துவிட்டார்கள்? அவர்களிடம் பழங்குடிமனநிலைகள் நீடிக்கின்றன என்று சொல்லலாம். அவர்கள் தங்களை நவீனஜனநாயகப் பண்புகளை நோக்கி நகர்த்திக்கொள்ளாமல் தொன்மையான கும்பல்கலாச்சாரத்திலேயே நீடிக்கிறார்கள் எனலாம். ஆனால் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறை, இனவாதம், திட்டமிடப்பட்ட சுரண்டல் ஆகியவற்றை அவர்கள் நிகழ்த்தவில்லை. உலகைச் சூறையாடவில்லை. பேரழிவுகள் எதையும் உருவாக்கவில்லை.

ஆனால் ஐரோப்பியர் நியாயமானவர்கள், நல்லவர்கள், நெறிகள் கொண்டவர்கள் என்கிறது மெலே பேசிய பேதையின் நாக்கு.அந்த உயர்பண்புகளுக்கு கிறித்தவம் காரணம் என்று கற்பனை செய்துகொள்கிறது அந்த அறிவிலியின் அகம். இந்துக்கள், இந்தியர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக்கொள்ளும் அறிவின்மையும் ஒழுங்கின்மையும் முழுக்கமுழுக்க இந்துமதத்தில் இருந்து வந்தது, ஆகவே அது ஒழியவேண்டும் என்கிறது. நோய் எங்கிருக்கிறது?

நியூசிலாந்தின் வரலாற்றையே பாருங்கள். அங்கே வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே மானுடக்குடியேற்றம் உள்ளது. பதினேழாம்நூற்றாண்டு முதல் ஐரோப்பியக் குடியேற்றம் நிகழ்ந்தது. ஐரோப்பியர் அங்கே இந்த அறிவிலி நம்புவதுபோல கல்விகேள்விகளுடன் வரவில்லை. துப்பாக்கிகளுடனும் பைபிளுடனும் வந்தனர். நியூசிலாந்தின் மாஓரி [Māori] இனக்குழு கொடுமையாக தோற்கடிக்கப்பட்டது. அரச வன்முறையால் ஒடுக்கப்பட்டது, மிகப்பெரும்பாலானவர்கள் போரிலும் செயற்கை நோயிலும் கொன்றழிக்கப்பட்டனர். எஞ்சியோர் மதமாற்றம் செய்யப்பட்டனர். இன்று அங்கிருப்போரில் மிகப்பெரும்பாலானவர்கள் சென்ற முந்நூறாண்டுகளில் அங்கே குடியேறிய மக்கள்.

அவர்களில் ஒருவர்தான் இந்த ஐரோப்பிய நியாயத்தைப் பேசுகிறார். இதுதான் ஐரோப்பாவின் வெற்றி. ஐரோப்பாவால் முற்றழிக்கப்பட்ட செவ்விந்தியர்களின் மண்மேல் நின்று ஒரு செவ்விந்தியரைக்கொண்டே செவ்விந்தியர்கள் காட்டுமிராண்டிகள், ஐரோப்பியர் நயத்தக்க நாகரீகம் கொண்ட உயர்குடிகள் என பேசவைக்க அவர்களால் முடியும். அதைச்செய்யவைப்பது மதம். ஆகவேதான் அவர்கள் எப்போதும் துப்பாக்கியுடன் பைபிளையும் கொண்டுவருகிறார்கள். அன்று பைபிள் என்றால் இன்றைக்கும் வேறுவகை பைபிள்கள் உண்டு. இந்த மூளைச்சலவைதான் அவர்களின் அறுதிவெற்றி.

நியூசிலாந்து போன்ற சின்னஞ்சிறு நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிடுவதே அபத்தம். அவை ஒருவகை குட்டி மானுட அருங்காட்சியகங்கள். அவை பெரியநாடுகளை நம்பி வாழ்கின்றன, ஆகவே அவற்றின் பொருளியலும் அரசியலும் பொய்யானவை. ஒருவகை நாடகம் போன்றவை. அந்த பெரியநாட்டின் இச்சைகளுக்கு இணங்க அவை நடந்துகொள்கின்றன.

அவற்றின் சிறிய நிலப்பரப்பும் மக்கள்தொகையும் நிர்வாகத்துக்கு உகந்தது. அங்கே உள்ள சமூகம் என்பது பெரும்பாலும் குடியேறிகளாலானது. ஆகவே ஆழமான வரலாற்றுப்பிரச்சினைகள் ஏதும் அங்கில்லை. இனக்குழுச்சிக்கல்கள் இல்லை.

இந்தியா தொன்மையான நாடு. மிகப்பெரிய நாடு. இதன் உட்கூறுகள் மிகமிக சிக்கலானவை, வகுக்கமுடியாதவை. அவை ஒவ்வொன்றுக்கும் வரலாற்று ஆழம் உண்டு. அவை இந்தியா என்னும் களத்தில் முட்டிமோதியும் முயங்கி ஒன்றாகியும் தங்கள் வழிகளை கண்டடைகின்றன. இங்கே நிகழ்வது மாபெரும் உயிர்ப்போராட்டம். வெல்வது வாழும் என்ற நெறி கொண்டது. ஆகவே இங்கே உண்மையான அரசியல் உள்ளது.அதில் வெற்றி ஒன்றே பொருட்டு. ஆகவே அறமும் ஒழுக்கமும் அடிக்கடி பலியாகின்றன. அது மானுட இயல்பு

இந்த அரசியல்களத்தில்தான் காந்தி தோன்றி உலகுக்கே நவீனஜனநாயகத்தின் அடிப்படைகளைக் கற்பித்தார். இங்கே நிகழும் இந்த மாபெரும் வாழ்க்கைப்போட்டியிலேயே அறமும் ஒழுக்கமும் திகழும் வழிடைக் காட்டினர். நாம் இன்று பெரிதும் வழுவிவிட்டிருக்கிறோம். ஆனால் நாம் செல்வதற்குரிய வழி தெளிவாகவே உள்ளது. நாம் வளரவில்லை, ஆனால் வளர்ச்சிக்காகச் செய்யப்படும் பெரும்பழிகளை வாங்கி வைத்திருக்கவுமில்லை.

ஜெ

செயலின்மையைச் சொல்கிறதா இந்துமதம்?

முந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்- கலையாகும் தருணங்கள்
அடுத்த கட்டுரைஅழியா அழல் – முதற்கனல் பற்றி சுனீல் கிருஷ்ணன்