கி.அ.சச்சிதானந்தம், ஐராவதம், மலையாற்றூர்- கடிதங்கள்

அஞ்சலி- கி.அ.சச்சிதானந்தம்

வணக்கம்

மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய யட்சி நாவலை தமிழில் ஆனந்தன் மொழிபெயர்த்துள்ளார் என்று தங்கள் website-ல் கண்டறிந்தேன். புத்தகம் எங்கே கிடைக்கும் என்ற தகவல் இருந்தால் பகிரவும்.

சுந்தரிகளும் சுந்தரன்மார்களும் தமிழில் இப்போது இருப்பிலில்லை என்று அறிகிறேன். அந்த புத்தகம் கிடைக்கும் வழி இருந்தாலும் தெரிவித்து உதவவும்.

நன்றி

அருண்

***

அன்புள்ள அருண்

இந்நூல்களை இன்று ஒருவர் தேடுகிறார் என்பதே நல்ல விஷயம்தான். இந்த பிடிஎஃப் வலையேற்றும் கூட்டம் இத்தகைய நூல்களைக் கண்டடைந்து வலையேற்றம் செய்தால் நல்லது. பத்தாண்டுகளுக்கு முன்பு என் நண்பர்கள்தான் நான் சுட்டிக்காட்டிய நாவல்களில் நெடுங்காலம் அச்சில் இல்லாமலிருந்த நீலகண்டப்பறவையைத் தேடி, அக்னிநதி போன்றவற்றை பிடிஎஃப் கோப்புகளாக்கி கிடைக்கும்படிச் செய்தனர். இன்று அரியநூல்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமையுமென்றால் நல்லது. ஆனால் பெரும்பாலும் சந்தையில் பரபரப்பாக விற்கும் நூல்களுக்கே இந்த ‘சேவை’யைச் செய்கிறார்கள்

ஜெ

***

அன்பு ஜெ,

எனக்கு ஒரு சந்தேகம். நேரம் இருக்கும்பொழுது பதில் கூறினால் போதும்.

தங்கள் கட்டுரைகளில் தொடர்புடைய பதிவுகள் என்று கொடுக்கப்படும் கட்டுரைகள் எந்த அடிப்படையில் தொகுக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு 07/10/2020 தேதியிட்ட இந்த பதிவிற்கு மொத்தம் 911 பதிவுகள் தொடர்புடையதாக கொடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படை புரிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் இந்த கேள்வி.

ஆர்.முத்துவேல்

***

அன்புள்ள முத்துவேல்

தொடர்புடைய பதிவுகள் என வருபவை குறிச்சொற்களின் அடிப்படையில் தானாகவே தொகுக்கப்படுபவை. ஒரு கட்டுரையிலுள்ள அடிப்படையான சொற்கள் வேறு கட்டுரைகளில் இருந்தால் அந்த கட்டுரைகள் காட்டப்படுகின்றன

ஆசிரியரால் தெரிவுசெய்து அளிக்கப்படுபவை தனியாக இணைப்புக்கட்டுரைகளாக அளிக்கப்பட்டிருக்கும்

ஜெ

***

மரியாதைக்குரிய ஜெயமோகன் , தங்களின் இந்த அஞ்சலிக் கட்டுரை நல்ல முறையில் பதியப்பட்டுள்ளது. நன்றி.

தமிழ் இலக்கியத்திற்கு ஓரளவிற்கு பங்காற்றிய பலரைப் பற்றி தெரியாமலேயே போய்க்கொண்டிருக்கிறது. இம்மாதிரி தற்கால இலக்கியச் சூழலில் பெரும் பங்காற்றி வரும் தங்களைப் போன்றோரின் உண்மையான பதிவுகள் தமிழிலக்கிய ஆர்வத்தைத். தூண்டும் என்பதில் ஐயமில்லை.

ஒரு சிறிய வேண்டுகோள்.

நான் வெகு நாட்களாக ஐராவதம்  என்னும் எழுத்தாளரைப் பற்றி  கூடுதலாக ஏதாவது தெரிந்துகொள்ள முடியமா என்று முயற்சித்துப் கொண்டிருக்கிறேன்.

அவரைப்பற்றி தங்களின் பதிவை, தங்கள் மொழியில் எதிர்பார்க்கிறேன்.

நன்றி

பாலகிருஷ்ணன்

அன்புள்ள பாலகிருஷ்ணன்

ஐராவதம் என்ற பெயரில் எழுதியவர் பேராசிரியர் சுவாமிநாதன். நான் அவரை ஓரிருமுறை சந்தித்திருக்கிறேன். பகடி ஓங்கிய கதைகளை எழுதியவர். சென்னையிலுள்ள நண்பர்களுக்கு அவரைப்பற்றி தெரிந்திருக்கும்

ஜெ
ஐராவதம் அழகியசிங்கர்
ஐராவதம்- அழகியசிங்கர்
என் நண்பன் ஐராவதம் சொல்வனம் கட்டுரை

ஐராவதம் என்றொரு எழுத்தாளர் சுரேஷ் கண்ணன்
முந்தைய கட்டுரைஅழியா அழல் – முதற்கனல் பற்றி சுனீல் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைசிலைகள், அமுதம்- கடிதங்கள்