ஊட்டி மலைப்பாதை வராமலிருந்தால்!

ஊட்டிக்கு வெள்ளையர்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து ரயில் , பஸ் தடங்கள் அமைக்கப்பட வில்லை எனக் கொள்வோம்.

இன்று அவைகளை அமைக்க சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள்  ஒப்புவார்களா? மலை வாழ் மக்கள் வாழ்வு எவ்வாறு அமைந்திருக்கும்?  அவர்களும், மற்ற நாமும் அடைந்துள்ளது முன்னேற்றமா அல்லது பின்னேற்றமா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஸ்ரீனிவாசன் சௌந்தரராஜன்

***

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

இந்தக்கேள்விக்கு நான் மறுமொழி சொல்வது முதன்மையாக ஒரே நோக்கத்துக்காக. நாம் அரட்டைகளில் விவாதிப்பதற்கும் அறிவார்ந்து விவாதிப்பதற்கும் பெரிய வேறுபாடுண்டு. அரட்டைகளில் எந்த விவாதநெறிகளும் இல்லை. அரட்டைகளில் உற்சாகமும் ஆணவமுமே ஓங்கி நிற்கும். அறிவது என்பதற்கு இடமில்லை.

இன்றைய இணைய விவாதங்கள் உண்மையில் அரட்டைகள் மட்டுமே. அரட்டையின் வழியை கடைக்கொள்பவர்களுக்கே வாசகக்கூட்டம் வந்துசேர்கிறது. ஆகவே அதுவே அனைவரும் கொள்ளும் பொதுப்போக்காக உள்ளது. நம்மைச்சூழ்ந்து எங்குமென ஒலிக்கிறது.

அவ்வாறு அரட்டைமுறையை கையாள்பவர்கள் தீவிரமான விவாதங்களை கேலிசெய்வதும், மட்டம்தட்டுவதும் வழக்கம். ஏனென்றால் தாங்கள் அடிக்கும் அரட்டையின் உள்ளீடற்ற தன்மை அவர்களுக்கே தெரியும். அதை நிறுவ அனைத்து தீவிர விவாதங்களையும் ஒதுக்கவேண்டியிருக்கிறது.

அத்துடன் தீவிரமான விவாதங்களுக்குள் செல்லமுடியாத பெருங்கூட்டம் ஒன்றுள்ளது. அறிவுத்திறனற்றவர்கள், ஆர்வமற்றவர்கள். அவர்களையும் மகிழ்விக்கலாம்.

விளைவாக நம் சூழலில் அரட்டைவிவாதம் ஓங்கி, பொதுப்போக்காக மாறிவிட்டிருக்கிறது. அதிலிருந்து நாம் உணர்வுகொண்டு, முயன்று மேலே சென்றாலொழிய தப்பமுடியாது. அதிலேயே சிக்கிக்கிடப்போம். சிந்திக்கும் பழக்கமே இல்லாமலாகி, வெட்டிவிவாதமே நம் இயல்பென்று ஆகிவிடும்.

நீங்கள் கேட்ட கேள்வி அரட்டைவிவாதத்தில் மிகச் சமத்காரமான ஒன்று. இத்தகைய நூறு கேள்விகளை என்னால் பட்டியலிட முடியும். உதாரணத்துக்கு ஒன்று. “குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கிறார்கள், அப்படியென்றால் இன்றைக்கு இருக்கும் குரங்குகள் ஏன் மனிதனாகவில்லை?”

அறிவுத்தளத்தில் இக்கேள்விகளுக்கு எந்த இடமும் இல்லை. மிக விரிவாக பேசப்பட்ட பலவற்றை எந்தப்புரிதலும் இல்லாமல் அணுகுவதிலிருந்து எழும் கேள்விகள் இவை. இவற்றை அறிஞர்கள் பொதுவாக புறக்கணிப்பார்கள். இவற்றுக்கு இதேபோக பகடியாகவோ தடாலடியாகவோ ஒரு பதிலைச் சொல்லலாம், என்னால் மிக எளிதாக அதைச் செயுய முடியும், ஒரு அரட்டையில் அதைச் செய்வேன்.ஆனால் அது அறிவியக்கத்துக்கு எதிரானது

ஆகவே விரிவாக விளக்கம் அளிப்பேன். அதன் விளைவு என்னவாக இருக்குமென்றும் தெரியும். மறுமொழியை அரட்டைமனம் கொண்டவர் கவனிக்கமாட்டார், புரிந்துகொள்ள மாட்டார்.  ‘ஒரு கேள்விதான்யா கேட்டேன், பக்கம்பக்கமா பேசிட்டே போறார்’ என்று அதையும் ஒரு நையாண்டியாக மாற்றிவிடுவார்கள்.

விரிவான பேச்சு என்பதே ஒரு கேலிக்குரிய செயல்பாடு என நம்சூழலின் பாமரஉள்ளங்கள் நம்புகின்றன.அவற்றுக்குத் தெரிந்ததெல்லாம் ஏளனச்சித்திரங்கள், ஒற்றைவரி இடக்குகள், சில்லறைப் பகடிகள் மட்டுமே.

ஆனால் எங்கோ சில வாசகர்களுக்கு இவை உதவியாக இருப்பதை கண்டிருக்கிறேன். சிந்திக்கவும், விவாதிக்கவும் இவை பயிற்சி அளிக்கின்றன. ஆகவே சலிப்புறாமல் பேசிக்கொண்டிருக்கிறேன்

*

இனி உங்கள் கேள்வி. மேல்தோற்றத்துக்குச் சாரமான கேள்வியாகத் தோன்றும். ஆனால் இதை வரலாற்றில் வைத்து பாருங்கள். இப்படி விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

“சூழியல் அழிவு என்பது மனிதன் முதன்முறையாக வேளாண்மை செய்தபோதே தொடங்கிவிட்டது. முதல்விலங்கை பயன்படுத்தியபோது, முதல் ஊரை உருவாக்கியபோது, முதன்முதலாக மண்ணைக்கொண்டு கலங்களைச் செய்தபோது சூழலை அழிக்க ஆரம்பித்துவிட்டான். அதைச்செய்யாமலே இருந்திருந்தால் சூழல் அப்படியே இருந்திருக்குமே?” என்று உங்கள் நிலைபாட்டைச் சொல்லலாம் அல்லவா?

இதை இன்னும் தெளிவாக கோட்பாடாக ஆக்கினால் “மனித நாகரீகம் என்பதே சூழலை அழித்து தனக்கான நுகர்வை உருவாக்கிக்கொண்டதில் இருந்து உருவானது. மானுடநாகரீகம் சூழலை அழிக்காமல் நீடிக்கமுடியாது. ஆகவே சூழியல் என்பது மனிதநாகரீக வளர்ச்சிக்கே எதிரானது” என்று வகுக்கலாம் அல்லவா?

இந்த எதிர்வாதம் பலமுறை சூழியல்விவாதங்கள் மேல் முன்வைக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் எந்த ஒரு சூழியல்விவாதத்திலும் இந்தக் கேள்வி எழுந்துவருகிறது. இதற்கு சூழியல் விளக்கமான மறுமொழி சொல்லியிருக்கும் அல்லவா? அதைத்தான் நீங்கள் தேடவேண்டும்

சூழியலாளரின் தரப்பு என்ன? அது இப்படிச் சுருக்கி அளிக்கத்தக்கது.

வரலாற்றில் நிரந்தரமான முடிவுகள் என ஏதுமில்லை. வேளாண்மைசெய்ததன் வழியாக மனிதன் சூழியலை அழிக்கத் தொடங்கினான் என்பது உண்மையே. மனிதன் என்ற ஒற்றை உயிரினம் பூமிமேல் இவ்வளவு பெருகியதே சூழியல் அழிவுக்கு அடிப்படைக் காரணம் என்பதும் உண்மையே. ஆனால் நாம் அதை இனி ஒன்றும்செய்யமுடியாது, நாம் திரும்பிச்செல்லவும் முடியாது.

சூழலை அழித்து இயற்கையை கட்டின்றி நுகரும் போக்காகவே பத்தாயிரம் ஆண்டு மானுட வாழ்க்கை இருந்துள்ளது. அதுவே மானுடநாகரீகத்தை உருவாக்கியிருக்கிறது. அந்தப் போக்கு ஒன்று நூறு ஆயிரம் பல்லாயிரம் என்ற மடங்காக பெருகிக் கொண்டிருக்கிறது. தொல்மானுடர் வேளாண்மை செய்தபோது உருவானதைவிட உலோகங்களும் வளர்ப்புவிலங்குகளும் பயன்படுத்தப்பட்ட போது உருவான இயற்கை அழிவு பலமடங்கு. இயந்திரங்கள் வந்தபோது மேலும் பலமடங்கு. நவீனத்தொழில்நுட்பம் வந்தபின் பற்பல மடங்கு. இப்படி பெருகிப்பெருகிச் செல்வதாகவே இந்த நுகர்வும் இயற்கைச்சூறையாடலும் நிகழ்கின்றன

அந்தப்பயணத்தில் நாம் ஒர் உச்சகட்டத்தை, ஒரு முட்டுச்சந்தை வந்தடைந்துவிட்டோம். இப்போது அந்தப்பயணத்தை அப்படியே மேலும் தொடரமுடியாது என்பதைத்தான் சூழியலாளர் சுட்டிக்காட்டுகிறார்கள். அது நம்மை அழித்துவிடும். நம் பண்பாட்டின் வளர்ச்சியை உருவாக்கிய காரணியான சூழியல்அழிவே நம்மை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். ஆகவே இப்போது நம் பயணத்தை நாம் மறுபரிசீலனை செய்வோம். வேறு வழிகள் உள்ளனவா என்று பார்ப்போம்.

இதுதான் சூழியலாளர் சொல்வது. அவர்கள் மானுடநாகரீகத்தை நிராகரிக்கவில்லை.மனிதகுலத்தின் வளர்ச்சியை மறுக்கவில்லை. நுகர்வைக்கூட தவிர்க்க நினைக்கவில்லை. ஆனால் நாம் இதுவரை வந்த பாதையை பார்த்தால் நாளை நமக்குச் சாதகமாக இல்லை, ஆகவே நம்மை நாம் கட்டுப்படுத்திக்கொள்வோம் என்று மட்டும்தான் சொல்கிறார்கள்.

அதற்குரிய வழிகளை இப்போதே ஆராயலாம் என்று சொல்கிறார்கள். அதற்குரிய வழிகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அவற்றை பெருஞ்செலவு இல்லாமல் எப்படிச் செய்யமுடியும் என்று கண்டறிந்து சுட்டிக்காட்டுகிறார்கள்.

உதாரணமாக, பெரிய அணைத்திட்டங்களை சூழியலாளர் எதிர்க்கிறார்கள். அவை காட்டுச்சூழலை அழிப்பவை. ஆனால் அவர்கள் வெறுமே எதிர்க்க மட்டும் செய்யவில்லை, மாற்றுவழிகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். பெரிய அணைகளுக்குப் பதிலாக அதைவிட குறைவான செலவில் பல்லாயிரம் சிறிய நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம். அவை சூழலுக்கு உகந்தவை, மேலும் பயனளிப்பவை என்கிறார்கள்.

பொதுவாக நம்மில் பலர் நம்புவதுபோல சூழியலாளர்கள் அறிவியலுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் அறிவியலாளர்களும்கூட. தொழில்நுட்பத்திற்கு எதிரானவர்கள் அல்ல, தொழில்நுட்பத்தை சூழியலுக்கு ஏற்ப எப்படி பயன்படுத்தலாம் என்று ஆராய்பவர்கள்

உதாரணமாக, வேளாண்மைக்கு காடுகளை அழிப்பதை அவர்கள் மறுக்கிறார்கள். ஆனால் அதற்கு மாற்றுவழியை சுட்டிக்காட்டுகிறார்கள். அடுக்குத்தட்டுகள் வழியாக மிகக்குறைந்த இடத்தில் பலமடங்கு வேளாண்மை செய்யமுடியும் என்று ஆராய்ந்து நிறுவியிருக்கிறார்கள். அத்தகைய வேளாண்மையை நீங்கள் சிங்கப்பூர் சென்றால் காணலாம்.

இந்தப்பின்னணியில் உங்கள் கேள்வி.எந்த சூழியலாளனும் ஊட்டிக்கு சாலைபோட்டது தவறு என்று சொல்லமாட்டான். தவறோ சரியோ அது வரலாறு. ஆனால் சாலைபோட்டு, வண்டிகள் வந்து, தோட்டத்தொழில் வந்து, குடியேற்றங்கள் நிகழ்ந்து ஊட்டி மாறிக்கொண்டே இருக்கிறது. இந்தப்போக்கு இப்படியே சென்றால் ஊட்டி அழிந்துவிடும். இந்தப்போக்கை எப்படி குறைப்பது, எப்படி கட்டுப்படுத்திக்கொள்வது, எப்படி ஊட்டியை மீட்பது என்று மட்டுமே அவன் எண்ணுவான்

அத்துடன் உங்கள் கேள்வியில் உள்ளது மிகமேலோட்டமான புரிதல். ஊட்டியில் இன்றுள்ள மக்களில் 4.32 விழுக்காடு பேர் மட்டுமே பழங்குடிகள். மற்றவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தோட்டத்தொழிலை ஒட்டி குடியேறியவர்கள். இன்று பழங்குடிகள் என அறியப்படுபவர்கள் பெரும்பாலானவர்கள் பின்னாளில் அப்படி சான்றிதழ்பெற்றவர்கள்

ஊட்டிக்குச் சாலை அமையாமல், வண்டிகள் செல்லாமல் இருந்திருந்தால் ஊட்டிமலைப் பழங்குடிகள் இன்றிருப்பதைவிட பலமடங்கு வசதியாக, பலமடங்கு சுதந்திரமாக வாழ்ந்திருப்பார்கள். அந்த 4.32 விழுக்காடு மக்களின் தேவைக்கு ஒரு சிறு மலைப்பாதையே போதுமானது. ஊட்டி அழியாமல் அழகாக இருந்திருக்கும். மலைக்காடுகள் நீடித்திருந்தால் அவை உருவாக்கும் நீர்வளம் கொங்குமண்டலத்தை இன்னும் செழிப்பு மிக்கதாக ஆக்கியிருக்கும்.

ஆகவே ஊட்டியை நாம் சூறையாடினோம் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். மலைக்குச் சாலை அமைத்ததும், ஊட்டி நகரை உருவாக்கியதும் பழங்குடிகளை வாழவைப்பதற்காக என்னும் பசப்பலை விட்டொழியுங்கள். ஊட்டியின் நிலம், சொத்து ஆகியவற்றில் பழங்குடிகளுக்கு இன்றும் எந்த உரிமையுமில்லை. தோடர்கள் இன்றும் அதே பழங்குடி வாழ்க்கையையே வாழ்கிறார்கள். சூழியலாளர்கள் நுகர்வு வெறியர்களிடம் கோருவது பசப்பவேண்டாம், உண்மையை ஒத்துக்கொள்வோம் என்று மட்டுமே

ஜெ

முந்தைய கட்டுரைமனு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசைத் தொடங்குபவருக்கு