விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு
சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள்
அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு,
தங்கள் நலம் அறிய விழைகிறேன். இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழில் நீண்ட காலம் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் மூத்த எழுத்தாளருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்பான ஒன்று.
தமிழின் தலை சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராகிய சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் படைப்பு உலகை எப்படி தொகுத்துக் கொள்வது என்ற கேள்வி முக்கியமானது. 80க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 60க்கும் மேற்பட்ட குறுங்கதைகள், மற்றும் இரண்டு நாவல்கள் இவற்றை உள்ளடக்கிய அவரது படைப்புலகைப் பற்றி பொதுவான அம்சம் என்று ஒன்றை மட்டும் தான் சொல்ல முடியும்.
மிகக் குறைந்த சொற்களில் தன்னுடைய புனைவை வடிவமைத்துக் கொள்வது என்பதுதான் அது. மற்ற எந்த வகையான பொதுமைப்படுத்தல்களையும் இவருடைய படைப்புலகில் நாம் காண முடியாது. எல்லா வகையான கதை சொல்லும் முறைகளையும் தன்னுடைய சிறுகதைகளில் வெற்றிகரமாக அவர் கையாண்டிருக்கிறார். இது அவருடைய தனித்துவங்களில் ஒன்று.
உதாரணமாக இடப்பக்க மூக்குத்தி சிறுகதையில் கிட்டத்தட்ட ஒரு மிகு புனைவு கூறுமுறையை பின்பற்றி இருக்கிறார். வழி மறைத்திருக்குதே சிறுகதை ஒரு பல்லவிக்கு வெவ்வேறு சரணங்கள் வழியாக கதையை சொல்லி செல்கிறது. எழுத்தாளன், நடிகை, காரைக்காலம்மையார் சிறுகதையில் ஒரு புனைவு அந்தப் புனைவுக்குள்ளேயே அந்தப்புனைவில் வரும் நிஜ கதைமாந்தரால் நிராகரிக்கப்படுகிறது. இந்தக் கதை சொல்லும் முறையானது கதைக்கருவை கையாள்வதற்கு கச்சிதமாக பொருந்தும் வண்ணம் இருப்பது ஆசிரியரின் தனிச்சிறப்பு.
தன்னுடைய சிறுகதைக்கான களங்களாக ஆசிரியர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பது பெரும்பாலும் காமமும் ஆண் பெண் உறவுகளின் சிக்கல்களும் தான். இதற்கு அப்பால் ஒரு உயர்ந்த கலைஞனின் நுண்ணுணர்வு காரணமாக நிராகரிக்கவே முடியாத சமூக அவலங்களும் அவருடைய சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன.
எத்தனை பேசினாலும் எழுதினாலும் தீராத ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள் இவருடைய கதைகளின் பேசுபொருளாக உள்ளன.
இந்த கதைகளில் ஒரு நோஸ்டால்ஜியா தன்மை இருப்பதை பெரும்பாலும் காண முடிகிறது. வணிக ரீதியிலான எழுத்துக்களின் பெரும்பாலான புனைவுகளில் காமம் மற்றும் ஆண்-பெண் உறவுகளின் சிக்கல்கள் மையமான இடத்தைப் பெறுவது மிகவும் சாதாரணமான ஒன்று. அப்படி இருக்க சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதைகள் இலக்கிய முக்கியத்துவம் பெறுவதற்கு சில அடிப்படை கூறுகள் காரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அ.குறைவான சொற்களில் கதைமாந்தர்களின் மனநிலைகள் விளக்கப்படுகின்றன என்பதனால் ஒரு நல்ல வாசிப்புக்கு வாசகர்களின் கற்பனை மிக முக்கியமானதாக அமைந்து விடுகிறது. உதாரணமாக கோயில் பிரகாரம் சிறுகதையில் பார்வதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்காக தாவணியை தேடுகிறாள். அந்த தாவணியை பழைய துணிகளுக்கு இடையே தேடவேண்டும் என்று மட்டுமே கதை சொல்கிறது. அவளுடைய பிரச்சனையே அந்த தாவணியை தேடுவதும் இவள் எடையை அந்த மின்விசிறி தாங்குமா என்பதும்தான். பார்வதி கதாபாத்திரத்தின் மனநிலையும்மொத்த துயரமும் இந்த ஒற்றை வரியின் மூலம்தான் விளக்கப்படுகிறது. இந்தக் குறைவான சித்தரிப்புகளை கவனமாக வாசிக்கா விட்டால் கதையின் மொத்த நுட்பமும் தவறிவிடும்.
முற்றுப்புள்ளி சிறுகதையில் ஒரு கவர்ச்சி நடிகையின் புகைப்படங்களை தொடர்ந்து சேகரிக்கும் கதையின் நாயகன் இறுதியில் நடிகையை சந்திக்கும் போது அவரது அம்மாவிற்கும் அந்த நடிகைக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதாக உணர்கிறார். இந்த உணர்வை ஆசிரியர் மேலும் நீட்டித்து சென்றிருந்தால் இந்தக் கதையை ஈடிப்பஸ் காம்ப்ளக்ஸ் ஆக வாசிக்க நேரும் அபத்தம் உருவாகிவிடும்.
சிலந்தி வலை சிறுகதையில் வன்முறைக்கு உள்ளாகும் தலித் அப்பா கதாபாத்திரம் அனுபவிக்கும் உள வலியைப்பற்றி அவருடைய மகள் குறிப்பிடும் ஒற்றை உணர்வு மட்டுமே கதையில் உள்ளது. அந்த அப்பா கதாபாத்திரம் அனுபவிக்கும் அச்சத்தையும் அவமானத்தையும் ஒட்டுமொத்த தலித் சமூகத்துக்கும் விரித்துக் கொள்ள முடியும். அதற்கு உண்டான அத்தனை சித்தரிப்புகளும் இந்தக் கதையில் உள்ளன. ஆனால் குறைவான சொற்களில் விளக்கப்பட்டுள்ளன. ஆக இந்தக் குறைவான சித்தரிப்பு என்பது ஆசிரியர் வாசகனின் கற்பனைக்கு விடுக்கும் சவால். இந்த அம்சமானது சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் தனித்துவம்.
ஒரு தேர்ந்த எழுத்தாளரின் அவதானிப்புக்கள் அவருடைய முக்கியமான சிறுகதைகள் அனைத்திலும் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக கோவில் பிரகாரம் கதையில் பார்வதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் வீட்டுக்கு வரும் அவளுடைய தந்தை அவளுடைய இழப்பை நினைத்து வருந்துகிறார், அழுகிறார். ஆனால் அவருடைய துன்பங்களில் ஒன்று குறைந்திருக்கிறது என்று எண்ணி உள ஆறுதலும் அடைகிறார்.
கணவன் மனைவி சிறுகதையில் பக்கவாதம் வந்து படுக்கையில் இருக்கும் கணவனை தினமும் அடித்துக் கொண்டே இருக்கும் ரோசாப்பூ, கணவர் இறந்த பின்பு பெரும் சோகம் கொண்டு அழுகிறாள்.
ஆங்கில புத்தகம் படிக்கும் பெண் சிறுகதையில் அந்த பாலியல் தொழிலாளி அவளுடைய வாழ்க்கையை தன்னுடைய பழைய வாடிக்கையாளருக்கு சொல்லி செல்லும் போது அந்த வாடிக்கையாளருக்கு விருப்பமான விஷயங்களை சொல்லிக் கொண்டே செல்கிறார். அவள் சொல்வதில் எது உண்மை எது பொய் என்பது கதையில் இல்லை. ஆனால் பொய் சொல்கிறாள் என்பதை மட்டும் சொல்ல முடியும். மனித மனம் மேற்கொள்ளும் பாவனைகள் குறித்த இத்தகைய அவதானிப்புகள் இந்தக் கதைகளுக்கு இலக்கிய முக்கியத்துவம் தேடித் தருகின்றன.
ஆ.மனித உறவுகளைப் பற்றிய சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் மேலும் சில அவதானிப்புகள் சுவாரசியமானவை. உதாரணமாக ஆங்கில புத்தகம் படிக்கும் பெண் சிறுகதை அந்த பாலியல் தொழிலாளி கதையின் இறுதியில் அவளுடைய மகள் அந்த இரு வாடிக்கையாளர்களில் ஒருவரின் மகள் என்று சொல்கிறார். இது அந்த வாடிக்கையாளரின் உள்ளத்தை நோகடிக்கும் பொருட்டு சொல்லப்பட்டது. இது உண்மையா பொய்யா என்று கதையில் இல்லை. ஆனால் நெருக்கமான உறவுகள் அனைத்திலும் இத்தகைய வன்மங்கள் இருப்பதை உணர முடியும்.
ரகசிய வார்த்தை சிறுகதையில் வரும் ராமச்சந்திரன் கதாபாத்திரம் நம்பத்தகுந்த நல்லவன் இல்லை என்று பிரமிளாவின் பாட்டி சொல்லிவிடுகிறார். ஒரு உரையாடலிலேயே அந்தப் பாட்டியால் அதை உணர்ந்து விட முடிகிறது.
இ. தற்செயல் நிகழ்வுகளின் மர்மங்கள் சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுகளில் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. இதில் முக்கியமான கதையாக புதிர்வழிப் பயணம் சிறுகதையைச் சொல்லலாம்.
ஈ.சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுலகின் மிக முக்கியமான அம்சமாக நான் கருதுவது ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறையை குறித்த பதிவுகள். குறிப்பாக தலித் மக்களின் துயரங்களும் அவலங்களும் அவருடைய பெரும்பாலான கதைகளில் இடம் பெற்றுள்ளன. எந்தவிதமான பிரச்சாரத் தொனியும் இல்லாமல் அதே நேரம் மிக வலுவாக அந்த மக்கள் எதிர்கொள்ளும் வன்முறை பதிவு செய்யப்பட்டுள்ளது. “எவனோ என்று எப்படி சொல்வேன்” என்று சொல்லும் தேவதேவன் கவிதை வரிகளைப் போல இந்த அவதானிப்புகள் சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுலகம் முழுவதும் பயின்று வருகின்றன.
தன்னுடைய அலுவலக பணிகளில் இவர் எதிர்கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கை அவரிடம் ஏற்படுத்திய தாக்கம் இதற்கு முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம்.
உ. இறுதியாக சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுகளில் பகடி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் எனக்கு மிகப் பிடித்தமானது கலந்துரையாடல் என்னும் சிறுகதை. ஆசிரியருடைய அரசியல், ஈவேரா பெரியார் அவர்களுடைய தாக்கம் பல்வேறு கதைகளில் வெளிப்பட்டு இருந்தாலும்கூட கலந்துரையாடல் கதை மிக முக்கியமானது. ஈழத்தமிழர்கள் பிரச்சனை தமிழக அரசியலில் வெறும் பகடைக் காயாக பயன்படுத்தப்படும் அவலத்தை மிகச் சிறப்பாக பகடி செய்திருக்கும் அந்த கதை.
கதாபாத்திரங்கள் மற்றும் கதை நிகழும் சூழல்களின் விரிவான சித்தரிப்புகள் மூலம் எழுத்தாளர் தன்னுடைய புனைவுலகை உருவாக்குதல் என்பது கலை. ஆனால் மிகக் குறைவான சொற்களில் சித்தரிப்புகளில் அதை சாதிப்பது என்பது மேலான கலை. சுரேஷ்குமார இந்திரஜித் இரண்டாவது வகையில் மிக முக்கியமான எழுத்தாளர்.
நன்றி.
இ.மாரிராஜ்
எழுத்தின் புதிர் – கா.சிவா
சுரேஷ்குமார இந்திரஜித்- முத்துக்குமார்
கடல், வண்ணத்துப்பூச்சி, சுரேஷ்குமார இந்திரஜித்- காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம்விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள் -10
விஷ்ணுபுரம்விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள் -9
விஷ்ணுபுரம் விருது,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-8
சுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7
சுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-5
சுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-4
விஷ்ணுபுரம் விருது ,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-3
விஷ்ணுபுரம் விருது ,சுரேஷ்குமார இந்திரஜித்- கடிதங்கள்-2
சுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்