குறங்குதமிழ்!
அன்பின் ஜெ..
‘குரங்கு சேக்கப்ஸர்’ ஐ வரலாற்றில் நிலைநிறுத்தியிருக்கிறீர்கள்.
சிறு வயதில், அம்மாயி, தனது கார்ப்பரேட் க்ளையண்டுகளுக்கு விற்றது போக, மீதமிருக்கும் பாலை விற்க, ஈரோட்டின் மிகப் பெரும் சுதந்திரச் சந்தையான கொங்கலம்மன் கோவில் தெரு முனைக்குச் செல்வார். அப்போது அவர் கையைப் பிடித்துக் கொண்டு சென்ற ஒரு நாள் இதைக் கண்டு ஸ்தம்பித்துப் போயிருக்கிறேன்.
குரங்கு சரி.. பக்கதிலேயே குரங்குப் படம் போட்டு விளக்கியிருக்கிறார்.. அதென்ன சேக்கப்ஸர்?
“அப்படீன்னா என்னங்கம்மாயி?”, என்று கேட்டேன்.
எருமையைத் தவிர வேறெந்த வாகனத்தையும் ஆய்ந்தறிந்திராத என் அம்மாயிக்கும் தெரியவில்லை. 15 ஆண்டுகள் சென்ற பின்னரே அந்தப் பெரும் புதிருக்கு விடை கிடைத்தது.
அப்படியானால், அந்த போர்ட் குறைந்த பட்சம் 45 வருடம் பழமையானது. தொன்மையானது என்பதே சரி.. தொல்லியல் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்யப்பட வேண்டிய கேஸ்..
அடுத்த முறை ஈரோடு வருகையில், பிரமாண்டமான வரவேற்பு வளைவும், நன்றி சுவரொட்டிகளும் கழகத்தின் ஈரோட்டுக் கிளை சார்பாக ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.
அன்புடன்
பாலா
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
ஈரோடு குரங்கு மார்க் சேக்கப்சர் – இதன் கிளையை கோவை உக்கடம் ஆத்துப்பாலம் அருகே கண்டிருக்கிறேன்! இதே பலகை .டிசைன் , எழுத்தமைப்பு!
கோவையில் மெக்கானிக் கடைகளில் சேக்கப்சர் என்றே புழக்கத்தில் உள்ளது.
நன்றி.
அன்புடன்,
ஆனந்த்
***
அன்பு ஜெ அவர்களுக்கு,
அன்புள்ள ஜெ
குறங்கு ஒரு நல்ல பகடிக்கட்டுரை. பத்மநாபபுரம் அரண்மனையில் மகாராஜாவின் ஃபேலஸ் பற்றி என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். “ரொம்ப பெரிசா?”என்று கேட்டேன். “முன்னாலே சின்னதா இருந்தது. பின்னாலே பெரிசா ஆயிட்டுது” என்றார்கள்.
சங்கர்