புதியவாசகரின் கடிதம்

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

நலமறிய ஆவல், இது முதல் முறையாக நான் உங்களுக்கு எழுதும் கடிதம், இதுவரை தனிப்பட்ட முறையில் யாருக்கும் கடிதம் எழுதியதில்லை பிழையிருப்பின் மன்னிக்கவும்.

நான் உங்களது வாசகன், மதுரையிலிருந்து எழுதுகிறேன். உங்களுடைய காடு நாவலை படித்தவுடன் உங்களுக்கு 2015ல் ஒரு கடிதம் எழுதினேன் ஆனால் அந்த கடிதத்தை அனுப்ப தைரியமில்லாமல் அதை அனுப்பவில்லை அப்போது நான் கல்லூரியில் முதலாமாண்டு மாணவன் அந்த வயதிற்குரிய சிறுபிள்ளைத்தனத்தோடு எழுதிய கடிதம் என்று அனுப்பவில்லை……காடு நாவல் மூலமே நான் உங்கள் உலகத்துக்குள் பிரவேசித்தேன், காடு எனக்குள் ஒரு மழைக்காட்டை உருவாக்கியது நான் விரும்பும் கணத்தில் என்னால் அந்த மழைக்காட்டுக்குள் திரிய முடிந்தது. இப்பொழுதும் நான் ஒவ்வொரு வேனிற்காலத்திலும் அதை படிக்க துவங்குவேன் அது எனக்குள் ஈரக்காற்றொடு கப்பகிழங்கையும் கடுங்காபியையும் நிரப்பும். 2015க்கு பிறகு நான் உங்களுடைய சிறுகதைகள் அனைத்தையும் தேடித்தேடி வாசிக்க துவங்கி இன்று விஷ்ணுபுரம் வரை வாசித்துவிட்டேன்.

வாசிக்கும் பழக்கத்தை என் தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். என் தந்தையின் மூலமாக தான் இலக்கியம் என் வாசிப்புக்குள் வந்தது. சுஜாதா, ராஜேஷ்குமார், Sherlock holmes, Sidney Sheldon  என்று வாசித்துக்கொண்டிருந்த என்னை இலக்கியத்துக்குள் கொண்டு வந்தது நீங்களும் எஸ். ராமகிருஷ்ணனும் தான். உலக இலக்கியத்துக்குள் நான் என் வாசிப்பை துடங்கிய பின்புதான் என் தனிப்பட்ட வாழ்க்கை தஸ்தவெய்ஸ்கி மற்றும் டால்ஸ்டாய் போன்ற பெரும் படைப்பாளிகளின் கதாபாத்திரங்களுடன் இணைந்தது…..ஓரு வாழ்க்கையில் பல வாழ்க்கையை வாழ கதைகளே உதவுகின்றன அதன் மூலம் நமது கற்பனை விரிவடைந்து பிறகு பருப்பொருளாய் உருமாற்றம் அடைகிறது என்று தங்களின் சொற்பொழிவின் மூலம் புரிந்து கொண்டேன்.

இந்த Qurantinne முழுவதும் விஷ்ணுபுரத்திற்குள் உலாவுவதும் வெளியில் உங்களுடைய வலைதளத்தை வாசிப்பதுமாக இருந்தேன்……2016ல் விதிசமைப்பவர்கள் கட்டுரை தொகுப்பை நான் வாங்கியிருந்தேன் ஆனால் அது அந்த வயதில் எனக்கு சற்றும் புரியாத மொழியில் இருந்தது…2020ல் அது எனக்கு ஒரு பொக்கிஷமாக மாறிவிட்டது, முக்கியமாக “நான்கு வேடங்கள்” என்ற கட்டுரை எனக்கு ஒரு திறப்பு என்று தான் சொல்லுவேன்.

விஷ்ணுபுரம் ஒரு Lifetime study என்று பகுத்து வாசிக்க வேண்டிய நாவல் மேலும் அது நாவல் போல இல்லை நாவலை தாண்டி அது எதையொ எனக்கு கொடுக்க காத்திருக்கிறது என்றே எனக்குப்படுகிறது…அதை அடைந்தவுடன் மீண்டும் அதை பற்றி தனியே இன்னொரு கடிதம் எழுதுகிறேன்.

உங்களுடைய மற்ற கதைகளை நாவல்களை பல முறை திரும்ப திரும்ப வாசிக்க முடிந்த எனக்கு அறம் சிறுகதைகளை இரண்டு முறைக்கு மேல் வாசிக்க இயலவில்லை சில நாட்கள் தூக்கமும் வரவில்லை…………இந்த கதைகளை என் நண்பர்கள் பலருக்கு அன்பளிப்பாக இதை வாங்கி கொடுத்தேன் மேலும் இக்கதைகளை விவாதிக்க சில நாட்களை நாங்கள் செலவிட்டிருக்கிறொம்….இன்னும் அறம் கதைகளின் கொந்தளிப்பு எனக்குள் என் நண்பர்களுக்குள் இருக்கிறது.

அறம் என்பதன் பொருளே தங்கள் எழுத்து வாயிலாக தான் எனக்கு புரிந்தது அந்த புரிதலை அளித்ததற்கு நன்றி…. இன்னும் பல தாக்கங்களை என்னுள் உங்கள் எழுத்து உண்டாக்கியிருக்கிறது அதை சொல்ல இக்கடிதம் போதாதது. தங்களுக்கு எனது நன்றியும் அன்பும்.

ப்ரியத்துடன்,

சூர்யப்ரகாஷ் பிச்சுமணி

மதுரை.

அன்புள்ள சூரியபிரகாஷ்

ஓர் எழுத்தாளனாக நான் எண்ணுவது என்னுடைய முழு ஆளுமையையும், முழுச் சிந்தனையையும், முழுத்தேடலையும் வாசகனிடம் செலுத்திவிடவேண்டும் என்றுதான்.அது ஒரு வேகம். உலகில் இன்றுவரை சிந்தனைகளை இயக்கிவருவது, அறிவியக்கத்தின் ஆதார விதி அதுவே

அந்த விசையே ஒருபக்கம் தன்மீட்சி போன்ற கட்டுரைகள். இன்னொரு பக்கம் வெண்முரசு போன்ற பெருநாவல்கள். இவை என் வெவ்வேறு தோற்றங்கள்

நான் எதிர்பார்ப்பது என் படைப்புக்கள் வழியாக என்னுடன் ஓர் உரையாடலை நீங்கள் தொடங்கவேண்டும் என்றுதான்.

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு நிலமும் மானுடரும்
அடுத்த கட்டுரைஇந்திரஜித் எனும் மாயக்காரன்.-உமையாழ்