விஷ்ணுபுரம் வாசிப்பு- கடிதங்கள்

விஷ்ணுபுரம் வாங்க
https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமாக இருக்கீறீர்களா? வீட்டில் அனைவரும் நலம் தானே?

இந்த கடிதத்தை எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. உங்களை 2011ம் ஆண்டில் இருந்து வாசிக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை நான் பெரும்பாலும் வாசிப்பது நீங்கள் எழுதியது அல்லது நீங்கள் பரிந்துரைப்பது. எனினும் உங்களின் விஷ்ணுபுரம் நாவலை வாசிக்க எனக்கு இப்போது தான் வாய்த்தது, முடிந்தது.

பின் தொடரும் நிழலின் குரல் 2014ம் ஆண்டே வாசித்து விட்டேன். விஷ்ணுபுரம் வாசிக்கவே முடியாத அளவுக்கு கடினமான படைப்பு என்ற மனப்பதிவை எப்படியோ அடைந்திருக்கிறேன். 2015ம் ஆண்டு மதுரை NCBHல் வாங்கிய புத்தகத்தை இப்போது தான் வாசித்து முடிக்கிறேன்.

வாங்கிய ஆண்டே ஒரு 60 பக்கம் வரை படித்த நினைவு இருக்கிறது பின்னர் பெரிய இடைவெளி விழுந்து அடுத்த புத்தகங்களுக்கு நகர்ந்து விட்டேன். ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் வாசிக்க வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் அதை படித்து விட்டு இதை படிப்போம் என்று தள்ளி போட்டு விடுவேன்.

இந்த ஆண்டு ஊரடங்கு தொடங்கியதில் இருந்து விஷ்ணுபுரம் வாசித்து விட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். The Rise and Fall of the Third Reich வாசித்து விட்டு விஷ்ணுபுரம் வாசிக்க தொடங்கினேன்.

The Rise and Fall of the Vishnupuram என்று மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. எங்கே சிதிலமடைந்த வீட்டை பார்த்தாலும் இங்கே வாழ்ந்தவர்கள் என்ன ஆனார்கள்? இங்கே அவர்கள் வாழும் போது எப்படி இருந்தது? எதனால் இதை கைவிட்டார்கள்? இப்போது அவர்கள் எங்கே? என்று மனதிற்குள் கேள்விகள் முளைக்கும்.

பின்னிரவில் தூக்கம் இல்லாமல் வீட்டை சுற்றி நடக்கும் போது தெருவில் ஓடும் நாயின் silhouette எனக்கு சிகப்பு கண்களுடன் கூடிய கருப்பு நாயை நினைவு படுத்துகின்றன.

நாவலை வாசித்து கொண்டிருக்கும் போதே நாவல் பற்றி கோவை ஞானி அவர்களுடன் நீங்கள் உரையாடிய பகுதியையும் வாசித்ததால் நாவல் வெளிவந்த அந்த காலத்தில் சென்று வாசிப்பது போல பிரமை ஏற்பட்டது.

இந்தியாவில் இன்று நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை சரியாக புரிந்துகொள்ள விஷ்ணுபுரம் மாதிரியான ஒரு நாவலை கட்டாயம் வாசிக்க வேண்டும்.

மிக்க அன்புடன்

மருது பாண்டியன்

 

அன்புள்ள மருதுபாண்டியன்

விஷ்ணுபுரம் நாவல் எழுதப்பட்ட காலத்தைவிட மிக ஆழமாக இன்று பொருள்படுவதை நானே வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இன்றுள்ள கருத்தியல்சக்திகளின் மோதலின் கதைதான் விஷ்ணுபுரம். அன்று அது ஓர் அகஉந்துதலாக என் இளமனதில் உருவாகியிருக்கிறது. வெல்வதற்கும் தோற்பதற்கும் அப்பால் கிடக்கும் வகுத்தற்கரிய ஒன்று. வேர் என்றும் கிளைகள் என்றும் ஆனது

ஜெ

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் நாவலை வாசித்து முடித்தேன். தமிழ் வாசகர்களில் இப்பெருநாவலை வாசித்து முடித்தவர் – முடிக்காதவர் என்று என்று இரண்டு வகை உண்டு என நினைக்கிறேன். இது ஒரு பட்டம் பெறுவதுபோல. நான் எட்டாண்டுகளுக்கு முன் தொடங்கினேன். என் ஆணவம் அழிந்தது. வேறு என்னென்னவோ படித்து தேர்ந்து இன்றைக்கு விஷ்ணுபுரத்தை முடித்திருக்கிறேன்

தொடக்கத்தில் எனக்கு இந்த நாவலைப்பற்றி இருந்த மிகப்பெரிய சிக்கல் இதன் முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்கும் இடையே உள்ள தொடர்பு இன்மை. வேறுவேறு நாவல் என்று தோன்றியது. சம்பந்தமே இல்லாமல் ஒரு தத்துவ விவாதம் உள்ளே நுழைக்கப்பட்டிருக்கிறது என்றும் நினைத்தேன்.

ஆனால் மீண்டும் படித்தபோது ஒரு மின்னல்போல தோன்றியது. முதல்பகுதியில் மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும் அந்த அதிகாரப்போட்டியின் இன்னொரு வடிவம்தானே இரண்டாம்பகுதியில் இருக்கும் தத்துவப்போட்டி என்று. முதல்பகுதியில் வைதிகம்,பௌத்தம்,சமணம்,தாந்த்ரீகமதம்,பழங்குடி மதம் ஆகியவை ஆதிக்கத்துக்காக போராடுகின்றன. ஒவ்வொன்றும் அதற்கான அதிகார அமைப்பை கொண்டிருக்கிறது. அதற்கான அடையாளங்கள் இருக்கின்றன. வெற்றியும் தோல்வியும் நடைபெறுகிறது.

அந்த அதிகாரமையங்களின் தத்துவார்த்தமான நிலைபாடுகள் திரண்டு அதே போராட்டத்தை ஒரு விவாதக்களத்தில் நடத்துவதுதான் இரண்டாம்பகுதி. முதலில் அதிகாரப்போர் காட்டப்பட்டு அதன்பின் அதற்குள் இருக்கும் தத்துவப்போர் காட்டப்படுகிறது. ஒரு மரத்தை காட்டியபின் வேரைக் காட்டுவதுபோல. அதைக் கண்டறிந்ததுமே எனக்கு ஒரு பெரிய பிரமிப்பு. எவ்வளவு பெரிய சித்திரம் என்று. நினைக்க நினைக்க விஷ்ணுபுரம் விரிந்துகொண்டே இருந்தது. அதிலிருந்து வெளிவரவே முடியவில்லை

நன்றி

ஆர்.ஏ.கிருஷ்ணராஜ்

அன்புள்ள கிருஷ்ணராஜ்

மூன்றாம்பகுதியின் முடிவுகளும் இரண்டாம்பகுதியில் எழுப்பப்பட்ட வினாக்களின் வெவ்வேறுவிடைகளே

ஜெ

விஷ்ணுபுரம்- கடிதங்கள்

விஷ்ணுபுரம்- கடிதம்

 

முந்தைய கட்டுரைமனு- கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைநீத்தாரை நீத்தல்