அன்னை மாயம்மா, அ.கா.பெருமாள்- கடிதங்கள்

அ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு

அ.கா.பெருமாள் பற்றி அறிய

அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க

அன்புள்ள ஜெ

தங்கள் தளத்தில் வெளியான பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களின் நூல்களை வாங்கி படிப்பதற்கான பதிவில் ஆஸ்டின் சௌந்தர் அவர்கள் சுட்டி கொடுத்திருந்த கன்னியாகுமரி அன்னை மாயம்மா, தமிழிலக்கியங்களின் காலம் பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகிய இரு நூல்களை தமிழ் இணைய நூலகத்தில் இருந்து தரவிறக்கி படித்தேன். அவ்வாசிப்பை பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.

கன்னியாகுமரி அன்னை மாயம்மா நூலே என்னை முதலில் கவர்ந்தது.சிறுவயதிலிருந்தே சித்தர்கள், மாயங்கள் இவற்றின் மீது எனக்கு ஓர் ஈடுபாடு உண்டு.

இக்கதையை படித்தும் முடிக்கையில் தோன்றியது பெரிய நாவல் ஒன்றின் கதைச் சுருக்கம் என்று.பெரும்பாலன சம்பவங்களை உச்சக் காட்சி தருணங்களாகவே பார்க்க முடிகிறது. கற்பனையும் வாழ்க்கை மீதான ஆழமான பார்வையும்  இதிலிருந்து தொடங்கி பலவற்றை‌ சென்றடையலாம். உதாரணமாக பின்னிணைப்பில் வரும் டாக்டர் சஞ்சீவ் அவர்களின் பதிவில் வரும் வான்குரல் கேட்டது, முன் ஜென்மம் பற்றி உரைக்கையில் தேரடி இளைஞனின் நிலை, கதை தொடக்கத்திலேயே வரும் மாமி குறித்த சித்திரம் என் பலவாக விரிகிறது.
அச்சித்திரத்தையும் அவரை குறித்த மற்றவர்களின் கருத்துகளையும் வாசிக்கும் போது பெருங்கற்கால சின்னங்களை குறித்து நீங்கள் கூறியவற்றை நினைத்து கொண்டேன். அவை நாமறிய காலத்திற்கு முன்னே நம் மூது முதாதைகளால் இவ்வண்ணம் நிலை நிறுத்தப்பட்டவை. இவையன்றி நமக்கும் அவர்கும் வேறு உறவு இல்லை. ஆனால் அவை நம் மூதுகு தண்டுவடங்கள். அவற்றை குறித்து நாம் செய்ய இயல்வதெல்லாம் ஊகங்கள் மட்டும் தான். ஒருவகையில் அவர்கள் மண்ணில் வேர்கொண்டு நம்மை தாங்கும் தெய்வங்கள் எனில் இவர்கள் விண்ணில் சிறகடித்து நம்மை அழைப்பவர்கள்.

மாயியின் ஒவ்வொரும் செயலுக்கும் பக்தர்கள் அர்த்தம் காண்கிறார்கள்.குப்பைகளை பொறுக்குவதிலிருந்து எரியூட்டுவது வரை. ஆனால் மாயியிடமிருந்து எப்பதிலும் வருவதில்லை.ஆக நம் அர்த்தங்கள் நமக்கு மட்டுமே ஆனவையாய் சுவரில் முட்டி நிற்கின்றன.

பேராசிரியர் மாயி அம்மாவை தொடக்க காலங்களில் தான் காணும் போது அவர் மேலான மக்கள் மதிப்பையும் பிற்பாடு பதினைந்து ஆண்டுகளுக்கு பின் அதில் ஏற்பட்ட மாற்றத்தையும் கூறுவது கவனிக்கப்பட வேண்டியது. முன்பு பைத்தியக்காரி என்றவளை தான் இப்போது அருள் பெற்று வீடு பேறு பெற்றவள் என்கிறார்கள். இவையெல்லாம் சரிந்த குடலை நாயின் வயிற்றில் பொருத்திய அதிசயத்திற்கு பின்பு தான் நிகழ்கிறது. அதை நம்பாவிட்டாலும் கூட எங்கோ நம் ஆழ்மனம் இந்த உலகியலை தாண்டியவர் அவர் என்பதனை அறிந்திருப்பதனாலேயே அவரை வணங்குகிறார்கள். பைத்தியங்கள் பெரும்பாலும் அறிவு பிறழ்ந்தவர்கள். பேராசிரியர் அறியும் மாயி,மாயம்மா அதனை கடந்தவராகவே இருக்கிறார்.

மாயி அம்மாவின் பிறப்பு பற்றி அறிய செல்லும் பேராசிரியர் கொடுக்கும் தகவல்கள் அவரது பேச்சில் இந்தி, வங்காளம் மொழி சொற்கள் வருவது குறித்து ஒரு புரிதலை கொடுக்கிறது. வங்காளத்திலிருந்து வந்த கதையே ஒப்பு நோக்க நம்பகமாக இருக்கிறது. மாயம்மா சீடர் நேபாளம் என்கிறார்.நேபாள அடிவாரத்தில் பிறந்து கீழ்த்திசை ஓடி வங்கமடைந்து தென்குமரி கடலில் சங்கமமானார் என கொண்டால் புராதான கங்கையின் உருவை அடைந்து விடுகிறார்.இங்கிருந்து மேலும் செல்லலாம்.

அவரை அழைக்கும் பெயரான மாயம்மா, முடிவிலியாய் முன்னிருக்கும் கடலே வடிவான குமரி அன்னை இவற்றோடு சேர்த்தால் மாயம்மா மாயா தேவியாக நம் முன் நிற்கும் பிரபஞ்ச மாயை.பேராசிரியர் வார்த்தைகளில் கயிறு அறுந்த பட்டம். இலக்கிய படைப்பாளிக்கும் அதன் வாசகனுக்கும் முடிவிலா படிமவெளி.

அடுத்ததாக படித்த தமிழிலக்கியங்கள் காலம் பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை என்ற நூலில் இருந்து பெற்றுகொண்டது எனில் நான் அறிய வேண்டியதின் அளவையும் என் அறிவின் எல்லையையுமே என்பேன்.

தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் அத்தனை நூல்களையும் படித்து அவற்றை ரத்தினச் சுருக்கமாக தொகுத்தளித்துள்ளார் பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்கள். அந்நூலை கொண்டு வருவதற்கான காரணமான வையாபுரிப்பிள்ளை அவர்களை பற்றிய செய்திகளை அவர்‌ ஆய்வை மறக்கடிப்பது என்பதனை முன்னுரையில் தெளிவாக கூறியுள்ளார். நூலை படிக்கையில் நாமும் அந்த புறக்கணிப்பில் கான் காரணத்தை விளங்கி கொள்ள முடிகிறது.

இந்நூலை புரிந்து கொள்ள பண்டைய‌ தமிழிலக்கியங்களை கற்றல், இந்திய மற்றும் தமிழக வரலாறு குறித்த அறிவு, கல்வெட்டுகளை அறிதல், சமஸ்கிருதத்தில் அடிப்படை அறிவு இவையனைத்தும் தேவைப்படுகிறது. இவற்றில் வரலாறு குறித்து மட்டும் பிட்டு வைத்தாற் போல சிற்றறிவை வைத்து கொண்டு என்னால் அதிக தூரமெல்லாம் செல்ல முடியவில்லை. இன்னொரு முறை சற்று கூடுதலான கவனத்துடன் படித்து பார்க்க வேண்டும். இவையெல்லாம் வேறு எவையெல்லாம் நான் செய்ய வேண்டுமென்று கூறினால் என் வளர்ச்சி பயன்படும்.

இறுதியாக இந்த நூல்கள் பிடிஎஃப் வடிவில் கிடைக்கின்றன.இவை நேரடியாக ஸ்கேன் செய்து ஏற்றப்பட்ட வை என் நினைக்கிறேன்.நூல்களில் வை,னா சில எழுத்து வடிவங்கள் பழைய வடிவில் உள்ளன.சிற்சில இடங்களில் வார்த்தைகள் ஒன்றும் பாதியுமாக அழிந்து உள்ளன.இந்நூல்களை செம்மை செய்து கிண்டில் போன்றவற்றில் வெளியிட்டு வைத்தால் அடுத்து படிக்க வருபவர்களுக்கு உதவும் என்பது என் எண்ணம். கூற முடிந்தவரை கூறிவிட்டேன் ஜெ.

அன்புடன்

சக்திவேல்

அன்புள்ள ஜெ

அ.கா.பெருமாள் அவர்களின் உலகின் விரிவு ஆச்சரியப்படவைக்கிறது. அவர் பழந்தமிழாய்வு முதல் ஆலயங்களின் வரலாறு வரை எழுதியிருக்கிறார். நாட்டாரியல் ஆய்வு முதல் ஏரிகளின் கணக்கு வரை எழுதியிருக்கிறார். ஒரு வாழ்நாள் முழுக்க ஆய்விலேயே செலவழித்திருக்கிறார்

தமிழ்நாட்டில் எந்த மதிப்பும் இல்லாத ஒரு செயல் என்றால் ஆய்வுதான். ஏனென்றால் இங்கே போலி ஆய்வுகள் பெருகிக்கிடக்கின்றன. எந்த அடிப்படையையும் அறிந்துகொள்ளாமல் எந்த புரிதலும் இல்லாமல் மனம்போனபடி செய்யப்படும்  போலி ஆய்வுகள்தான் வாட்ஸப்பில் வந்துகொண்டிருக்கின்றன. யூடியூபில் தமிழில் கிடைப்பவற்றில் பாதிக்குமேல் இந்தக்குப்பைகள்தான்

இங்கே ஆய்வு என்றால் தமிழர்பெருமை, மதப்பெருமை, சாதிப்பெருமை பேசுவது. அதற்கு ஏதாவது துளிச்செய்தியை எடுத்துக்கொண்டு கதை விடுவது. அது நம் மொழிவெறிக்கு இனவெறிக்கு மதவெறிக்கு சாதிவெறிக்கு ஆதரவானது என்றால் நாம் அதைப் பாராட்டி உண்மைதான் என்போம்.மேடையில் அதை வித்தாரமாகச் சொல்லத்தெரிந்தால் அவரை ஆய்வாளர் என்போம்.

இந்த அலையில் மறைந்துவிடுபவர்கள் உண்மையான ஆய்வாளர்கள்தான். அவர்களையும் நாம் இந்த போலி ஆய்வாளர்களின் பட்டியலில் சேர்த்துவிடுவோம். அவர்களிடமும் நாம் பரபரப்பையும் நம் கொள்கைக்கான ஆதாரங்களையும்தான் தேடுவோம். நம்முடைய இந்த சந்திப்புகளிலேயே அ.கா.பெருமாள் அவர்களுக்குத்தான் குறைவான பார்வையாளர்கள் வருவார்கள் [அது ஒன்றும் குறையல்ல. வருபவர்கள் உண்மையான வாசகர்களாக இருப்பார்கள்] இதுதான் தமிழின் சூழல்

அ.கா.பெருமாள் அவர்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை. ஏனென்றால் அவர் இங்கிருக்கும் எந்த அரசியலிலும் இல்லை. எவரையும் அண்டி நிற்கவில்லை. கல்வித்துறை அரசியலில் இல்லை.அரசியல்தலைவர்கள் பற்றி ஆய்வுசெய்யவில்லை. மெய்யான தமிழாய்வுசெய்தார். ஆகவே தவிர்க்கப்பட்டார். அவர் அதைக்கவலைப்படாமல் தன் வாழ்க்கையை முழுக்க ஆய்வில் செலவிட்டிருக்கிறார். அவருடைய நூல்களின் எண்ணிக்கை பிரமிக்கச் செய்கிறது

இரண்டு நூல்களைச் சொல்லவேண்டும். திருவட்டார் ஆதிகேசவர் ஆலயம். அன்னை மாயம்மா. ஆலயம் பற்றி எழுதியிருக்கிறார். அதில் பக்தி இல்லை. ஆய்வுநோக்கும் வரலாற்றுப்பார்வையும் மட்டுமே உள்ளது.நம்பகமான தகவல்கள் மட்டுமே உள்ளன. அன்னை மாயம்மா என்ற மிஸ்டிக் பற்றி எழுதியிருக்கிறார். எந்த பரவசமும் வியப்பும் இல்லை. செய்திகளைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார். ஆய்வு என்பது என்ன என்பதை, அதன் விதிகள் என்ன என்பதை அவரிடம் நம் அறிவுலகம் கற்றுக்கொள்ளலாம்

என்.ஏ.சிவராமன்

முந்தைய கட்டுரைதன்குறிப்புகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசவரக்கத்திமுனைப் பாதை