நேர்நிலைச் செயல்கள் கைகூடுதல்- பா.ஸ்டாலின்

நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம்

அன்பிற்கும் மதிப்பிற்கும்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

மனமார்ந்த வணக்கங்கள்

இந்த மழைக்காலம் கொடுக்கும் மனசந்தோசம் அலாதியானது. இரவு நன்கு தூங்கி காலையில் கண் விழிக்கும் போது,முந்தைய இரவில் கொட்டி தீர்த்த மழையின் ஈரப்பதமும் குளிர்ச்சியும் முதல் முறை  உடம்பில் படும் போது உண்டாகும் சிலிர்ப்பு.அதைப்போல  ஒவ்வொரு முறை  உங்களுக்கு கடிதம் எழுதும் போதும் அதே உணர்வு தான் எழுகின்றது .

எங்களை சுற்றி எத்தனை நேர்மறையான காரியங்கள் கைகூடி உள்ளன என்று உங்களிடம் சொல்ல தவிப்புடனும் ஆர்வத்துடனும் எப்போதும் இருக்கின்றேன்.நேற்று மாலை ஈநாடு பத்திரிக்கையில் இருந்து அழைப்பதாகச் சொன்னார்கள், இரவு தான் பேச முடிந்தது உற்சாகமான குரல் கருப்பட்டி கடலை மிட்டாய் பற்றி கட்டுரை ஒன்று எழுதி கொண்டு இருக்கின்றேன்.உங்களை  பற்றி வந்த அத்தனை கட்டுரையும் படித்து விட்டேன் ,சில கேள்விகள் உள்ளன என்று உரையாடல் துவங்கியது .இனம் புரியாத இணக்கம் ஒன்று இருந்தது அவரின் குரலில்.பதில் சொல்லி கொண்டு இருக்கும் போது ஏதோ  ஒரு புள்ளியில் உங்களின் பெயர் சொல்ல ,ஆம் ஜெயமோகன் அவர்களின் தளம் வழியாக தான் உங்களை பற்றி அறிந்து கொண்டேன் என்றார்.மேலும் ஒரு வார்த்தை சொன்னார் ,கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி ,தனிமையில் சிக்குண்ட போது நெருக்கடி மனநிலையில் தன்மீட்சி புத்தகத்தை தான் முதலில் கையில் எடுத்தேன் என்றார்.என்னை அறியாமலே அவரிடம் அத்தனை மனம் விட்டு பேசி தொழில் குறித்த அடுத்த கட்ட செயல்பாடுகள் இப்போது நடக்கும் முக்கிய முன்னெடுப்புகள் பற்றியும் சொன்னேன் .

தெலுங்கானாவில் பழங்குடி கிராமத்து குழந்தைகளுக்கு இருக்கும் சத்து குறைபாடுகளை போக்க தினமும் காலையிலும் மாலையிலும் கருப்பட்டியில் செய்த தின்பண்டம் அளிக்க வேண்டும் என்று அரசாங்கம் நிதி ஒதுக்கி உள்ளது.அதற்காக மரபான 7 தின்பண்டங்களையும் அதற்கான   உற்பத்தி செயல்திட்டம் உருவாக்கி தர வேண்டும்  என்று அந்த அரசு நிர்வாகத்தின் அதிகாரிகள் கேட்டு இருந்தார்கள்.அதற்காக இரு மாதங்களுக்கு கூடுதலாக அவர்களுக்கு பணியாற்றி உள்ளேன் என்று சொன்னதும் அவருக்கு அத்தனை சந்தோசம்.நான் இதை ஜெயமோகன் சாரிடம் கூட சொல்லவில்லை,நல்லபடியாக செயல்வடிவம் முழுமை பெற்று பயன்பாட்டுக்கு சென்ற பிறகு சொல்லாம் என்று நினைத்து இருந்தேன் என்று சொன்னேன் .இந்த செய்தியை கட்டுரையில் சேர்க்கட்டுமா என்று கேட்க ,நான் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனத்தை கேட்டேன்.அவர்களோ  தற்போது அரசியல் சூழல் சரியில்லை என்று மறுத்து விட்டனர்.ஆனால் இந்த மாத இறுதிக்குள் ஒரு இலட்சம் குழந்தைகளுக்கு அந்த இனிப்புகள் சென்று சேர்ந்துவிடும் என்று அவர்கள் சொன்ன செய்தி மனதை மிக உற்சாகமாக்கி விட்டது.

உங்களின் தளத்தின் வழியே  குக்கூ நண்பர்களின் கடிதங்கள் வாசிக்கும் வாசகர்கள் ,எங்கள் தயாரிப்பு பொருட்களையும்,புத்தகங்களையும் மிகுந்த மனநிறைவுடன் வாங்கி கொண்டு அவற்றின் சாதக பாதகங்களையும் எங்களிடம் மனம் விட்டு சொல்கின்றனர்.

உங்களின் வாசகர்,தும்பி சிறுவர் மாத இதழை,தன்னறத்தின் புத்தகங்களை  தன் திருமணத்திற்கு வரும் குழந்தைகளுக்கும் தனது சொந்த பந்தங்களுக்கும் வாங்கி பரிசாக அளித்துள்ளார்.அதற்காக அவர் எடுத்து கொண்ட மெனக்கெடல்களை அருகிருந்து பார்த்து இருக்கின்றேன்.எல்லோரும் சொல்லுவது விஷ்ணுபுரம் நிகழ்வுல உங்களை பார்த்தேன் ,ஏதோ ஒரு தத்தில் உங்களோடு இணைந்து கொள்ளணும் அப்படின்னு தோணுச்சு.எங்களால் இயன்றதை செய்கிறோம் இதை எல்லாம் வெளியில் சொல்ல வேண்டாம் என்று  உறுதியாக சொல்லி செல்கின்றனர் .இத்தனை நண்பர்கள் உங்கள் தளத்தில் வரும் கடிதங்களை எந்தளவு வாசித்து உள்வாங்கி அவற்றை செயல்முறையும் படுத்தி உள்ளனர்.ஒரு கூட்டு குடும்ப ,சமூக அக்கறை கொண்ட இளைஞர் வட்டம் உருவாகி வருவதை மிகுந்த நன்றி உணர்வோடு பார்க்கின்றேன்.

தான் படித்த பள்ளியையும் அதன் ஆசிரியரையும் நினைவு கூர்ந்து வருடா வருடம் நல்ல புத்தகங்களை வாங்கி அந்த வருடம் பள்ளி படிப்பை வழங்கும் மாணவர்களுக்கு பரிசாக அளிக்கும் பழக்கம் உள்ள உங்களின் வாசக நண்பர்.இந்த ஆண்டு  பாலா அண்ணன்  எழுதிய ‘இன்றைய காந்திகள் புத்தகம் 100எண்ணிக்கையை  பரிசாக  அளித்து உள்ளார். மேலும் ஒரு வாசக நண்பர்,

90 வயதில் காலமான  தன் தாத்தாவின் 16ம் நாள்  திதிக்கு கருப்பட்டி கடலை மிட்டாயும் நெருப்பு தெய்வம் நீரே வாழ்வும்  புத்தகமும் கொடுத்து இருக்கும் செயல்கள் எங்களை நெக்குருக வைக்கிறது.தண்ணீருக்காக தன்னுயிர் நீத்த நிகமானந்தாவின் வாழ்வு குறித்த இந்த சிறு புத்தகத்தை  இறுதி படையலில் வைத்து இருக்கின்றார்.தனது தாத்தா குறித்த ஒரு வாழ்வுகுறிப்பு ஒன்றும் அனுப்பிவைத்தார்.நீர் குறித்து அவ்வளவு பிரக்ஜையுடன் நடந்து கொண்டவர்,அந்த உணர்வை கடைசி காலம் வரை தொடந்து வந்துள்ளார்.நல்லாசிரியர் விருது பெற்ற அந்த அய்யாவின் புகைப்படமும்,பின்தங்கிய மாணவர்களுக்கு இடைவிடாமல் கல்வி பணியாற்றிய அவரின் தவிப்பு மனமும் ,என்னை தூங்கவிடாமல் செய்தது.

ஒவ்வொரு அக்டோபர் 2ம் ,குக்கூ நிலத்திற்கும் அதன்  நண்பர்களுக்கும் ஆகப் பெரிய திறப்பை ,செயல் வழி  ஞானத்தை  நோக்கிய மனிதர்களின் வாழ்வனுபங்களை உள்வாங்கி கொண்டு பயணிப்போம். அப்படி இந்த முறையும் 30 இளைய ஆன்மாக்களின் கூட்டு பிரார்த்தனையுடன் நாள் துவங்கியது.புகைப்பட பள்ளி துவங்கப்பட்டது,ஒவ்வொரு வார இறுதியிலும்  தொடர் பயிற்சி  வகுப்புகள்  தொடங்கப்பட்டுள்ளது.இது  புகைப்பட கலையின் அடிப்படை தொடங்கி இன்றைய நவீன காலத்தின் இந்த கலைத்துறையின் வளர்ச்சியை, காட்சி ஊடகத்தின் அதீத வளர்ச்சியால் நடக்கும் சிக்கல்களில் இருந்து அவர்களை மீட்கவும் அவர்களுக்கு இதை இயல்பாக அறிமுகப்படுத்தி அவர்களை நல்ல விதமாக வடிவமைக்க செயலாற்றி வருகிறோம்

ஆறு வருடம் முன்பு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2  தினத்தில் குமரப்பா அவர்களின் சமாதியில் துவங்கப்பட்டது  கருப்பட்டி கடலை மிட்டாய் தொழில், ஒவ்வொரு வருடமும் ஒரு முன்னேற்ற பாதையை கண்டடைந்து உள்ளது.அதற்கான சாட்சியாக அதே தினத்தில் நாணய விகடன் புத்தகத்தில் கருப்பட்டி கடலை மிட்டாய் குறித்து நல்ல கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் அம்மா இருக்கும் புகைப்படங்கள் மனதுக்கு ரொம்ப நெருக்கம் ,அன்று அக்டோபர் 2 அம்மாவின் பிறந்த நாள் பரிசாக அதை உணர்ந்தேன்.மேலும் ஆனநத விகடனின் இணைய பக்கத்தில்  அக்டோபர் 4  வந்த கட்டுரை பெரும் நம்பிக்கையும் நிறைவையும் அளித்துள்ளது.அன்று மனைவியின் பிறந்தநாள்.

www.motherway.in  எனும் இந்த தளத்தின் வழியே இந்தியாவின் கடைக்கோடி வரை இந்த மரபான தின்பண்டம் சென்று சேர்ந்துள்ளது.சட்டிஸ்கரில் எல்லை பாதுகாப்பு  படையில் இருக்கும் உங்களின்  வாசகர் இல்லம்  வரை இந்த இனிப்பு சென்று சேர்ந்துள்ளது.மானுடம் ,நோய்க்காலமும்  மழைக்காலமும் ,அழகு நேர்த்தி அடிப்படை மனநிலைகள் போன்ற பலகட்டுரைகள் மனதை இலகுவாக்கியுள்ளது .புறசூழல் குறித்த சரியான புரிதல் ஏற்படுகிறது .எதற்கு நாம் வினையாற்ற வேண்டும் என்று தற்போது தெளிவாக தெரிகிறது . பயணங்கள்  குறித்த தங்களின் கட்டுரைகள் மேலும் அதில் இருக்கும் இயற்கை சூழல் பற்றிய வர்ணனைகள் ,அதை போல் எழுதுவதற்கு தூண்டுகிறது.

இந்தக்காலை திருவட்டாறு ஊரில் இருந்து வந்த வாடிக்கையாளருக்கு கடலை மிட்டாய் பெட்டியை அனுப்ப தயார் செய்து கொண்டு இருந்தேன்.அப்போது நீங்கள் அந்த கோயிலைகுறித்து பேசியது மனதில் எழுந்த வண்ணமே இருந்தது.உங்களுக்கு உடனே இந்த கடித்தை எழுத தொடங்கினேன்.உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும்  எல்லாம் வல்ல அந்த திருவட்டாறு ஆதி கேசவ பெருமாளை வேண்டி கொள்கின்றேன் மனம் முழுவதும் நிறைந்து இருக்கிறீர்கள்.

https://www.vikatan.com/business/news/engineer-successfully-running-karupatti-kadalai-mittai-business

பா.ஸ்டாலின் கள்ளிப்பட்டி

தன்மீட்சி

இயற்கைக் கடலைமிட்டாய்

செயல்படுவோர் அளிக்கும் மீட்பு

முந்தைய கட்டுரைமல்லர் கம்பம்- நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைபின்தொடரும் பிரம்மம்