அ.கா.பெருமாள் பற்றி அறிய
அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க
அன்புள்ள ஜெ
என் அப்பாவின் சொந்த ஊர் சுசீந்திரம். ஆகவே எனக்கு சுசீந்திரம் மீது ஓர் ஈர்ப்பு உண்டு. நான் சுசீந்திரம் பற்றிய நூல்களை படிப்பேன். டாக்டர் கே.கே.பிள்ளை எழுதிய சுசீந்திரம் வரலாறு நூலை ஆறுமாதம் எடுத்துக்கொண்டு படித்து முடித்திருக்கிறேன். அ.கா.பெருமாள் பற்றி நீங்கள் எழுதிய ஒரு குறிப்பில் கே.கே.பிள்ளை நாட்டார் தரவுகளை கருத்தில்கொள்ளவில்லை, அ.கா.பெருமாள் அவற்றையும் கருத்தில்கொண்டு சுசீந்திரம் ஆலயத்தின் வரலாற்றை எழுதியிருக்கிறார் என்று சொன்னீர்கள்.
அது எனக்கு ஆர்வமூட்டியது. ஆனால் அவநம்பிக்கையும் இருந்தது. ஏனென்றால் கே.கே.பிள்ளையின் நூல் முழுமையானது. சுசீந்திரம் கோயிலின் எல்லா செய்திகளையும் அற்புதமகா தொகுத்துச் சொல்லும் மிகப்பெரிய நூல். அதில் இல்லாத எதை இவர் சொல்லப்போகிறார் என்று நினைத்தேன். ஆனால் அருமையான நூல். கே.கே.பிள்ளையின் பார்வைக்கு வெளியே சென்று பல புதிய இடங்களை அ.கா.பெருமாள் அவர்கள் தொட்டிருக்கிறார். நாட்டாரியல் என்பது எந்த அளவுக்கு தமிழுக்கு முக்கியமனாது, எந்த அளவுக்கு வரலாற்றாய்வுக்கு முக்கியமானது என்பதை அறிந்துகொண்டேன். நன்றி
ராஜ்குமார் முகுந்தன்
அன்புள்ள ஜெ
அ.கா.பெருமாள் அவர்களின் அறிமுகக்குறிப்புகளே ஒரு நூல் அளவுக்கு உள்ளன. அவரைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். அவருடைய நூல்களின் இணைப்பை அளித்திருக்கிறீர்கள். அவரைப்பற்றிய பதிவுகளையும் தொகுத்து அளித்திருக்கிறீர்கள். ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வது முக்கியமானது. எவரை தெரிவுசெய்து முதன்மைப்படுத்தவேண்டும் என்ற முடிவுதான் அதில் கவனத்துக்குரியது. ஆனால் அந்த ஆளுமையை அறிமுகம் செய்ய இந்த அளவுக்கு உழைப்பு செலுத்தப்படும்போதுதான் விஷ்ணுபுரம் சந்திப்புகள் முக்கியமானவை ஆக மாறுகின்றன
ராஜசேகர் எஸ்
அன்புள்ள ஜெ
அ.கா.பெருமாள் அவர்களின் அறிவுச்செயல்பாடுகளில் நீங்கள் காட்டிவரும் ஆர்வம் முக்கியமான ஒரு விஷயம். அவர் சுந்தர ராமசாமியால் உங்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர். பேரா.ஜேசுதாசனின் மாணவர். ஆகவே ஒரு குருமரபு உங்களுக்கு பொதுவாக இருக்கிறது.அந்தத் தொடர்ச்சியை காணமுடிகிறது. அவருடைய அறுபதாவது ஆண்டுநிறைவு விழாவை நீங்களே எடுத்து நடத்திய செய்திகளை வாசித்தேன். அவரை அறிமுகம் செய்து எழுதிய நகர்நடுவே நடுக்காடு என்ற முன்னுரையையும் வாசித்தேன்.
அந்த நூலை அது வெளிவந்தபோது வாசித்திருக்கிறேன். அப்போது நானும் முனைவர் ஆய்வுசெய்துகொண்டிருந்தேன். அந்த நூல் தெய்வங்கள் முளைக்கும் நிலம். அதுதான் அ.கா.பெருமாளை அறிமுகம் செய்தது. அதற்கு முன்னால் அவர் கல்வித்துறையின் சின்ன வட்டத்திற்குள் மட்டுமே அறியப்பட்டவராகவே இருந்தார். அவரை நவீன இலக்கியச்சூழலுக்கு கொண்டுவந்தது தமிழினி வெளியிட்ட அந்நூல். உங்கள் முன்னுரையுடன் வெளிவந்தது. அந்த நூலின் தலைப்பும் சரி, முன்னுரையின் தலைப்பும் சரி மிகமிக ஈர்ப்பானவை. அவைதான் அ.கா.பெருமாளை விரிவாகக் கொண்டுசேர்த்தவை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு தவம்போல ஐம்பதாண்டுகளாக ஆய்வுகளைச் செய்துவந்திருக்கிறார். ஒரு அரசு அங்கீகாரமும் இல்லை. உலகத்தமிழ்மாநாட்டில்கூட அவரை அழைக்கவில்லை. ஆனால் அவர் உருவாக்கிய அறிவுலகம் மிகப்பெரியது. கே.கே.பிள்ளை, கே.என்.சிவராஜபிள்ளை போன்று பலன் நோக்காமல் தமிழ்ப்பணி செய்த பெரியவர்களின் தலைமுறைத்தொடர்ச்சி அவர்.அவருக்கு வணக்கம்
எம்.கிருஷ்ணசாமி