டார்த்தீனியம்- கடிதங்கள்

டார்த்தீனியம் [குறுநாவல்]-5

டார்த்தீனியம் [குறுநாவல்]-4

டார்த்தீனியம்[குறுநாவல்]-3

டார்த்தீனியம் [குறுநாவல்]-2

டார்த்தீனியம்-[குறுநாவல்]-1

அன்புள்ள ஆசிரியருக்கு ,

1998 ம் வருடம் 12ம் வகுப்பு விடுமுறையில் ஜெயகாந்தன் படைப்புகளை மிக தீவிரமாக வாசித்த வந்த நேரம் … எங்கள் ஊர் கிராம லைப்ரரியில் ஜெயகாந்தன் படைப்புகள் தேடும் போது “மண்” என்ற தலைப்புடைய தங்களுடைய சிறுகதை புத்தகத்தை கண்டேன் …” ஜெய “ என்ற பெயரொற்றுமையாலயே எடுத்து படித்தேன் … ஒவ்வொரு கதைகளும் அதிஅற்புதம்.. அதிலும் டார்த்தினியம் ஒரு உலுக்கு உலுக்கியது ..வேறு ஒரு தளத்தில் இருந்தது ..   அதில் மலம் சிறுகதையும் இருந்தது… அதுவரை படித்த அத்தனையும் புரட்டி போட்டது போல் இருந்தது ..அன்று ஆரம்பித்தது இந்த வாசக உறவு.. இப்பொழுது அதை தங்கள் பிளாக் கில் பார்த்த போது மீண்டும் பழைய நினைவுகள் .. ஆனால் இப்பொழுது படிக்கும் போது இன்னும் ஆழமாக இருந்தது … மீண்டும் பதிவிட்டதற்கு நன்றி

அன்புடன்

அமர்நாத்

திருச்சி

அன்புள்ள ஜெ,

1999ல் நான் டார்த்தீனியத்தை வாசித்தேன். அது ஒரு கொடுமையான காலம். அப்பா தவறிப்போய்விட்டார். அவருக்கு 12 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. அது அவர் போனபிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. வீட்டை விற்றுவிட்டு ஊர்விட்டு வந்தோம். தொழில் இல்லை. வருமானம் இல்லை. அம்மாவின் நகைகளை வைத்து நான்குவருடம் வாழ்ந்தோம். அந்தக்காலம் இருண்டது.

அந்த இருட்டை அப்படியே உணரவைத்த கதை அது. அன்று அதை வாசித்து ஒரு நூலகத்திலே அமர்ந்து கண்ணீர்விட்டிருக்கிறேன். இன்றைக்கு வாசிக்கும்போது துக்கமில்லை. ஆனால் விதி என்பது நம்மை மீறியது, நாமெல்லாம் கொசுக்கள் புழுக்கள் என்ற எண்ணம் வந்தது

மகேஷ்குமார்

***

அன்புள்ள ஜெ

டார்த்தீனியம் குறுநாவலை நான் விட்டுவிட்டு படித்தேன். கொஞ்சம்கொஞ்சமாக நிறுத்தி படித்தேன். ஒரு படபடப்பு. நான் பல திரில்லர்கள் படித்திருக்கிறேன். பார்த்திருக்கிறேன். அதெல்லாமே படபடப்பை அளிக்கும். ஆனால் அந்த அளவுக்கு இல்லை. ஏனென்றால் அதெல்லாமே புனைவு என்றும் புனைவின் தந்திரம் என்றும் தெரியும். அது ஒருசுவாரசியமான விளையாட்டுதான். இது உங்கள் வாழ்க்கை என்று தெரிகிறது. இந்த விதியின் இருட்டு எவர்மீதும் கவியும் என்றும் தெரிகிறது. அந்த கொடூரமான எதிரியை மிக அருகே உணரமுடிகிறது. இது புனைவு அல்ல என்று தெரியும்போது வரும் பதற்றமே அந்நாவலின் ஆழமான உணர்ச்சி என நினைக்கிறேன்

குணசேகர் .எம்

***

அன்புள்ள ஜெ

டார்த்தீனியம் நஞ்சின் கதை. நஞ்சு எப்படி நம்மை கவர்ந்து நம்மை ஆட்கொண்டு ஒட்டுமொத்தமாக அழிக்கிறது என்று காட்டுவது. ஆனால் இந்த நூறு கதைகளில் நஞ்சு பற்றி இரண்டு கதைகள் உள்ளன. ஆடகம்,தங்கத்தின் மணம் . இரண்டு கதைகளுமே பாம்பின் நஞ்சு பற்றியவை. ஆனால் அவற்றில் நீங்கள் நஞ்சை இருட்டாக காட்டவில்லை.பொன்னாகவும், இனிமையான சுவையாகவும் வாழவைக்கும் அருளாகவும் காட்டுகிறீர்கள்.நஞ்சு இருட்டாக இருந்து பொன்விடியலாக மாறியிருக்கிறது. இந்த மாற்றம் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டதா? நஞ்சை பொன்னாக மாற்றிக்கொண்டுவிட்டீர்களா?

எஸ்.பாஸ்கர்

முந்தைய கட்டுரைமழைப்பாடலும் மழையும்
அடுத்த கட்டுரைஅ.கா.பெருமாள்- கடிதங்கள்