முன்பு நமீபியப் பயணக் கட்டுரையில் அந்தச் செந்நிலம் காலையில் பொன்வெளி எனத் தோன்றுவதை பெரும் உளஎழுச்சியுடன் சொல்லியிருந்தேன். ஒரு பேராசிரியர் அதைப்பற்றி ‘காந்திய எண்ணமுடையவராக தன்னை சொல்லிக்கொள்ளும் ஒருவர் பொன் மேல் கொண்டிருக்கும் மோகம் வியப்பளிக்கிறது’ என்று நையாண்டியாக எழுதியிருந்தார்.
அப்போதே ஒரு விளக்கமளிக்க எண்ணினேன். ஆனால் சில நுண்நிலைகளை பேராசிரியர்களுக்கு விளக்கவே முடியாது என்று விலக்கிவிட்டேன். பொதுவாக பேராசிரியர்கள் வாசிக்க வாசிக்க தன்னம்பிக்கை அடைந்து இலக்கிய ரசனையே இல்லாதவர்களாக ஆவது வழக்கம்.
பொன் என்பதை செல்வம் என்று மட்டுமே பார்க்கும் உளநிலை என்பது மிகமிக உலகியல் சார்ந்தது. கவிதைக்கு, கலைக்கு மட்டுமல்ல இயற்கைக்கே எதிரானது. எண்ணிப்பாருங்கள், உலகமெங்கிலும் எத்தனை கவிஞர்கள் பொன்னிறத்தை எப்படியெல்லாம் பாடியிருக்கிறார்கள் என்று. எத்தனை உவமைகள், எத்தனை உருவகங்கள்! கவிதையில் பொன் என ஒரு தலைப்பின்கீழ் உலகக்கவிதைகளை தொகுத்தால் நாலில் ஒருபங்கு வந்துவிடும்.
அவர்களெல்லாம் செல்வத்தின்மேல் பித்து கொண்டவர்களா என்ன? பொன்னை நாணயமாக மட்டுமே பார்த்தவர்களா? அவர்களில் பலருக்கு பொன்னுக்கு என்ன உலகியல்மதிப்பு என்றே கூட தெரிந்திருக்காது. பொன் என்பது அழகு என்ற சொல்லுக்கு நிகராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொரியும் காலம்’ என்று பாடியவன் அறிந்த பொன் என்பது ஓர் உலோகம் அல்ல. ‘பொலன் அணிக்கொன்றை’ என்று பாடியவன் கண்டது வெறும் மலரையும் அல்ல. மௌனம் பொன்போன்றது என்ற சொல்லில் உள்ள பொன் புழங்கும் நாணயம் அல்ல.
தமிழில் பொன் என்பதன் வேர் எதுவென்று நோக்கினாலே தெரியும். பொலிதல் என்றால் அழகுறுதல், விளைதல், நிறைதல், ஒளிகொள்ளுதல். பொலிவது பொலன். பொலன் பொன் என ஆயிற்று.
ஒவ்வொரு நாளும் காலையில் கிழக்கே பொன்பெருகி எழுகிறது. தளிர்களில், செம்மண்ணில், பாறைகளில் பொன் மின்னுகிறது. அனல் பொன் என உருகி தழலாடுகிறது. விளைகதிர் பொன் என பொலிகிறது. மலர்கள் பொற்சுடர் கொள்கின்றன. கனிகளில் பொன்வண்ணம் கூடுகிறது.
பொன்னிறம் என்பது இயற்கையின் கனிவு. அது நம்மை அகம் திளைக்கச் செய்கிறது. அந்தத் திளைப்பு நம் அறிவால் நிகழ்வது அல்ல, நாம் தூயவிலங்கென நின்று அடையும் ஒரு நிலை அது.
அந்தத் திளைப்பின் வண்ணம் கொண்டது என்பதனாலேயே நாம் மண்ணில் அகழ்ந்து அனலில் உருக்கி எடுக்கும் அந்த மஞ்சள் உலோகம் மீது அத்தனை பற்று கொண்டிருக்கிறோம். அதை நகையென அணிகிறோம். செல்வமெனச் சேர்க்கிறோம். நாணயமென புழங்குகிறோம். வேதங்கள் பொன்னை உலோகமென வந்த அனலென்றே கொள்கின்றன.
என் இளமைக் காலத்தில் பொன் என்றால் அது அறுவடைக்காலத்தின் வண்ணம்தான். கண்கள் நிறைந்து திசைவெளிவரை பொன்பெருகிக்கிடக்கும். ஒருமுறை என் பாட்டியை கோயிலுக்கு கூட்டிச்சென்றேன். வரப்பில் ஏறி பொன்வெளியைப் பார்த்ததுமே பாட்டி கண்ணீருடன் கைகூப்பித் தொழுததை நினைவுறுகிறேன்.
ஆனால் பொன்னிறம் அரிதானதும் கூட. நாட்டு நாய்க்குட்டிகள் பிறக்கையில் பட்டுப்பொன் மென்மயிர்க்குவைகள். சிறுத்தைக்குட்டியை பார்த்திருக்கிறேன், உருகிநின்றிருக்கும் பொற்துளியேதான். சில கோழிக்குஞ்சுகளை தொடவே கைவிரல் நடுங்கும், துளித்துச் சொட்டி நின்று நடுங்கும் பொற்பிசுறுகள் அவை. பட்டாம்பூச்சிகள், சிலபுழுக்கள், பொன்னின் உயிர்வடிவங்கள். எத்தனை பொன்! இளமையெல்லாம் பொன்னேதான். ஒளிகொள்வதெல்லாம் பொன்னே.
Nature’s first green is gold,
Her hardest hue to hold.
Her early leaf’s a flower;
But only so an hour.
Then leaf subsides to leaf.
So Eden sank to grief,
So dawn goes down to day.
Nothing gold can stay.
என்ற ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதையை மாதத்தில் ஒருநாளாவது நினைத்துக்கொள்கிறேன்.
இன்றுகாலை கதிர்முளைத்தது பொன்னெழுகை என. நடக்கக் கிளம்பியபோது சாலையெல்லாம் பொன். விளைவயல் கொய்து முடித்திருந்தனர். வைக்கோல்பிசிறுகள் சீராகப் படிந்த வயல் பொன்னென மின்னிக்கொண்டிருந்தது. ஏன் அத்தனை கவிஞர்களும் இறையடியை ’பொற்கழல்’ என்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன். பேருரு விண்ணளாவியது. இங்கே தெளிவது கால்மட்டுமே. பொன் என பொலிவுகொண்டு.
இது கம்பன் சொன்ன பொலன்கழற்காற் பொடி. நோக்க நோக்க விழிநிறைக்கும் அழகு. ‘நெல் பல பொலிக, பொன் பெரிது சிறக்க’ என்று ஓரம்போகியார் சொன்னது இதை. என் கண்கள் இரு பொன்மலர்கள் என விரிந்துவிட்டனவா? ஒற்றைப்பொன் பெருமலர் அனைத்தையும் மலரிதழாக்கிவிட்டதா?
‘பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன்’ என்று கபிலன் சொன்ன வரி நினைவிலெழ அப்படியே நின்றுவிட்டேன். பொடிவைத்து அனலில் ஊதி செய்து எடுத்த பூக்காத பூ போன்ற பொன்னணி. பூவாப் பூ என பொன்னையன்றி எதை சொல்லமுடியும்?
தாலப்பொலி: ஒருகடிதம்
All that Gold