சென்றவரும் நினைப்பவரும்
அன்புள்ள ஜெ
எம்.ஜி.வல்லபன் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. அந்நூலில் ஒரு இடம் வருகிறது. இளையராஜாவுடன் ஆரம்பம் முதலே பணியாற்றிய எம்.ஜி.வல்லபன் ஒரு வரியை இளையராஜா மாற்றித்தரும்படி கேட்டபோது மறுத்துவிட்டார். அதோடு இளையராஜா அவரை தவிர்க்க ஆரம்பித்தார் அவரும் கவலைப்படவில்லை. சினிமாவில் இது நல்ல குணமல்ல. சினிமா ஒரு கூட்டுக்கலை. அத்துடன் சினிமாப்பாடல் என்பது முதலில் இசையமைப்பாளரின் கலை. ஆனால் இளையராஜா அப்படி பல நல்ல பாடலாசிரியர்களை தவிர்த்திருக்கிறார், வைரமுத்துவுக்கு தேவைக்குமேல் இடம் கொடுத்தார்.
எம்.ஜி.வல்லபனைப்பற்றி பேசும்போது சிவக்குமார் கலைஞர்களுக்கு வரக்கூடாத சில பழக்கங்களைப் பற்றிச் சொல்கிறார். அவர் மட்டும்தான் அதைச் சொல்கிறார். அது முக்கியமான விஷயமென்று நினைக்கிறேன். மணிரத்னம் அவருடன் ஒரு படத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். மணி ரத்னம் அது ஒரு துன்பமான அனுபவம் என்று சொல்கிறார். சினிமா என்பது நமக்குத்தெரிந்ததும் தெரியாததுமான பல கலைகளின் கலவையாகவே உள்ளது. சரித்திரத்திலே பின்னாளில் பல இடக்கரடக்கல்கள் வழியாக ஒரு சுமுகமான சித்திரம் உருவாக்கப்படுகிறது.
நீங்கள் சொல்வதுபோல வெளிப்படையான பேச்சுக்கள் இல்லாமல் சம்பிரதாயமான புகழுரைகளால் நூல் நிறைந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்
சி விஜயகுமார்
அன்புள்ள ஜெ
எம்.ஜி.வல்லபன் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. ஒருவர் மறைந்தபின் இன்னொருவர் ஆத்மார்த்தமாக நினைவுகூர்வது என்பது முன்பிருந்தவரின் ஒரு தகுதிதான். பாரதி போன்ற பெரிய ஒரு ஆளுமையை பலர் நினைவுகூர்வது இயல்பு. சிறு ஆளுமைகள்மேலும் அந்த ஈடுபாடு வருவது அபூர்வ்மானதுதான்
விந்தன், கம்பதாசன் தவிர அப்படி எவராவது வேறெந்த எழுத்தாளரைப் பற்றியாவது எழுதியிருக்கிறார்களா? கு.அழகிரிசாமி,அசோகமித்திரன் மாதிரியான பெரிய எழுத்தாளர்களைப் பற்றிக்கூட சரியான நினைவுப்பதிவுகள் இல்லை. க.நா.சு பற்றி சுந்தர ராமசாமி மட்டும்தான் எழுதியிருக்கிறார். நகுலனைப்பற்றி எவரும் எழுதவில்லை. பல எழுத்தாளர்கள் அப்படியே மறைந்துவிட்டார்கள். கு.ப.ரா, மௌனி பிச்சமூர்த்தி பற்றியெல்லாம்கூட பெரிதாக எவரும் எழுதியதில்லை. அப்படி எழுதும் வழக்கமே தமிழில் இல்லை என நினைக்கிறேன்
சங்கரராமன்